செவ்வாய், 30 நவம்பர், 2021

குத்துவிளக்குச் சித்திர கவி!

 


குலங்காக்குந் தீபமே! குத்து விளக்கே!
.
நாளுங் கேட்டே நல்லோர்க் கூவிட
நீளு மளவில் நிறைவே விளையும்!
ஓதும் வேதத்தா லேகும் தாமே !
சூதுபயத் தீமையுந் தொலையும்! குடிகளின்
கலக்கம் போக்கியே காக்குந்தங் கநிலவே!
குலங்காக்குந் தீபமே! குத்து விளக்கே!
.
பாவலர் அருணா செல்வம்
01.12.2021

வெள்ளி, 26 நவம்பர், 2021

சங்குச் சித்திர கவி!

 

.

திருமாலின் சங்கொலியே சிந்து!
.
துள்ளலந்தப் போரொலியே! துய்ப்பாயே இன்பமுடன்!
பள்ளிகொண்ட புன்னகையின் பண்ணினாலே - உள்ளத்
தருள்பிறக்கும்! சிந்தையொலி ஆர்ப்பரித் தாடும்!
திருமாலின் சங்கொலியே சிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
27.11.2021

வெள்ளி, 19 நவம்பர், 2021

காமாட்சி விளக்குச் சித்திர கவி!

 

.

சுடர்ந்திடும் தீயே! சூரிய னுருவே!
தடங்களை நீக்கியே தாங்கிடும் வழியே!
இருளின் நீட்சி இடத்தை மாற்றிடும்!
மருட்சி நீக்கி மலர்மன மாக்கும்!
வாழ்வைக் காக்க வளருந் தீயே!
ஆழ்கடல் நடுவில் தீவி னழகே!
மங்கலஞ் சேர்ந்து வழிபடு மொளியே!
தங்கமு மோடும் தகையொளி முன்னே!
தினமும் காணத் திறக்கும் ஞானம்!
மனமது மெதுவாய் வலம்வர வைத்திடும்!
கானே! தேனே வாழி! பொன்பொது
தானே! வாகையே தகைவகை வானே!
தாது பொன்பொழி வானே! தேனே!
காத்திடுந் தீயே! காமாட்சி தாயே!
.
பாவலர் அருணா செல்வம்
18.11.2021

புதன், 17 நவம்பர், 2021

காதலைச் சொல்லாக் காரணம்!

 


ஓரக்கண்ணால் எனைப்பார்த்தே
ஒய்யார நடைநடப்பாள்!
ஓரமாகப் பார்த்திருந்தே
ஓயாமல் ரசித்திருப்பேன்!
.
இதழெல்லாம் விரியாமல்
இதமாகப் புன்னகைப்பாள்!
இதழில்லா மலரென்றே
எனைமறந்து பார்த்திருப்பேன்!
.
குயில்கூட்டம் நடுவினிலே
மயிலாகக் காத்திருப்பாள்!
உயிர்சுமந்த பேரூந்தோ
ஓடிவர நானிருப்பேன்!
.
தேரேறி விட்டவுடன்
தேடுகின்ற விழியிரண்டைக்
காரேறிய தூணோரம்
கண்டுகொண்டே மறைந்திருப்பேன்!
.
சொல்லாத காதலைச்
சொல்லிவிட வேண்டுமென்று
பொல்லாத தைரியத்தைப்
பொய்யாக வரவழிப்பேன்!
.
தேவியவள் வரும்நேரம்
தெளிவின்றி மனம்வாடும்
பாவியெனச் சொல்லிவிடப்
பாவமெதும் செய்யவில்லை!
.
மறுநாளும் சென்றிடுவாள்
மகிழ்ந்திருந்தே மறைந்திருப்பேன்!
வெறுங்கையில் முழம்போடும்
வேலையில்லா காரணமே!
.
பாவலர் அருணா செல்வம்

18.11.2021

திங்கள், 15 நவம்பர், 2021

கோபுரச் சித்திர கவி!

 .
சித்தமே! நல்ல சித்தி மாயே!
நித்தம் புதுநிறை நிதியே! கோவே!
பூவே! பொன்னே! தேனே! ஒளியே 
மேவுறு மிமே! மேமே இங்குகி
மதிவிதி மறைத்திடு முன்னை நினைத்தே
எதிரில் நின்றென் நிவாணமே! நிதிநிலை
கலைநிரல் நிறைகிற கடவுளின் கோபுரமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2021

புதன், 10 நவம்பர், 2021

கைக்குழந்தை! (வளையற் சிந்து)

 .
குழந்தைமொழி உதிர்த்துவிடும்
கொஞ்சலெல்லாம் பண்ணே! - திருக்
குறளிலுள்ள கண்ணே! - வளங்
கொழித்திருக்கும் மண்ணே!  - அந்தக்
குமரனெழில் பொலிவுகண்டு
குளிர்ந்திடுவாய் பெண்ணே!
.
வழவழப்பாய்ப் பளிங்களவில்
வழுக்கிவிடும் கன்னம்! - உயர்
மதனமெனும் முன்னம்! - தாச்
மகாலென்னும் சின்னம்! - அதை
மறக்கவைத்து முதலிடத்தில்
மனத்தினுள்ளே மின்னும்!
.
சிவந்தவுடன் அழுதமுகம்
சிதறியவிண் மீனே! - இருள்
திரண்டிருக்கும் கானே! - மனச்
சிரிப்படங்கும் தானே! - குரல்
தெளிதமிழின் ஒளிந்திருக்கும்
சிறப்பழகின் தேனே!
.
தவம்புரிவோர் விழியழகாய்த்
தணிந்திருக்கும் தூக்கம்! - எதைத்
தகர்த்துவிடும் தாக்கம்! - நாளை
தரணியாளும் நோக்கம்! - அந்தத்
தரிசனத்தைப் பெறுவதற்கே
தாவிவரும் ஏக்கம்!
.
விழிமலர்கள் விரிந்தவுடன்
விரும்பியுனைத் தூக்கும்! - உறும்
வினைபசியை நீக்கும்! - உடல்
விளைந்திடவே பார்க்கும்! - தாய்
விரும்பியுனை அணைப்பதனால்
விதியதுவாய்த் தோற்கும்!
.
வழிந்திருக்கும் தேங்குடமாய்
வாயமுதம் ஊறும்! - சிறு
மலரெனவே நாறும்! - பெரும்
மழலைமொழி கூறும்! - அது
மறைபொருளாய்க் கேட்பவரின்
மனத்தினிலே ஏறும்!
.
பாவலர் அருணா செல்வம்
10.11.2021

புதன், 3 நவம்பர், 2021

தீபாவளி வாழ்த்து!

 .
சங்கம் முழங்கும் தமிழ்மகளும்
    சந்தம் நிறைந்த பண்ணிசையும்
தங்கம் பொங்கும் மத்தாப்பும்
    அங்கம் மின்னும் உடையழகும்
திங்கள் போன்ற முகப்பொலிவும்
    தின்னத் தீரா இனிப்புகளும்
எங்கும் கிடைக்க வேண்டுகிறேன்
    இந்தத் தீபத் திருநாளில்!
.
தோழ தோழியருக்கு  இனிய தீபாவளி வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
04.11.2021