புதன், 26 நவம்பர், 2014

நாடோடிப் பாடல்!கூடிருந்த மரமெல்லாம் குருவி இன்றிக்
   குளமிருந்த கோவிலெல்லாம் தண்ணீர் வற்றி
வீடிருந்த இடமெல்லாம் உயிரும் இன்றி
   விருந்தென்ற சொல்லுக்குப் பொருளும் இன்றி
நாடிருந்த நினைவெல்லாம் நினைவில் சுற்ற
   நானிருக்கும் நிலையினிலே பாடு கின்றேன்!
ஏடிருக்கே! எழுத்தாணி துணையாய் நிற்க
   ஏக்கத்தை அதிலெழுதிப் போக்கு கின்றேன்!

அருணா செல்வம்
26.11.2014

திங்கள், 24 நவம்பர், 2014

காக்கா பிரியாணி!!இது கோழி பிரியாணி

நட்புறவுகளுக்கு வணக்கம்.
     உங்கள் அனைவருக்கும் “காக்கா பிரியாணி“ செய்முறை விளக்கத்தைப் பதிவின் கடைசியில் விளக்குகிறேன். அதற்கு முன்பு எனக்கு “காக்கா பிரியாணி“ எப்படி அறிமுகமானது என்பதை விளக்கி விடுகிறேன்.
    ஒரு முறை நாங்கள் இந்தியா சென்றிருந்த போது என் கணவரின் உறவினர், எங்களை அவர் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து இருந்தார்கள். அது கிராமம் என்பதால் இரண்டு சின்ன குழந்தைகளை வைத்துக் கொண்டு எனக்குச் சரிப்பட்டு வராது என்று என் கணவரிடம் “நான் வரவில்லை“ என்றேன்.
    அவர், “விருந்துக்கு அழைத்த அந்த அம்மாவின் கணவர் எங்களின் கல்யாண நேரத்தில் தவறிவிட்டதால் வரவில்லை“ என்றும் “அவர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். போய் வருவது தான் முறை“ என்றும் என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். போகும் போது வெயில் அதிகமாக இருந்ததால், வழியில் நிறுத்தி இளநீர் வாங்கித் தர சொன்னேன்.
   என்னவர், “இப்போ இளநீரைச் சாப்பிட்டால் அங்கே போய் ஒழுங்காகச் சாப்பிட மாட்டே. அவர்கள் ஆசையாக சமைச்சிருப்பாங்க. கோழி கொத்துற மாதிரி சாப்பிடாமல் ஒழுங்கா சாப்பிடு. அப்போது தான் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்“ என்றார். நானும் பேசாமல் இருந்துவிட்டேன்.

