சனி, 31 அக்டோபர், 2015

வாணிதாசன் விழா பாடல்!
கலைவாணி பெற்றெடுத்த வாணி தாசர்!
      கவிஞரேறு பேறுபெற்ற தமிழின் நேசர்!
சிலைபோன்று செதுக்கிவைத்த பாக்கள் சொல்லும்
      சீர்மிகுந்த இசைப்பாக்கள் தஞ்சம் என்று!
மலைத்தேனும் தோற்றோடும் வண்ணம் இந்த
      மாமனிதர் நூல்படித்தால் தோன்றும் எண்ணம்!
அலையல்ல வந்துபோக! நிலையாய் நிற்கும்
      அரசுடமை கொண்டதுவும் உயர்வே என்றும்!

தொடுவானம் இசைப்பாட்டாய்த் தந்தார்! நல்ல
      தோழியினைத் தேவதையாய்க் கண்டார்! மாதர்
படுவதையே “விதவைக்கோர்ச் செய்தி“ சொன்னார்!
      பாட்டும்பி றக்குமெனப் பாடி வைத்தார்!
நடுஇரவில் கடிதங்கள் வரைந்து கொண்டே
      நல்லிரவு வரவில்லை என்றார்! நன்மை
கொடுக்கின்ற வாழையடி வாழை போல
      கொடிமுல்லை காப்பியமும் சுவைக்க தந்தார்!

வீட்டுக்குச் சேர்த்துவிட்டு வெறுங்கை காட்டி
      வெள்ளைவேட்டி வேசமுடன் நடப்போர்க் குள்ளே
நாட்டுக்கு நன்மைகளைச் சொல்லிச் செல்லும்
      நன்மனது கொண்டவர்கள் சிலரே! உள்ளக்
கூட்டுக்குள் சமுதாய நலத்தைக் கோண்டோர்
      குறிப்பெடுத்தே ஒருசிலரை நோக்கிப் பார்க்க
பாட்டுக்குள் நற்கருத்தைச் சொல்லிச் சென்ற
      பாவலராம் வாணிதாசர் புகழும் வாழ்க!


கவிஞர் அருணா செல்வம்
13.02.2015

வியாழன், 29 அக்டோபர், 2015

கோபம் வந்தால்......


       இளைஞன் ஒருவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. அவனுக்குக் கோபம் வரும்போதெல்லாம் அவன் கத்தித் தீர்த்து விடுவான். மேலும் தன் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வான்.
   இதைக் கவனித்த அவனின் அப்பா, அவனை ஒரு நாள் அழைத்து, அவனிடம் ஒரு சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்து, ‘இனிமேல் உனக்கு ஒவ்வொரு முறை கோபம் வந்து போன பின்பு வீட்டின் பின்புறத்தில் இருக்கும் சுவற்றில் ஒரு ஆணி அடித்து விடு‘ என்று சொன்னார்.
    அவனும் அது போலவே செய்தான். முதல் நாள் பத்து ஆணி அடித்தான். மறுநாள் ஏழு, அதற்கும் மறுநாள் ஐந்து என்று ஒவ்வொரு நாளாக ஆணி அடிப்பது குறைந்து கொண்டே வந்து ஒரு நாள் ஆணி அடிக்காத நிலையும் வந்தது. உடனே தன் தந்தையிடம் சென்று, ‘அப்பா இது வரையில் 45 ஆணிகள் அடித்துள்ளேன். இனி எனக்குக் கோபம் வராது என்று நினைக்கிறேன்‘ என்றான்.
   உடனே அப்பா, ‘அப்படியா, நல்லது. இனிமேல் உனக்குக் கோபம் வராத நாளெல்லாம் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கிவிடு‘ என்றார். 45 நாட்களில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. இந்த விசயத்தைத் தன் தந்தையிடம் பெருமையாக சொல்லி காட்டினான்.
   அப்பாவும் அவ்விடத்தைப் பார்த்தார். பிறகு சொன்னார், ‘ஆணிகளைப் பிடுங்கிவிட்டாய். ஆனால் சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய் ? உன் கோபமும் இது போல பலரைக் காயப்படுத்தி இருக்கும் அல்லவா ?‘ என்று கேட்டார். இளைஞன் பதில் சொல்ல முடியாமல் வெட்கித் தலை குனிந்தான்.

   கோபத் தீயின் வடுவும் மறையாது. 

திங்கள், 26 அக்டோபர், 2015

சித்திரச் சிரிப்பு !சித்திரம்  போலவள்  சிரிக்க – கண்
                     பறிக்க – மனம்
                     அரிக்க – உயர்
சிந்தையிலே அதைத் தரிக்க – நல்ல
சிறப்பாகவும் செழிப்பாகவும்
   செருக்காகவும் விருப்பாகவும்
சீரெடுத்தப் பாடி மகிழ்வேன் ! – அவள்
பேரெடுத்துப் பாடி நெகிழ்வேன் !

நித்தமும் முன்வந்து பார்க்க – கரம்
                    கோர்க்க – உயிர்
                    ஈர்க்க – மனம்
நிம்மதியாய் அதை  ஏற்க – என்
நினைவலைகளும் கனவலைகளும்
    கடலலையென நடம்புரிந்திடும்
நெஞ்சமெல்லாம் மழை பொழியும் ! – அந்த
வஞ்சியாலே கவி வழியும் !

(காவடிச் சிந்து)
கவிஞர் அருணா செல்வம்.

புதன், 21 அக்டோபர், 2015

அந்தப் பொழுது!பூக்கள் மணம்பரப்ப ! ஈக்கள் மதுவருந்த !
தேக்கம் தெளிந்திருக்க ! தேய்நிலவு – நோக்கமின்றி
மேலிருக்க ! மேனிதொட்ட மேற்றிசைக் காற்றினிலே
சூலிருக்க ! சொர்க்கம் தர !

