படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 நவம்பர், 2015

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் !!


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை,
‘சப்தமிட்டு நடக்காதீர்கள்
இங்கே தான் என் அம்மா
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்‘

உலகப் பேரழகி கிளியோ பாட்ராவின் கல்லறை வாசகம்,

உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல வேலையாக பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருந்திருக்கும்‘

மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்,

‘இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்த கல்லறைக் குழி
போதுமானதாக இருந்தது‘

ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம்,

‘இங்கும் புதை குழியில் கூட
இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்‘

ஓர் அரசியல்வாதியின் கல்லறையின் மீது எழுதப்பட்ட வாசகம்,

‘தயவு செய்து இங்கே
கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்துவிடப் போகிறான்‘

ஒரு விபச்சாரியின் கல்லறை வாசகம் இது,

‘இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறாள்‘

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?



    
   வாழ்க்கையை மிகவும் சீரியஸாக நினைத்துச் செயல் பட்ட இளைஞன் ஒருவன், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து மிகவும் நொந்து போன நிலையில் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவைச் சென்று சந்தித்தான்.
    “பெருந்தகையே.... வாழ்க்கையில் தொடர்ந்து நான் தோல்வியையே சந்தித்து வருகிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முயன்றும் வெற்றியை என்னால் காணமுடியவில்லை. மிகவும் மனமொடிந்த நிலையில் தங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தாங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் புகழுக்கும் வெற்றிக்கும் தாங்கள் எப்படி எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.“ என்றான்.
    “தெரிந்து என்ன செய்யப் போகிறாய்,“ என்று கேட்டார் பெர்னார்ட் ஷா.
     “அதையே என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வெற்றி பெறலாம் என நினைக்கிறேன்.“ என்றான் இளைஞன்.
    “நல்ல முயற்சி. செய்துப்பார்.... நீ ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறாய்?“
    “தெரியவில்லை.“
    “தெரிந்து கொள்ளவாவது முயற்றி செய்தாயா?“
    “ஆமாம். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அடுத்தடுத்து முயற்சிப்பேன். தொடர்ந்து தோல்வியே வரும். அதனால் மனமொடிந்து போய்விடுகிறேன். அடுத்து வேறு விஷயங்களை நினைக்கிறேன். செயல்படுகிறேன். அவற்றிலும் தோல்வி தான் வந்தது.“ என்றான் கவலையாக.
    “இளைஞனே.... நானும் உன்னைப் போல இளைஞனாக இருந்தபோது பத்துக் காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது காரியங்களில் தோல்வியைத் தான் தழுவினேன். ஆனால் அதற்காக அந்தத் தோல்வியை நான் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஒன்பது காரியங்களிலும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் ஒரு உண்மை பளிச்சிட்டது. தொண்ணூறு முறை முயன்றால் அந்த ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்ற உண்மை தான் அது.
    அதாவது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.“ என்று விளக்கமளித்தார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
    வெற்றியின் ரகசியத்தை அறிந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

திங்கள், 1 டிசம்பர், 2014

அறிவாளி என்பவன் யார்?



    சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸிடம் (கி.மு 511 – 479) அவரது சீடன் ஒருவன், “அறிவாளி என்பவன் யார்?“ என்று கேட்டான்.
    “கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை நிறைந்தவன் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “வேறு யாரெல்லாம் அறிவாளி?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “அடக்கம், பணிவு, நற்குணம் ஆகியவற்றை உடையவனும் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்
    “அறிவாளிகள் அவ்வளவு தானா?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “இருக்கிறார்கள். பேச்சிலும் நடத்தையிலும் கவனம் செலுத்துகிறவர்களும் அறிவாளிகள் தாம்“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “சரி ஐயா. அரசாங்க அதிகாரிகளைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?“ என்று கேட்டான் சீடன்.
    “அவர்களா? அவர்கள் வெறும் அரிசி மூட்டைகள்“ என்றார் கன்ஃபூசியஸ்.

அப்போதிலிருந்தே அப்படித்தான் போல.....

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சீன நாட்டுப் பழமொழிகள்!!




1. மேலே இடிவிழுந்த பிறகு, இடி விழும் பலனைப் பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டியதில்லை.

2. எப்போதும் கண்களைத் திறந்து கொண்டே இரு. வாயை அல்ல.

