திங்கள், 31 ஜனவரி, 2022

கொன்றை மலர்! (சரக்கொன்றை)

 


மலமிளக்கும்! வாயு வயிற்றுநோய் போக்கி 
நலந்தருங் கொன்றை நமக்கே! - உலர்ந்த
இலையுடன் பூவும் இளைத்த உடல்தேற்றும்!
மலையளவு உள்ளதிதில் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
31.01.2022

வெள்ளி, 28 ஜனவரி, 2022

தாமரை மலர்!

 


மங்கலத் தாமரையின் மையம் தளமிருக்கும்
திங்களொளி காணாத் திருமலர்! - மங்கிடும்
புத்தியைக் கூர்மையாக்கும்! பூசைக் குதவிடும்!
சித்தமருந் தாகும் சிறந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.01.2022

(தாமரை மலரின் நடுவில் “பொகுட்டு“ என்ற தளம் இருக்கும், இது தான் மற்ற நீர்மலருக்கும் தாமரை மலருக்கும் உள்ள வித்தியாசம்)

வியாழன், 27 ஜனவரி, 2022

ஆம்பல் (அல்லி)

 


நீரிழிவு நோய்ப்போக்கும்! நீண்டிருக்கும் காம்புடன்
காரிருளில் பூக்கும் களையாக! - நீரில்
மலர்ந்திடும் ஆம்பலிதழ் மங்கையரின் துன்ப
மலட்டினைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
28.01.2022

புதன், 26 ஜனவரி, 2022

குவளை மலர்!

 


கூரிதழ் மங்கும் குவளைமலர் எந்நாளும்
காரிருள் விட்டுவிலக கட்டவிழும்! - நீரின்மேல்
மங்கையரின் கண்ணாய் மணத்துடன் பூத்தாடும்!
செங்கழுநீர் என்றபெயர் சேர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
27.01.2022

செவ்வாய், 25 ஜனவரி, 2022

தும்பைப் பூ!

 


.
விசப்பூச்சி நஞ்சை விரைந்து முறிக்கும்
கசக்கியுண்ண ஓடிடும் காய்ச்சல்! - அசல்வெண்மை!
தும்பையின் சாறு சொறிசிரங்கைப் போக்கிடும்!
செம்மைநல வாழ்விதன் சேர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
26.01.2022 

திங்கள், 24 ஜனவரி, 2022

தாழை மடல்! (தாழம்பூ, கைதை)

 


கடல்சீற்றம் தாழையின் கட்டுக் கடங்கும்!
மடல்வாசம் எண்ணம் மயக்கும்! - தடங்காட்டும்
ஓலைச் சுவடிகளின் உள்வைத்தால் பாதுகாக்கும்!
மாலையில் மின்னும் மலர்ந்து!

.
பாவலர் அருணா செல்வம்
24.01.2022

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கரந்தை மலர்!

 


விளைத்திடும் நன்மை வியந்திட வைக்கும்
களையாய் வளரும் கரந்தை! - கிளைமுழுதும்
பக்குவமாய்ச் சாப்பிட பைத்தியம் போக்கிடும்
முக்கிய மூலிகையில் முத்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.01.2022

வெள்ளி, 21 ஜனவரி, 2022

சண்பகப் பூ ! (பித்திகம்)

 


சண்பகப்பூ வாசம் சளையா துறங்கவைக்கும்!
கண்நோய் தலைநோய் களைப்போக்கும்! - பெண்களின்
உள்ளுறுப்பைச் சீராக்கும்! ஊறிய நீர்குடிக்கக்
கொள்ளைநோய் யோடுங் குலைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
21.01.2022

வியாழன், 20 ஜனவரி, 2022

ஆரம் பூ (சந்தனப் பூ)

 


வாச மரத்தில் மலரும்பூ! அன்புகொண்ட
நேசமுடன் ஆரமாய் நெஞ்சணிந்தார்! - கேசமதில்
சூட்ட முடியாது! சொக்கவைக்கும் வாசமெல்லாம்
கூட்டிவிடும் கட்டையதன் கூற்று!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022

புதன், 19 ஜனவரி, 2022

இலவம்பூ

 


காய்த்துப் பழுக்காமல் காரியமாய் வாழ்ந்துவிடும்
தூய்மை இலவம்பூ சொல்லிவிடும்! - வாய்மை
நிறைந்தமனம் பஞ்சின் நிலைபோல் மிதக்கும்!
குறைந்தும் கொடுக்கும் குணம்!
.
பாவலர் அருணா செல்வம்
19.01.2022

திங்கள், 17 ஜனவரி, 2022

மார்கழி 30!

