செவ்வாய், 14 ஜனவரி, 2020

தமிழர் புத்தாண்டு வாழ்த்து!.
புத்தாடைக் கட்டிக் கொண்டு
   பூச்சூடிப் பின்னிக் கொண்டு
சத்தான அரிசி கொண்டு
   சருக்கரையில் பொங்கல் செய்து
கொத்தான மஞ்சள் கட்டிக்
   கோலமிட்ட இடத்தில் வைத்துக்
கத்தைசெங் கரும்பைச் சேர்த்துக்
   காலமதை வணங்கு வோமே!

மொத்தத்தில் தமிழர்க் கென்றும்
   முழுதான சொந்தம் என்றும்
சித்தத்தில் விளக்காய் ஏற்றிச்
   சிறப்பாக ஒளிரச் செய்வோம்!
புத்தாண்டு திருநாள் என்றும்
   புதிதாகப் பிறக்கும் தையே !
முத்தான இந்த நாளை
   முடிவாக்கிப் பொங்கு வோமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2020

வருக வருக தைமகளே!

ஒவ்வோர் ஆண்டும் வருகின்றாய்
    உலகம் உருண்டு வாழ்வதற்கே!
எவ்வேற் மாற்றம் உன்னிடத்தில்?
    இன்றும் துளியும் குறைவில்லை!
அவ்வாற் மனிதர் இல்லாமல்
    ஆசை தன்னில் சுழலவிட்டு
வெவ்வேற் நிலையைக் கண்பதற்கே
    வேகத் துடனே கடக்கின்றாய்!

இன்பம் பொங்கும் உலகத்தில்
    இன்னல் பலவும் முளைத்துவிட
நன்மை என்றே தீமைதனை
    நாளும் மனங்கள் பெறுகிறது!
சின்னத் தன்மை ஆசைகளால்
   செய்யும் தவறு பெரிதாகி,
மின்னல் போன்ற வாழ்நாளில்
   மேன்மை மறைந்து மடிகிறது!

எந்த நாளில் இவையில்லை?
   என்றே அறிந்தே இருந்தாலும்,
இந்த உலகம் நலம்பெறவே
   நலமாய் நன்றாய் வருகின்றாய்!
அந்த நாட்கள் போகட்டும்
   அனைத்தும் நன்மை பெறுவதற்கே
வந்து பிறப்பாய் இவ்வாண்டும்
   வளமை கொஞ்சும் தைமகளே!
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2020

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

5. தளவம் மலர்!.
செந்நிற மொட்டுச் சிரித்து விரிந்திட
வந்தாடும் வெண்ணிறப்பூ வாசமுடன்! – முந்தும்
தளத்தின் நிறம்மாறித் தண்ணொளிர் வீசத்
தளவமலர் என்றார் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
13.01.2020

4. அனிச்ச மலர்!.
மென்மைக்குக் காட்டாக மேன்மக்கள் கூறினர்!
அன்னத்திற்(கு) ஒப்பாய் அருங்குணம்! அன்பால்
கனிந்தோரின் ஊடலால் கன்னிமுக மாற்றம்
அனிச்சமலர் கொண்ட அழகு!
.
பாவலர் அருணா செல்வம் 
11.01.2020

வியாழன், 9 ஜனவரி, 2020

3. பாரம் மலர்!.
வெண்பருத்திப் பஞ்சு வெடித்து வெளிவர
வண்ணமிட்டே ஆடை வடிவுபெறும்! – மண்ணில்
பருத்தி மலரினைப் பாரமெனச் சொன்னார்
பெருஞ்சுமைஇப் பூவின் பெயர்!
.
பாவலர் அருணா செல்வம்
10.01.2020

2. அதிரல் மலர்!.
இளவேனிற் காலத்(து) இரவில் மலரும்
அளவில் சிறிய அதிரல்! வளமிருந்தும்
வாசமற்ற பூனைப்பல் போல்வடிவாம்! மங்கலப்
பூசைக்(கு) உவந்திருக்கும் பூத்து!!
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2020

1. அடும்பு மலர்!.
உடல்வீக்கம் ஓயா வயிற்றோட்டம் போகக்
கடலோரம் ஆற்றோரம் காணப்படர்ந்திருக்கும்
ஆட்டுக் குளம்பாம் அடும்பு மருந்துண்டே
ஓட்டுவோம் நோயை ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
06.01.2020

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

போற்றினேன் பாடிப் புகழ்ந்து!.
புத்தம் புதுவாண்டு பொன்னெனத் தந்ததே
சித்தம் குளிர்ந்த சிறப்புகளை! – வித்தகியாய்
ஏற்றிய ஐங்கரனை எண்ணியெண்ணி இன்பத்தில்
போற்றினேன் பாடிப் புகழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2020

வியாழன், 2 ஜனவரி, 2020

நன்றி! நன்றி!
  நான் எழுதிக்கொண்டிருந்த அணி இலக்கண நூலை எழுதி முடித்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி அச்சகத்திற்கு அனுப்பவேண்டியது தான்.
  கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருமுயற்சி எடுத்துச் செய்த வேலை இது. தண்டியலங்காரத்தில் உள்ள அணி இலக்கணத்திற்கு எளிய நடையில் எடுத்துக்காட்டுப் பாடல்களை அமைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை.
  இந்த நூல் தமிழ்ப்படிக்கும் பள்ளி, கல்லுரி மாணவச் செல்வங்களுக்கு நிச்சயமாக உதவும் என்பது எனது நம்பிக்கை.
  இதில் உள்ள சில பாடல்களை நான் முகநூலிலும், என் மின்தளத்திலும் வெளியிட்ட போது என்னை வாழ்த்தி எனக்கு ஊக்குவிப்புக் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களையும் கரம் குவித்து வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
திருமதி. பாவலர் அருணா செல்வம்
02.01.2020