செவ்வாய், 29 ஏப்ரல், 2014

போய்யா.... போய்யா....
 நட்புறவுகளுக்கு வணக்கம்!

       இங்கே பிரான்சில் இரண்டு வாரமாக வசந்த கால விடுமுறை. அதனால் என் தங்கை பிள்ளைகள், அண்ணன் பிள்ளைகள், நாத்தனார் பிள்ளைகள் என்று இந்த இரண்டு வாரமாக வீடு அல்லோல் பட்டது.
    குழந்தைகள் சேட்டைகள் செய்யும் பொழுது அந்நேரத்தில் கோபம் வந்தாலும், பின்பு அதை நினைத்துப் பார்க்கும் பொழுது, அந்தக் குழந்தைத் தனமான செயல்களை நினைக்க சிரிப்பு தான் வருகிறது.
   அதில் ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

   போன சனிக்கிழமை மதியம். மழை கொஞ்சம் ஓய்ந்து கொஞ்சம் வெயில் தலைகாட்டவும் நான் பிள்ளைகள் அனைவரையும் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பூங்காவில் விளையாட விட்டுவிட்டு நான் மட்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன். 
    மற்ற வேலைகளை முடித்துவிட்டு, ஏதாவது பதிவு எழுதலாம் என்று அப்பொழுது தான் கண்ணியின் முன்பு அமர்ந்தேன். கதவு தட்டும் ஓசை. போய் திறந்தால்.... என் அண்ணன் மகள் அழுதுக்கொண்டிருக்க அவளுடன் துணைக்குத் தங்கையின் மகள் வந்திருந்தாள்.
   “என்னடி ஆச்சி...?“ என்று கேட்டேன்.
   “நாங்க விளையாடும் பொழுது ஒரு கறுப்பர் பையன் அடித்துவிட்டான்“. என்றாள் துணைக்கு வந்தவள்.
   “கறுப்பர் பையன் அடித்துவிட்டானா.....? நீ என்ன செஞ்சே...?“ என்று கேட்டேன். நம்ம பிள்ளைகளும் சாதாரணமானதுங்கள் கிடையாது என்பது எனக்குத் தெரிந்ததால்.
   “நாங்கள் அவனை ஒன்னுமே செய்யலை. வெறும் பாட்டு மட்டும் தான் பாடிக்கினு வெளையாடினோம். அவன் வந்து அப்படி பாடாதேன்னு சொன்னான். அவன் என்ன சொல்லுறதுன்னு நாங்க பாடினோம். அதுக்கு போயி இவளைக் கன்னத்தில் படார்ன்னு அடிச்சிட்டான் பெரியம்மா“ என்றாள்.
   “பாட்டு பாடியதற்கு அடித்தானா....? என்ன திமிர் இருக்கும். வா கேட்கிறேன்“ என்று சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு போனேன்.