 .
மார்கழியில் கொட்டிடும் மத்தளச் சத்தமெல்லாம்
கார்நிறக் கண்ணணுக் காகவா? - மார்சுமந்த
மன்னவனைத் தையில் மணமுடிக்க வேண்டிய
இன்ப முழக்மென எண்ணு!
.
கூடிக் கலப்பேன் ! 20
.
மார்கழியில் நோம்பிருக்கும் மங்கையைத் தேடிவந்து
சேர்வராம் நற்றுணைவர்! செப்பினர்! - ஆர்வலனே!
சூடிக் கொடுத்தச் சுடர்க்கொடிப்போல் உன்னிடத்தில்
கூடிக் கலப்பேன் குலைந்து!
.
பழகாத உள்ளம் ! 21
.
மார்கழியில் காத்தகோ வர்த்தன மாமலைபோல்
நேர்பேசும் சொல்மழையை நீதடுத்தால் - பார்பேசும்
பண்புள்ளோன் என்று ! பழகாத உள்ளமும்
விண்ணளவு போற்றும் வியந்து!
.
நல்வழி வாழ்வு !22
.
மார்கழியில் பாரதப்போர் ! மாண்டாலும் வென்றார்கள் !
போர்வேண்டாம் பொன்னுயிர்கள் பூக்கட்டும்! - கூர்வாளோ
காயப் படுத்தியிடும் கட்டளை ! நல்வழியில்
நேயமுடன் வாழ்வோம் நிலைத்து!
.
நோக்கத்தைக் காத்தல் ! 23
.
மார்கழியில் பாற்கடலில் வந்த விடத்தினைச்
சேர்ந்தவர்க்கு உண்டார் சிவபெருமான் ! - சீர்கவியே
காக்குஞ் செயல்சிவனுக் கானதில்லை ! நம்பியோரின்
நோக்கத்தைக் காத்தலும் நோம்பு !
.
சேர்ந்துலா போவோம் ! 24
.
மார்கழியில் சொர்க்கத்தின் வாசல் திறந்ததும்
சேர்ந்துலா போவோம்…வா ! சீருலகில் - ஈர்க்குமிடம்
போக பொருள்வேண்டும் ! பொய்யாம் நினைவினில்
மேகத்தில் செல்வோம் மிதந்து !
.
வேந்தனடிப் பற்று ! 25
.
மார்கழியில் மின்னிடும் வாதிரை நன்னாளில்
ஓர்குறையும் வையா தொளிர்ந்திடும் ! சீர்மாந்தர்
சேந்தன் களியைச் சிவனுண்டார் ! நாமுமந்த
வேந்தனடிப் பற்றிடுவோம் வீழ்ந்து !
.
பொன்னாள் எது ? 26
.
மார்கழியில் பாடிய மங்கையைப்போல் நானுமுன்னை
நேர்வழியில் பாடி நினைக்கின்றேன் ! ஓர்வழிச்சொல் !
என்கையை நீபிடிக்க உன்கையை நான்பிடிக்கும்
இன்பமெனும் பொன்னாள் எது ?
.
நமைச்சேர்ப்பார் யார் ? 27
.
மார்கழி மாதம் வரமளிக்கும் என்றெண்ணித்
தீர்மானங் கொண்டு தினம்போனேன் ! ஓர்நினைவு
மின்றி அவன்தாள் இணைந்தேன் ! இனிஅவன்
அன்றி நமைச்சேர்ப்பார் யார் ?
. 
மனத்தால் விளித்தேன் ! 28
.
மார்கழியில் உன்னை மனதார எண்ணியதால்
சீர்குலைந்த நெஞ்சால் செயலிழந்தேன் ! நார்போல்
நெளிந்தேன் ! மேனி வெளிர்த்தேன் ! மனத்தால்
விளித்தேன் ஒலியிழந்து விட்டு !
.
இல்லறம் காண்போம் ! 29
.
மார்கழிக்குப் பின்பு மலர்ந்திடும் தைத்திருநாள் !
சேர்வழிக் காண்போம் சிறப்புடன் ! யார்த்தடுப்பார் ?
நல்லோர் நலஞ்செய்ய வல்லோர்கள் வாழ்த்திட
இல்லறம் காண்போம் இணைந்து !
.
கற்பெனும் திண்மை ! 30
.
மார்கழி போனது மங்கலஞ் சேர்ந்தது !
சீர்தாலி கட்டியெனைச் சேர்த்தணைத்தாய் ! சீர்நிறைந்த
நற்குறள் சொல்லினைப்போல் நல்லறமாய் வாழ்ந்திடுவோம்
கற்பெனும் திண்மையைக் காத்து !
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2022


மார்கழி என்ற  சொல்லில் துவங்கும் முப்பது நேரிசை வெண்பாக்கள் முடிவுற்றது.

வியாழன், 13 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து 2022 !

