இரண்டு
கைகளிலும் மாவுகட்டுப் போட்டு மருத்துவமனையில் படுத்திருந்த நந்திதன் கண்களைத்
திறந்து தன் நண்பர்களைப் பாவமாகப் பார்த்தான். எதுவும் பேசவில்லை. ஆனால் கண்களில்
இருந்து கண்ணீர் வழிந்தது.
“டேய் நந்து... எதுக்காக இப்போ அழுவுற? அது தான்
நாங்க வந்துட்டோம் இல்ல... கவலைப்படாதடா...“ ஒரு நண்பன் அவன் கண்களைத் துடைக்க
இன்னொருத்தன் ஆறுதலாக சொன்னான்.
அவன் எதுவும்
சொல்லாமல் கண்களை மூடினான்.
பக்கத்தில் கவலையுடன் நின்றிருந்த அவன் அம்மாவிடம் அவனின் நண்பர்கள் வந்தார்கள்.
“என்னம்மா ஆச்சி...? எங்களுக்கு உடனே தகவல் கொடுத்திருக்கலாம் இல்லையா...?“ ஒருவன்
கேட்டான்.
“நீங்கள்
எல்லாம் கோகுலனோட கண்யாணத்திற்கு போயிட்டீங்க. இவனும் அன்னைக்கு நைட்டு தான்
கிளம்பினான். போன பஸ் தான் ஆக்சிடன்ட் ஆயிடுச்சி. ரெண்டு கை எழும்பும்
உடஞ்சிடுச்சாம். எனக்கு மறுநாள் காலையில தான் தகவல் வந்துச்சி. நான் ஓடியாந்து
பார்த்தேன். நல்ல வேலை உயிருக்கு ஆபத்து இல்லைன்னு சொன்னபிறகு தான் எனக்கு உயிரே
வந்துச்சி. உங்களுக்குத் தகவல் சொல்ல போறேன்னு சொன்னேன். ஆனால் நந்து தான் ”வேணாம். கோகுலனக்குத்
தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான். புது மாப்பிள்ளை. அதனால தெரிவிக்க வேணாம்ன்னு
சொல்லிட்டான்.“ என்றாள் கவலையுடன்.
“சரி
எங்களுக்காவது சொல்லி இருக்கலாம் இல்லையா...?“ இன்னொருவன் கேட்டான்.
“அதுவும்
வேண்டாம்ன்னு சொல்லிட்டான். அவங்க கல்யாணத்தைச் சந்தோஷமா முடிச்சிட்டு வரட்டும்.
பிறகு சொல்லிக்கலாம். ஒன்றும் சீரியஸ் இல்லை தானேன்னு சொல்லிட்டான்.“ என்றாள்.
“சரிம்மா... ஆனால் எதுக்காக அழுவனும்...?“
“அது
வந்தப்பா... வயசு பிள்ளையில்லையா...? ரெண்டு கையும் அசைக்க முடியாத அளவு கட்டு
போட்டு இருக்கிறது. எல்லாத்துக்குமே அடுத்தவரோட உதவிய கேக்கனும். அவனுக்குப்
பிடிக்கலை... அதுதான் ரொம்ப கவலைப்படுறான்...“ கண்களை முந்தானையால்
துடைத்துக்கொண்டே சொன்னாள்.
சற்று
நேரத்தில் அங்கு வந்த நர்ஸ், “நீங்கள் எல்லாம் கொஞ்சம் வெளியே போறீங்களா...?
அவருக்குத் துணி மாத்தனும்“ என்றாள் தன் மெல்லிய குரலில்.
“நன்றி
சிஸ்டர். ஆனால் நீங்கள் செய்ய வேண்டாம். என்ன செய்யனுமோ எங்ககிட்ட சொல்லிடுங்கள்.
இனிமே எல்லாவற்றையும் நாங்க அவனுக்குச் செய்கிறோம்.“ என்றான் ஒரு நண்பன்.
நிமிர்ந்து
அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த நர்ஸ், “நல்லதுப்பா. இதுக்கெல்லாம் கொஞ்சம்
சகிப்புத் தன்மை வேண்டும். எங்களுக்குப் பழகிடுச்சி. இங்கே நானே செய்கிறேன். இது
என் கடமை. அவன் டிச்சார்ஜ் ஆனப்பிறகு நீங்கள் செய்யுங்கள்.“ என்றாள் புன்முறுவல்
மாறாமல்.
“வேண்டாம்
சிஸ்டர். எங்களை நாங்களே சுத்தப்படுத்திகிற போது நாங்க சகிப்பாவோ, சலிப்பாவோ
நினைக்கிறதில்லை இல்லையா... அதே மாதிரி எங்க நண்பனுக்குச் செய்யிறதை எங்களுக்கே
செய்துக்கிறதா நினைச்சி செய்துவிடுகிறோம். இது எங்களோட கடமையாக நீங்க நெனச்சிக்கோங்க.
ப்ளீஸ் சிஸ்டர்“ என்றான் ஒருவன்.
சற்று நேரம்
யோசித்தவள், “சரி. உங்க விருப்பம் போல செய்யுங்கள். நல்ல ஃபிரண்ஸ் கிடைத்தால் எந்த
சோகத்தையும் தாங்கிடலாம். நந்து... உனக்கு நல்ல ஃபிரண்ஸ் கிடைத்திருக்கிறார்கள்.
கவலைப்படாதேப்பா....“ என்று சொல்லியபடி நகர்ந்தாள் நர்ஸ்.
நந்திதன்
தன் நண்பர்களை நன்றி கலந்த பார்வையால் பார்த்தான். அவன் முகத்தில் படிந்த
புன்முறுவலைக் கண்டு நண்பர்கள் மகிழ்ந்தனர்.
இக்கட்டான
நேரத்தில் தான் நல்ல நண்பர்களை அறிய முடியும்.
அருணா செல்வம்
05.08.2013
