சனி, 24 அக்டோபர், 2020

கலைமகளே அருள வேண்டும்!

 


பெற்றெடுத்த தாயே என்றும்
    பெரும்பசியைப் போக்கி நிற்பாள்!
பற்றிருக்கும் தந்தை வாழ்வின்
    படியுயரும் வழியைச் சொல்வார்!
சுற்றமுடன் செல்லும் பாதை
   சுமையின்றி அறிந்தி ருக்கக்
கற்றறியும் கல்வி தன்னைக்
   கலைமகளே அருள வேண்டும்!
 
நிலையான வாழ்வு வாழ
    நெஞ்சத்தில் உறுதி வேண்டும்!
சிலைபோன்ற அழகு கூடச்
    சிறப்பான உழைப்பு வேண்டும்!
விலையில்லாச் செல்வம் பொங்க
    வினையில்லாக் கல்வி வேண்டும்!
கலையாத இவைகள் சேரக்
    கலைமகளின் அருளே வேண்டும்!
 
பொன்னோடு பொருளி ருந்தும்
    புகழ்பெருமை வீரங் கொண்டும்
அன்போடு துணையி ருந்தும்
    அழகான மழலைக் கண்டும்
இன்மொழியைக் கல்லா வாழ்வு
    இனிக்காத கரும்பு போலே!
கன்னியவள் நெஞ்சி லேறக்
    கலைமகளே அருள வேண்டும்!
 
கொக்கென்று பதவி கண்டு
    கொக்கரித்து நிமிர்ந்து நிற்பார்!
மக்காகப் படித்துப் பேசி
    மற்றவரைச் சிரிக்க வைப்பார்!
செக்கொன்றைச் சுற்றும் மாடாய்ச்
    செகத்தினையும் சுற்ற வைப்பார்!
சொக்கவைக்கும் கல்வி யற்றால்
    சுடரிருந்தும் குருடன் கண்ணே!
 
ஒருவிளக்கின் சுடரை ஏற்ற
    ஓராயி ரவழிக் காட்டும்!
அருட்மறையின் பொருளை எல்லாம்
    அறிவுருத்தி உயர்த்த நோக்கும்,
உருமாறும் வாழ்வில் நாளும்
    உயர்ந்திடவே தேடி வாழும்
கருவிருட்டில் என்னைக் காக்க
    கலைமகளைப் பணிந்தேன் நானே!

.
பாவலர் அருணா செல்வம்
24.10.2020

வியாழன், 22 அக்டோபர், 2020

ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா

 


இயற்கை!
.
மலர்தரும்மணம் மகிழ்வினைத்தரும்!
நிலம்தரும்வளம் உயிருறும்வரம்!
வளர்பிறைஎழில் இரவினித்திடும்!
குளம்தரும்குளிர் மனமுவந்திடும்!
கடல்தரும்பொருள் பணம்கொடுத்திடும்!
தடம்தரும்வழி இடம்அடைந்திடும்!
மொழிதரும்இசை புகழொளித்திடும்!
பொழிந்திடும்மழை உலகுயர்த்திடும்!
இங்கு
இயற்கை என்றும் இயல்பாய் இருக்கிறது!
செயற்கை நாளும் செயலை மறைக்கிறது!
இறைவன் எழுதி வைத்தான்
குறையே இல்லை! நிறைவாய் நெஞ்சே!
.
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

சிறுகதை, “வெவ்வேறு மனம்“,



வெவ்வேறு மனம் ! 

 

 வேலைவிட்டு வந்ததிலிருந்து தன் கணவன் ஏதோ கவலையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்தது போல் தெரிந்தது கோமதிக்கு.

    எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டாரே.... ஏன்...? இன்று என்னவாகியது...? யோசனையுடன் அருகில் சென்று மெதுவாக விசாரித்தாள். தொடக்கத்தில் ஒன்றுமில்லைஎன்றவர், அவள் திரும்பவும் கேட்க, சற்றுக் கோபத்துடனும் கவலையுடனும் சொன்னார்.

