கோபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 பிப்ரவரி, 2015

கோபமா என்னுடன்?



காலை உறக்கம் கலைந்ததுமே
    கண்முன் வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
    விழுங்கு வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
    சூழும் மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
    நுவலும் பொருளில் தெரிகின்றாய்!

என்னில் உள்ளே இருந்தாலும்
    எதிரில் காண ஓடிவந்தால்
என்னை ஏனோ மறந்துவிட்டாய்!“
    என்றே கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
    ஊடல் கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
    என்தன் உயிரே என்செய்வேன்?!

எந்த நிலையில் உனைமறந்தேன்
    என்று தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
    அந்தக் கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
    சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
    இருக்கும் நேரம் அதுவென்பேன்!

மறத்தல் தானே மனிதருக்கு
    மகேசன் கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
    சீராய் வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
    மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
    இனிமை அதுவே தருமென்பேன்!
     
அருணா செல்வம்.

26.02.2015

வியாழன், 5 ஜூன், 2014

சத்திரத்துச் சாப்பாடு!



    நாகப்பட்டினத்தில் காத்தான் சத்திரம் என்று ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த காளமேகப்புலவர் உணவுக்காகச் சென்றார். பகலெல்லாம் காத்திருக்கச் செய்து, இரவில் நெடுநேரத்திற்குப் பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட்டார்கள். கவிஞரின் பொறுமை அதற்குமேலும் நிலைபெறவில்லை. உடனே இப்படிப் பாடுகின்றார்.

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

பொருள்.

ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்.
(இதுவும் ஒரு சத்திரமோ? என்பது குறிப்பு.)

    இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அப்போது, கவிஞர் அவனுடைய மனமாற்றத்தைப் பாராட்டியவராகப் பொருளினை மாற்றி உரைத்து அவனை மனமகிழுமாறு செய்தார்.
  
படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

சனி, 11 ஜனவரி, 2014

இவள் தான் தைமகள்!



நேர்மை யற்ற நெஞ்சங்கள்!
   நீதி யற்ற தலைவர்கள்!
ஓர்மை யற்ற உணர்வுடனே
   உழைத்துத் தேயும் உழவர்கள்!
கூர்மை யற்ற குடிகளையும்
   கொண்டி ருக்கும் நாட்டுக்குள்
சீர்மை யுடனே வருகின்றாள்
   சிரித்த முகமாய்த் தைமகளே!

அரசுப் பணியர் எனும்பேரில்
   அளவில் சிறிய வேலைக்கும்
பரிசு போன்று பெயர்வைத்துப்
   பணத்தைப் பெறுவார் இலஞ்சமென!
சிரசு இருந்தும் முண்டமான
   சிறியோர் செயலைக் கண்டிடவே
முரசு கொட்டி வருகின்றாள்
   முடிவே அறியாத் தைமகளே!

வாங்கி வாழும் மனிதர்கை
   வாரி வழங்கும் எனநினைத்தே
ஏங்கித் தவிக்கும் ஏழைகளின்
   ஏக்கம் தெளிதல் எந்நாளோ!
தேங்கி நில்லாப் பழக்கத்தில்
   தெளிவு இல்லா மக்களிடம்
ஓங்கி ஒளிர்ந்து வருகின்றாள்
   உறக்கம் அறியாத் தைமகளே!

நாட்டில் ஏதும் நடந்தாலும்
   நரகத் துன்பம் அடைந்தாலும்
ஏட்டில் பழமை இருந்தாலும்
   ஏதும் இல்லை என்றாலும்
பாட்டில் புதுமை படைத்தாலும்
   பழமை புதுமை ஆனாலும்
கூட்டிப் பெருக்க வருகின்றாள்
   குறையை அறியாத் தைமகளே!!

அருணா செல்வம்.