 


மழையைப்போல் கடும்வெயில்போல் குளிரைப் போல
            மாறாமல் வருகிறதே ஒவ்வொ ராண்டும்!
பிழையென்று சொல்வதற்கு யாரு மில்லை!
           பிடிக்கிறதோ கசக்கிறதோ மாற்ற மில்லை!
உழைக்கின்ற உயிர்களுக்கும் ஓய்வு வேண்டும்!
          ஒருநாளைத் திருநாளாய்க் காண வேண்டும்!
அழைக்காமல் வருகின்றாய் பொங்கல் என்றே!
         அன்புடனே வரவேற்போம் இல்லந் தோறும்!
.
நங்கையர்கள் மனம்மகிழ இல்லம் தன்னில்
         நாதனுடன் பிள்ளைகளும் சேர்ந்து நன்றாய்
 செங்கதிரோன் உதிக்கின்ற நல்ல நேரம்,
         செம்மையாக அடுப்பேற்றி பானை வைத்துச்
செங்கரும்புச் சாற்றினிலே செய்த வெல்லம்
         செந்நெல்லின் உமிபோக்கி அரிசி போட்டுப்
பொங்கலிட்டே இயற்கைக்கு நன்றி கூறிப்
         போற்றிடுவோம் தமிழருக்கென் றொருநாள் என்றே!
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2022

புதன், 12 ஜனவரி, 2022

போகி பண்டிக்கை வாழ்த்து! 2022

 .
தேவையற்ற குப்பைகளைத்
           தெளிவற்ற குழப்பத்தைச்
சேவையற்ற நெஞ்சத்தைச்
          செயலற்ற சோகத்தைத்
தூய்மையற்ற வார்த்தைகளைத்
           துணிவற்ற அச்சத்தை
வாய்மையற்ற விவாதத்தை
          வளமையற்ற எண்ணத்தைத்
தருமமற்ற நெருப்பிடத்தில்
         தயவின்றிக் கொட்டிவிட்டால்
வரும்நாட்கள் திருநாளாய்
        வாழ்ந்திடுவோம் உயர்வுடனே!
.
இனிய போகி பண்டிகை வாழ்த்துகள்!
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
13.01.2022

திங்கள், 10 ஜனவரி, 2022

உற்றறிந்து கொள் !

 


மார்கழியில் ஆண்டாள் வரைந்த திருப்பாவை
ஊர்போற்ற பாடுகின்றார் உன்னதமாய்! - வீர்கொண்டு
நற்றமிழில் பாடிடுவேன் நற்கவிகள்! என்னவனே!
உற்றறிந்து கொண்டால் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

மொழியேது ?18

 


மார்கழியில் பாலைநில மக்களாய் பாடுகின்றேன்!
சீர்முல்லை மண்ணில் சிறப்பிருந்தும்! - நேர்மையின்றிச்
சாதியினம் பேசுகின்றார் சார்ந்தவர்கள்! உன்னிடத்தில்
சேதியிதைச் சொல்லமொழி ஏது?
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

நேசமுடன் வாழ்வு !

 


மார்கழியில் பெண்கள்திரு மாலிடம் வேண்டுவது
நீர்நிறைந்த ஞாலத்தில் நேர்மையுடன் - சேர்ந்திருக்க
ஆசையுடை நெஞ்சமொன்று ஆர்வமுடன் மாலையிடும்
நேசமுடை வாழ்வை நினைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கூசாமல் பேசும்!

 


மார்கழி நற்குளிர் வாட்டியும் மேனிசுடும்!
போர்வையாய் என்னவளைப் போர்த்துவதால்! - நேர்நிமிர்ந்து
பேசாதி ருந்தும் பெரியவிழி பேசிவிடும்
கூசாமல் காதலைக் கோர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

பழகிப்பார்!

 


மார்கழியில் பூக்கும் மலரெல்லாம் வாசமில்லை!
நார்தொடுத்த மாலையோ நல்லழகே! - பார்க்க
அழகில்லை! பாசமுடன் ஆளுமென் நெஞ்சைப்
பழகிப்பார்! கண்டயர்வாய் பண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2022

துள்ளும் நெஞ்சம்!

 


மார்கழியில் செந்நெல் வயல்நிறைந்து மண்பார்க்க
வேர்பெருத்த செங்கரும்பு வெய்திருக்க  - ஏர்பிடித்தோன்
உள்ளம் மகிழ்தல்போல் உன்முகத்தைக் கண்டுவிட்டால்
துள்ளுதடி நெஞ்சம் தொடர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

திங்கள், 3 ஜனவரி, 2022

என்னவென்று சொல்வேன் ? 12

 

 


மார்கழியில் பூசணைப்பூ மஞ்சளாய்ப் பூத்ததைச்
சேர்க்கின்றாய் பசுஞ்சாண சீரழகில்!  - ஈர்க்கிறதே!
என்மனக் கோலமெல்லாம் உன்வாசல் கோலத்தில்
என்னவென்று சொல்வேன் எடுத்து!
.
பாவலர் அருணா செல்வம்
03.01.2022

பொய் !

 


மார்கழியில் வந்தாய்! மயக்கத்தைத் தந்துநின்றாய்!
ஓர்வழி இல்லை உனைமறக்க! - தீர்வும்
தெரியவில்லை! என்னுள் தெளிவுமில்லை! உன்னுள்
புரியாமல் போவதெல்லாம் பொய்!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022

என் கவியுள் ஆடு!

 


மார்கழியின் பின்னிரவு! மஞ்சத்தில் உன்னினைவு!
கூர்பிறை உன்புருவக் கோடிட! -  ஆர்வமொழி
பாட எனையழைக்கப் பாடுகின்றேன்! கோதையே
ஆட…வா என்கவியுள் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2022