3. அழகில்லா மனைவியும், அறிவில்லா வேலைக்காரியும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.

4. ஒருவன் பதவியில் இல்லாத போது கண்டிக்கிற அந்தக் குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான்.

5. ஒருவனை நண்பனாகக் கொள்வதில் நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் நட்புக் கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் இருக்க வேண்டும்.

6. சாட்டையை இழந்து விட்டால் அதில் தங்கப்பிடி இருந்தது என்பான் மனிதன்.

7. ஒரு குடும்பத்தைப் பாழாக்குவது திறமையற்ற பிள்ளைகள் அல்ல. கெட்டிக்கார பிள்ளைகளே! ( இது சரியா??? )

8. அமைதியாக எழுபவன் லாபத்துடன் தூங்குவான்.

9. தாகம் ஏற்படுவதற்கு முன்பாகவே கிணற்றைத் தோண்ட வேண்டும்.

10. மனிதர்கள் அன்பாக உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாக இருக்கும்.

11. மிக முக்கியமான விஷயங்களுள் முதன்மையானது, நம்முடைய மன சாட்சியை நாம் ஏமாற்றாமல் இருப்பது தான்.

12. மற்றவர்களின் வடு நமக்கு பாடமாக அமைய வேண்டும்.

13. உன்னுடைய விரோதிக்கு நீ அடிக்கடி கோபத்தை மூட்டினால் அவனை விட அது உன்னையே அதிகம் அழிக்கும்.

14. புன்சிரிப்பு செய்யவே இயலாதவன், புதிய கடையைத் திறக்க தகுதியற்றவன்.

15. உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாள் சாப்பாடும் விருந்து தான்.

அருணா செல்வம்

படித்ததில் பிடித்தது.                   

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

சமாதானமும் குழப்பமும்!!


   வழக்கமாக நெற்றியில் நாமம் போட்டுக் கொள்கிறவர்கள் இருபுறமும் வெள்ளைக் கோடுகளும் நடுவே சிவப்புக் கோடும் போடுவதுதான் வழக்கம்.
   ஆனால் கலைவாணர் ஒரு சமயம் தன் நெற்றியில் இருபுறமும் சிவப்புக் கொடுகளும் நடுவே வெள்ளைக் கொடுமாக நாமம் போட்டிருந்தார்.
   அதைக் கண்ட அவரது நண்பர்கள் ஆச்சரியமும் அதே சமயம் குழப்பமும் அடைந்தனர்.
   “என்ன... நாமத்தை வழக்கத்திற்கு மாறாகப் போட்டிருக்கிறீர்கள்?“ என்று கேட்டார் ஒரு நண்பர்.
   “இது தான் இன்றைய இந்தியா!“ என்றார்“ கலைவாணர்.
   “புரியவில்லையே!“ என்றார் நண்பர்.
   அதற்குக் கலைவாணர், “வெள்ளை சமாதானத்தின் சின்னம். சிவப்பு டேஞ்சரஸ். முன்பெல்லாம் நம் நாட்டில் சமாதானத்தின் நடுவே குழப்பம் இருந்தது. இப்போது குழப்பத்தின் நடுவே சமாதானம் இருக்கிறது“ என்று தன் நெற்றியில் போட்டிருந்த நாமத்தைக் காட்டியபடி சொன்னார்.
   அப்போதைய குழப்ப இந்தியாவை ஒரு சாதாரண நாமத்தின் மூலம் வெளிப்படுத்திய கலைவாணரின் அறிவை எண்ணி நண்பர்கள் வியந்தனர்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

வெள்ளி, 20 ஜூன், 2014

சத்திரத்துச் சாப்பாடு – இரண்டாம் விளக்கம்(2)





நட்பறவுகளுக்கு வணக்கம்.
    காளமேகப் புலவரின் சத்திரத்துச் சாப்பாட்டு என்ற தலைப்பில் எழுதிய பாடலுக்கான இரண்டாம் விளக்கத்தை ஒரு பதிவாக இட்டேன்.
   அது தவறான பதில் என்று ஒருவர் (பெயரில்லாதவர்(?) கருத்துத் தெரிவித்திருந்தார். நானும், நாம் சொன்ன விளக்கம் உண்மையில் தவறானதாக இருந்தால் அதையே மற்றவர்கள் எடுத்துக் கொள்ள நேரிடுமே என்ற காரணத்தால் உடனே அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்.
   பிறகு காளமேகத்தின் தனிபாடல்கள் தொகுதிகளை எடுத்துப் பார்த்தேன். அதிலும் “பாடலின் பொருளை மாற்றி உரைத்தார்“ என்றே இருந்தது. அதனுடன் சேர்ந்தது போல வேறு பாடலும் இல்லை.
   கடைசியில் பெயரில்லாத ஒருவரின் கருத்திற்காக நாம் அதிகமாக சிந்தித்துத் தேட வேண்டிதில்லை என்று முடிவெடுத்து இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