   அங்கே நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அதில் கறுப்பர்களின் குழந்தைகள் தான் அதிகம். அவள் அங்கிருந்த ஒரு கறுப்பர் பையனைக் காட்டி “இவன் தான் அடித்தான்“ என்றாள். அவனுக்கு ஒன்பது இல்லையென்றால் பத்து வயது தான் இருக்கும்.
   நான் அவனிடம் சென்று “ஏன் இவளை அடித்தாய்?“ என்று கேட்டேன். அவன் இவளை முறைத்துவிட்டு, “மேடம்... என்னை செவிடுன்னு சொல்லி கேலிபண்ணினாள் அதனால் தான் அடிச்சேன்“ என்றான். அப்பொழுது தான் அவன் காதில் செவிட்டு மசின் பொருத்தி இருப்பதை நானும் கவனித்தேன். எனக்கு நம்ம பிள்ளைகள் மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
   “ஏன்டீ.... ஒரு புள்ளையோட குறையைக் காட்டியா கேலி பண்ணுவீங்க...? என்ன புள்ளைங்க நீங்க...?“ என்றேன் கோபமாக.
   “ஐயோ... அத்தை நாங்க அவனை ஒன்னுமே சொல்லலை. போய்யா போய்யா.... பாட்டு தான் பாடினோம். அதுக்குத் தான் அடிச்சிட்டான்“ என்றாள்.
    “போய்யா போய்யாவா...? அது என்ன பாட்டு...?“ என்று கேட்டேன்.
   “போய்யா...போய்யா.... போய்யா... போய்யா.... உன் வேலயத்தான் பாத்துகிட்டு போய்யா போய்யா....ன்னு ஜெயம் ரவி படத்துல வருமே... அந்தப் பாட்டைத் தான் பாடினோம்“ என்றாள்.
   ஆமாம்... அப்படி ஒரு பாட்டு இருக்கிறது தான்.... ஆனால் அதுக்கும் இவன் இவளை அடித்ததற்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்துக்கொண்டே.... அந்தப் பையனிடம் “எதுவாக இருந்தாலும் நீ பெரியவர்களிடம் தான் சொல்லனும். இந்த மாதிரி பிள்ளைகளை அடிக்கக் கூடாது“ என்று கோபமாக சொன்னேன்.
   “அவர்களிடம் என்னை செவிடுன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லுங்க“ என்றான் அந்தப் பையன். நானும் இவர்களை மிரட்டிவிட்டு அங்கிருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு மற்றப் பிள்ளைகள் விளையாடுவதை இரசித்துக்கொண்டு இருந்தேன்.
   சற்று நேரத்திற்கெல்லாம் அந்த கறுப்பர் பையன் கோபத்துடன் என் அண்ணன் மகளைத் துரத்திக்கொண்டு ஓடி வர அவள் என் பின்னால் வந்து பதுங்கினாள். நான் அந்தப் பையனைப் பிடித்து, “ஏன்? என்னாச்சி?“ என்று கேட்டேன். அவன் திமிரிக்கொண்டு, “அந்த பொண்ணு திரும்பவும் என்னை செவிடு செவிடுன்னு கேலி பண்ணுது.“ என்றான்.
   நான் அவளை முன்னுக்கு இழுத்து, “இனிமேல் அவனை செவிடுன்னு சொல்லுவியா...? சொல்லுவியா...?“ என்று   காதைப்பிடித்துத் திருகினேன் கோபமாகப் பல்லைக் கடித்துக்கொண்டு.
   அவள் “ஐயோ... அத்தை நான் பாட்டு தான் பாடினேன். உண்மையா அவனை எதுவுமே சொல்லலை.....“ என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டாள். எனக்கோ பாவமாக இருந்தது. அந்தப் பையனுக்கு ஏதோ புத்தி சுவாதீனம் இல்லை போலும் என்று முடிவு கட்டி.... அவனைச் சமாதானம் செய்தேன்.
   அவன் இவனை முறைத்துக்கொண்டே தான் சென்றான். இதற்கு மேல் இங்கிருந்தால் சரியில்லை என்று நான் இவர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். அப்பொழுது ஒரு பதினைந்து பதினாறு வயதுள்ள கறுப்பர் பையன் ஒருவன் வந்தான். வந்தவன் என்னிடம், “இனிமே என் தம்பியைச் செவிடுன்னு சொல்ல கூடாதுன்னு உங்க பொண்ணுகிட்ட சொல்லி வையுங்க“ என்றான்.
   நான் உடனே, “எங்க பிள்ளைகள் உன் தம்பியை எதுவும் சொல்லலையாம். ஏதோ பாட்டு தான் பாடினார்களாம்“ என்றேன்.
   “அந்தப் பாட்டைத்தான் பாட வேண்டாம் என்றேன். எங்கள் மொழியில் “போய்யா“ என்றால் செவிடு என்று அர்த்தம்“ என்றான். அப்பொழுது தான் இந்தப் பிரட்சனையின் காரணம் எங்களுக்குப் புரிந்தது.
   ஐயோ... அந்தப் பிள்ளையின் மனத்தைத் தெரியாமல் நோகடித்துவிட்டோமே என்று நினைத்து மனம் கலங்கியது. தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறு தான் என்று சொல்லி, அவனிடம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய் மன்னிப்புக் கேட்க வைத்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அனைவரும் ஒன்றாக விளையாட ஆரம்பித்து விட்டதும் மனத்திற்கு நிறைவாக இருந்தது.

   ஆனால்.... அது எந்த நாட்டின் மொழி என்று கேட்காமல் வந்துவிட்டோமே என்று வீட்டிற்கு வந்த பிறகு தான் யோசித்தேன்.

அருணா செல்வம்.
29.04.2014
  

சனி, 26 ஏப்ரல், 2014

காவியத் தாயின் இளையமகன்!!

