வணக்கம் நட்புறவுகளே....
போன பதிவில் மருத்துவ
மனையிலிருந்து போன் வந்தது என்று முடித்திருந்தேன் இல்லையா....? அதில் தோழியின்
கணவர் இப்படி சொன்னார்.
“டாக்டரை இப்பொழுது தான்
பார்த்தோம். தலையில் பலமாக அடிபட்டதால் தையல் போட்டிருக்கிறார்கள். இரத்தம்
அதிகமாக வெளியேறி இருக்கிறது. இன்னும் மயக்கம் தெளியவில்லை. மயக்கம் தெளிந்ததும்
தான் எதுவும் சொல்ல முடியும். மற்றபடி உயிருக்கு ஆபத்தில்லை என்று சொன்னார். மதுவிடம்
சொல்லுங்கள். அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.“ என்றார்.
நானும், “சரி“ என்று சொல்லிவிட்டு
“எப்படி விபத்து நடந்ததாம்?“ என்று கேட்டேன்.
“கடையில் மின்சார மாடிபடிகட்டில்
இருவரும் விளையாடிக்கொண்டே ஏறியதால் தவறி விழுந்துவிட்டானாம்.... சரி நான் பிறகு
போன் பண்ணுகிறேன்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
எங்களுக்கு அப்போது தான் ஓரளவிற்கு
சரியாக மூச்சு விட முடிந்தது. நேராக பூஜை அறையை நோக்கி ஓடினேன். அவள் கணவர்
சொன்னதைச் சொன்னேன். உடனே என் தோழி, “நீ நம்பின சாமி உன்னைக் கைவிடலையடி....
பிள்ளையை எப்படியோ காப்பாத்திட்டான்....“ என்று இவள் ஆனந்த கண்ணீருடன் அழ அவளும்
சேர்ந்து அழ....
“போதும் போதும் அழுதது. எழுந்து
முகம் கழுவிட்டு எதையாவது சாப்பிடு.
கைக்குழந்தை இன்னும் கொஞ்ச நேரத்தில் முழிச்சிக்கும். அதுக்கு பால் கொடுக்கனும்.“
என்றாள் மாமி.
ஆனால் மது அதைக் காதில் வாங்கியது
போல் தெரியவில்லை. “என் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் தான் நான்
சாப்பிடுவேன். அதுவரைக்கும் இங்கே தான் இருப்பேன்“ என்று பிடிவாதமாகச் சொல்லி
விட்டாள்.
எங்களுக்கும் என்ன செய்வதென்று
தெரியாமல் நாங்களும் அவளுடன் பூஜை அறையிலேயே அமர்ந்து விட்டோம்.
“சாமி இருந்தா அது பாட்டுக்கு இருக்கப் போவுது.
இவ அதை பிடிச்சிக்கினு தொங்கிக்கினே இருக்கனுமா... கை புள்ளக்காரி. பச்சை உடம்பு.
குழந்தைக்குப் பால் கொடுக்கனும். இப்படி எதுவும் சாப்பிடாமல் இருந்தால் ஒடம்பு
என்னாவறது? குழந்தைக்காவது சாப்பிட வேண்டாமா...?“ என்று இன்னும் ஏதேதோ சொல்லிக்
கொண்டே இருந்தாள் மாமி.
மது அவள் சொல்வது எதையும் காதில்
வாங்காமல் முருகன் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுடன் என் தோழியும்
சேர்ந்து மனம் உருக சொன்னாள். எனக்கு அதெல்லாம் தெரியாது என்றதால் நான் அவர்களுடன்
பேசாமல் அமர்ந்திருந்தேன்.
அரைமணி நேரம் கழிந்திருக்கும்.
போன் வந்தது. வழக்கம் போல் பப்பு போனை எடுத்துவிட்டாள். அவள் பிரென்சு மொழியில்
பேசியதால் மருத்துவமனையிலிருந்து வந்த போன் இல்லை என்று புரிந்ததால் அவள்
பேசிவிட்டு தரட்டும் என்று காத்திருந்தேன். (எனக்கு அப்பொழுது அவ்வளவாகப் பிரென்சு
பேச தெரியாது. ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வேன்)
அவள் போனில், “சாமி இருக்கா இல்லையா
என்று இன்னும் முடிவா தெரியலை. ஆனால் சாமி இருக்கிறமாதிரி தான் தெரியுது“ என்றாள்.
அவள் இப்படி பேசியதைக் கேட்டதும்
எனக்குக் குழப்பம். யாரு அது இந்த நேரத்தில் இப்படி கேள்வி கேட்டு பேசுவது....?