    அந்த உறவினர் வீட்டில் அந்தம்மா, அவரின் மகன் மருமகள் நான்கு வயது பேரன் என்று இருந்தார்கள்.
   சம்பிரதாய பேச்சு முடிந்ததும் சாப்பாடு போட்டார்கள். கறி பிரியாணி, கறி வறுவல்..... என்று வாசனை கமகமவென்று இருந்தது. இந்த வாசனை மேலும் பசியைத் தூண்டியது. பிரியாணியை எடுத்துச் சுவைத்தேன். ருசி அபாரமாக இருந்தது. சிறு சிறு துண்டுகளாய் வெட்டிய கறி அழுத்தமாக இருந்தாலும் சுவையாகவே இருந்தது.
    இப்படி நான் ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது அந்த அம்மாவின் பேரன் ஓடி வந்து அந்த அம்மாவிடம், “ஆயா..... நம்ம அப்பு..... காக்கா பிரியாணியைச் சாப்பிட்டுட்டான்“ என்று சொன்னான்.
   அவன் சொன்னதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியுடன் வாயில் வைக்கப் போன கறியை இலையில் வைத்துவிட்டேன். அதே சமயம் அந்த அம்மா தன் பேரனிடம்..... “அவன் அப்படியெல்லாம் சாப்பிட மாட்டானே....“ என்றார்
   “இன்னைக்கி பிரியாணி செம டேஸ்ட்டா இருந்துச்சா.... அது தான் அப்பு சாப்பிட்டான்னு நினைக்கிறேன். நீ வந்து பாரேன்“ என்று தன் பாட்டியை அழைத்தான்.
   அதற்கு அந்த அம்மா.... “ அப்பு தானே சாப்பிட்டான். சரி விடு. நாம சாப்பிட்டா தான் தப்பு. நீ போய் விளையாடு“ என்று அனுப்பி விட்டார்.
   நான் நிமிர்ந்து என் கணவரைப் பார்த்தேன். அவர் இராமனுக்குக் குகன் கொடுத்த விருந்து போல் பிரியாணியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் என் இலையில் இருந்த கறியைப் பார்த்தேன். முதலில் பசுமையாக கண்ணுக்குத் தெரிந்த கறி இப்போது சுறுங்கி போய்... வற்றிப் போய் இருந்தது போன்று தெரிந்தது.
   சாப்பிட மனம் ஒப்பவில்லை.
   சாப்பாட்டை அப்படியே நகர்த்திவிட்டு வெள்ளை சாதம் ரசம் கேட்டேன். என் கணவர் நான் சாப்பாட்டை வீணாக்குகிறேனே என்று ஒரு முறை முறைத்தார். நான் ஏன் அவரை நிமிர்ந்து பார்க்கிறேன்....
   
    திரும்பி போகும் போது வண்டியை ஓட்டிக்கொண்டே என் கணவர், “பிரியாணி நல்லாத்தானே இருந்துச்சி. நீ ஏன் சாப்பிடல. அவங்க எவ்வளவு ஆசையா நமக்காகச் செய்தாங்க.“ என்றார்.
    நான், “பிரியாணி நல்லா தாங்க இருந்துச்சி. ஆனா அந்த கறி காக்கா கறின்னு சொன்னதும் எனக்குச் சாப்பிட பிடிக்கலைங்க“ என்றேன்.
    அவர், “என்னது...?“ என்ற படி ஒரு சடென்பிரேக் போட்டுத் திரும்பி என்னைப் பார்த்தார். “என்ன சொன்ன? காக்கா கறியா...?“ என்றார் திரும்பவும் அதிர்ச்சி மாறாமல்.
    “ஆமாங்க. அந்த குட்டிப் பையன் சொன்னானே....“ என்றேன்.
    “எது..... காக்கா பிரியாணியை அப்பு சாப்பிட்டுடுச்சின்னு சொன்னானே... அதுவா...?“ என்றார்.
   நான், சற்று அருவருப்புடன் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினேன். அவர், “அட ச்சீ..... இதுக்காகவா சாப்பிடலை.....?“ என்றார் நெற்றியில் தட்டிக்கொண்டு.
    “எனக்கு காக்கா கறி சாப்பிட்டு பழக்கமில்லைங்க“ என்றேன்.
    “ஐயோ... அருணா... எனக்கு மட்டும் காக்கா கறி சாப்பிட்டு பழக்கமா....?“ என்றார்.
    நான் புரியாமல் அவரைப் பார்த்தேன். நல்லா தானே சாப்பிட்டீங்க... என்று மனத்தில் ஓடியதை வெளியில் சொல்லவில்லை.
   அவர் சற்று பொறுத்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அட அசடு..... அந்த அம்மா எப்போ சாப்பாடு செய்தாலும் அவங்க கணவர் நினைப்பா காக்காவுக்குச் சாப்பாடு வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க. அப்படி இன்னைக்குக் காக்காவுக்கு வச்ச பிரியாணியை அவங்க வீட்டு நாய் அப்பு சாப்பிட்டுடுச்சி. அதை தான் அந்த சின்ன பையன் சொன்னான்.... நீ இப்படி லூசு மாதிரி புரிஞ்சிக்கிட்டியே.....“ என்றார் சிரிப்பு மாறாமல்.
   “காக்காவுக்கு வச்ச பிரியாணியைத் தான் அந்த சின்ன பையன் “காக்கா பிரியாணி“ என்றானா...“ என்றேன் மீண்டும் தெளிவு ஏற்பட...
    என்னவர்.... “பின்னே... உன்னோட சொந்தக்காரங்க சாப்பிடுறதையா என் சொந்தக்காரங்க போடுவாங்க.....?“ என்று அவர் சொல்ல... நான் முறைத்தாலும்..... இந்த மாதிரி நாம அசடா இருக்கிறோமே..... எப்போ தான் எல்லாம் புரிஞ்ச தெரிஞ்ச பெரிய மனுசியாவது.... என்று எண்ணியபடி பைக்கில் ஏறி அமர்ந்தேன்.

