VAIRAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VAIRAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 மார்ச், 2020

வாழவைக்கும் தெய்வங்களே வாழி! வாழி!



(இலாவணி)
.
எத்தனையோ இன்பங்களும் எத்தனையோ செல்வங்களும்
    என்னிடத்தில் எந்நாளிலும் உண்டு உண்டு!
அத்தனையும் இருந்தென்ன? அத்துமீறி நோய்பிடிக்க
    அடிமாடாய் ஆகியதே துண்டு! துண்டு!

அன்புமன மனைவியும் இன்பநிறை மகளுடன்
    ஆசைபொங்க வாழ்ந்திருந்தேன் கூடிக் கூடி!
இன்னலிதைக் கண்டதுமே என்னுலகில் வாழ்வினிமை
    இல்லையென வந்துவிட்டேன் ஓடி யோடி!

ஊருக்குள்ளே உயர்வாகப் பேருக்குள்ள மதிப்பாக
    உள்மனத்தில் மகிழ்ந்தேனே கண்டு கண்டு!
யாருமில்லா அனாதையாய் சேருமிடம் அறியாமல்
    ஆய்வுசெய்ய விட்டாரெனைக் கொண்டு கொண்டு!

வாழ்நிலையின் இருள்கண்டு பாழ்தனிமை பயங்கண்டு
    வாட்டமுடன் கதறினேன் அழுது அழுது!
ஊழ்நிலையை எண்ணியெண்ணி ஆழ்மனத்தில் பற்றிவிட்டேன்
    உருவற்ற அவன்தாளைத் தொழுது தோழுது!

சொந்தங்களும் சுற்றங்களும் விந்தையென ஒதுங்கிடச்
     சுடராக வந்தாந்த நாழி! நாழி!
வந்திருந்த தொற்றுநோயை முந்தியதை நீக்கியெனை
     வாழவைத்த தெய்வங்களே வாழி! வாழி!

வாட்டிவிட்ட நோய்விரட்டி நாட்டுக்குள்ளே கண்ணெதிரில்
    வாழ்ந்திருக்கும் கடவுள்தான் நீங்கள்! நீங்கள்!
தீட்டுகின்ற கவியாலே கூட்டுமருத் துவர்களைத்
    தினந்தோறும் போற்றிடுவோம் நாங்கள்! நாங்கள்!
.
பாவலர் அருணா செல்வம்
20.03.2020

திங்கள், 16 மார்ச், 2020

வைரஸ் நோயோ?





வைரஸ் நோயோ?
ஆனந்தக் களிப்பு!
.
வந்ததைப் போனதை உண்டான்! – சீனன்
   …..தந்ததை நோயெனும் கொல்வினைக் கண்டான்!
வந்தது வைரசின் அச்சம்! - அதன்
  ….. வாட்டிடும் வேதனை தொட்டதோ உச்சம்!
சொந்தமும் சுற்றமும் வீழும்! – முற்றும்
  ….. சொல்லிடக் காட்டிட நாடெதில் வாழும்?
சிந்தனை கொண்டது நாடு! – இன்று
  …..  சீர்பெற நின்றது நன்னிலை யோடு!
.
தும்பலும் காய்ச்சலும் சேர்ந்தும் – இரும்பல்
  …..  தொண்டையைத் தாக்கிடக் கொன்றிடும் சார்ந்தும்!
கும்பலில் மெய்தனில் தொற்றும்! – காலம்
  …..  கூடிட நல்லுயிர்ப் போக்கிட முற்றும்!
தம்மினம் போல்கையைச் சேர்க்கும்! – கிருமி
  ….  தாக்கிடும் செய்கையைச் சேர்த்ததை ஏற்கும்!
நம்மினக் கொள்கையைக் கொள்வோம்! – கைகள்
  …..  நன்றெனக் கூப்பிடும் நேர்வழிச் சொல்வோம்!
.
சத்தெனக் காய்கறி கொள்வோம்! – வரும்
   ….. சந்ததி வாழ்ந்திட நல்வழிச் சொல்வோம்!
சுத்தமாய் மேனியை வைப்போம்! – அதில்
   ….. தூய்மையாய் ஆடையைப் போட்டிடத் தைப்போம்!
நித்தமும் செய்திடல் வேண்டும் - வாழ்வில்
 …..   நிம்மதி கொண்டிட வேறெது வேண்டும்?
பத்தியம் கொண்டிடும் உள்ளம்! – நாளும்
 …..   பண்புடன் வாழ்ந்திட ஆண்டுகள் துள்ளும்!
.
பாவலர் அருணா செல்வம்
16.03.2020