வியாழன், 27 பிப்ரவரி, 2014

தாய் நாட்டு மண்ணின் சுவை!!
    நம் தாய் நாட்டின் மண் உயர்ந்தது தான். ஆனால் அதை உணவாக உண்ண முடியுமா...?
     உண்ண முடியாது. ஆனால் அது உயர்ந்தது என்பதை இவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

   இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒரு சமயம் வெள்ளை அரசால் சிறைத்தண்டனை பெற்றார் ஜவஹர்லால் நேரு.
   சிறையில் அவரைப்போல் ஏராளமான விடுதலைப் போராட்ட வீரர்கள் இருந்தனர்.
   ஒரு சமயம் அவர்களுக்கு உண்பதற்காக ரொட்டி வழங்கப்பட்டது. ஆனால் அந்த ரொட்டியில் மண் கலந்திருந்தது.
   வீரர்கள் அதை உண்ண மறுத்தனர்.
   ஜவஹர்லால் நேருவுக்கோ கோபம் வந்தது.
   சிறை அதிகாரியை அழைத்தார்.
   “ரொட்டியில் மண் கலந்திருக்கிறது. இதை எங்களால் சாப்பிட முடியாது. மண் இல்லாத ரொட்டியை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்“ என்றார்.
   சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவர் நேருவைப் பார்த்து ஏளமாகச் சிரித்துவிட்டு, “நீங்கள் போராடுவது இந்த மண்ணிற்குத் தானே? இந்த ரொட்டியில் கலந்திருப்பதும் உங்களின் தாய் நாட்டு மண்தான். அதுவும் தனிச்சுவை கொடுக்கும். பேசாமல் சாப்பிடுங்கள்“ என்றார்.
   அதைக்கேட்ட நேருவின் முகம் சிவந்தது.
   “இதோ பாருங்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய் நாட்டு மண் சுவை கொடுக்கக் கூடியது தான். ஆனால் நாங்கள் போராடுவது எங்களது தாய் மண்ணைத் தின்பதற்கு அல்ல. மீட்பதற்கு“ என்று பொரிந்தார் நேரு.
   அதைக்கேட்ட வெள்ளை அதிகாரி வாயடைத்துப் போய், விடுதலைப் போராட்டக் கைதிகள் அனைவருக்கும் மண் கலக்காத ரொட்டி வழங்க ஏற்பாடு செய்தார்.

படித்ததில் பிடித்தது

அருணா செல்வம்.

புதன், 26 பிப்ரவரி, 2014

பனிக்காலம் நல்லது!! (நிகழ்வும் – விளக்கமும்)    நட்புறவுகளுக்கு வணக்கம்.
    நான் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் இருந்த போது அனுபவித்த சின்னச் சின்ன சுவாரஷ்யமான விசயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். (நல்லாத்தான் இருக்கும். பயப்பட வேண்டாம்) இதையும் படித்து எனக்கு நீங்கள் என்றும் போல்   ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

பனிக்காலம் நல்லது!!   
   எனக்குக் கடந்த மார்கழி (டிசம்பர்) மாதத்தில் திடீர் என்று ஒரு நல்ல ஓட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. என் அம்மாவிடம் கேட்டேன். “எனக்குப் பல் வலிக்கிறது. நான் வரவில்லை“ என்று சொல்லிவிட்டு, “இந்தப் பனி காலத்தில் யாராவது ஐஸ் சாப்பிடுவார்களா...? சளி பிடித்துக்கொள்ளும். அதனால் ஐஸ் சாப்பிடக்கூடாது“ என்று கோபமாகச் சொல்லி விட்டார்கள்.
   அம்மா என்றாலே இப்படித் தானே... அதனால் என் தோழிக்குப் போன் செய்து, “என்னுடன் ஐஸ் சாப்பிட வா“ என்று அழைத்தேன். அவள், “எங்கள் வீட்டுத் தெருவில் ஒரு பாட்டி இறந்துவிட்டார்கள். அதனால் நாளைக்கு மறுநாள் போகலாம்“ என்று சொல்லிவிட்டாள்.
   நானும் இரண்டு நாள் கழித்து அவளுக்குப் போன் செய்து அழைத்தேன். அன்று “இன்று எங்கள் தெருவில் இரண்டு வயதானவர்கள் இறந்துவிட்டார்கள். நான் வர முடியாது“ என்றாள். “என்ன இது... இரண்டு நாளைக்கு முன்பு தானே ஒரு சாவு என்றாய். திரும்பவுமா...?“ என்று கேட்டேன்.
   “ஆமாம் அருணா. இது பனிக்காலம் இல்லையா...? இந்த மார்கழி மாதக் குளிரை வயதானவர்களால் தாங்க முடிவதில்லை. உறக்கத்திலேயே இறந்துவிடுகிறார்கள்“ என்றாள்.
   இங்கு 20, 21 டிகிரி அடிக்கிறது. இதைப்போய் குளிர் என்கிறார்கள். நான் -4, -5 என்ற அளவில் இருந்து விட்டு வந்ததால் இதை என்னால் குளிர் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
   என்ன செய்வது....? அவளும் வரவில்லை. நானும் ஐஸ்கிரீம் சாப்பிட முடியவில்லை.