நட்புறவுகளே......
    பதிவின் தொடக்கத்தில் சொன்னது போல் “காக்கா பிரியாணி“ செய்முறையை விளக்குகிறேன்.
    அனைவருமே இதைச் செய்யலாம். மிகவும் ஈஸியான வேலை தான்.
அதாவதுங்க.....
     வெஜிடெபுள்ஸ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி..... என்று எந்த வகை பிரியாணி செய்தாலும்... அதிலிருந்து ஒரு பிடியளவு எடுத்துக் காக்காவுக்கு வைத்தால்...... அது தான் “காக்கா பிரியாணி“

செய்துப்பாருங்கள். 

அன்புடன்
அருணா செல்வம்.

24.11.2014

புதன், 19 நவம்பர், 2014

அவன் காதல்தான் என்ன?கணைதொடுத்த பார்வையாலே கண்ணை நோக்க
    கதிகலங்கி போய்நின்றேன்! காந்தக் கண்ணால்
எனைஎடுத்துச் சென்றதாலே என்னை நானே
    எங்கென்று தேடுகின்றேன்! அவனைத் தேடி
மனையடுத்து நின்றதாலே தந்தை திட்ட
    மனசின்றி வீடுசென்றேன்! ஆசை நெஞ்சம்
அணையொடுங்கும் நீரைப்போல் அடங்கி விட்டால்
    அவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்!

அருணா செல்வம்
19.11.2014

    

திங்கள், 17 நவம்பர், 2014

வாழ்க்கையும் வழுக்கையும்!! (அனுபவம்)நட்புறவுகளுக்கு வணக்கம்.
    தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ வாழ்க்கையில் நடக்கும் வழுக்கல்களைச் சொல்லி தத்துவமாக ஏதோ எழுதி இருப்பார்களோ..... என்று எண்ணி நீங்கள் படிக்க வந்து இருந்தால்..... அவர்கள் படித்துவிட்டு ஏமாறாமல் இப்போதே அடுத்த வலைக்குத் தாவி விடுங்கள்.
   ஏன் என்றால்...... நான் சொல்ல வருவது வாழ்க்கையில் ஏற்படும்.... “ஜான் ஏறினால் முழம் வழுக்குகிறது.....“ “எதை செய்தாலும் சறுக்குகிறதே.....“ என்ற மாதிரியான வழுக்கையைச் சொல்லவில்லை.
    நான் சொல்ல வருவது நீங்கள் நினைப்பது போல் அந்த வழுக்கையைத் தாங்க.
அப்பாடா. புரிந்து கொண்டீர்கள்!!