என்று நினைக்கும் போதே.... பப்பு என்னிடம் போனை நீட்டினாள். எனக்குக் குழப்பமாகவும்
தயக்கமாகவும் இருந்ததால்..... “நீயே எதையாவது பேசி போனை வைத்துவிடு“ என்றேன்
சாடையாக பப்புவிடம்.
அவள்.... “இப்போ எதுவும் சொல்ல
முடியாது. நீங்க அப்புறமா போன் பண்ணுங்கள்“ என்று சொல்லிவிட்டு போனை
வைத்துவிட்டாள்.
இந்த போன் அந்த நேரத்தில் குழப்பத்தைத்
தந்தாலும் அதிலேயே மூழ்கி விடும் அளவிற்கு போக நேரமே இல்லை. மூன்று பேருமே சின்ன
சின்ன குழந்தைகள் வைத்திருந்ததால் அவர்களைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.
அதில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் பிள்ளையின் நினைவு வேறு. அன்றைய
பொழுது ஏன்தான் வந்ததோ!! என்றிருந்தது.
இப்படியே ஒருமணி நேரம்
சென்றிருக்கும். மருத்துவமனையி லிருந்து போன் வந்தது. “பையன் விழித்துவிட்டான்.
எதுவும் பயம் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். ரெண்டு மூனு நாளில் முழுவதும்
செக்கப் செய்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிடுவார்களாம். பையன் விழத்ததிலிருந்து
அம்மாவைத் தான் கேட்கிறான். அதனால் மதுவைக் கிளம்பி இருக்கச் சொல்லுங்கள். நான்
வந்து அழைத்துக் கொண்டு போகிறேன்.“ என்றார் மதுவின் கணவர்.
எங்களுக்கு அப்பொழுது தான்
நிம்மதியான மூச்சே வந்தது.
சொன்னவர் சற்று நேரத்திலேயே
வந்துவிடவும்... என்னை வீட்டிலேயே குழந்தைகளைக் கவனிக்கச் சொல்லிவிட்டு மது, மாமி,
தோழி மூவரும் மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள்.
போகும் போது பப்பு மாமியை வழி
மறைத்துக் கேட்டாள்.
“பாட்டி இப்பவாவது சொல்லு. சாமி
இருக்கா இல்லையா? அவர் திரும்பவும் போன் பண்ணுகிறேன் என்றார். சொல்லிட்டு போ.“
என்றாள்.
மாமி நின்று பப்புவைப்
புன்சிரிப்புடன் பார்த்தார். தோழி தன் குழந்தையை ஒரு முறைமுறைத்து “உள்ளே போ.
எந்தெந்த நேரத்துல எது கேட்கிறதுன்னு தெரியாமல்.... போ. போய் விளையாடு“ என்று
கோபமாகச் சொன்னாள்.
ஆனால் பப்பு மாமியையே பார்த்தாள்.
மாமி சொன்னாள் “சாமி இல்லன்னு யாரு கண்ணு சொன்னது? சாமி இருக்குது. இப்போ ஆஸ்பத்திரிக்குப்
போய் இருக்குது. யாராவது போன் பண்ணி கேட்டாள் சாமி ஆஸ்பத்திரிக்கு போயிருக்குன்னு
சொல்லு“ என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
இதைக்
கேட்டதும் நான் பப்புவைப் பார்க்க, பப்பு என்னைப் பார்க்க... ஐயோ.... ஏதாவது
லூசுங்கக் கிட்ட மாட்டிக்கிட்டோமா என்று தலையைப் பிச்சிக்கலாம் போல இருந்தது
எனக்கு.
கடைசியில் மறுநாள் தான் தெரிந்தது. மாமியின்
கணவர் பெயர் நாராயண சாமியாம். அதைச் சுறுக்கி அவரின் நண்பர்கள் “சாமி“ என்றே
கூப்பிடுவார்களாம்.
போனில்
பேசியவர் நண்பர் “சாமி“யைக் கேட்க.... நாங்கள் இருந்த தருவாயில் “காட் சாமி“யை
நினைக்க.... பையனுக்கு விபத்து என்றதும் “சாமி“ இல்லை என்று சொன்ன மாமி, அவனுக்கு
ஒன்றும் இல்லை என்றதும்.... “சாமி“ இருக்கார் என்று சொன்னது, அதுவும் ஆஸ்பிடலுக்குப்
போயிருக்கிறார்.... என்று சொன்னதும்..... இன்று நினைத்தாலும் என்னால் சிரிப்பை
அடக்க முடிவதில்லை.
அருணா செல்வம்
04.07.2014