   மறுநாள் புல்லாங்குழல் வித்துவான், கலைமாமணி, புலவர் வெங்கடேசன் ஐயாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். இவரைப் பாண்டிச்சேரி பிரன்சுப்பள்ளி கல்வே காலேஜியில் படித்த அனைவருக்கும் நன்கு தெரியும். அதிகம் கற்றவர். ஆனால் மிகவும் அமைதியானவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தால் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.
    அப்படி அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது மணி இரவு 8 இருக்கும். அவர் தன் மகளை அழைத்து “ரொம்ப குளிருது. துண்டு கொண்டு வா“ என்றார். அந்தப்பெண் கொடுத்தக் கம்பளித்துண்டை வாங்கி, “பனிக்காலம் நல்லதுன்னு பெரியவர்கள் அனுபவித்துத் தான் சொல்லி இருக்கிறார்கள். அப்பா.. என்னமா குளிருது“ என்று சொல்லிக்கொண்டே தலையில் துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார்.

   என்னது... பனிக்காலம் நல்லதா....? என்ன இவர் முரணாகச் சொல்கிறார்? பனியின் கொடுமை தாங்காமல் வயதானவர்கள் இறந்து விடுகிறார்கள் என்று தோழி சொன்னாள். பனி அவ்வளவு கெட்டது என்றாள். இவர் என்ன இப்படி சொல்கிறார். ஒரு சமயம் பனியால் வயதானவர்கள் இறந்துவிடுவதால் நல்லது என்று பெரியவர்கள் சொன்னார்களோ.... என்று என் சின்ன மூளை யோசித்தது.
   அப்படி இருக்காது. பல உயிரை வாங்கும் கொடிய செயலை நம் பெரியவர்கள் நல்லது என்று கட்டாயம் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று ஒரு பக்கம் என் நல்ல மூளை சொன்னது.
   இருந்தாலும் புலவர் “பனிக்காலம் நல்லது“ என்று சொல்கிறாரே. காரணம் இல்லாமலா இருக்கும். அவரிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று “ஐயா, பனிக்காலம் கொடுமையானது தானே. பின்பு ஏன் பனிக்காலம் நல்லது“ என்று சொன்னார்கள்?“ என்று கேட்டேன்.
   அவர் சிரித்தபடியே சொன்னார். “பனிக்காலம் என்பதை அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. அதை
பனிக்கு + ஆலம் – பனிக்காலம் என்று பிரித்துப் படித்துப் பொருள்கொள்ள வேண்டும்.
இதில் “ஆலம்“ என்பது ஆலகால விஷம். உலகில் அதிக விஷமானது ஆலகாலவிஷம். இந்தக் கொடுமையான விஷத்தை விட பனி கொடுமையானது. அதனால் தான் பனியை விட ஆலம் நல்லது என்பதைப் “பனிக்கு ஆலம் நல்லது“ என்று சொன்னார்கள். அதைச் சுறுக்கி “பனிக்காலம் நல்லது“ என்கிறோம்“ என்று விளக்கம் சொன்னார்.

   அடடா... நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் என்று வியந்தபடி வீடுவந்து சேர்ந்தேன்.

அருணா செல்வம்.

   

திங்கள், 24 பிப்ரவரி, 2014

“மதுரைத் தமிழனை“ வன்மையாகக் கண்டிக்கிறேன்!
நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கடந்த இரண்டு மாதமாக நான் வெளிநாட்டில் (இந்தியாவில்) இருந்ததால் வலைப்பக்கம் அதிகமாக வரமுடியவில்லை. நீங்கள் என்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக நீங்கள் கொடுத்த ஆதரவை நினைத்து மகிழ்கிறேன். படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
   இருந்தாலும்....
   நான் கடந்த மாதம் “அழகிய குட்டிகளின் படங்கள்“ என்றத் தலைப்பில் படங்கள் வெளியிட்டேன். அதன் லிங்க் http://arouna-selvame.blogspot.com/2014/01/blog-post_21.html
   இதைப்படித்த நம் மதுரைத் தமிழர் “அவர்கள் உண்மைகள்“

எல்லாக் குட்டிகளின் படம் போட்டு அதில் உங்கள் படத்தை (யானைக் குட்டி)யும் இடையே சொருகி உள்ளது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆமாம் அது எப்படி என்(சிங்க குட்டி) படம் உங்களுக்கு கிடைத்தது?

