வியாழன், 31 அக்டோபர், 2013

தீமைகள் விலகும் நாள்!!


தொன்றுதொட்டு கொண்டாடுகிறோம்
தோய்வில்லாமல் தீபாவளியை!
என்றுவிட்டு யோசிப்போம்
எதனால் வந்தது இதுவென்று?

இறந்தவனுக்குத் திருநாள்
இருப்பவர் கொண்டாடுகிறார்!
பிறந்தவர் இறப்பது உலக நியதி
இருப்பினும் கொண்டாடுதல் என்ன நீதி?

அடுத்தவர்க்கு உதவாவிடினும்
கெடுக்காமல் இருப்பது மேலாம்!
கொடுப்பவர் மனத்தைக் குடைந்து
கெடுத்தே உயர்வது கீழாம்!

அதிகாரம் கிடைதாலோ
ஆணவம் வருதல் சரியோ?!
விதியென்று மக்கள்வாழ்ந்தும்
வீழ்த்துதல் என்ன முறையோ?

அசுரக்கொடுமை அன்றுமட்டுமா?
அரசுக்கொள்கை இன்று மட்டுமா?
அன்றோ இருந்தான் ஓர்அசுரன்!
இன்றோ இல்லை ஓர்தலைவன்!

ஒருநாள் அசுரன் அழிந்ததனால்
திருநாள் தீபாவளி வந்திடுதாம்!
வருநாள் எல்லாம் விழித்திருந்தால்
வசந்தம் வாழ்வில் வந்திடுமா?

திருப்பிப் போட்டு பார்க்க வேண்டாம்!
திருத்திக் கொள்ள வேண்டும் இன்று
தீமைகள் விலகும் நாளெல்லாம்
தீபாவளி திருநாள் என்று!

அருணா செல்வம்.

31.10.2013

புதன், 30 அக்டோபர், 2013

தீபாவளி பாசம்!! (நகையும் சுவையும்)