    “இன்னைக்கு எப்பொழுதும் வர்ற பஸ்சுல தான் வந்தேன். நான் ரெண்டு பேர் உட்கார்ற சீட்டுல உட்கார்ந்து இருந்தேன். ஒரு ஸ்டாப்புல ஒரு பொண்ணும் ஒரு ஆளும் ஏறினார்கள். அவங்களுக்கு உட்கார இடம் இல்லை. அந்தப் பொண்ணுக்கு நம்ம பொண்ணோட வயசு தான் இருக்கும். பார்க்கவும் நம்ம பொண்ணு மாதிரி தான் இருந்தாள். வயிறு கொஞ்சம் உப்புன மாதிரி.... கர்ப்பமாக இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.

   அதுக்கு அடுத்த ஸ்டாப்புல என் பக்கத்துல இருந்த ஆள் இறங்கிட்டாரு. அவர் இறங்கியதும், அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே நான் ஜன்னலோரம் நன்றாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் உட்கார இடம் கொடுத்தேன்.

   ஆனால் அவள் உட்காரவில்லை. நானும், “வந்து உட்காரும்மா...என்றேன். அவள் திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். அவனும் போய் உட்காருஎன்றான். ஆனால் அவள் உட்காராமல் என்னைப் பார்த்துப் பரவாயில்லைங்கஎன்று சொல்லி விட்டு நின்று கொண்டே வந்தாள்.

    எனக்குத் தான் என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அடுத்த ஸ்டாப் வந்தபோது எழுந்து நின்று கொண்டேன். பிறகு அவளும் அவனும் அமர்ந்து கொண்டார்கள். அதே சமயம் அவர்களுக்குப் பின்பிருந்த சீட்டு காலியாகவும் நான் அதில் அமர்ந்து கொண்டேன்.

    அப்போ அந்தப் பெண் அவள் கணவனிடம் சொன்னாள்... என்னங்க நீங்க. அந்த ஆள் இடம் விட்டதும் நீங்களும் உடனே என்னை உட்கார சொல்லிட்டீங்க. என்றாள்.

    ஏன் அதனால் என்ன...? அவன் கேட்டான்

    அதனால என்னவா...? கேட்க மாட்டீங்க. இப்போதெல்லாம் சின்ன பையன்களைக் கூட நம்பிடலாம். இந்த மாதிரி கிழடுகளை நம்பவே கூடாதுங்க... என்றாள். எனக்கு அதிலிருந்து மனசு என்னவோ போல் ஆகிவிட்டது. நான் என் பொண்ணு மாதிரி நினைச்சேன். சே.... ஏன் தான் பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு கோண புத்தி வருதோ...தலையில் கைவைத்த படி கவலையாகச் சொன்னார் சிவராமன்.

   “சரி விடுங்க. அவள் உங்களோட தோற்றத்தைப் பார்த்துப் பயந்திருப்பாள். அவளுக்கு உங்களோட வயசு தெரியாது இல்லையா...என்று சொல்லி விட்டு சிரித்த கோமதி அந்த சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினாள்.

 

சற்று நேரத்தில்

   கல்லூரி போய்விட்டு வந்த விமலா கோபமாக புத்தகத்தை வைத்துவிட்டு அமர்ந்தாள். என்னம்மா... என்னவாச்சி?“ அவளின் தலையைத் தடவி விசாரித்தார் சிவராமன்.

   “பாருங்கப்பா.... இன்னைக்குப் பஸ்சுல இடம் இல்லைன்னு ஒரு வயசானவர் பக்கத்துல போய் உட்காந்தேன். ஆனால் அந்த கிழம் பண்ணின அதம் இருக்குதே.... சே...கோபமாக முகம்சுளித்தாள். உடனே எழுந்து,  நல்லா நாலுபேருக்குத் தெரியிற மாதிரி திட்டுறது தானே...கோமதி கோபமாகச் சொன்னாள்.

    “இல்லம்மா... அவரைப் பார்க்க நம்ம அப்பா மாதிரி தெரிந்தார். அவரை எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்த பிடிக்கல. பேசாம எழுந்து நின்னுக்கினே வந்தேன்என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள்.

