நட்புறவுகளுக்கு வணக்கம்.
இந்தப் பதிவு “லிங்கா“ பட
விமர்சனம் இல்லை. என் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் மட்டுமே சொல்லும் பதிவு.
அவ்வளவே!
சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றால்
எல்லோருக்கும் இருக்கும் ஆவலைப்போல எனக்கும் படம் பார்க்க ஆவல் உண்டு. ரஜினி படம்
என்றால் மனத்தில் நிற்கும் பஞ்ச் டைலாக்குகள் பிடிக்கும். (அதை மற்றவர்கள் தான்
எழுதினார்கள் என்பது தெரிந்திருந்தும்...)
படத்தில் பிரமாண்ட காட்சிகள் இருக்கும்.
எந்திரன், சிவாஜி.... போன்று கதையில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள்
எனக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே இருப்பது தான்.
லிங்கா படம் இந்த மூன்று நாட்களில்
100 கோடி வசுலைத் தாண்டி விட்டது என்ற செய்தி கூட படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியது.
தவிர படம் மூன்று மணி நேரமாம். டைட்டானிக் போல அலுப்பில்லாமல் சென்றது என்ற விமர்சனங்கள்
மேலும் மேலும் ஆவலைத் தூண்டியது.
அதனால்....
நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினி
நடித்த லிங்கா படத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி நேர படம். (படம் மூன்று மணி நேரம்
ஓடியது மக்களுக்கு அலுப்பு வந்ததால் படத்தில் வேண்டாத 26 நிமிட காட்சிகளைக் குறைத்துள்ளார்களாம்)
கதை இன்றைய நாளிலும், இன்றிலிருந்து
எழுபது வருடம் ஆதாவது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு மூன்று நான்கு
வருடங்களுக்கு முன்பும் நடந்த நிகழ்ச்சியையும் படமாக எடுத்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் முல்லை பெரியார்
அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையின் தழுவல் தான் இந்த லிங்கா படத்தின் பழங்கால
கதையமைப்பு.
கதையில் இன்றைய நிலையில் நடக்கும்
நிகழ்ச்சிகளை நயம்படவும் நகைச்சுவையாகவும் சொல்லி இருந்தாலும் முற்காலத்தில்
நடந்தக் கதையைச் சொல்லிச் சென்ற விதம் சொதப்பல் தான். கே.எஸ் ரவிக்குமாரின்
இயக்கமா இந்தப்படம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்ற வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவைப் பல
இடங்களில் பாராட்டலாம். ஆனால் கிராஃபிஸ் காட்சிகளில் கோட்டை விட்டுவிட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தியா.... பாடல் மனத்தை
வருடுகிறது. மற்றப்பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் தான் பிடிப்பு ஏற்படும்
என்ற அளவிலேயே உள்ளது.
சூப்பர் ஸ்டார் கொடுத்த வேலையை
மிகவும் நன்றாக செய்திருக்கிறார். அவர் நடிப்பில் குறையே சொல்ல முடியாது. நடிப்பு,
நடனம், அவரின் ஸ்டெய்ல்.... எதிலும் அவரிடம் குறைகாண முடியவில்லை என்பது படத்தின்
முக்கிய பிளஸ் பாயிண்ட்.
கதாநாயகிகள் அனுஷ்கா, சோனாக் ஷி
இருவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். சோனாக் ஷியை இன்னும் கொஞ்சம் அழகாக
காட்டியிருக்கலாம்.
இடையிடையே ரஜினி சந்தானத்தின்
நகைச்சுவை படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.
இதிலிருந்து நான் சொல்ல வருவது
என்னவென்றால், ரஜினி ரசிகர்களோ, ரசிகராக இல்லாதவரோ..... சூப்பர் ஸ்டாரின் படம்
என்ற எதிர்ப்பார்ப்புடன் படம் பார்க்க வந்தவர்களுக்குப் படம் முழு திருப்பியைத் தந்திருக்குமா
என்பது சந்தேகமே.
அருணா செல்வம்
16.12.0214