    போன வாரம் என் உறவினர் பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வருகிறார் என்று என்னையும் அழைத்து இருந்தார்கள். பெண் பார்ப்பது மட்டுமல்லாமல் கைத்தாம்பூலமும் மாற்றிக் கொள்வதாக இருந்தார்கள்.
   அங்கே சென்ற நான், மணப்பெண்ணிடம்.... “என்னடி உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா“ என்று கேட்டேன்.
   “அம்மா அப்பாவுக்குப் பிடிச்சிருக்காம். நான் போனில் பேசினேன். நன்றாகத் தான் பேசினார்.“ என்றாள்.
   சரி அவளுக்கும் பிடித்திருக்கிறது என்றதும் நானும் மற்றவர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காகக் காத்திருந்தேன். அவர்களும் வந்தார்கள். மாப்பிள்ளையை அறிமுகப் படுத்திய போது எனக்கு அதிர்ச்சி. முன் மண்டையில் பாதி அளவிற்கு முடியைக் காணோம். நான் திரும்பி மணமகளைப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. அவள் அம்மாவைப் பார்த்தேன். அவர் முகத்திலும் அதிர்ச்சி. எனக்கு ஒரே குழப்பம். பேசாமல் எழுந்து பெண் இருக்கும் அறைக்கு வந்தேன். என் பின்னாலேயே அவள் அம்மா.
   மணமகள் உடுத்திய உடையை கோபமாகக் கலைந்து கொண்டு இருந்தாள். எனக்கு இதுவும் ஓர் அதிர்ச்ச்சி!
   “என்னடி... கைத்தாம்பலம் மாற்றுவார்கள். அதற்குள் டிரெஸ் மாத்துறியே...“ என்றேன்.
   அவள் கோபமாக என்னை முறைத்துவிட்டு..... “எனக்கு இதில் விருப்பம் இல்லை. அவர்களைப் போகச் சொல்லங்கள்“ என்றாள்.
   நான் திரும்பி அவள் அம்மாவைப் பார்த்தேன். அவர்கள், “கொஞ்ச நேரம் பொறும்மா. அவர்கள் போனதும் எதுவாக இருந்தாலும் பேசலாம்“ என்றார்கள்.
   “அம்மா.... இதுக்கு மேல எப்படி பொறுமையா இருப்பது....? எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. நான் தனியா இருக்கனும். நீங்க போங்க“ என்று சொல்லிவிட்டு என்னையும் சேர்த்து வெளியில் தள்ளி கதவைச் சாத்தினாள்.
   நான் அவளின் அம்மாவிடம்..... “என்ன இது? ஏற்கனவே பேசி முடிவானது தானே....?“ என்றேன்.
   “ஆமாம் அருணா. நல்ல படிப்பு. நிறைய சம்பளம். போனில் தான் நிறைய முறை பேசினோம். படம் கூட அனுப்பி இருந்தார்கள். ஆனால் அதில் மாப்பிள்ளை இப்படி இருக்கவில்லை. இப்போ என்ன செய்யிறது அருணா....?“ என்றார் பாவமாக.
   அவள் அப்பா, மகளை அழைத்து வரச் சொல்லி சத்தமாகக் கூப்பிட்டார். அந்த அம்மா.... “இவளை எப்படியாவது சமாதானம் சொல்லி கூப்பிட்டு வா“ என்று என்னிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டார்கள்.
   எனக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் தான் என்று சொன்னதும் கதவைத் திறந்தாள். மணமகளைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தாலும்..... அவளிடம்.... “உன் கவலை எனக்கு புரிகிறது. இதே மாதிரி கல்யாணம் பண்ணியப் பிறகு ஒருசில வருடத்தில் இப்படி ஆகி இருந்தால்..... அதை நாம ஒத்துக்கொள்கிறோம் இல்லையா.... அது மாதிரி நினைச்சிக்கோயேன்“ என்றேன்.   
   “இல்லை ஆண்டி. கல்யாணம் ஆனப்பிறகு இப்படியானால் அந்த நாட்களிலேயே நாமும் பழகிடலாம். ஆனால் தொடக்கத்திலேயே இப்படி என்றால்.... வேண்டாம் ஆண்டி. இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று நீங்கள் போய் அப்பாவிடம் சொல்லி விடுங்கள்“ என்றாள்.
   அதற்குள் அப்பாவே அந்த அறைக்கு வந்தார். வந்தவர் தன் மகளிடம்.... “ஆண்களுக்கு வழுக்கை ஒரு பெரிய விசயமே இல்லைம்மா. நல்ல படிப்பு. உயரமா நல்லா அழகாவும் இருக்கிறார். பேசியதை வைத்துப் பார்க்கும் போதும் நல்ல குணமாகத் தான் தெரிகிறது. பிடிவாதம் பிடிக்காதே. எழுந்து வா“ என்றார்.
   அவள், “வேண்டாம் அப்பா. என்னைக் கட்டாயப்படுத்தாதிங்க....“ என்று அழுகையின் ஊடே சொல்லவும்.... பேசாமல் போய்விட்டார். என்ன சொல்லி சமாளித்தார் என்று தெரியாது. ஆனால் காரியம் நின்று போனது.