என்று கருத்திட்டு இருந்தார். இதை “மூங்கில் காற்றும்“ ஆமோதித்து இருந்தார்.

இது என்ன நியாயம்?

   நான் என்னை என் மனத்தளவில் மிகப்பெரிய யானையின் பலம் கொண்டுள்ளவளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். (மனத்தில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும்) என்னைப் போய்........
என்னைப் போய்...... இப்படி ஒரு “குட்டி“ யானை என்று சொல்லி எழுதியிருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி அப்படி சொல்லலாம்....? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
   தவிர, மதுரைத் தமிழரை நான் “பெரீரீய“ சிங்கம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தான் ஒரு “குட்டி“ என்பதை இப்படி போட்டு உடைப்பார் என்று நினைக்கவே இல்லை.
   சரி தோழ தோழியர்களே.... நீங்கள் சொல்வதால் (?) அவரை மன்னித்து விடுகிறேன்.

(இந்தப் பதிவு ஒரு ஜாலிக்காக எழுதியது)

நன்றியுடன்

அருணா செல்வம்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

புதன், 5 பிப்ரவரி, 2014

எதை எங்கிருந்து பேச வேண்டும்?

   ஹெரால்ட் லாஸ்கி என்பவர் பிரிட்டனில் உள்ள பொருளாதார நிபுணர்களிலேயே முதன்மையானவர்.
   அவர், கருத்துச் சுதந்திரத்தையும் மனித உரிமையையும் அடக்கி ஒடுக்கும் சர்வாதிகார ஆட்சிகளை வன்மையாகக் கண்டித்து அடிக்கடி சொற்பொழிவு ஆற்றுவார்.
   அவரது ஒவ்வொரு சொற்பொழிவையும் கேட்டு எரிச்சல் அடைந்தார் லாவோஸ் என்ற பாதிரியார்.
   ஒருநாள்...
   ஹெரால்ட் லாஸ்கியின் சொற்பொழிவைக் கேட்ட பாதிரியார் உச்சகட்ட எரிச்சலுடன், “மிஸ்டர் லாஸ்கி... நீங்கள் சொல்லுகின்ற கொடுமைகள் அனைத்தும் ஜெர்மனியில் தான் நடக்கின்றன. நீங்கள் அங்கே போய்ப் பேசாமல் இங்கே பிரிட்டனில் இருந்து கொண்டு பேசுகிறீர்களே. இது வீணான வேலை இல்லையா?“ என்று கேட்டார்.
   அதைக்கேட்ட ஹெரால்ட் லாஸ்கி, “புனிதத் தந்தையே... தாங்கள் கூட மக்களை நரகத்திலிருந்து காப்பாற்றத் தான் பாடுபடுகிறீர்கள். ஆனால் அங்கே போய் பாடுபடாமல் இங்கு இருந்து கொண்டு பிரசாரம் செய்கிறீர்களே. இது வீண் வேலை இல்லையா?“ என்று கேட்டார்.
   அதைக் கேட்ட பாதிரியார் லாவோஸ், அடுத்து பேசமுடியாமல் வாயடைத்துப் போனார்.

படித்ததில் சிந்திக்க வைத்தது.
அருணா செல்வம்.

சனி, 1 பிப்ரவரி, 2014

உலகிலே ஒருவர்!!கல்லுக்குள் இருக்கின்ற சிலையைச் சிற்பி
    கற்பனையால் கண்டுநன்றாய் வடிப்பான்! செம்மைச்
சொல்லுக்குள் இருக்கின்ற பொருளைக் கற்றோன்
    சுவைதமிழும் சொக்கப்..பா படைப்பான்! உண்மை
இல்லுக்குள் இருக்கின்ற துயரை அன்பன்
    இல்லாமல் ஓட்டிடவே வைப்பான்! பெண்ணின்
உள்ளுக்குள் இருக்கின்ற உணர்வைக் கண்டே
    உலகினிலே உரைத்திடுவார் ஒருவர் உண்டோ!!

 அருணா செல்வம்.