வியாழன், 24 மார்ச், 2016

வண்ண மீன்கள்!!கண்ணைக் கவரும் தொட்டிக்குள்
   கருத்தைக் கவரும் வண்ணமீன்கள்!
பொன்னை நிகர்த்த பளபளப்பு
   பூவில் இருக்கும் நிறக்கலப்பு!
மண்ணை மறந்து நான்பார்த்தேன்
   மருண்ட மீனோ எனைப்பார்க்க
என்னை எழுத தூண்டியதே
   என்னில் இருந்த எண்ணமீன்கள்!

காலம் சுற்றும் வலைதன்னில்
   கவலை கயிறு மனமிறுக்க
ஓலம் இடவோ முடியாமல்
   ஓய்ந்தோ அமரக் கூடாமல்
மூலம் ஏதென்(று) அறியாமல்
   மௌனம் மட்டும் மொழியென்றே
ஞாலம் தன்னில் வாழ்கின்ற
   நங்கை நிலையில் அதைக்கண்டேன்!

அன்பு மொழியில் தேனுற்றி
   ஆசை வார்த்தை பலபேசி
கன்னம் சிவக்கும் பெண்ணிடத்தில்
   காதல் விதையை விதைத்திடுவார்!
இன்பம் எதுவோ அதுமுடிய
   இவளோ இனியேன்? சென்றுவிட
மின்னும் கண்ணீர் தண்ணீரில்
   மீறி தெரியா நிலைக்கண்டேன்!

கள்ளம் கொண்ட காளையரோ
   கவலை யின்றிப் பிறபெண்ணைத்
தெள்ளத் தெளிந்த மொழிபேசி
    தின்று முடிக்கக் காத்திருப்பான்!
உள்ளம் திறந்து கேட்டாலோ
    உனக்கேன் பொறாமை எனக்கேட்பான்!
பள்ளம் தன்னில் விழுந்ததினால்
   பாவம் மீன்போல் பெண்வாழ்வாள்!

கண்கள் போன்ற மீன்களெல்லாம்
   கவிதை களாகத் தெரிகிறது!
பெண்ணின் உள்ளே பலகவிதை
   பின்னப் படாமல் இருக்கிறது!
விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
வண்ண மீன்கள் சிறையிருக்க
   எண்ண மீன்கள் முடிக்கிறது!!


அருணா செல்வம்.

சனி, 19 மார்ச், 2016

கண்ணதாசன்!
படித்தவனும் வியக்கின்றான்! படிப்பே அற்ற
    பாமரனும் வியக்கின்றான்! பணத்திற் காக
நடித்தவனும் வியக்கின்றான்! பணமே இன்றி
   நலிந்தவனும் வியக்கின்றான்! நிமிர்ந்து நில்லாக்
குடித்தவனும் வியக்கின்றான்! குடும்பப் பெண்ணாய்க்
   குனிந்தவளும் வியக்கின்றாள்! தமிழில் பாக்கள்
வடிப்பவனும் வியக்கின்றான்! இவன்எ ழுத்தை
   வளர்உலகைப் படைத்தவனும் வியக்கின் றானோ!!

கல்லுக்குள் தேரைபோன்று கவிதைக் குள்ளே
   கருத்தாழ உயிரைவைத்தான்! காதல் பொங்கும்
இல்லுக்குள் இனிமைபோன்றே உயிருக் குள்ளே
   இன்னிசையாய் உருகவைத்தான்! தமிழில் உள்ள
சொல்லுக்குள் சுவைபோல நினைத்துப் பார்க்கச்
   சொக்குகின்ற நிலைவைத்தான்! நிலைத்தி ருக்கும்
நல்லுலகம் உள்ளவரை அவனின் பாக்கள்
   நாளெல்லாம் புகழ்பெற்று வளர்ந்தே ஓங்கும்!