   சிவராமன் மனைவியைப் பார்த்தார். கோமதி அவரை அர்த்தத்துடன் பார்த்தாள். அவர் புரிந்து தலையாட்டினார்!

 

   ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு மனம் தான். அது ஒவ்வொரு நிகழ்வில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகட்டுகிறது.

 .

அருணா செல்வம்.


திங்கள், 19 அக்டோபர், 2020

தென்றலே ஏன்வந்தாய் செப்பு?

 


ஊடலின்றி அன்புமிகுந்(து) ஊற இருந்தவளைக்
கூடலுடன் கோமகன் கொஞ்சாமல் - வாடவிட்டுப்
பொன்பொருள் கொண்டுவரப் போயிருக்கும் வேளையில்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு?
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2020

காத்திருங்கள் காதலிக்கிறேன், சிறுகதை,

வெள்ளி, 16 அக்டோபர், 2020

என்னை ஏதோ செய்துவிட்டாள்!

 




.
பட்டப் படிப்பே உயர்வென்று
படிப்பை மட்டும் பார்த்திருந்தேன்!
பட்டித் தொட்டி படம்பார்க்கும்
பாழும் மனத்தை அடக்கிவிட்டேன்!
 
சொட்டுத் தேனாய் வந்துநின்றாள்
சொக்கிப் போயே மாறிவிட்டேன்!
கட்டுக் கடங்கா ஆசையுடன்
கனவு உலகில் மிதக்கின்றேன்!
 
கண்ணுள் புகுந்து கொண்டாளோ
காணும் இடத்தில் தெரிகின்றாள்!
மண்ணில் எதையும் நான்மறக்க
என்னை ஏதோ செய்துவிட்டாள்!
.
 பாவலர் அருணா செல்வம்

திங்கள், 12 அக்டோபர், 2020

காதல் வந்தது பொய்மையோ!

 


கண்கள் மின்னிடும் கன்னிப் பார்வையில்
    காந்த சக்திதான் உள்ளதோ!
எண்ணம் துள்ளிட ஏக்கம் சேர்ந்திட
    இன்னல் பூத்துடன் ஈர்க்குதே!
விண்ணில் சுற்றிடும் வெப்பச் சூரியன்
    விஞ்சிப் பார்வையில் வந்ததோ!
மண்ணில் என்னுடல் மங்கித் தொங்கிட
    வண்ணம் பெற்றுடன் வேர்க்குதே!
 
கன்னம் என்பது கன்னல் சாற்றினில்
    கட்டிப் போட்டஓர் அங்கமோ!
மின்னும் பற்களில் மேன்மை வெண்ணிலா
    மெச்சி அவ்விடம் நின்றதோ!
தென்னங் கீற்றெனத் தீண்டுங் கூந்தலில்
    திங்கள் பூவெனப் பூத்ததோ!
பொன்னில் தட்டிய பொத்தல் பொற்சிலை
    பொங்கிப் பொன்னுடல் பெற்றதோ!
 
சுற்றி வந்தவள் சுற்ற வைத்தது
    சொக்கும் கட்டுடல் பெற்றதோ!
உற்று நோக்கிய ஊழ்மை என்னிலை
    உந்தித் தள்ளிய உச்சமோ!
முற்றும் போக்கிய முத்தி யற்றதால்
   முந்தி நின்றதே உண்மையோ!
கற்றுப் பெற்றதைக் காற்றில் விட்டிடக்
   காதல் வந்தது பொய்மையோ!
.
பாவலர் அருணா செல்வம்
12.10.2020

SIRUKATHAI, Short story, ஆளுக்கொரு நீதி, சிறுகதை, arouna selvame, விதவை...

செவ்வாய், 6 அக்டோபர், 2020

பஞ்ச பங்கி! (ஒன்றில் ஐந்து)

 


தமிழே!
 