படித்தவனும் வியக்கின்றான்! படிப்பே அற்ற
   பாமரனும் வியக்கின்றான்! பணத்திற் காக
நடித்தவனும் வியக்கின்றான்! பணமே இன்றி
   நலிந்தவனும் வியக்கின்றான்! நிமிர்ந்து நில்லாக்
குடித்தவனும் வியக்கின்றான்! குடும்பப் பெண்ணாய்க்
   குனிந்தவளும் வியக்கின்றாள்! தமிழில் பாக்கள்
வடிப்பவனும் வியக்கின்றான்! இவன்எ ழுத்தை
   வளர்உலகைப் படைத்தவனும் வியக்கின் றானோ!!

கல்லுக்குள் தேரைபோன்று கவிதைக் குள்ளே
   கருத்தாழ உயிரைவைத்தான்! காதல் பொங்கும்
இல்லுக்குள் இனிமைபோன்றே உயிருக் குள்ளே
   இன்னிசையாய் உருகவைத்தான்! தமிழில் உள்ள
சொல்லுக்குள் சுவைபோல நினைத்துப் பார்க்கச்
   சொக்குகின்ற நிலைவைத்தான்! நிலைத்தி ருக்கும்
நல்லுலகம் உள்ளவரை அவனின் பாக்கள்
   நாளெல்லாம் புகழ்பெற்று வளர்ந்தே ஓங்கும்!

கண்ணனுக்குத் தாசனானான்! கவிதைத் தாயின்
   கனிநெஞ்சில் இளையனானான்! இசையின் மன்னன்
பண்ணுக்குப் பொருளானான்! டி.எம். எஸ்சின்
   பாட்டிற்குக் குரலானான்! வினியோ கர்தம்
எண்ணத்தில் பணமானான்! காதல் செய்யும்
   இளையவர்க்கோ இதயமானான்! கவிகள் நெஞ்சில்
வண்ணமிடும் பாவலனின் புகழைச் சொல்ல
   வார்த்தையினைத் தேடுகிறேன் தமிழில் நானே!


அருணா செல்வம்
11.04.2014

(இன்று பிரான்ஸ் கண்ணதாசன் கழக விழாவிற்காக எழுதிய பாடல்.)

வியாழன், 24 ஏப்ரல், 2014

முரண்!! (சிறுகதை)

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்த்தி உயர்த்திச் சொல்ல் பாவம்என்றான் பாரதி. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றங்காய் என்றும் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்றும் ஔவை பாட்டி பாடினாள்.
    சாதி மதம் என்பது மக்களைப் பிரிப்பது. இந்தச் சாதி மதம் என்பது மக்களின் உயிர் கொல்லி நோய். இதற்கு மருந்து நம்மிடையே தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் மதத்தைத் துறந்தாலே அவன் கடவுளாகி விடுவான். அவனே கடவுள் என்றானப் பிறகு சாதியாவது மதமாவது?
    சாதியும் மதமும் ஒழிந்தாலே உலகில் வாழும் நாம் அனைவருக்குமே நாமே கடவுள் என்ற உணர்வு வந்துவிடும். அதனால் ஒற்றுமை வளரும்..... என்று கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.“

    அந்தப் பெரியமனிதர் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கும் பொழுது மக்களின் கைத்தட்டலின் ஒலி வானைப்பிளந்த்து. நெஞ்சு நிமிர்த்தி நடந்தார்.
     அவர் பின்னால்....
    “எப்படி பேசுறான் பாரு.... அவன் இப்படி சாதி மதம் இல்லைன்னு மேடையில பேசி பேசியே நிறைய சம்பாதிச்சிட்டான். பணம் இருக்கிறவா எது சொன்னாலும் இந்த உலகம் ஏத்துக்குமோ இல்லையோ.....“
    ஒருவர் இப்படி சொல்ல, “ஆமாவோய். நீர் சொல்வதும் வாஸ்த்தவம் தான்“ தலையாட்டி ஆமோதித்தவாரே நடந்தான் மற்றொருவன்.

