நட்புறவுகளுக்கு வணக்கம்.
போன
வாரத்தில் ஒரு நாள் நான் வலையில் ஏதாவது பதிக்கலாம் என்று எழுத அமர்ந்தேன்.
எதுவும் தோன்றவில்லை. ஏதாவது தலைப்பு இருந்தால் கவிதையாய் எழுதிவிடலாம் என்று
தோன்றியது.
உடனே,
“ஏதாவது தலைப்பு கொடுங்கள். அந்தத் தலைப்பில் கவிதை எழுதி விடுகிறேன். ஆனால்
மிகவும் பெரிய தலைப்பாக கொடுக்காதீர்கள். நேரமில்லை. அதனால் குட்டியாக ஏதாவது
தலைப்பு கொடுங்கள்“ என்று எழுதி கவிஞர் கி. பாரதிதாசனுக்கு மெயில் அனுப்பினேன்.
அவர் உடனே,
“குட்டி“ என்றே தலைப்பிட்டு கவிதை எழுதுங்கள்“ என்று பதில் அனுப்பினார்.
நானும்
“குட்டி“ என்று தலைப்பிட்டு கவிதை எழுதி பதித்துவிட்டேன்.
மறுநாள்
“சில பெண்களைக் “குட்டி“ என்கிறார்களே... அதைக்குறித்து உங்கள் கவிதையில் எழுதுவீர்கள்
என்று எதிர்பார்த்தேன்“ என்று மெயில் அனுப்பினார்.
நான்,
“அந்தக் காரணம் பெண்ணை இழிவாகச் சொல்வது போல் இருக்கிறது என்பதால் எழுதவில்லை“
என்று பதில் எழுதி அனுப்பிவிட்டு, சனி ஞாயிறு இரண்டு நாட்களும் உறவினர் வீட்டிற்கு
சென்று விட்டேன்.
அதன் பிறகு
இன்று காலையில் ஒரு தோழி தொலைபேசியில் அழைத்தாள். பொதுவாகப் பேசிவிட்டு
“குட்டி“யைப்பற்றி பேச்செடுத்தாள்.
அவள்
சொன்னதின் சுறுக்கம் என்னவென்றால்.... அவளும் வேறு சில தோழ தோழியரும் என் “குட்டி“
பாட்டைப் படித்தார்களாம். அப்பொழுது பேச்சுவாக்கில் “குட்டி“ என்று சில பெண்களைச்
சொல்வதன் காரணத்தைப் பற்றி அலசி இருக்கிறார்கள். அதாவது “குட்டி“ என்ற தலைப்பில்
குட்டி பட்டிமன்றமே நடந்திருக்கிறது.
அவர்கள்
சொன்ன காரணங்கள...
-
பெண்கள் தங்களை எப்பொழுதும் சின்ன பிள்ளையாகவே நினைத்துக்
கொண்டு இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்.
-
மற்ற மிருக குட்டிகளைப் போல மனித குழந்தைகளும் அழகாக இருந்ததால்
தான் இந்தப் பெயர் வந்ததாம்.
-
பெரிய பெண்ணாக இருந்தாலும் வயதைக் குறைவாகக் காட்ட
நினைத்துச் சின்ன பெண்போல அலங்காரம் செய்து கொள்வதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்
-
பூனை நாயைகளின் குட்டிகள் எங்கும் தனியாகச் செல்லாமல் தன்
தாயின் அருகிலேயே இருப்பது போல தன் துணையின் அருகில் எப்பொழுதுமே இருக்க நினைப்பதால்
தான் இந்தப் பெயர் வந்ததாம்....
இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே சென்றாள்.
நானும் கடைசியில், “முடிவு என்னவென்று முடித்தீர்கள்?“ என்று கேட்டேன்.
“அது தான்
சரியாகத் தெரியவில்லை. நீதான் முடிவை சொல்லனும். உனக்காக இரண்டு நாட்களாக
காத்துக்கொண்டு இருக்கிறோம்“ என்றாள்.
அப்படியென்றால் சில பெண்களைக் “குட்டி“ என்று சொல்வதற்கானப் பொருளை யாரும்
சரியாக அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்து போனது.
அதனால்
அவளிடம் சொன்ன பதிலை இங்கே உங்களுக்கும் பதிக்கிறேன். இங்கே வலையில் பதில்
தெரிந்தவர்கள் இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் நான் சொல்லும் பதில் சரியில்லை
என்று நினைத்தால் தயவுசெய்து தாங்கள் கண்டுபிடித்த பதிலை எங்களும் தெரிவிக்கலாம்.
சில பெண்களை ஏன் “குட்டி“ என்று சொல்கிறார்கள்
என்றால்.....
பொதுவாக
குட்டிகள் அனைத்துமே மிகவும் அழகாக தான் இருக்கும். “கழுதை கூடக் குட்டியில்
அழகுதான்“ என்றொரு வழக்கு இருக்கிறது.
அப்படி இருக்க....
சாத்தான்களும்
பிசாசுகளும் மனிதர்களை மயக்கும் சக்தி வாய்ந்தவைகள். ஆனால் கோரமானவைகள். ஆனால்
அதனுடையக் குட்டிகளும் மற்ற குட்டிகளைப் போல் அழகாக தானே இருக்கும்...?
(பல) ஆண்கள் பெண்களின் அழகில் மயங்குவார்கள்.
ஆண்களை
மயக்கும் சக்தி பெண்களிடம் இருக்கிறது...!!!
ஆண்களை
மயக்கும் சக்தி வாய்ந்த பெண்கள் அழகானவர்கள். அந்த அழகானப் பெண்களுக்குக் கோரமான
சாத்தான் பிசாசு என்ற பெயரை நேரிடையாக வைக்காமல் அதனின் குட்டிகள் எல்லா
குட்டிகளைப் போல அழகாக இருக்கும் என்ற கற்பனையில் குட்டிச் சாத்தான், குட்டி
பிசாசு என்று சொன்னார்கள்.
இப்படிச்
சொல்லும் பொழுது சாத்தான் பிசாச என்னும் சொற்கள் சற்று பயங்கரமாக இருப்பதால் அழகானப்
பெண்களுக்குப் பொருந்தாது என்றெண்ணி அவைகளைத் தவிர்த்து வெறும் “குட்டி“ என்ற
வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.
அதனால் ஆண்களை
மயக்கம் (சில) பெண்களைக் “குட்டி“ என்று செல்லமாகச் சொல்லும் வழக்கு வந்தது.
அருணா செல்வம்
19.05.2014