   அமுதன் ரகுவின் வீட்டில் நுழைந்த போது அவனின் மகள் புவனா, புது கவுன் போட்டுக்கொண்டு தெரு வாசலிலேயே நின்று கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
   “அவளிடம் இவன் “புவனா.... இந்த கவுன் திபாவளிக்கு எடுத்ததா...?“ அன்பாக கேட்டான்.
   அவள் இவனை முறைத்துவிட்டு, “இல்ல. இந்த கவுன் எனக்கு எடுத்தது“ என்றாள்.
   உள்ளே போகும் போதே இப்படியா... என்ற யோசனையுடன் நுழைந்தவனை ரகு பெரியதாக வரவேற்காமல் “வாடா...“ என்று மட்டும் சொன்னது இவனுக்கு மேலும் என்னவோ போல் ஆகிவிட்டது.
   என்ன செய்வது? உதவி என்று கேட்கப் போகும் இடத்தில் மரியாதையை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா....? மனத்தை திடமாக்கிக் கொண்டான்.
   “என்னடா ரகு! இன்னைக்கு மழை வரும்ன்னு ரேடியோவில சொன்னாங்க. நீ கேட்டியா...?“
   “நான் கேக்கலைடா. அவங்களாத்தான் சொன்னாங்க.“ முகத்தை “உம்“மென்று வைத்துக்கொண்டு சொன்னான் ரகு. அமுதன் “ஐயோ“ என்று தலையைப் பிடித்துக்கொண்டான்.
   “என்னண்ணா... தலைவலியா...? அவர்கிட்ட பேசினாலே தலை வலிக்கும் தான். தலைவலி மருந்து வேணுமா...?“ பாசத்துடன் கேட்டபடி வந்தாள் ரகுவின் மனைவி.
   “வேண்டாம்மா. கொஞ்சம் சூட காப்பி இருந்தா கொடு“ என்றான்.
   “க்கும். ரெண்டும் ஒன்னு தான். எதை சாப்பிட்டால் என்ன?“ ரகு முணுமுணுத்தது அவள் காதிலும் விழுந்தது.
   “இதோ பாருங்க... ரெண்டு நாளா சண்டை போட்டது போதும். இன்னைக்கு நல்ல நாளும் அதுவுமா எங்கிட்ட சண்டைக்கு வர்றாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வந்திடும்... ஆமா...“
   “உனக்கு நல்ல கோபம் கூட வருமா...? போ... போயி அந்த கஷாயத்தைப் போட்டு இவனுக்குக் கொடு.“ என்றான் ரகு எரிச்சலுடன்.
   அவள் முறைத்துவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள்.
   ரகு அமுதன் கொண்டு வந்த பலகாரப்பையைத் திறந்து அதிலிருந்த அதிரசத்தை எடுத்துச் சாப்பிட்டான். “அதிரசம் சூப்பர்டா. வீட்டுல செஞ்சிதா?“
   “ஆமாம். ஆமா... நீங்க எதுவும் பலகாரம் செய்யலையா...?“ இவன் கேட்கும் பொழுதே.... காபியைக் கொண்டு வந்தவள், “ஆமா... நாளும் கெழமையுமா உங்க பிரெண்ட் நாளு பலகாரம் செய்யவிடுறாரா?“ மூக்கைச் சிந்தாத குறையதாக இழுத்தாள்.
   “ஏன்டா... என்ன ஆச்சி? ஏன்ம்மா புது டிரெஸ் வாங்கலையா...?“
   “நான் எனக்கு ஒரு புடவை வாங்கினேன்“
   “நீ என்னடா வாங்கினே...?“
   “நான் கடன் வாங்கினேன்டா.“
   “ஐயோ... என்னச்சி உனக்கு?“ அவன் பேசாமல் இருக்கவும் இவன், அவனின் மனைவியிடம் “என்னதான்மா ஆச்சி?“ கேட்டான்.
   “அது ஒன்னும் இல்லையண்ணா. இந்த வருடம் அவருடைய தங்கைக்கு தலைதீபாவளி இல்லையா...? அவுங்க அம்மா பணம் கேட்டு போன் பண்ணினாங்க. இவரும் இந்த வருஷம் நாம தீபாவளியை சிக்கனமா கொண்டாடிடலாம்ன்னு சொல்லிட்டு எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இருந்த பணத்தை ஊருக்கு அனுப்பிட்டாரு. கேட்டதுக்குத் தான் இவ்வளவு கோபம்.“ என்றாள்.
   “உங்கிட்ட சொல்லி இருந்தா நீ பணத்தை அனுப்பவா விட்டிருப்பே? எனக்கு அது வேணும் இது வேணும்ன்னு பணத்தைக் காலி பண்ணி இருக்க மாட்டே...“ கோபத்துடன் ரகு சொன்னான்.
   “ஆமா... அப்படியே நீங்க வாங்கி கொடுத்திட்டாலும்.... இப்ப கூட பாருங்ண்ணா. என் அண்ணன் தீபாவளிக்கு புவனாவிற்கு கவுன் வாங்க சொல்லி பணம் கொடுத்தது. அதுல சிக்கனமா எனக்கு ஒரு புடவையும் அவளுக்கு ஒரு கவுனும் எடுத்தேன். எங்களுக்குன்னு இவரு என்ன பெரிசா செய்திட்டாரு? நமக்கு பொண்டாட்டி குழந்தைன்னு இருக்கிற எண்ணமே கொஞ்சம் கூட இவருகிட்ட இல்லண்ணா...“ குரல் தழுதழுத்தது.
   “சரி விடும்மா. இதையெல்லாம பெரிசா நினைச்சி கண் கலங்கிட்டு. ஏதோ நம்ம வசதிக்கு நம் தங்கைக்கு நம்மால முடிஞ்சதை செய்தோமே... என்ற திருப்தியாவது அவனுக்கு இருக்கட்டும். ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியில கிளம்பி போயிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்“ சொல்லிவிட்டு கிளம்பினான்.
   வாசல் வரையில் வந்த ரகு அமுதனின் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாயைச் செறுகினான்.
   “ஏதுடா இது?“
   “எனக்குத் தெரியும்டா. உன் தங்கைக்கும் இந்த வருடம் தலை தீபாவளி என்று. நான் கடன்வாங்கும் பொழுதே உனக்கும் சேர்த்து தான்டா வாங்கினேன். என் பொண்டாட்டிக்கு அவ அண்ணன் கொடுத்தான். நம்ம தங்கச்சிக்கு நாம தானே கொடுக்கனும். இதுவே தீபாவளி கொண்டாடின திருப்தியை நமக்கு கொடுத்திடும்டா... ம்.. கிளம்பு“
   அமுதன் நன்றி சொல்லமுடியாத நிலையில் ரகுவைப் பார்த்துவிட்டு நடந்தான்.