கண்ணனுக்குத் தாசனானான்! கவிதைத் தாயின்
   கனிநெஞ்சில் இளையனானான்! இசையின் மன்னன்
பண்ணுக்குப் பொருளானான்! டி.எம். எஸ்சின்
   பாட்டிற்குக் குரலானான்! வினியோ கர்தம்
எண்ணத்தில் பணமானான்! காதல் செய்யும்
   இளையவர்க்கோ இதயமானான்! கவிகள் நெஞ்சில்
வண்ணமிடும் பாவலனின் புகழைச் சொல்ல
   வார்த்தையினைத் தேடுகிறேன் தமிழில் நானே!


அருணா செல்வம்

சனி, 12 மார்ச், 2016

நினைவுகள்!!


இன்று வாழும் வாழ்க்கையிலே
       இனிய வைகள் இருந்தாலும்
அன்று வாழ்ந்த வாழ்வுதனின்
       அழிக்க முடியா நினைவுகளே!
நன்று, அல்ல என்றாலும்
       நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
       இயங்க வைக்கும் நினைவுகளே!

பிள்ளை நெஞ்சம் புதுவகையைப்
       பிறித்து அறிந்த பொழுதினையும்
உள்ளம் உவகை கொண்டவுடன்
       கொள்ளைச் சிரிப்பாய்ச் சிரித்ததையும்
கள்ளம் இல்லா அவ்வயதில்
       காதல் வந்த பொழுதினையும்
தள்ளி விடவே முடியாத
       தழைத்து வளர்ந்த நினைவுகளே!

சொல்லிக் கொடுத்த ஆசானும்
       சொக்க வைத்தச் செந்தமிழும்
வல்லப் புகழின் முதலடியாய்
       வாய்க்கப் படைத்த நற்கதையும்
மெல்ல நினைக்க முகஞ்சிவக்கும்
       மேனி தொட்ட அந்நாளும்
நல்ல வையாய் முன்வந்து
       நடன மாடும் நினைவுகளே!

நல்லார் என்று நினைத்தவரோ
       நயமாய்த் துரோகம் செய்ததையும்
கல்லாய் இதயம் கொண்டவர்கள்
       கருணை அற்று நடந்ததையும்
பொல்லா பழியைப் பிறர்சுமக்க
       பொய்மேல் பொய்யாய்ச் சொன்னதையும்
நில்லா காலச் சுவடுகளாய்
       நெஞ்சில் பதிந்த நினைவுகளே!

மண்ணில் பிறந்த மாந்தர்க்கு
       மறத்தல் என்ற ஒன்றிருந்தும்
எண்ணிப் பார்க்க எழுந்துவரும்
       எண்ணில் அடங்கா நினைவுகளே!
உண்மை மட்டும் அதில்காட்டி
       உலகிற் கதனைக் காட்டாமல்
விண்ணில் மறையும் நாள்வரையில்
      கண்ணுள் மின்னும் நினைவுகளே!


அருணா செல்வம்

ஞாயிறு, 6 மார்ச், 2016

புதுமைப்பெண்!!தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று!
    தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை!
சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும்
    சிலர்மட்டும் பெறமுடிந்த அளவே உண்டு!
பலமுறைகள் முயன்றுபார்த்தும் தோல்வி கண்டே
    பழங்கால பாழ்ங்கிணற்றில் நீந்து கின்றோம்!
அலைமுறையில் வந்துபோகும் உரிமை யைநாம்
    அடக்கிவைத்தல் என்பதுதான் புதுமை அன்றோ!

போராட்டம் என்பதுதான் வாழ்க்கை என்றால்
    புதுமுறையில் போராடி வெற்றி காண்போம்!
சீரோடும் சிறப்போடும் வாழ்வ தற்கு
    சிரிப்பொன்றை ஆயுதமாய் முகத்தில் கொள்வோம்!
நீரோடும் இடத்தில்வேர் ஓடும்! அன்பு
    நீங்காத இடத்தினிலே பகைமை ஓடும்!
கூரான வாள்கொண்டால் பயனோ இல்லை!
    குளிர்தமிழில் இவ்வாராய்ச் சொல்தல் நன்றே!