   காளமேகம் ஒரு பாடலுக்கு இரண்டு பொருள் வருமாறு சிலேடையாகப் பல பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் அப்பாடல்கள் ஆழ்ந்து பொருள் கொள்ளவேண்டும். புரிந்து படித்தால் “ஆஹா... அருமை“ என்று எவராளும் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்தச் சத்திரத்துப் பாடலில் இரண்டாவது கருத்துச் சிலேடையாக இல்லாமல் மிகவும் சாதாரணமாகப் பொருள் கொள்வது போல் தான் இருக்கிறது.


பாடல்

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

    இந்தப் பாடலின் முதல் விளக்கம்... ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும். என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
   இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான் அல்லவா?
   அப்போது, கவி காளமேகம், அவனுடைய மனமாற்றத்தைப் புரிந்து கொண்டு,
   ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலே அரிசி வரும். அந்த அரிசியை இரவெல்லாம் தீட்டி, ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிய நேரத்திலேயே உலையிலே இடுவார்கள். காலையில் விடிவெள்ளி வானத்தில் எழும்பொழுதே இரவலர்களின் அகம் இருக்கும் பையிக்கு அன்னம் இடுவார்கள். என்று பொருளினை மாற்றி உரைத்து அவன் மனம் மகிழுமாறு செய்தார்.
   அதாவது அந்தச் சத்திரத்தில் இரவெல்லாம் உழைத்து விடிகாலையிலேயே உணவு இடுகிறார்கள்.
   இது தான் அந்தப் பாடலின் இரண்டாவது பொருள்.

   இதைவிட அவரின் “பாம்புக்கும் எள்ளுக்கும்“ உள்ள ஒற்றுமை “தென்னைமரத்திற்கும் வேசிக்கும்“ உள்ள ஒற்றுமை போன்ற பாடல்களில் உள்ள கருத்துக்கள் மிகவும் சுவையாக இருக்கும். பின்னாளில் அதையும் எழுதுகிறேன்.

மற்றபடி ஏற்கனவே படித்த, படிக்க வந்து ஏமார்ந்தவர்கள் அனைவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.

நன்றி.
அருணா செல்வம்.


பாடலக்கான வேறு விளக்கம் யாருக்காவது தெரிந்து இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அல்லது அதற்கான வேறு பாடல் இருந்தாலும் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

வியாழன், 5 ஜூன், 2014

சத்திரத்துச் சாப்பாடு!



    நாகப்பட்டினத்தில் காத்தான் சத்திரம் என்று ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த காளமேகப்புலவர் உணவுக்காகச் சென்றார். பகலெல்லாம் காத்திருக்கச் செய்து, இரவில் நெடுநேரத்திற்குப் பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட்டார்கள். கவிஞரின் பொறுமை அதற்குமேலும் நிலைபெறவில்லை. உடனே இப்படிப் பாடுகின்றார்.

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

பொருள்.

ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்.
(இதுவும் ஒரு சத்திரமோ? என்பது குறிப்பு.)

    இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அப்போது, கவிஞர் அவனுடைய மனமாற்றத்தைப் பாராட்டியவராகப் பொருளினை மாற்றி உரைத்து அவனை மனமகிழுமாறு செய்தார்.
  
படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

யாரெல்லாம் சோம்பேறிகள்? (நகைச்சுவை)



  
 
  ஒரு சமயம் சந்தை கூடுமிடத்தில், ஓர் மேடான இடத்தில் முல்லா நஸ்ருதீன் ஏறி நின்றார்.
   அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்தார்.
   அனைவருமே அவரவர் கடமையில் இருந்தார்கள்.
   திடீரென்று அவர், “அன்பார்ந்த மக்களே...“ என்று பேச்சை ஆரம்பித்தார்.
   மக்கள் அனைவரும் அவரைப் பார்த்தனர். சிலர் அவர் அருகில் வந்து அவர் பேச்சைக் கேட்க ஆவலாயினர்.
   மீண்டும் முல்லா, “மக்களே... நீங்கள் கஷ்டம் இல்லாமல் சிறந்த அறிவு பெற ஆசைப்படுகிறீர்களா...? பொய்யே இல்லாத முழு உண்மையை அறிய ஆசைப்படுகிறீர்களா...? முயற்சி சிறிதும் இன்றி முன்னேற ஆசைப்படுகிறீர்களா...?“ என்று சத்தமாகக் கேட்டார்.
   அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரே உற்சாகம்.
   “ஆமாம்... ஆமாம்... அவற்றிற்கு வழி கூறுங்கள்“ என்று உரத்த குரலில் கேட்டனர்.
   அதைக் கேட்ட முல்லா அவர்களை எரித்து விடுவது போல் பார்த்தார்.
   “வழியாவது மண்ணாங்கட்டியாவது. சோம்பேறியாக இருந்தால் எப்படி முன்னேற முடியும் என்று யாராவது யோசித்தீர்களா? உங்களில் யாரெல்லாம் சோம்பேறிகள் என்று தெரிந்து கொள்ளத்தான் அப்படி பேசினேன். இப்போது இங்கு நிற்கும் அனைவருமே சோம்பேறிகள் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன். போய் உழைத்து வாழுங்கள்“ என்றார் முல்லா நாஸ்ருதீன்.
   அங்கே கூடியிருந்த மக்கள் அனைவரும் முல்லாவைக் கோபத்துடன் பார்த்தபடி நகர்ந்தனர்.

படித்ததில் சிரித்தது.
அருணா செல்வம்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

அண்ணாவின் ஆங்கில அறிவு!


                                                    



    அறிஞர் அண்ணாவின் திறமைகளையும் சாதனைகளையும் பாராட்டி அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் அவருக்கு “டாக்டர் பட்டம்“ வழங்கி கெளரவித்தது.
   பட்டம் பெறுவதற்கு முன், பட்டம் பெற இருப்பவர்கள் யேல் பல்கலைக்கழக அறிஞர்களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம்.
   பட்டம் பெற இருப்பவர், அதற்குத் தகுதியானவர் தானா என்பதை அறிய மிகவும் நாகரீகமாக நடத்தப்படும் சோதனைதான் அந்த உரையாடல்.
   அந்த உரையாடலின் போது யேல் பல்கலைக்கழக அறிஞர்கள் அண்ணாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர்.
   “பிகாஸ்என்ற சொல்லை அடுத்தடுத்துத் தொடர்ந்து மூன்று முறை வரும்படி அமைத்து ஓர் ஆங்கில வாக்கியம் அமைக்க வேண்டும். முடியுமா உங்களால்?“
   இது தான் அறிஞர்கள் கேட்ட கேள்வி.
   அதற்கு அண்ணா புன்னகைத்தவாறே, “நோ சென்டன்ஸ் பிகின்ஸ் ஆர் எண்டர் பிகாஸ்”.  பிகாஸ்”, பிகாஸ்இஸ் எ கன்ஜகஷன்! (No sentence begins or ends  with  ‘because’. Because’, ’because’ is a conjunction) என்றார்.
   இதன் தமிழ் விளக்கம் இது.
   ஏனென்றால்என்ற சொல்லைக் கொண்டு எந்த ஒரு வாக்கியமும் தொடங்குவதுமில்லை. முடிவதுமில்லை. “ஏனென்றால்”, ஏனென்றால்என்பது ஓர் இணைப்புச் சொல்“
   அறிஞர் அண்ணாவின் இந்த ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்த யேல் பல்கலைக்கழக அறிஞர்கள், டாக்டர் பட்டம் பெற அவர் தகுதியுடையவரே என்பதைப் புரிந்து கொண்டனர்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

உலகில் நானே உயர்ந்தவன்!!