    அந்த மேடைப் பேச்சாளர் தன் டிரைவரிடம், “இன்னைக்கி என் பேச்சி எப்படி...? என்று கேட்டார் சற்று கர்வமாக. “ம்... எப்போதும் போல அருமைங்க ஐயா...“ என்றான் எப்பொழுதும் போல டிரைவர்.
    “நேத்து... பெண்ணடிமைத் தனத்தைப்பற்றி ஒரு பெண் பேசினாளாமே... பேரு என்ன...?
    “சாரதாங்க....“
    “ம்... சாரதா.... அவ வீட்டுக்குப் போ. ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு வந்திடலாம். பெண் சமுதாயம் எப்படியெல்லாம் முன்னேறி இருக்குன்னு புரட்சியா பேசினாளாம். இன்னைக்கித் தட்டிக்கொடுத்தா நாளைக்கி நமக்கு உதவியா இருப்பா... அவ வீட்டுக்குப்  போப்பா....“

    வண்டி சாரதா வீட்டு எதிரில் நின்றது. சாரதா ஓடிவந்து உபசரித்தாள். வாழ்த்துக்கள் பரிமாறியப் பிறகு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த தன் மருமகளை அவர் காலில் விழுந்து வணங்கச் சொன்னாள்.
    அவர், “வேண்டாம்மா.... எதுக்கு இதெல்லாம்....?“ என மறுத்ததும் நீங்க பெரியவங்க. பொறக்கப் போறது ஆம்பளைப்பிள்ளையா பொறக்கனும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க...“ என்றாள் கெஞ்சளாக. அவரும் சிரித்துக்கொண்டே ஆசீர்வாதம் பண்ணிவிட்டு கிளம்பினார்.

    வீட்டில் நுழையவும், அவர் மனைவி தூக்க முடியாத அளவு நகைகளை மாட்டிக்கொண்டு அசைந்து வந்தாள்.
    “என்னங்க... நம்ம பையன் லவ் பண்ணுற பொண்ண பத்தி விசாரிச்சேன். அவ அப்பா ஏதோ மில்லுல சூப்பரேசராம். நல்ல குடும்பம் தானாம். நீங்க என்ன சொல்லுறீங்க....?
    “மில்லுல சூப்பரேசரா...?  அதெல்லாம் நம்ம அந்தஸ்த்துக்கு ஒத்து வராது. வேற நானே பாக்குறேன்னு உன் பையன்கிட்ட சொல்லிடு....“

   அவர் படுக்கப் போய்விட்டார். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த டிரைவர் தன்னிடம் வந்து கொஞ்சிய நாயைத் தடவிக்கொடுத்தார். தடவிக்கொடுக்கும் பொழுது படிந்த அதன் வால் கையை எடுத்ததும் மீண்டும் சுருட்டிக் கொண்டது.

அருணா செல்வம்
25.04.2014

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தண்ணி அடிக்க வா புள்ள!!

    “மாப்பள... என்னமோ பேசனுன்னு அவசரமா வரச்சொன்னீங்களாம்... என்ன விசயம்....?“ சோமு மெதுவாக விசயத்திற்கு வந்தான்.
    இந்த நேரத்திற்காகவே காத்திருந்தது போல சுரேந்தர் தொடங்கினான்.  
   “உங்க தங்கச்சி செய்யறது சரியில்ல மாமா. சாய்ந்தரம் ஆனதும் அந்த கன்னியம்மா கிழவி வந்திடுது. கெழவிக்கு காலையில அடிச்சது பத்தாதுன்னு சாய்ந்தரம் வேற வந்து இவளைக் கூப்பிடும். இவளும் உடனே போயிடுறா. கிழவி கையிலேயே நொறுக்கு தீனி வேற கொண்டுவந்திடுது. இவங்க கூட இன்னும் ரெண்டு மூனு பொம்பளைங்க. எல்லாம் சேர்ந்து பண்ணையார் வீட்டு தோட்டத்துக்கும் போயி தண்ணி அடிச்சிட்டு வருதுங்க.“
   சுரேந்தர் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்க... அவன்,
   “இவளுக்கோ லோ பிரசர். வரும் போதே தள்ளாடிக்கினே வந்து எனக்கு தலைய சுத்துதுன்னு படுத்திடுறா. புருஷன் புள்ளைங்களுக்கு சோறு போட முடியல. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்திட்டேன். கேக்கற மாதிரி தெரியலை. நீங்களாவது நல்லதா நாலு புத்திமதி சொல்லிட்டு போவீங்ன்னு தான் உங்கள வரச்சொன்னேன்.“ என்று சொல்லிக்கொண்டே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியில் கிளம்பி விட்டான் சோமு.
   சுரேந்தர் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்தான். தன் தங்கையா அப்படி.... அவனால் நம்பவே முடியவில்லை. சற்று நேரம் யோசித்தான். இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. கேட்டு புத்திமதி சொல்லனும் என்று நினைத்து எழும்போதே கன்னியம்மாள் என்ற அந்தக் கிழவி வீட்டு வாசப்படிக்கு வந்து நின்று “கோமதி...“ என்று அழைத்தாள்.
   அவசரமாக வெளியில் வந்த கோமதி, “ஆத்தா... இன்னைக்கி நா வரலை. அண்ணன் வந்திருக்கு. பக்கத்துல யாரையாவது கூட்டிக்கினு போ.“ கிசுகிசுப்பாகச் சொன்னாள் கோமதி.
   “எவளும் வரலையாம். நீ சித்த வந்துட்டு போ. எனக்கு இப்பவே கை எப்புடி நடுங்குது பாருபுள்ள...“ கெஞ்சளாகக் கேட்டாள் கிழவி.
   “சரி வா. இன்னைக்கி ஒரு தபா போதும். என்னால அதுக்கு மேல முடியாது. சொல்லிபுட்டேன்.“
   “ரொம்ப தான் காட்டிக்கிற. ஒன்னோட வயசுல நா எத்தன ரவுண்டு அடிப்பேன் தெரியுமா....? என்னமோ பெரிசா காட்டிக்கிறியே....“ கோமதி முறைக்கவும்... “சரி சரி ஒரு தபா போதும். வா. அங்க போனா வேற யாராவது கெடைக்காமலா போவாங்க....“ என்று சொல்லிக் கொண்டே கிழவி முன்னே நடக்க கோமதி பின்தொடர்ந்தாள்.