அருணா செல்வம்

30.10.2013

செவ்வாய், 29 அக்டோபர், 2013

கீழ் சாதி இரத்தம்!! (குட்டிக்கதை)


    வீட்டின் தெரு வாசலிலேயே நின்றிருந்த அஞ்சலையையும் அவள் அருகில் நின்றிருந்த சுகந்தியையும் அலட்சியமாகப் பார்த்த பொன்னம்பலம், “என்ன அஞ்சலை?“ என்று கேட்டார்.
   “இந்த மாச கடன் பணத்த கொண்டாந்திருக்கிறேங்க...“ தயங்கித் தயங்கிச் சொன்னாள் அஞ்சலை.
   “நா கொஞ்சம் வேலையா இருக்கேன். உள்ளே அம்மாகிட்ட குடுத்துடு.“
   “சரிங்க ஐயா“ என்று சொன்னவள் வீட்டைச் சுற்றிக்கொண்டு கொல்லை புறத்திற்குச் சென்றாள். “அத்தை... ஏன் நேரா வீட்டுக்குள்ள போகாம இப்படி சுத்திக்கினு போறீங்க?“ என்று கேட்ட சுகந்தியைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு, “இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பேன்னு தான் என் கூட வரவேண்டாம்ன்னு சொன்னேன். பேசாம வாயை மூடிகிட்டு இரு.“ என்றாள் அழுத்தமாக.
   “நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன்?“
   “நீ தப்பா கேக்கலை சுகந்தி. நாம பொறந்த இடம் அவ்வளவு தரம் கொறஞ்சதா இருக்கு. அவுக மேல் சாதிக்கராங்க. நாம கீழ்சாதி. அவங்க வீட்டுக்குள்ள நாம போவக்கூடாதாம். தீட்டுன்னு சொல்லுவாங்க.“
   இவளிடம் சொல்லிவிட்டு கொள்ளைப்புறத்து வாசலை நோக்கி “அம்மா... அம்மா... நா அஞ்சலை வந்திருக்கேன்..“ குரல் கொடுத்தாள்.
   கொஞ்ச நேரத்தில் “என்ன அஞ்சலை,“ என்று கேட்டபடி அந்த அம்மாள் கையில் சொம்பு தண்ணீருடன் வெளியில் வந்தாள்.
   “இந்த மாச வட்டி பணமும் கொஞ்சம் அசலும் சேத்து கொண்டாந்திருக்கேன்மா. இந்தாங்க.“ சொல்லியபடி பணத்தைத் தரையில் வைத்தாள்.
   அந்த அம்மாள் பணத்தைச் சுற்றி கொஞ்சமாக தண்ணீர் தெளித்து விட்டு எடுத்து எண்ணி முந்தானையில் முடிந்து கொண்டாள்.
   “தண்ணீ தெளிச்சிட்டா தீட்டு போயிடுமா...?“ என்று சற்றுக் கோபத்துடன் கேட்ட சுகந்தியை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்துவிட்டு, “யாருடி இவ?“ கேட்டாள் முகம் சுளித்தபடி.
   “என் அண்ணன் பொண்ணும்மா. டவுனுல படிச்சிட்டு இப்போ ஒரு ஆஸ்பத்திரியில வேலை செய்யிறா. அவ சம்பாதிச்ச பணம்தாம்மா இது.“ பவ்வியமாக சொன்னாள் அஞ்சலை.
   “ம்ம்ம்... நாலு காசு சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு. அஞ்சலை... பெரியவங்க கிட்ட எப்படி பேசனும்ன்னு சொல்லி வை.“ என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டினுள் நுழையத் திரும்பியவளைக், “கொஞ்சம் இருங்கம்மா“ என்ற சுகந்தியின் வார்த்தை அவளை அங்கேயே நிற்க வைத்தது.
   “நாங்க கொடுத்த பணத்தைக் கூட தண்ணீ தெளிச்சிட்டு தொடுறீங்களே... அன்னைக்கு ஆக்ஸிடன்ட் ஆன உங்க புருஷனைக் காப்பாத்த ஒரு டாக்டர் காலில் விழுந்தீங்களே... அந்த டாக்டர் எங்க சாதிக்காரர் தான். அதிகமா ரத்தம் போயிடுச்சின்னு ஒருத்தர் உங்க புருஷனுக்கு ரத்தம் கொடுத்தாரே அவரும் எங்க சாதிக்காரர் தான். இப்போ வீட்டுக்குள்ளேயே தீட்டை வச்சிக்கினு இருக்கிறீங்களே... எப்படி தண்ணீ தெளிச்சி சுத்தம் பண்ணுறீங்க?“
   இதைக்கேட்ட அந்த அம்மாள் சிலையாக நின்றாள்.
   “சுகந்தி... இப்படியெல்லாம் பேசக்கூடாது.... வா போகலாம்“ கையைப்பிடித்து இழுத்தவளை உதறிவிட்டு சுகந்தி பொறுமையாகச் சொன்னாள். “அத்தை... நான் அவங்களை அவமானப்படுத்த வேண்டும்ன்னு சொல்லலை. கீழ்சாதிக் கரனுக்கும் ரத்தம் இருக்கு. அதுவும் சிகப்பாதான் இருக்கு. அதிலேயும் துடிப்பு இருக்குன்னு இவங்க தெரிஞ்சிக்க வேண்டும்ன்னு தான் சொன்னேன். அவங்க மனசை முதலில் சுத்தம் பண்ணிக்கட்டும். வாங்க  அத்தை. போகலாம்...“ என்று சொல்லிச் சென்றவளைப் பின்தொடர்ந்தாள் அஞ்சலை.

