வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மீன் விழி!!

எனது முகநுர்ல் கவிதைகள்!

மீன் விழியாள்!
மீனவர்கள்
மீன் பிடிக்க
போகிறார்கள்.
அன்பே.... உன்
கண்களை உடனே
மூடிக்கொள்!

-------------------------------------------------------------------------------------------------- 

கதை சொல்லும் கண்கள்!
கண்ணுக்குள்
மறைத்துள்ள
காவியங்கள்
எத்தனை பெண்ணே?
எனைப் பார்க்கும்
உன் கலை கண்கள்
அத்தனை கதை
சொல்கிறதே!

 -----------------------------------------------------------------------------------------------------------------


விழி மீன்கள்!


வலை வீசி
மீன் பிடிப்பான்
மனிதன்!
இங்கே
இரு மீன்கள்
என்னை
வலை வீசிப் பிடித்த
மாயம் தான் என்ன...!  

 -------------------------------------------------------------------------------------------------------

படபடப்பு!படபடப்பாய்ப்
பார்க்காதே பெண்ணே...
பட்டாம் பூச்சிகள்
பார்த்து விட்டால்
மயங்கி மதியிழந்து
தன் இனத்தை
மறந்து விடும்!

 ----------------------------------------------------------------------------------------------


வேல் விழியாள்!விழியில் வேலை
வைத்திருக்கிறாயா?
பார்த்ததும்
நெஞ்சைக் கிழித்துத்
தஞ்சம்

புகுந்து விட்டதே!அருணா செல்வம்
28.02.2015

புதன், 25 பிப்ரவரி, 2015

கோபமா என்னுடன்?காலை உறக்கம் கலைந்ததுமே
    கண்முன் வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
    விழுங்கு வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
    சூழும் மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
    நுவலும் பொருளில் தெரிகின்றாய்!

என்னில் உள்ளே இருந்தாலும்
    எதிரில் காண ஓடிவந்தால்
என்னை ஏனோ மறந்துவிட்டாய்!“
    என்றே கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
    ஊடல் கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
    என்தன் உயிரே என்செய்வேன்?!

எந்த நிலையில் உனைமறந்தேன்
    என்று தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
    அந்தக் கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
    சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
    இருக்கும் நேரம் அதுவென்பேன்!

மறத்தல் தானே மனிதருக்கு
    மகேசன் கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
    சீராய் வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
    மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
    இனிமை அதுவே தருமென்பேன்!
     
அருணா செல்வம்.

26.02.2015

திங்கள், 23 பிப்ரவரி, 2015

அழுகை!!அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தைத்
    தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
    இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
    முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர் பொங்கி
    வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!!

அருணா செல்வம்.

24.02.2015

வியாழன், 19 பிப்ரவரி, 2015

நட்டநடு இரவினிலே....!!நட்டநடு இரவினிலே
நற்பாடல் நானெழுதக்
கொட்டகொட்ட விழித்திருந்தேன்
கோணச்சொல் வரவில்லை!

பட்டமர வாழ்வதையும்
பளிங்குபோல் காட்டவரும்!
பட்டுவிரி வாழ்வதையும்
பளபளக்க எழுதவரும்!

எட்டிஎட்டி யோசித்தேன்
எட்டாமல் போனதனால்
எட்டாமல் ஏமார்ந்த
இளநரியின் நிலையானேன்!

கட்டான கவியெழுதக்
கவித்தமிழே எங்குநின்றாய்?
சட்டென்று வந்துவிடேன்
சந்தமுடன் எழுதிவிட!

மொட்டொன்று பூப்பதுபோல்
முகமலர்ந்து சிரிப்பாயே!
மெட்டோடு கவியெழுத
மெதுவாகச் சிரித்துவிடேன்!

பட்டென்று கண்ணிரண்டும்
படபடக்க பார்ப்பாயே!
பாட்டொன்று நானெழுதப்
பார்க்காமல் பார்த்துவிடேன்!

அருணா செல்வம்

20.02.2015

புதன், 18 பிப்ரவரி, 2015

சோலைக் குயிலின் ஏக்கம்!!


(கவிதைக் கதை)

மாலை மயங்கும் நேரமது
   மஞ்சள் குளித்த வானத்தில்
வேலை முடித்த கதிரவனோ
   வீடு தேடிப் புறப்பட்டான்.
பாலை வனமாய்க் காய்ந்திருந்த
   பாவை நெஞ்சை நெகிழவைத்த
சோலைக் குயிலின் கானத்தால்
   சொக்கி நுழைந்தேன் சோலைக்குள்!