    அன்றிலிருந்து நான் அந்தப் பெண்ணை நினைத்ததை விட அந்த மாப்பிள்ளையைத் தான் அதிகம் நினைத்துக் கவலைப்பட்டேன். இருபத்தொன்பது வயது தான். நல்ல நிறம். உயரம். படிப்பு, நல்ல குடும்பம் என்று எல்லாமே நன்றாக இருக்க.... ஏன் இப்படியானது.....?
   வழுக்கை பரம்பரையாக வருவது தான் என்றாலும்.... இவ்வளவு இளமையிலேயா வரும்? இவர் மட்டும் இல்லை. இப்போது நிறைய ஆண்கள் நடுத்தர வயதைத் தொடாதவர்களுக்கும் வழுக்கை விழுந்து விடுகிறது.
   இது எதனால்.....? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்


(டிஷ்கி – சிறு வயதில்... எனக்குத் தெரிந்த ஒரு அக்காவைக் காதலித்த ஒருவன் ஏமாற்றி விட்டான். சில காலம் கழிந்த பிறகு அவனைப் பார்க்க நேர்ந்ததாம். அவனுக்கு அப்போது லேசான வழுக்கை விழுந்திருந்ததாம். அந்த அக்கா கோபத்தில், “என்னை ஏமாத்தினதால தான் அவனுக்கு வழுக்கை விழுந்தது. இதே மாதிரி பெண்களை ஏமாத்து கிறவங்களுக்கு எல்லாம் வழுக்கை விழனும்ன்னு சாபமாகச் சொன்னாள். ஒரு சமயம் அந்தச் சாபம் தான் பலித்துவிட்டதோ.....!!!!! )

வியாழன், 13 நவம்பர், 2014

வண்ணவிருத்தம் -1சந்தக் குழிப்பு.. தானன தனத்த தனதானா

ஓடிடும் கணத்தை மதியாலே
   ஓரிடம் ஒளிக்க முடியாதே!
தேடிடும் பணத்தை மறந்தாலே
   தீமைகள் மனத்தை நெருங்காதே!
கூடிடும் குணத்தை அறிந்தாலே
   கோபமும் உரைக்க விரும்பாதே!
நாடிடும் அறத்தை அடைந்தாலே
   நாமகள் நலத்தை அருள்வாளே!