அருணா செல்வம்.
29.10.2013
   

   

திங்கள், 28 அக்டோபர், 2013

காத்திருந்தால் அன்பு கூடுமா?


 அலைகள் உரசும் கடலருகில்
   அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
   கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடல்அழகி!
   சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
   நேரம் கடந்தும் வரவில்லை!

பொன்னை நிகர்த்த சூரியனோ
   புதைந்து போனான் கடல்நடுவில்!
முன்னே தெரிந்த கடல்வானம்
   முகத்தில் கருமை பூசியது!
அன்பாய்க் காக்கச் சொன்னவளை
   அன்றோ இன்னும் காணவில்லை!
என்னே அவளின் அலட்சியமோ
   என்னை என்ன நினைத்துவிட்டாள்!?

தனியா கோபம் மூண்டுவிட
   தாபம் நெஞ்சைத் தாக்கிவிட
இனியும் எனக்கு பொறுமையின்றி
   எழுந்து போக கிளம்பிவிட்டேன்!
பனிபோல் எதிரில் ஓர்உருவம்!
   பார்வை குறுக்கி பார்த்தாலோ 
தனிமை கோடுமை போக்கிவிட
   தனியே அவள்தான் வருகின்றாள்!

அவளைப் பார்த்த மறுநொடியே
   அடங்கா கோபம் ஓடியதேன்?!
கவலை போக்கும் மருந்தாக
   காய்ந்த மனத்தில் நீராக
குவளைக் கண்ணைக் கண்டவுடன்
   கோடி இன்பம் கூடியதேன்?
இவளை நினைத்துக் காத்தெல்லாம்
   இன்னும் அன்பைக் கூட்டியதோ!!