   இதையெல்லாம் மறைவில் கேட்டுக்கொண்டிருந்த சுரேந்தருக்குக் கோபம் உச்சத்தில் ஏறியது. நேராகப் பண்ணையார் வீட்டுத் தோட்டத்தை நோக்கி நடந்தான்.  

   தோட்டத்தில்...
   “தோ பாரு ஆத்தா.... என்னால இனிமே சாய்ந்தரத்துல வரமுடியாது. காலையிலேயே ரெண்டு ரவுண்டு வேனா கூட வர்றேன். இதனால வீட்டுல எப்பப்பாரு சண்டதான் வருது.“ என்றாள் கோமதி.
    “இந்த கெழவனுக்கு கைகால் விழலைன்னா அந்தாளே எவ்வளவு தண்ணிய வேணும்ன்னாலும் அடிச்சி கொண்டாந்துடும். இப்போ முடியலை. வூட்டுல இருகறதே ரெண்டு கொடம் தான். காலையில கொண்டுவர்ற அந்த ரெண்டு கொடம் தண்ணீ சாய்ந்தரத்துக்குள்ள காலியாயிடுது. அப்பால ராவிக்கி.... அதுக்குத் தான்புள்ள உன்ன இந்த கெஞ்சி கெஞ்ச வேண்டி இருக்குது. இந்தா புள்ள கடலை. சாப்பிடு. நீயும் எனக்காக எம்புட்டு தான் உழைப்பே...“ கிழவி முந்தானையில் முடிந்திருந்த கடலையை எடுத்துக் கோமதியிடம் நீட்டினாள்.
   பண்ணையார் வீட்டு அடிக்கிற பம்பில் தண்ணியை அடித்து முடித்த கோமதி கிழவி கொடுத்த கடலையை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் நிரம்பிய குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளவும்... சுரேந்தர் அவளெதிரில் போய் நின்றான்.
   “எண்ணன்னா இங்க....“ கோமதி ஆச்சர்யமாகக் கேட்க, சுரேந்தர் தன் தங்கையைப் பெருமையாய்ப் பார்த்தபடி, தன் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தான்.
   “கோமதி... இந்த பணத்தல ரெண்டு பிளாஸ்டிக் கொடம் வாங்கி அவங்ககிட்ட குடு. நீயே இன்னும் ரெண்டு ரவுண்டு போயி காலையிலேயே தண்ணி ரொப்பி குடுத்திடு. நல்லது செய்யக்கூட நேரங்காலம் இருக்குதும்மா. நா கிளம்புறேன். மாப்பிளையிடம் சொல்லிடு“ சொல்லிக்கொண்டே நிம்மதியாய் நடந்தான் சுரேந்தர். 
  


அருணா செல்வம்
23.04.2014