அருணா செல்வம்
13.11.2014

செவ்வாய், 11 நவம்பர், 2014

ரோஷம்!!     “என்னங்க..... நம்ம மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்குப் பைக் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்களா....?“
   வேலைவிட்டு வந்த முருகனிடம் காபியை நீட்டியபடியே கேட்டாள் பங்கஜம்.
    “ஆமா. இப்ப அதுக்கென்ன?“ சற்று சளிப்புடன் சொன்னான் முருகன்.
   “காலையில ரேவதி போன் பண்ணினாள். இன்னைக்குச் சாய்ந்தரம் பக்கத்தல இருக்கிற கோவிலுக்கு அவளும் அவ மாமியாரும் வர்றாங்களாம். அப்படியே இங்க வந்திட்டு போறேன்னு சொன்னாள். அது மட்டுமில்லாம நீங்க பைக் வாங்கித் தர்றேன்னு சொன்னதை நியாபகப் படுத்தச் சொன்னாள்“ என்றாள் பங்கஜம்.
   “ம்... வாங்கனும் அதுவும் நம்ம கடமை தானே....“
    “எதுக்குங்க நீங்க இதுக்கு ஒத்துக்கினீங்க? கல்யாணத்துக்கே நிறைய செலவு. இப்போ இது வேறயா...?“ பங்கஜம் கொஞ்சம் கோபமாகக் கேட்டாள்.
    “இத பாரு பங்கஜம். நாம பைக் வாங்கித் தரலைன்னா அந்த வக்கத்தவன் நம்ம ரேவதிய ஆட்டோவுல இல்லாடி நடந்து தான் கூட்டிக்கிட்டு போவான். வெளிய பாக்குறவங்க என்னைத் தான் குறையா பேசுவாங்க. செலவோட செலவா இதையும் செஞ்சிதான் ஆகனும்.“
    முருகன் சொல்லி முடிக்கவும் ரேவதியும் அவள் மாமியாரும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அந்தச் சந்தர்ப்பம், நான்கு பேருக்குமே அதிர்ச்சி! என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
   சம்பரதாய பேச்சு வார்த்தைகள் உபசரனைகள் முடிந்து கிளம்பிய மகளின் கலங்கிய விழிகள் பங்கஜத்தின் மனத்தைப் பிழிந்தது.

    நாளுக்கு மூன்று முறை அம்மாவுடன் தொலைபேசியில் பேசும் ரேவதி, இப்போதெல்லாம் மூன்று நாளைக்கு ஒருமுறை அதுவும் இரண்டொரு வார்த்தை என்று பேச்சைக் குறைத்திருந்தாள். இதைக்கவனித்த மாமயார் ரேவதியிடம்.... “ரேவதி.... நீ ஏன் முதல்மாதிரி உன் அம்மாகிட்டே பேசுறதில்லை?“ என்று கேட்டாள்.
   “நான், அவங்க எனக்குச் செய்த சீதனம் எல்லாம் என் மேல இருக்கிற அன்பால தான் செய்தாங்கன்னு நெனச்சிட்டேன். ஆனா இப்போ தான் புரியுது. இவரால இதெல்லாம் வாங்க முடியாது என்ற காரணத்தால தான் எனக்கு எல்லாமே வாங்கித் தந்தாங்கன்னு நினைக்கும் போது கவலையாக இருக்கிறது மாமி“ என்றாள் லேசான அழுகையுடன்.
    “இதுல என்னம்மா கவலை? இப்படியெல்லாம் கொடுக்கனும். இப்படியெல்லாம் வாங்கனும். இது தான் கௌரவம்ன்னு இன்றைய கால கட்டத்தில் எழுத்தாத சட்டம் இருக்கே. இதுக்கெல்லாம் அம்மா அப்பாகிட்ட கோவிச்சிக்கினா பிறகு உனக்கு தான் கஷ்டம். எப்போதும் போல நீ உன் அப்பா அம்மாகிட்ட பேசும்மா“ என்றாள் கனிவாக மாமியார்.
   “இல்லை மாமி. உங்க பிள்ளையை என் அப்பா வக்கத்தவன்னு சொன்னது எனக்குக் கோபம் தான் மாமி. அதை மறக்க முடியலை மாமி“ என்றாள் சற்று கோபமாக.
   “ரேவதி... இதுக்கெல்லாம் ரோசப்பட்டா நம்முடைய சந்தோஷங்கள் தான் வீணா போகும். எனக்குக் கல்யாணம் ஆகி என் அம்மா வீட்டிற்கு மறுவீடு போனோம். அப்போ, கல்யாணம் ஆன புதியதில் உன் மாமா ரொம்ப ஒல்லியா இருப்பார். அந்த நேரத்துல அங்க வந்த என் அப்பாவின் நண்பர் “என்னப்பா... மாப்பிள்ளை ரொம்ப ஒல்லியா இருக்கிறார்“ என்று சொன்னார். உடனே என் அப்பா “அதனாலென்ன நம்ம வீட்டுல கறி எலும்புன்னு ஆக்கிப் போட்டா போவுது“ என்று சிரித்துக் கொண்டு தான் சொன்னார். ஆனால் அதைக்கேட்ட என் கணவர், அன்னைக்குக் கோவத்துடன் வெளியே வந்தவர் தான். தான் சாகிற வரைக்கும் என் அப்பா வீட்டில் கை நனைக்கவே இல்லை. என் தங்கச்சிங்க எல்லாம் நல்ல நாளு கிழமையில அம்மா வீட்டுல தங்கி சந்தோஷமா இருக்க நான் மட்டும் போய் பார்த்திட்டு உடனே இவருடன் திரும்பிடுவேன். அவரோட ரோஷத்தல நானும் அப்பா வீட்டில் சாப்பிடவே முடியலை. அந்தக் கவலை எனக்கு இன்னைக்கும் இருக்குதும்மா. அதனால தான் சொல்றேன். நாம அம்மா அப்பா மேல ரோஷப்பட்டா நமக்குத் தான் நஷ்டம். பேசாம இதை மறந்திட்டு எப்போதும் போல சகஜமா பேசு“ என்றார் மாமியார்.
   ரேவதி சற்று தெளிந்து “சரி மாமி“ என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். எதிரில் அவள் கணவன்...
   “ரேவதி... உன் அப்பாகிட்ட பைக் வேணான்னு சொல்லிடு. வேலையில லோன் கேட்டிருக்கேன். அதுல கார் வாங்க போறேன்னு சொல்லிடு“ என்று சொல்லிவிட்டு விர்ரென்று போனான்.
   ரேவதியும் மாமியாரும் ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