குயிலெல்லாம் பாட ! மயிலெல்லாம் ஆட !
பயிர்கள் தலைசாய ! பாச – உயிர்கள்
இணைத்தேட ! காற்றும் இதமாக ! காமன்
கணைதொடுக்க ! காதல் வர !

கண்ணோடு கண்பார்க்க ! கையோடு கைசேர்க்க !
விண்ணோடு மேகம் விளையாட ! – மண்ணுலகில்
என்னோடு நீயாட ! உன்னோடு நானாட !
பொன்னான அந்தப் பொழுது !

(குளக வெண்பா)
கவிஞர் அருணா செல்வம் 
12.07.2014

திங்கள், 19 அக்டோபர், 2015

சினிமா துறையில் ஜொலிக்க வேண்டுமா ?


நட்புறவுகளுக்கு வணக்கம்.
       பொதுவாகவே நிறைய பேருக்கு சினிமா உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணத்திற்காக புகழுக்காக என்ற காரணம் மட்டும் அல்லாமல் அதில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்துக் கொண்டு அனைவரையும் அது தன்பால் இழுக்கத்தான் செய்கிறது.
   ஒரு சமயம், இதில் நம் திறமைகளை வெளிகாட்டினால் அது பல்லாயிரக் கணக்கான மக்களிடம் சென்றடையும் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். எந்தத்திறமையானாலும் அதை மற்றவர்கள் கண்டு களித்துப் பாராட்டினால் தானே அந்தத் திறமைக்காண அங்கிகாரம் கிடைத்ததாக ஆகும்.
   ஏனோ கொஞ்ச நாட்களாக எனக்கும் இந்த ஆசை துளிர்விட ஆரம்பித்து விட்டது. இது சரியா தவறா என்று யோசிப்பதற்கு முன்பே என் எண்ணங்களுக்குச் சிறகு முளைத்து விட்டது. என்ன செய்வது ? நானும் சராசரி மனுஷி தானே….. ஹி ஹி ஹி.....
   சரி… சினிமாத்துறையில் நுழைந்து மின்னுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தவிர சினிமாத்துறையில் நுழைந்த அத்தனை பேருமே மின்னிவிடவில்லை. ஏதோ சிலர்தான் பிரபலங்காளாக ஆகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்.
   அப்படி பிரபலங்களானவர்களை ஒரு வரிசைப்படுத்தினேன்.
   என்ன ஓர் ஆச்சர்யம் !!!!!
   நான் வரிசைப்படுத்திய பல பிரபலங்களின் பெயரில் உள்ள எழுத்துக்களில் ஜ, ஜி, ஜோ, ஷ, ஹ, ஸ்ரீ போன்ற எழுத்துக்கள் உள்ளவர்களே நிறைய பேர்களாக இருந்தார்கள்.
உதாரணமாக

சிவாஜி
எம். ஜி. ஆர்
பாலாஜி
எஸ் எஸ் ராஜேந்திரன்
ஜெய்சங்கர்
ஏ எம் ராஜன்
நாகேஷ்
சரோஜா தேவி
டி.ஆர் ராஜகுமாரி
எம் என் ராஜம்
விஜய குமாரி
கே ஆர் விஜயா
ஜெயந்தி
வாணிஸ்ரீ
உஷா நந்தினி
ரஜினி
கமலஹசன்
ஸ்ரீதேவி
ஸ்ரீ பிரியா
சுகாஷினி
விஜய்
அஜித்
தனுஷ்
ஜோதிகா
டி எம் சௌந்தர்ராஜன்
ஜானகி
எல் ஆர் ஈஸ்வரி
ஜிக்கி
ஸ்வர்ண லதா
பாரதிராஜா
பாக்கியராஜ்
பாண்டியராஜன்
டி ராஜேந்தர்…..

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலே உள்ள நட்சத்திரங்கள் மின்னிட இப்படி ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களைத் தன் பெயரில் வருவது போல் அமைத்துக்கொண்ட காரணமாகக் கூட இருக்கலாம்.
    உடனே நானும் என் பெயரை எப்படி எப்படியோ மாற்றி எழுதிப் பார்த்தேன். ம்ம்ம்….. எதுவும் தேறவில்லை. ஆனால் உங்களில் யாருக்காவது சினிமாத்துறையில் நுழைந்து மின்னிட ஆசை இருந்தால் உங்களின் பெயரை ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ எழுத்துக்கள் சேர்ந்து வருமாறு அமைத்துப் புகழ்பெருங்கள்.

பின்குறிப்பு
    இந்த ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் அல்ல. வடமொழி எழுத்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

20.10.2015

புதன், 14 அக்டோபர், 2015

சும்மா ஒரு டெஸ்ட் !


நட்புறவுகளுக்கு வணக்கம்
    உடல்நிலை சரியில்லாததால் வலை பக்கம் சில காலமாக வரமுடியவில்லை. இப்போழுது உடல்நிலை சற்று தேறி வருவதால் திரும்பவும் உங்களைக் காண வந்துள்ளேன்.
      பல காலமாக பதிவு எதுவும் ஏற்றாததாலும் புதிய கணிப்பொறி மாற்றியுள்ளதாலும் சற்று குழப்பமாக இருக்கிறது. புதியவைகள் எப்போதுமே குழப்பத்தைத் தருவது தானே…. புரிந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
    புரிய முயற்சித்து இந்த பதிவை வெளியிடுகிறேன். தவறுகள் இருப்பின் நீங்கள் சுட்டிக்காட்ட திருத்திக்கொள்கிறேன்.

அன்புடன்

அருணா செல்வம்.
15.10.2015