   ஒரு சமயம் யோகி ஒருவர் ஒரு ஞானியிடம் வந்தார்.
   அவர் ஞானியிடம், “சாமீ... எனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறது. பூமிக்குக் கீழ் நீண்ட நேரம் புதையுண்டு மூச்சை அடக்கும் சக்தி இருக்கிறது. தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருக்கும் அபரிமிதமான சக்தியும் இருக்கிறது“ என்றார் பெருமையாக.
   ஞானி அவர் சொன்னதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. யோகிக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “சாமீ... இந்த விசயங்கள் எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை அல்லவா...? அப்படியென்றால் உலகில் நான் மட்டும் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதைத் தங்களின் வாயால் சொல்லுங்கள்“ என்றான்.
   ஞானி அந்த யோகியைக் கூர்ந்து பார்த்தார்.
   பேச்சில் மட்டுமல்ல, அவரது கண்களிலும் அகந்தை சுடர் விட்டது.
   அதை அழிக்க எண்ணிய ஞானி, “ஐயனே... பாருங்கள்... பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றன. புழுக்கள், விஷ ஜந்துக்கள் போன்றவை பூமிக்கடியில் நீண்ட காலம் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீருக்குள்ளேயே பிறந்து வாழ்கின்றன. இவையெல்லாம் எனக்கும் சாத்தியம் என்கிறீர்கள். அப்படிப்பட்ட அற்ப ஜந்துக்களைப் போலத்தான் இப்போது நீங்கள் எனக்குத் தெரிகிறீர்கள். அவையெல்லாம் தெரிந்ததால் உங்களுக்கு என்ன பயன்...?“ என்று கேட்டார்.
   யோகி விழித்தார்.
   “பறப்பதால், பூமிக்கடியில் மூச்சை அடக்குவதால் நீங்கள் அடையப் பாகும் லாபம் என்ன?“ திரும்பவும் கேட்டார் ஞானி.
   யோகி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.
   ஞானி புன்னகைத்து, “உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. கருணை போன்ற நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும். அகந்தை போன்ற தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும். இவற்றை விட்டு விட்டு பறப்பதாலும் மூச்சை அடக்குவதாலும் யாதொரு பயனும் இல்லை.“ என்றார்.
   “உலகிலேயே நான் தான் உயர்ந்தவன், வஸ்தாது“ என்ற அகந்தை கொண்டிருந்த அந்த யோகி, ஞானியின் விளக்கத்தைக் கேட்டு வெட்கித் தலை குனிந்தான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

திங்கள், 2 டிசம்பர், 2013

ஐம்பது சதவிகித முட்டாள்கள்!! (சிரிக்க-சிந்திக்க)


   உலகில் கம்யுனிஸ சித்தாந்தத்தை ஏற்படுத்தியவர், ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் (Karl Marx . 1818-1883 ) இவரும் இவரது நண்பருமான ஃபிரெடரிக் ஏங்கெல்ஸீம் (Friedrich Engels) இணைந்து எழுதிய “டாஸ் கேபிடல்“ என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. இந்நூலை “கம்யுனிஸத்தின் பைபில்“ என்றும் குறிப்பிடுவர்.
   திடீரென ஏற்படும் சிக்கலில் இருந்து விடுபடுவதில் கைதேர்ந்தவர், கார்ல் மார்க்ஸ்.
   ஒரு சமயம் அமெரிக்காவில் செனட் சபையில் பேசுவதற்காக கார்ல் மார்க்ஸ் அழைக்கப் பட்டிருந்தார்.
   உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசுவதில் கார்ல் மார்க்ஸ் வல்லவர்.
   அவர் தன் பேச்சினூடே, “அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள்“ என்றார்.
   அதைக்கேட்ட செனட் சபையே ஒரு கணம் ஆடிப்போய் விட்டது.
   எங்கும் கூச்சல் குழப்பம் எழுந்தது.
   “அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள்“ என்று நீங்கள் பேசியதை உடனே வாபஸ் பெற வேண்டும்“ என்று பலர் கத்தினர்.
   உடனே கார்ல் மார்க்ஸ், “சரி சரி... அமைதியுடன் இருங்கள். அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள் என்று நான் பேசியது தவறு என்று நீங்கள் கருதுவதால் நான் பேசியதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதனால் அவ்விடத்தில் அமெரிக்கர்கள் ஐம்பது சதவிகித்தனர் அறிவாளிகள் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்“ என்றார்.
   அதைக் கேட்ட கூட்டத்தினர், அடுத்து என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துப் போய் நின்று விட்டனர்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.