அருணா செல்வம்

12.11.2014

சனி, 8 நவம்பர், 2014

ஏமாந்த வண்டு!!


 வண்டு ஒன்று
   பூவோ என்று
      வந்து வட்டமிடச்
செண்டு போன்ற
   இதழால் இமைகள்
      மூடிச் சேர்ந்துவிடக்
கண்ட வண்டு
   குண்டுக் கண்ணைப்
      புதுமைப் பூவெனவே
சென்று மீண்டும்
   கிட்டே வந்து
      திரும்பிச் சென்றிடுதே!!

அருணா செல்வம்.

வியாழன், 6 நவம்பர், 2014

“அம்மா“ என்றே சொல்லிப்பார்!!தாயின் மொழிக்கோர் பாட்டெழுதத்
        தானே அமர்ந்தேன் தாளெடுத்து!
வாயில் வார்த்தை வதைந்தாலும்
        வடிவாய்ச் சேர்த்தேன் கோலெடுத்து!
தீயின் தன்மைச் சேர்க்காமல்
        சிறந்த சீரால் சொல்லெடுத்துச்    
சேயின் குரலால் செப்புகிறேன்
        செம்மைத் தமிழில் கவிதொடுத்து!

இம்மாம் பெரிய உலகத்தில்
       இனிய மொழிகள் பலவுண்டாம்!
தம்மா தோண்டு சொன்னாலும்
       தமிழின் சொல்லில் இனிப்புண்டாம்!
அம்மா என்றே சொல்லிப்பார்!
       அமிர்தம் ஊறும் உன்வாயில்!
சும்மா நானோ சொல்லவில்லை
       சொல்லும் போதே சுவையறிவாய்!

எங்கள் இதயம் ஏற்றமொழி
    எழுதும் ஏட்டில் மின்னிடுமே!
எங்கள் பிள்ளைச் செல்வங்கள்
       ஏனோ தமிழைத் தள்ளுகிறார்!
சங்கம் அமைத்த சான்றோர்கள்
       சரியாய் இதனைக் கவனித்தால்
தங்கம் போன்ற மொழிகற்றுத்
       தாயாம் தமிழை அறிந்திடுவார்!
  
அன்னை மொழிக்கோர் அழகுண்டாம்!
       ஆழ்ந்து கற்றால் பயனுண்டாம்!
பொன்னை விடவும் மதிப்புண்டாம்!
       புதிய பொருளின் பொலிவுண்டாம்!
முன்னை இருந்த மொழிக்கெல்லாம்
       முன்னில் பிறந்து வந்ததெனத்
தொன்மை நூல்கள் சொல்வதைநாம்
       தொழுது படித்தால் உயர்வுண்டாம்!