ஆசிரியப்பா!
பெருங்கலை என்றே பிணைந்த தமிழின்
அருங்க லையாள்! வருங்கலை வாழ்த்தும்
தருங்கலை என்னும் வளமு டையாள்!
பெரும்பகை போக்கும் பெருவுளம் கொண்ட
குலமு டையாள்! திருவென இன்ப
நலமி சைபாள் செம்மைத் தமிழ்மகளே!
இனிய சொற்கள் இனிமை பயக்கும்!
கனியின் சுவையாய்க் கருத்தை இழுக்கும்!
தனியாய் நின்று தழைக்கும் அழகாய்
வனிதம் கொண்ட வளமுடை தமிழே!
அணியாம் இலக்கணம் ஆண்ட தமிழாள்
துணிவைத் தருவாள்! தொடர்ந்து படிக்கும்
மனத்தில் பணிவை வளர்த்து, வெடிக்கும்
சினத்தை வெறுத்து, முடிக்கும் செயலில்
நினைவைச் செலுத்த நாளும் உயர்வோம்!
பனைபோல் உயர்ந்து! பண்ணின் அழகில்
மனத்தைப் பதிக்க மண்ணும் அழகாம்
தினமும் மதியில் திங்கள் ஒளியாம்!
சிறந்த தெளிவு தங்கிச் சிறக்கும்!
பறக்கும் தமிழாய்ப் பாடித் திரியும்!
புலவர் பாட்டில் கூடிப் பொலியும்!
புலமை கொஞ்சும் தமிழே உன்னைப்
படிக்க உள்ளம் படரும்! மின்னும்
படியாய் எண்ணம் மிளிரும்! நன்மை
இன்மை காட்டும் இனியவளே
என்றும் என்னுள் இருப்பாய் இசைந்தே!
 
கட்டளைக் கலித்துறை!
 
பெருங்கலை என்றே பிணைந்த தமிழின் அருங்கலையாள்!
வருங்கலை வாழ்த்தும் தருங்கலை என்னும் வளமுடையாள்!
பெரும்பகை போக்கும் பெருவுளம் கொண்ட குலமுடையாள்!
திருவென இன்ப நலமிசைப்பாள் செம்மைத் தமிழ்மகளே!
 
கலிவிருத்தம்!
இனிய சொற்கள் இனிமை பயக்கும்!
கனியின் சுவையாய்க் கருத்தை இழுக்கும்!
தனியாய் நின்று தழைக்கும் அழகாய்
வனிதம் கொண்ட வளமுடை தமிழே!
 
குறள் வெண்பா!
அணியாம் இலக்கணம் ஆண்ட தமிழாள்
துணிவைத் தருவாள் தொடர்ந்து!
 
நேரிசை வெண்பா!
படிக்கும் மனத்தில் பணிவை வளர்த்து
வெடிக்கும் சினத்தை வெறுத்துமுடிக்கும்
செயலில் நினைவைச் செலுத்த நாளும்
உயர்வோம் பனைபோல் உயர்ந்து!
 
வஞ்சிப்பா!
பண்ணினழகில் மனத்தைப்பதிக்க
மண்ணுமழகாம்! தினமும்மதியில்
திங்களொளியாம்! சிறந்ததெளிவு
தங்கிச்சிறக்கும்! பறக்கும்தமிழாய்ப்
பாடித்திரியும்! புலவர்பாட்டில்
கூடிப்பொலியும்! புலமைகொஞ்சும்
தமிழே
உன்னைப் படிக்க உள்ளம் படரும்
மின்னும் படியாய் மிளிரும் எண்ணம்!
நன்மை இன்மை காட்டும் இனியவளே
என்றும் என்னுள் இருப்பாய் இசைந்தே!
-
பாவலர் அருணா செல்வம்.
.
(பஞ்சபங்கி என்பது ஒரு பொருள் குறித்த ஒரு பாடலை ஐந்து வேறு வகையான பாடலாக பொருள் மாறாமல் பகுத்துப் பாடப் படுவதாகும். பஞ்ச என்பது ஐந்து என்றும் பங்கி என்பது பகுத்தல் என்றும் பொருளாகும்.)