வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனா இருந்தும் உயர்வோமடி!



(கொரோனா கண்ணிகள்)
.
தொற்ற ஒற்றிக்கொள்ளும்
தொடர்கதை யாக்கிவிடும்
பற்று நிறைந்ததடீ - கொரோனா
பண்பில் அரக்கனடீ!

காற்றில் பறக்காமல்
கண்டவர் தும்பலிட
வேற்றெனப் பார்க்காதடீகொரோனா
விரும்பியே சேருமடீ!

கண்ணுக்குக் கிட்டாமல்
கைத்தொட ஒட்டியுடன்
உண்டிடச் சேருமடீகொரோனா
உற்றிடக் கொல்லுமடீ!

வாயினுள் சென்றவுடன்
வாழ்ந்திடும் நெஞ்சினுள்ளே
நோயினைக் கூட்டுமடீகொரோனா
நுண்ணியக் கிரூமியடீ!

மூச்சுக் குழாயுள்ளே
மூடி அடைத்திட்டுப்
பேச்சை நிறுத்துமடீகொரோனா
பின்னிடும் வேகமடீ!

இன்ப உலகில்உள்ள
இனிமை சுகத்தைவிட்டுத்
துன்பமேற் காதடீகொரோனா
தொல்லை அழிப்போமடீ!

கைக்கூட்டும் செய்கையினைக்
கண்டதும் விட்டுவிட்டுக்
கைக்கூப்பு வோமடீகொரோனா
லங்கியே ஓடுமடீ!

கொள்ளைப் பெருநோயால்
கூட்டங்கள் போடாமல்
தள்ளி யிருப்போமடீ – கொரோனா
தானாய் இறக்குமடீ!

அன்பு நிறைந்திருக்கும்
அரசின் வழித்தன்னில்
ஒன்று சேர்வோமடீ  – கொரோனா
ஓடிடச் செய்வோமடீ!

நம்மை அறிந்துகொண்டு
நன்மை புரிந்துவிட்டால்
இம்மை நலம்தானடீ – கொரோனா
இருந்தும் உயர்வோமடீ!
.
பாவலர் அருணா செல்வம்
27.03.2020

வியாழன், 26 மார்ச், 2020

கொம்படைந்த வெண்பா!





நெற்பையோ கொம்படைய நெஞ்சம் மயங்கிடும்!
நற்சொல்லோ கொம்படைய நற்பிரிவாம்! – பற்றுடைய
தேனமைதி கொம்படைய சேறுமினம்! கானகத்தின்
தானழகு கொம்படைய தா!
.
நெற்பைசாக்கு கொம்படைய சொக்கு
நற்சொல்பதம் கொம்படைய பேதம்.
அமைதிசாந்தம் கொம்படைய சொந்தம்.
கானகம்காடு கொம்படைய கொடு.
.
பாவலர் அருணா செல்வம்
26.03.2020

(கொம்படைதல் என்பது தமிழில் உள்ள கொம்பில்லாச் சொற்களில் கொம்பினைச் சேர்த்தல் என்பதாகும். உதாரணமாககாடைஎன்ற சொல்லில் கொம்பைச் சேர்த்தால் கொடைஅல்லதுகோடைஎன வரும். வெண்பாவில் கொம்பில்லாச் சொல்லும் கொம்படைந்த சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களைக் கொண்டு பாடப்படுவதுகொம்படைந்த வெண்பாஎனப்படும்.)

கொம்புடைந்த வெண்பா!



.
உள்ளத்தின் கொம்புடைந்தால் உற்றவுயிர் போக்குவதாம்!
கள்ளுணர்வின் கொம்புடைந்தால் காண்வழியாம்!– கொள்ளையெழில்
கன்னியரின் கொம்புடைந்தால் கானமிடும்! காலமிடும்
பின்னடைவின் கொம்புடைந்தால் பீடு!
.
உள்ளம்நெஞ்சு கொம்புடைந்தால் நஞ்சு.
கள்ளுணர்வுபோதை கொம்புடைந்தால் பாதை.
கன்னியர்பெண்ணின் கொம்புடைந்தால் பண்.
பின்னடைவுசோதனை கொம்புடைந்தால் சாதனை.
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2020

(கொம்புடைதல் என்பது தமிழில் உள்ள கொம்பிருக்கும் சொற்களில் உள்ள கொம்புகளை நீக்குதல் என்பதாகும். உதாரணமாககொல்என்ற சொல்லின் கொம்பை நீக்கினால்கால்என வரும். வெண்பாவில் கொம்புடைய சொல்லும் கொம்புடைந்த சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களைக் கொண்டு பாடப்படுவதுகொம்புடைந்த வெண்பாஎனப்படும்.)

புதன், 25 மார்ச், 2020

கால் ஓடும் வெண்பா!




பெண்ணிழில் காலோடப் பெய்யும் அமுதாகும்!
விண்ணெழில் காலோட விண்சோலை! – மண்ணில்வாழ்
தன்னினம் காலோடத் தாக்குவோர் செய்செயலாம்!
இன்மணம்கா லோட எனது!
.
பெண்ணெழில்மாழை காலோட மழை.
விண்ணெழில்வானம் காலோட வனம்.
தன்னினம்சாதி காலோடச் சதி.
இன்மணம்வாசம் காலோட வசம்.
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2020

(கால் கூடுதல் என்பதுபானைஎனுஞ்சொல் கால் ஓடப் பானை  எனவாகும் என்பதே. காலுற்ற சொல்லும் காலில்லாச் சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைத்துப் பாட வேண்டும்)

கால் கூடும் வெண்பா!