அருணா செல்வம்.
28.10.2013

(இந்தக் கவிதை,
“மா – மா - காய்
  மா – மா – காய்“

என்ற இலக்கணத்தில் அமைந்த அறுசீர் விருத்தம்)

வியாழன், 24 அக்டோபர், 2013

தீபாவளி வேண்டும்!!மேல் மட்ட மக்கள்!!

வருடம் முழுதும் செய்த பாவத்தை
ஒருநாள் வந்திடும் கங்கையில்
குளித்துக் கழுவிவிட்டு,
சூரியோதயம் காணாத கண்களால்
சூரிய நாராயணுக்காகப் படைத்துப்
பணம் இருக்கும் பகட்டைப்
பலகாரத்தில் காண்பித்து,
வயிறார உண்ண முடியாமல்
வந்திருக்கும் நோயிக்குப் பயந்து,
பிச்சையிட வேண்டுமானாலும்
பிறரைக் கூட்டிக் காண்பித்துப்,
பகவானைக் கண்டிட
பகட்டு நகையுடையுடன்
மிடுக்காய்ச் சென்றிடுவார்...
மிகையானவருக்குத் தீபாவளி!!

நடுத்தர மக்கள்!!

கௌரவம் பார்த்துக்
குடும்பம் நடத்திக்
கரன்சியைக் கடவுளாக்கிக்
காய்ந்த வயிற்றைத் தடவி
பக்கத்து வீட்டுக்காரனை விட
பகட்டாகக் காட்டிக்கொண்டு,
வருடத்தில் ஒருமுறை
வந்திடும் போனஸ் பணத்திற்கு
ஓராயிரம் பொருள் வாங்க
கற்பனை செய்து கொண்டு,
ஒன்றும் வாங்க முடியாத
விலைவாசி உயர்வைக் கண்டு,
ஆசையாக காத்திருக்கும்
பிள்ளைக்குக் கூட கொடுக்காமல்
அடுத்த வீட்டு பலகாரத்தைப்
பெருமையுடன் இன்னொரு வீட்டுக்குக்
கொடுத்தனுப்பி விட்டு,
“யார் கொளுத்தினாலும்
பட்டாசு கரியாகும்“ தானென்று
உயர்வான தத்துவத்துடன்
அடுத்தவர் வெடியைக் காண்பித்தே
ஆறுதல் அடைந்து,
அடுத்த தீபாவளியைச்
சிறப்பாகக் கொண்டாடலாம் என்ற
சிந்தனையுடன் போகும் தீபாவளி!!

கீழ் மட்ட மக்கள்!!

வருடத்தில் ஒருநாளாவது
புத்தாடை அணிந்து,
புதுப்படம் பார்த்துவிட
கையிருப்பைக் கரைத்து,
மேலும் கடன்வாங்கி
காய்ச்சியதைக் குடித்துவிட்டு,
கறிமீன் ருசிபார்த்து
“நரகாசுரனா...? யார் அவன்?
அவனை அழிக்க
அவதாரம் எதற்கு?
என்னெதிரில் வரச்சொல் அவனை
ரெண்டுல ஒன்னு பாக்குறேன்...“ என்றும்,
“இன்னா தைரியம் இருந்தா
மக்கள கொடும படுத்தினான்....
.......! ஏய்... நரகாசுரா...
என் எதுருல வாடா...“
கட்டியிருந்த புது வேட்டி
கழண்டு விழுவதையும்
இலட்சியப் படுத்தாமல்.....

இவனுக்காகவே
“தீபாவளி“ என்று ஒருநாள்
திருநாளாய் வரவே வேண்டும்!!

