மரபுக்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபுக்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 நவம்பர், 2020

குட்டி!!

 


 
குட்டி என்றே தலைப்பிட்டுக்
   ….. கொஞ்சும் தமிழில் பாடவந்தேன்!
மெட்டி போடும் பெண்நானோ
   ….. மெல்ல எண்ணிப் பார்க்கின்றேன்!
புட்டி குட்டி ஆசைகளைப்
   ….. போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்!
கொட்டி வளரும் கற்பனையில்
   ….. குட்டி என்றே எதையெடுப்பேன்?
 .
கட்டிப் போட்ட கன்றினையும்
  …..  காலைச் சுற்றும் பூனையையும்
விட்டே அகலா நாயினையும்
   ….. வெறுத்துத் துறத்தும் எலியினையும்
தொட்டால் சிலிர்க்கும் முயலினையும்
   ….. துள்ளி ஓடும் மானினையும்
குட்டி என்றே அழகாகக்
  …..  கொஞ்சும் கவியில் காட்டிடலாம்!
.
பிறந்து சிலநாள் ஆனவுடன்
  …..  பெரிய உருவாய் இவைமாறும்!
கறந்த பாலாய் இருந்தகுணம்
  …..  கரடு முரடாய் மாறிவிடும்!
சிறந்த சொல்தான் குட்டி!அது
   ….. சீக்கி ரத்தில் வளர்கிறதே!
புறத்தைக் கண்டே சொல்கின்றோம்!
  …..  பொதுவில் இவைதாம் குட்டியென்றே!
.
பாவலர் அருணா செல்வம்.

புதன், 25 மார்ச், 2020

கால் கூடும் வெண்பா!



.
வன்னுடல் கால்கொள்ள வல்ல இணைப்பாகும்!
மென்துகிள் கால்கொள்ள மெல்லிசைக்கும்! – என்றும்
கணவனிடம் கால்கொள்ள காண்ப(து) அரையாம்!
உணவுகால் கொள்ளுறும் ஓடு!
.
வன்னுடல்பலம் கால் பெற்றால் பாலம்
மென்துகிள்பட்டு காலெகொள்ள பாட்டு.
கணவன்பதி கால்கொள்ள பாதி.
உணவுபண்டம் கால்கொள்ள பாண்டம்.
.
பாவலர் அருணா செல்வம்
24.03.2020

(கால் கூடுதல் என்பதுபல்எனுஞ்சொல் கால் கொள்ளபால்  எனவாகும் என்பதே. காலில்லாச் சொல்லும் காலுற்ற சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைத்துப் பாட வேண்டும்)

வியாழன், 17 அக்டோபர், 2019

தரணி யாளும் தமிழ்!



(கும்மி)

பண்டைய மாந்தர்கள் பேசிய தேஉயர்
    பண்பினில் மின்னிடும் செந்தமி ழே!
விண்ணவர் எழுதி விட்டுச்சென் றனரோ
    வியக்க வைத்திடும் செம்மொழி யே!

இன்பத்தின் சாற்றினில் ஊறிய தால்பேச
    இனிப்பை உண்கின்ற சுவையன் றோ! 
பின்னிடும் பாக்களின் பொருளைக் கேட்டிட
    பெருமை பெற்றிடும் செவியன் றோ!

செம்மையாய் மொழியின் இலக்க ணத்தைமுன்
    செய்துவைத் தவர்தொல் காப்பிய ரே!
மும்மொழி வாழ்வதன் விளக்க மதைத்தன்
    முப்பாலில் செய்தவர் வள்ளுவ ரே!

பற்பல வளமை பெற்றதி னால்நலம்
    பயக்கின் றநூல்கள் பலபெற் றோம்!
கற்சிலை அழகாய்ச் செதுக்கி யதால்முற்
    காலமும் வாழும்நல் வரம்பெற் றோம்!

எண்ணத்தில் தோன்றிடும் கருத்தை எல்லாம்நல்
    இசையின் வண்ணத்தில் பாடிடு வோம்!
பெண்னெனும் சக்திகள் வட்டமிட் டேஅதைப்
    பெற்றதோர் பேறென்றே ஆடிடு வோம்!

ஆதியில் தோன்றிய அந்தமிழ் மொழியை
    அனைவ ரும்கற்றால் பலனுண் டே!
ஓதிடும் ஆசானின் புகழிவ் உலகில்
    உயர்ந்தி டும்வண்ணம் நலனுண் டே!

தேனுக்கு மட்டும்இ னிப்பில்லை நமது
   தெள்ளுத மிழ்ச்சுவை இனிப்பா கும்!
வானுக்கு மட்டும்ம ழையினைப் போல்சுய
   வளமே தமிழில் தனியா கும்!

நாட்டினில் செல்வங்கள் பலவுண் டேஅதில்
    நற்றமிழ்ப் போலொரு செல்வமுண் டோ!
ஊட்டிடும் தாய்போல்உ றவென்றே மொழியை
    உலகில் எங்கேனும் சொல்வதுண் டோ!
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2019