வனத்தில் உயர்ந்த சிலமரங்கள்
   வானைத் தொடவே முயற்சித்துத்
தனத்தால் உயர்ந்த குடிமகன்போல்
   தலையை நிமிர்த்தி நின்றதங்கு!
மனத்தால் உயர்ந்த தாயைப்போல்
   மாசு வற்றக் கிளைவிரித்தே
சினத்தால் எரிக்கும் கோடையிலும்
   சிலதைக் காக்கும் பலமரங்கள்!

சின்னச் சின்னச் செடிகளிலே
   சிந்தை ஈர்க்கும் புதுமலர்கள்!
தன்னந் தனிமை நிலையினிலும்
   என்னை இழுத்த நறுமணத்தால்
இன்னல் கொஞ்சம் கூடியது
   இன்பத் துணையைத் தேடியது.
கன்னம் சிவக்க நின்றிருக்க
   கண்ணை மயக்கும் காட்சியொன்று!

வட்டப் பூவின் மையத்தில்
   வடிவாய் அமர்ந்து தேன்குடித்த
பட்டாம் பூச்சின் இறக்கையிலே
   படத்தை யார்தான் வரைந்தாரோ!
சொட்டுத் தேனை உண்டவண்டு
   சொல்லில் சேரா இசையினிலே
மொட்டும் மயங்கும் வண்ணத்தில்
   மொய்த்துப் பாடிப் பறக்கிறதே!

 ஏற்றம் கொண்ட குரலினிலே
   இதயம் வருடும் மெல்லிசையாய்
காற்றில் கரைந்த குயிலோசை
   காதில் புகுந்து எனைமயக்கி
ஊற்றின் குளிரின் இதமென்று
   உட்கார்ந் திருந்த வேலையிலே
சீற்றம் கொண்ட கருங்குயிலோ
   சினந்து என்னை முறைத்ததுவே!

“சோக கீதம் பாடுகிறேன்
   சுகமாய் அதைநீ ரசிப்பாயா?
வேக மாகக் கேட்டதென்னை !
   வெறித்தே அதனை நோக்கினேன்நான்!
“தாகம் கொண்ட பாபொருளைத்
   தமிழில் சொல்வேன் கேள்பெண்ணே!“
ஏக வசத்தில் சொல்லியதை
   எடுத்து கவியில் எழுதுகிறேன்!

“சீதை இருந்த தீவதுதான்!
   சீரும் சிறப்பாய் வாழ்ந்தோமே!
கீதை வழியில் நிலம்கேட்க
   கீழோர்க் குணத்தைக் கண்டேனே!
போதைக் கொண்டு போர்புரிய
   பேதைப் பெண்கள் என்செய்வோம்!
பாதை முழுதும் குண்டிருக்க
   பதுங்குக் குழியில் இருந்துவந்தோம்!

கொஞ்சம் கூட இரக்கமின்றிக்
   குஞ்சு மூப்புப் பாராமல்
அஞ்சி நின்ற அனைவரையும்
   அழித்தார் அந்த அரக்கர்கள்.
கெஞ்சி அழுத பெண்ணினத்தைக்
   கெடுத்து மேலும் அழவைத்தார்.
மிஞ்சி இருந்த உயிர்காக்க
   மேலை நாட்டிற்(கு) ஓடிவந்தோம்!

உண்டு உறங்கி வாழ்ந்தயிடம்
   உயிர்கள் துடித்த கொலைக்களமாய்க்  
குண்டு பொழியும் நிலமெல்லாம்
   குருதி பாயும் வயல்வெலியாய்
வண்டு பாடும் சோலையெல்லாம்
   வாசம் நாறும் பிணக்கிடங்காய்க்
கண்டு மனமோ துடித்தாலும்
   கனத்தை இறக்கும் இடமேது?

“என்று நானோ பாடுகிறேன்!
   இனிக்கும் சுவையா இதிலுள்ளது?
என்றே கேட்ட கருங்குயிலின்
   ஏக்கம் எனக்குப் புரிகிறது!
என்ன சொல்லி என்னபயன்?
   எல்லாம் இழந்தும் நின்றாலும்
என்றும் எனதே எனநினைக்கும்
   எழுச்சி மனத்துள் வேண்டுமன்றோ!!