அருணா செல்வம்
07.11.2010


(“தீபாவளி திருநாள் அவசியம் தானா?“ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு, பதிலாக நான் எழுதிய புதுக்கவிதை இது. நன்றி)

செவ்வாய், 22 அக்டோபர், 2013

என்னுள் ஏன்டீ நீவந்தாய்?எடுத்த பிறவி பழியின்றி
   எவர்க்கும் அஞ்சா நெஞ்சமுடன்
தொடுத்தச் சரமாய் நானிருந்தேன்!
   தோல்வி எதிலும் காணாமல்
கொடுத்த வாக்கை மீறாமல்
   கொள்கை மனத்தாய் வாழ்ந்திருந்தேன்!
விடுத்தாய்ப் பார்வை அம்பைப்போல்
   விழுந்தேன்! இன்னும் எழவில்லை!

கண்ணுள் உன்னை ஒளித்ததனால்
   காணும் இடத்தில் தெரிகின்றாய்!
விண்மேல் இருக்கும் நிலவினிலும்
   வெண்பல் காட்டிச் சிரிக்கின்றாய்!
மண்ணுள் இருக்கும் தங்கம்போல்
   மனத்தில் மறைந்து இருக்கின்றாய்!
பண்ணுள் அதைநான் எழுதிவிட்டுப்
   பார்க்க ஒருகண் அடிக்கின்றாய்!

மெய்யோ என்றே நெருங்கிவந்தால்
   மின்னல் போல மறைகின்றாய்!
பொய்யோ என்றே நகர்ந்தாலோ
   பூவாய் நெஞ்சை வருடுகின்றாய்!
கையால் தொடநான் நினைத்தாலோ
   கனவில் உணவாய்க் கலைகின்றாய்!
ஐயோ! என்ன நான்செய்வேன்?
   அமைதி யற்ற நிலையானேன்!

பொன்னை நனைத்தப் பூங்கொடியே!
   பொலிரும் வண்ணச் சித்திரமே!
உன்னை நினைக்கா நேரமில்லை!
   உன்னில் உலகம் உயர்வில்லை!
அன்பே! உன்றன் நினைவொன்றாய்
   அனைத்துச் செயலும் மறக்கின்றேன்!
என்னை நானே இழந்துவிட
   என்னுள் ஏன்டீ நீவந்தாய்?!

அருணா செல்வம்
22.10.2013
  

   

திங்கள், 21 அக்டோபர், 2013

அதிக மூளை யாருக்கு? (சிரிக்க-சிந்திக்க)ஏழையின் மகன்!

   ராக்ஃபெல்லர் என்பவர் அமெரிக்கக் கோடீஸ்வரரர்களில் ஒருவர்.
   அவர் ஒரு சமயம் ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற அவர், ஹோட்டல் நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
   பின்பு, “வசதிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, மலிவான வாடகைக்கு ஒரு அறை வேண்டும்“ என்று கேட்டார்.
   ஹோட்டல் நிர்வாகி வியந்து, “ஐயா... தாங்கள் எங்கள் ஹோட்டலுக்கு வருகை புரிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் பெயரைச் சொல்லி தங்கள மகன் அடிக்கடி இங்கு வந்து தங்குவார். அவர் எப்பொழுதும் அதிக வசதிகள் நிறைந்த அதிக வாடகையுள்ள ஆடம்பர அறையையே கேட்டு வாங்கித் தங்குவார். ஆனால் உலக மகா கோடீஸ்வரரான தாங்கள் மலிவு வாடகையில் அறையைக் கேட்கிறீர்களே. இது எனக்கு வியப்பாக உள்ளது.“ என்றார்.
   அதற்கு ராக்ஃபெல்லர் புன்சிரித்தார்.
   “இதில் வியக்க ஒன்றும் இல்லை. அவனது தந்தையாகிய நான் கோடீஸ்வரன். அதனால் அவன் ஆடம்பர வாழ்க்கை வாழுகிறான். ஆனால் நானோ ஓர் ஏழையின் மகன். ஏழையின் மகனான நான் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும்?“ என்றார் ராக்ஃபெல்லர்.
   அவரது தன்னடக்கத்தைக் கேட்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் ஹோட்டர் நிர்வாகி.


