நட்பறவுகளுக்கு வணக்கம்.
நேற்று புதியதாக திருமணமான தம்பதியர் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வருவதாக
போன் செய்தார்கள். அவர்களுக்கு அவசர அவரசமாக இந்தப் பொரி அரிசி உருண்டையையும்
முறுக்கும் செய்து வைத்து உபசரித்தேன்.
அதிலிருந்து உங்களுக்கும்
கொஞ்சம்... “சும்மா“ சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்.
அரிசி – 2 டம்ளர்.
சர்க்கரை – ஒரு டம்ளர் (வேண்டுமானால் மேலும் சேர்த்துக் கொள்ளலாம்)
ஏலக்காய் – ஐந்து (நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்)
முற்றிய தேங்காய் – ஒன்று (துருவி வைத்துக்கொள்ளங்கள்)
உப்பு – கொஞ்சம்.
செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் கழுவிய
அரிசியைப் போட்டு நன்றாக பூக்க வறுக்க வேண்டும்.
வறுத்தப் பிறகு ஆற வைத்து அதை
மிக்ஸியில் இட்டு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
திரும்பவும் அதே பாத்திரத்தில் ஆறு
டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும்
உப்பு,
சர்க்கரை,
ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
அரிசிமாவைத் துரலாக சேர்த்து நன்கு வேகவிட வேண்டும். நன்கு என்றால் இரண்டு
மூன்று நிமிடத்திலேயே வெந்து கட்டியாகி விடும். கட்டி கட்டியாக வராமல் நன்றாக
கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
வெந்து
உருண்டைப் பிடிக்கும் அளவிற்கு வந்ததும் துருவிய தேங்காயில் கொஞ்சம் சேர்த்து
கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.
பின்பு சிறு சிறு உருண்டையாகப்
பிடித்துத் துருவிய தேங்காயில் உருட்டி தட்டில் அடுக்கி வையுங்கள்.
இது தான் பொரி அரிசி உருண்டை
செய்வதற்கு மிகவும் எளிது. சாப்பிடவும் சுவையாக இருக்கும். செலவும் கம்மி
தான்.
நட்புறவுகளே..... இந்தப் பலகாரத்தை நம் தமிழ்ப்பெண்கள் அனைவருமே மிக நன்றாக செய்வார்கள்.
நான் எதற்காக இதைச் செய்து வெளியிட்டேன் என்றால்...... நான் சரியாகத்தான் செய்திருக்கிறேனா?
என்று தெரிந்துக் கொள்ளத்தான். தவறு இருந்தால்... தோழிகளே பின்னோட்டத்தில்
சொல்லிக்கொடுங்கள்.
அன்புடன்
அருணா செல்வம்.