அருணா செல்வம்

18.02.2015

திங்கள், 16 பிப்ரவரி, 2015

கருணையெனும் இறைவன்!!இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
   இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
   மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
   கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
   நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ?!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
   எம்மதத்தில் உள்ளதென்றும் அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
   உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!
   பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தின் மறைந்திருக்கும் மழையைப் போல
   காலமுடன் உதவுகின்ற எண்ணம் ஓங்கும்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
   அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
   பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
   உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
   கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!

அருணா செல்வம்

16.02.2015

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

இன்று காதலர் தினமாம்...!ஒற்றை ரோசா மலர்கொண்டே
   உன்னை எண்ணிக் காத்திருந்தேன்!
பற்றை விட்ட முனிபோலப்
   பட்டும் படாமல் பேசுகின்றாய்!
வற்றாக் காதல் வளத்துடனே
   வாங்கி வந்த மலரை...நீ
கற்றைக் குழலில் சூடிட்டால்
   காற்றாய் மனமும் பறக்காதோ

சிவப்பு ரோசா இதழினிலே
   சிந்தும் தேனின் சுவைபோல
உவப்புக் கொண்ட கன்னத்தில்
   ஒத்தி ஒன்று கொடுத்திட்டால்
தவத்தின் பயனை அடைந்திட்ட
   தன்மை தெரியும் இன்றெனக்கு!
தவறே என்று நினைக்காமல்
   தாவி வந்து கொடுத்துவிடு!

என்ன சொல்வேன் என்னவளே!
   எழுதும் எழுத்தில் எதைக்கோர்ப்பேன்?
உன்னை மனத்தில் சுமந்ததாலே
   உறக்கம் இன்றித் தவிக்கின்றேன்!
பொன்னில் புரண்ட மனத்தவளே!
   பொய்யைச் சொல்ல விருப்பமில்லை!
என்னில் இருக்கும் உன்னைநான்
   என்றும் மனத்தால் அணைக்கின்றேன்!

இன்று காதல் திருநாளாம்!
   இருந்தால் என்ன என்னவளே!
என்றும் நமக்குத் திருநாளே!
   இனிய காதல் வளர்நாளே!
அன்று வாழ்ந்த காதலர்கள்
   அன்பைக் காட்ட நாள்வகுத்தார்!
அன்றும் இன்றும் என்றென்றும்
   அழியாக் காதல் நமதன்றோ?!!அருணா செல்வம்.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பாதையெங்கும் மலர்ச்சோலை!அன்னை கையில் தவழ்ந்திருக்க
   ஆசை எதுவும் மனத்திலில்லை!
முன்னைத் தெய்வம் இதுவென்ற
   மூத்தோர் சொல்லை நம்பவில்லை!
பொன்னைப் பொருளைத் தந்தாலும்
   போற்றி வைத்துச் சேர்க்கவில்லை!
பண்பு பொங்கும் தாய்ப்பிடியில்
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

அடித்த அரட்டை தாங்காமல்
   அன்னை கோபம் கொண்டாலும்
வெடித்த சிரிப்பை அடக்காமல்
   வெண்மை உள்ளம் கொண்டிருந்தும்
நடிப்பு என்ப(து) அறியாமல்
   நட்பை நெஞ்சில் உயர்த்திநின்று
படித்த இளமைக் காலத்தில்
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

உருவ அமைப்பில் இளமைபொங்க
   உருத்தும் கண்ணால் மனம்பொங்க
கரு...மை விழியைக் காந்தமென்று
   கவிதை பாடும் காளையரை
அருகே கண்டும் அலட்சியமாய்
   அழகு கொடுத்த போதையுடன்
பருவ வயதில் நடந்துசென்ற
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

அந்த நாளில் அமைந்ததெல்லாம்
   அதுவே தானாய் முளைத்ததுவே!
இந்த நாளில் நினைப்பதெல்லாம்
   இயற்கை மாற்றுச் செயலதுவே!
சொந்த ஊரின் சுடுமண்ணும்
   சொர்க்கப் பூமி எனப்பாடும்!
வந்த இடத்தில் வளமிருந்தும்
   வளர்ந்த இடத்தை மனம்தின்னும்!

சின்ன வயது நிகழ்வெல்லாம்
   சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
இன்பம் பொங்கும் அந்நாளே
   இனிக்க வருமா எனஏங்கும்!
இன்றும் குழந்தை யாகிவிட
   எண்ணும் நெஞ்சம்! கனவெனினும்
அன்று நடந்த பாதையெல்லாம்
   அழகாய் மலர்ந்த சோலைகளே!


அருணா செல்வம்.