அதிக மூளை யாருக்கு?

    அறிஞர் ஆல்ஸ்டன் மிகவும் குள்ளமாக இருப்பார்.
   ஒருநாள் ஒரு வழக்கறிஞர் அவரைப் பார்த்து, “உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம் போலிருக்கிறதே!“ என்று கிண்டலாகப் பேசினார்.
   அதைக் கேட்ட ஆல்ம்ஸ்டன், “நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட, உங்கள் கோட் பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்!“ என்றார் ஆல்ஸ்டன் சிரித்தபடி.
   வழக்கறிஞர் திடுக்கிட்டு உடனே அந்த இடத்தை விட்டு அகன்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

பார்வை!! (நிமிடக்கதை)     
   சிவநேசன் அருகில் அமர்ந்திருந்த மனைவியைச் சற்றும் சிந்திக்காமல், எதிரில் சென்று கொண்டிருந்த பைக்கின், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணையே பார்த்தபடி கரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
    அந்தப் பெண் வடநாட்டு பெண்ணைப் போல் இருந்தாள். வெள்ளையான உடம்பில் மெல்லிய கறுப்புநிற சேலை அவள் அழகை மேலும் தூக்கிக்காட்டியது.
    அதிலும் அவள் முந்தானையை ஒற்றையாக விட்டுப் புடைவையைக் கட்டியிருந்ததால் அவளின் வயிறு, இடுப்புப்பாகங்கள் நிலவின் மேல் மெல்லிய கருமேகம் மூடுவதைப்போல மிகவும் அழகாக தெரிந்தது.
    காற்றின் அசைவில் சரியத்துடிக்கும் முந்தானையைக் கூட அவள் கவனிக்காதவளாய் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.
    தோள்பட்டையின் நுனி வரையில் வந்து  இறங்கிவிட்ட  முந்தானை இன்னும் முழுவதுமாக தோள்பட்டையை விட்டு இறங்காதா என்று சிவநேசனின் கண்கள் ஏங்கியது.
   ஆனால் அதற்குள் அவர்கள் போக வேண்டிய வழி வரவே அதையும் மனைவி நினைவு படுத்த, பெருமூச்சியுடன் வண்டியைத் திருப்பினான்.
   “ஏங்க... எதிரில் போன பெண்ணைப் பார்த்தீங்களா...?“ மனைவி கேட்டாள்.
    நாம் பார்த்ததை இவள் பார்த்திருப்பாளோ... நிச்சயம் பார்த்திருப்பாள். மனத்திற்குள் எண்ணியவனாய் “ம்“ என்ற ஒற்றை எழுத்தில் ஒத்துக்கொண்டான்.
    “ஏங்க பார்த்தீங்க இல்லை...? அந்தப் பெண்ணுடைய முந்தானை இன்னும் கொஞ்சம் விட்டா வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்ளும். நீங்கள் கொஞ்சம் முன்னால போய் அந்தப் பெண்ணின் முந்தானையைச் சரி செய்யச் சொல்லி இருக்கலாம். நீங்கள் சொல்லுவீங்கன்னு நான் நெனச்சேன். பாவம் அவள். ஏதோ யோசனையில் செல்கிறாள். இந்த உதவியைக் கூட நம்மால செய்ய முடியாமல் போயிடுச்சி. ம்ம்ம்“.... என்றபடி பெருமூச்சு விட்டாள்.
   சிவநேசனுக்கு அப்பொழுது தான் மனத்தில் சுறுக்கென்றது. நம் சுய இன்பத்திற்காக மற்றவர்களின் அவசியத்தைக் கூட உணராமல் இருந்துவிட்டோமே.... தன் மனைவியின் பார்வைக்கும் தன் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வருந்தினான்.
  
அருணா செல்வம்.
18.10.2013

உங்களின் பார்வைக்கு!!இந்தப்படம் உங்கள் கண்களுக்கு எப்படி தெரிகிறது?