.
வன்னுடல் கால்கொள்ள வல்ல இணைப்பாகும்!
மென்துகிள் கால்கொள்ள மெல்லிசைக்கும்! – என்றும்
கணவனிடம் கால்கொள்ள காண்ப(து) அரையாம்!
உணவுகால் கொள்ளுறும் ஓடு!
.
வன்னுடல்பலம் கால் பெற்றால் பாலம்
மென்துகிள்பட்டு காலெகொள்ள பாட்டு.
கணவன்பதி கால்கொள்ள பாதி.
உணவுபண்டம் கால்கொள்ள பாண்டம்.
.
பாவலர் அருணா செல்வம்
24.03.2020

(கால் கூடுதல் என்பதுபல்எனுஞ்சொல் கால் கொள்ளபால்  எனவாகும் என்பதே. காலில்லாச் சொல்லும் காலுற்ற சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைத்துப் பாட வேண்டும்)

வெள்ளி, 20 மார்ச், 2020

வாழவைக்கும் தெய்வங்களே வாழி! வாழி!



(இலாவணி)
.
எத்தனையோ இன்பங்களும் எத்தனையோ செல்வங்களும்
    என்னிடத்தில் எந்நாளிலும் உண்டு உண்டு!
அத்தனையும் இருந்தென்ன? அத்துமீறி நோய்பிடிக்க
    அடிமாடாய் ஆகியதே துண்டு! துண்டு!

அன்புமன மனைவியும் இன்பநிறை மகளுடன்
    ஆசைபொங்க வாழ்ந்திருந்தேன் கூடிக் கூடி!
இன்னலிதைக் கண்டதுமே என்னுலகில் வாழ்வினிமை
    இல்லையென வந்துவிட்டேன் ஓடி யோடி!

ஊருக்குள்ளே உயர்வாகப் பேருக்குள்ள மதிப்பாக
    உள்மனத்தில் மகிழ்ந்தேனே கண்டு கண்டு!
யாருமில்லா அனாதையாய் சேருமிடம் அறியாமல்
    ஆய்வுசெய்ய விட்டாரெனைக் கொண்டு கொண்டு!

வாழ்நிலையின் இருள்கண்டு பாழ்தனிமை பயங்கண்டு
    வாட்டமுடன் கதறினேன் அழுது அழுது!
ஊழ்நிலையை எண்ணியெண்ணி ஆழ்மனத்தில் பற்றிவிட்டேன்
    உருவற்ற அவன்தாளைத் தொழுது தோழுது!

சொந்தங்களும் சுற்றங்களும் விந்தையென ஒதுங்கிடச்
     சுடராக வந்தாந்த நாழி! நாழி!
வந்திருந்த தொற்றுநோயை முந்தியதை நீக்கியெனை
     வாழவைத்த தெய்வங்களே வாழி! வாழி!

வாட்டிவிட்ட நோய்விரட்டி நாட்டுக்குள்ளே கண்ணெதிரில்
    வாழ்ந்திருக்கும் கடவுள்தான் நீங்கள்! நீங்கள்!
தீட்டுகின்ற கவியாலே கூட்டுமருத் துவர்களைத்
    தினந்தோறும் போற்றிடுவோம் நாங்கள்! நாங்கள்!
.
பாவலர் அருணா செல்வம்
20.03.2020

செவ்வாய், 17 மார்ச், 2020

போகாதே துள்ளி!



(ஆனந்தக் களிப்பு)
.
(எடுப்பு)

அன்பெனும் காதலைச் சொல்லிப்பெண்ணை
ஆக்குவான் பேதையாய்ப் போகாதே துள்ளி!
.
(தொடுப்பு)

நன்றாகக் கேளடி தோழி! – பருவ
     நங்கையர் காண்பது கற்பனை ஆழி!
வன்மொழி கேட்டிடும் நாழி!முகம்
     வாடியே போய்விடும் போகாமல் வாழி!

பேச்சினில் பூசுவான் தேனை! – நீளப்
     பெண்விழி அங்கெனக் காட்டுவான் மீனை!
சாச்சிடச் சீறுவான் வானை! – வார்த்தை
     சாலமாய் உன்னிடம் காட்டுவான் பூனை!

விந்தையாய் நெஞ்சினை வாட்டும்! – செய்
     வேலையின் போதினில் இன்முகம் காட்டும்!
சொந்தமாய்ப் பாடிடும் பாட்டும்அவன்
     சொல்லிடும் சொல்லெலாம் சொர்க்கமாய்க் கூட்டும்!

பெண்ணெனும் மேனியோ வண்ணம்! – அதைப்
     பெற்றிடத் தொட்டிட உள்ளமோ எண்ணும்!
கண்ணெனும் போதையால் உண்ணும்! – காமம்
     காட்டிடும் ஆசையால் மாறிடும் பெண்ணும்!

என்னிணை என்றுனைச் சொல்வான்! – நீ
    ஏறிடும் உச்சியைக் கண்டதை மெல்வான்!
தன்கலை எண்ணிட வெல்வான்! – பிறர்
    ன்னலம் கேட்டிடக் கீழ்நிலை செல்வான்!

அன்புடன் போடுவான் வட்டம்! – உள்ளே
     ஆணையாய் நின்றிடச் சொல்லிடும் சட்டம்!
இன்பமாய்த் தீட்டுவான் திட்டம்! – திறனை
     எட்டாமல் செய்திடும் நூலிலாப் பட்டம்!

கற்றதைத் தீட்டினேன் பெண்ணே! – களவு
     காதலில் மூழ்குதல் காலத்தின் கண்ணே!
கற்பெனும் திண்மையோ விண்ணே! – அதைக்
     காத்திட நன்மைகள் பூத்திடும் மண்ணே!
.
பாவலர் அருணா செல்வம்
17.03.2020