 அருணா செல்வம்

 06.11.2014

செவ்வாய், 4 நவம்பர், 2014

அருணா அந்தாதி! (கவிஞர் கி. பாரதிதாசன்)


 http://bharathidasanfrance.blogspot.fr/2014/11/blog-post.html

அன்பும் அருளும் அமா்ந்தொளிரும்! எந்நாளும்
இன்பும் எழிலும் இணைந்தொளிரும்! - மின்னிடும்
நல்லறம் நாட்டிடும் நல்லருணா செல்வமே!
இல்லறம் காப்பாய் இனித்து!

இனிக்கின்ற செந்தமிழை ஏந்துமனம் கண்டேன்!
தனிக்கின்ற தண்புகழ் கண்டேன்! - குனிக்கின்ற
வில்லொளிரும் பெண்ணே! வியன்அருணா செல்வமே!
சொல்லொளிரும் பாக்களைச் சூடு!

சூடும் மலராகச் சொல்லும் கதைமணக்க!
பாடும் குயிலாகப் பண்ணிசைக்க! – ஆடுகின்ற
வண்ண மயில்பறக்க மாண்பருணா செல்வமே!
எண்ணம் இனிக்க எழுது!

எழுதும் எழுத்தெல்லாம் என்றும் நிலைக்க!
விழுதாய் வலிமை விளைக்க! - தொழுதேத்தி
அன்னைத் தமிழ்காக்கும் அன்பருணா செல்வமே!
முன்னைப் புகழ்காக்க முந்து!

முந்தும் செயலனைத்தும் கந்தம் கமழ்ந்தோங்க!
சொந்தம் அனைத்தும் சுடா்ந்தோங்க! - சந்தமுடன்
வாழ்வு வளா்ந்தோங்க வானருணா செல்வமே!
ஏழ்பிறப்பும் காண்க எழில்

எழிற்றமிழ் என்பேன்! இனியதமிழ் என்பேன்!
பொழிற்றமிழ் என்பேன்! புவியில் - தொழிற்றமிழ்
என்பேன்! இணையிலா இன்னருணா செல்வமே!
உன்றமிழ் ஓங்கும் உயா்ந்து!

உயா்ந்தொளிரும் வாழ்வும்! உழைப்பொளிரும் பேரும்
வியந்தொளிரும் வண்ணம் விளைக! - உயிரொளிரும்
செம்மைத் தமிழ்பாடும் சீா்அருணா செல்வமே!
அம்மை அருள்உன் அகம்!

அகத்துள் திருமால் அமர்ந்தாள! ஓங்கி
இகத்துள் அனைத்துமிருந் தாளப் - புகழேந்தி
வாழும் கவியரசி வல்லருணா செல்வமே!
சூழும் நலங்கள் சுரந்து!

சுரக்கின்ற பாக்கள் சுவைகொடுக்கும்! நெஞ்சுள்
சிரிக்கின்ற பூக்கள் செழிக்கும்! - தரிக்கின்ற
தண்டமிழ் மின்னும்! தவஅருணா செல்வமே!
கொண்டபணி மின்னும் கொழித்து!

கொழிக்கின்ற கற்பனைகள்! கொள்ளை யிடுமே   
செழிக்கின்ற சிந்தனைகள்! சீரைப் - பொழிகின்ற
இன்றேன் கவிப்பெண்ணே! பொன்னருணா செல்வமே!
என்றென்றும் வாழ்கஉன் அன்பு!

அன்புடன்

கவிஞர் கி. பாரதிதாசன்

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இன்று என் பிறந்த நாளுக்காக என் ஆசிரியர் 
கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் என்னை வாழ்த்தி எழுதிய பதிற்றந்தாதியை உங்களுக்கும் பதிவாக வெளியிட்டு மகிழ்கிறேன்.

அன்புடன் 
அருணா செல்வம்.