இதுதானே பண்பாடு என்று நம்பி
    இருந்திருந்தே பெண்களெல்லாம் அடிமை யானார்!
அதுவல்ல பெண்ணினத்தில் உரிமை காக்க
    ஆண்களிதைக் கையாண்டே அடக்கி விட்டார்!
முதுகவிகள் மூதாதை சொன்ன தெல்லாம்
    முதல்தெய்வம் என்றுபெண்ணை நினைத்த தாலே!
மதுகவியில் சொன்னதெல்லாம் உண்மை! உண்மை!
    மாறிவிட்ட நிலையிலது நன்மை இல்லை!

கற்களிலே உள்ளிருக்கும் சிலையைப் பார்க்கக்
    காலமெல்லாம் காத்திருக்கும் மூடன் போல
முற்களின்மேல் வாழ்க்கையென்றே கவலைப் பட்டு
    முயற்சியின்றிப் பயந்துநின்றே வீணாய்ப் போனோம்!
சொற்களிலே அன்புபூச மயங்கும் வார்த்தை!
    சூடேற்றி அச்சொல்லை உரக்கக் கூறு!
தற்காலப் பெண்ணென்போர் தாழ்வாய் இல்லை
    தரணிபோற்ற பிறந்ததைநீ சொல்வாய்ப் பெண்ணே!

பெண்ணென்றால் பூப்போன்ற உள்ளம் என்று
    பொதுப்படையாய் பெரியோர்கள் சொல்லி வைத்தார்!
மண்ணென்ற பூமிதனில் பிறந்த பூவோ
    மல்லிகையாய்ப் பிறந்துவிட்டால் ஒருநாள் வாழ்வே!
உண்ணென்று உவந்தளிக்கும் கனிகள் எல்லாம்
    ஒருபூவில் பூத்துவந்த உயர்வைக் கண்டால்
கண்காணும் அழகையவர் சொல்ல வில்லை!
    கனிக்குள்ளே விதைக்கண்ட கருவைச் சொன்னார்!

சூழ்ச்சிகளில் நமைவீழ்த்தும் சதியை எல்லாம்
    சுயமாகச் சிந்தித்தே அதனை வெல்வோம்!
வீழ்ச்சிஎன வீழ்ந்தாலும் அருவி நீராய்
    வீறுகொண்டே எழுந்தோடி நன்மை செய்வோம்!
தாழ்த்திநம்மை பேசுகின்ற கயவர் கண்டால்
    தடைகள்ளாய் அதைநினைத்துத் தாண்டிச் செல்வோம்!
ஆழ்த்துகின்ற மனக்கவலை யாருக் கில்லை?
    அதைக்கூட அடிமையாக்கி புதுமைக் காண்போம்!

புதிதாகப் பூப்பதுதான் புதுமை என்றும்
    பொதுப்படையாய் யார்சொல்லும் நம்பி டாதே!
உதித்தெழுந்த சூரியனும் உதிப்பான் மீண்டும்!
    உனக்குள்ளே இருப்பவனோ உறங்கு கின்றான்!
மதிதிறந்து அவனைநீ விழிக்கச் செய்தால்
    மனப்பேயின் பயமெல்லாம் ஓடிப் போகும்!
பொதியல்ல நாம்வாழும் வாழ்க்கை! பெண்ணே
       புதியாகச் சிந்தித்தால் போதும் கண்ணே!அருணா செல்வம்

வெள்ளி, 4 மார்ச், 2016

இறைவன், அவன் எங்குள்ளான்?இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
    இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
    மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
    கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
    நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
    எம்மதத்தில் உள்ளதென்று அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
    உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே இருக்கக் காண்பார்!
    பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தில் மறைந்திருக்கும் மழையைப் போல
    கருணையெனும் கடவுளையே தம்முள் காண்பார்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
    அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
    பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
    உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையெனும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
    கருணையெனும் இறைதோன்றும் அவனுக் குள்ளே!!


அருணா செல்வம் 
04.03.2016