புதன், 23 மே, 2012

தெய்வீகம் (சிறுகதை)

        
  த்திரக் கோசமங்கையூரில் வடக்கு நோக்கி அமர்ந்த வாராகி மங்கை அம்மன் ஆலயத் திருவிளக்கு பூசை முடியும் வரை கோவில் காண்டாமணி கணீர் கணீரென உள்ளம் அதிரும் ஓசையில் அடித்துக் கொண்டே இருந்தது.
   கோச்செங்கணன் பூசைமுடிந்ததும் அர்;ச்சகர்; காட்டிய ஆராத்தித் தீபத்தைக் கண்களில் தொட்டு ஒற்றிக் கொண்டான்.
   எப்பொழுதும் போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாராகி மங்கை அம்மன் சிலையை பார்த்த வண்ணம் நின்றிருந்த நந்திவர்மச் சோழனின் இரண்டாம் மனைவி மங்கள நாயகியிடம் கொடுத்தக் குங்குமத்தை அவள் கோச்செங்கணன் நெற்றியிலிட்டாள்.
   மங்கள நாயகியின் சிவந்த குமுதமலர் முகத்தில் துள்ளிப் பாயும் காயலானக் கண்கள் இந்த கோவிலுக்கு வந்தால் மட்டும் வாடிவிடும். எதனால் இப்படி..?
   இத்தனை வருடங்களாக கவனித்தும் அரசியிடம் நேருக்கு நேராக நின்று கேள்விகேட்க முடியாத பணிப்பெண் கோமளம் ஒரு பெருமூச்சியுடன் தேரில் ஏறினாள். தேர் அரண்மனையை நோக்கிப் பறந்தது.

   கோமளம்.. கோச்செங்கணன் எங்கே..?” மங்கள நாயகியின் குரலில் அதிகாரம் இருந்தாலும் ஓசையோ மனத்தினை வருடும் தென்றலாய் இனித்தது. கோமளம் நிமிர்ந்து அரசியின் முகத்தைப் பார்த்தாள். கவலையைக் கண்ணீரால் கழுவியக் கண்களோ..! அதனால் தான் காய்ந்து இருக்கிறதோ..!
   “கோமளம்.. கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் என்னை ஏன் இப்படி பார்க்கிறாய்?”
    அதட்டலில் சுயஉணர்வுக்கு வந்தவள் “மன்னிக்க வேண்டும் மகாராணி. இளவரசர் நண்பர்களுடன் பூங்காவில் இருக்கிறார்’. என்று சொல்லிவிட்டு “மகாராணி எனக்கு ஒரு சிறு சந்தேகம.; கேட்கலாமா?’
    தைரியத்தை வரவழைத்துக் கொண்டாலும் மிகவும் பணிவுடன் கேட்டாள்.
     மங்கள நாயகி பதிலெதுவும் சொல்லவில்லை. மௌனம் சம்மதம் என்ற பொருளறிந்த கோமளம் கேட்டாள்.
    ‘மகாராணி நம் அரசரின் முதல் மனைவி குழந்தை பிறக்கும் நாழிகை நல்லநாழிகையாக இருக்க வேண்டுமென்று பிரசவ நேரத்தில் அரைநாழிகை தலைக்கீழாக இருந்து பின் மகனை இன்றதும் உயிர் துறந்தார். அந்த மகாதேவியை நமது மாமன்னர் வாராகி மங்கை அம்மனாக சிலைவடித்து அனைவரும் தரிசித்து அருள் பெறும் படி கோவில் அமைத்துள்ளார்.
    நீங்களும் நமது இளவரசரும் நாள்தவராமல் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகிறீர்கள். ஆனால் நான் பார்த்தவரையில் நீங்கள் ஒருநாள் கூட அம்மனைக் கைகூப்பி வணங்கியது கிடையாது. இதற்கு காரணம் என்னவென்று நான் அறியலாமா?’
    அவளை ஊன்றிகவனித்த மங்கள நாயகி சோகம் ததும்பும் புன்னகையொன்றை உதிர்த்துவிட்டு ‘போய் மற்ற வேலையைப் பார்’ என்று மட்டும் சொன்னாள்.
    பதில் அறியாத வேதனையில் “அந்த கோவில் தெய்வம் என்னயிருந்தாலும் இவளின் மாற்றாள் தானே.. அதனால் தான் இந்த அலட்சியமோ… இருக்கலாம்..’ தன் சிற்றறிவுக்கு எட்டியச் செய்தியுடன் தன் வேலையைப் பார்க்க நடந்தாள் கோமளம்.
   அவள் மனத்தை என்றும் உருத்திக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியைக் கோமளம் இன்று கிளறிவிட்டுச் சென்றிருந்தாள்.    காற்றில் அசையும் பூங்கொடியாக நடந்த வந்து தந்தக்கட்டிலில் அமர்ந்து சாய்ந்தாள் மங்கள நாயகி. கண்களை மூடிட காட்சிகள் தன் கடமையைச் செய்தன.

   கலும் இரவும் உரசிக் கொள்ளும் அந்திசந்தி பொழுது. அதிலும் கார்காலக் குளிருடன் சேர்ந்து மழையும் பெய்துக் கொண்டு இருந்ததால் ஒவ்வோர் மனங்களிலும் இதமான இன்பம் தவழும் வேலையில் அவன் கண்களில் அவள் பட்டாள்!
   மழையில் நனைந்த ஆடை உடலில் ஒட்டிவிட உடையின்றி நிற்கும் செம்பொன்னில் வார்த்த தங்க சிலையென நின்றவளைக் கண்டதும் தான் அரசர் அழைப்பை ஏற்று அரண்மனைக்குத் தானே வந்தோம்…? தவறிபோய் தேவலோகத்திற்கு வந்துவிட்டோமா…? என்ற சந்தேகம் பிறந்தது சிருட்டியனுக்கு. யோசனையுடன் அவளை உற்று நோக்கினான்.
   மேகம் உண்டாக்கிய மின்னலில் இருந்து பிறந்து பூமியில் வந்திறங்கிய மங்கையோ.. இவள் பெண் தானோ.. அல்லது பெண்போன்றிருக்கும் மழையில் நனைந்த வான்முகிலோ..! யார் இவள்..?
     அவன் தன்னை பார்வையால் விழுங்குவதைக் கண்ட அவள் “யார் நீங்கள்? சற்று ஒதுங்கி வழிவிடுங்கள்.” என்றாள் அதிகாரமாக.
     அவளழகில் அவன் மனம் மூடிக்கொள்ள வழியைமட்டும் ஒதுங்கி விட்டான். அவள் போக.. பின்புறம்.. அசைந்து போகும் தேராக… ஆகா என்ன அழகு!! இதுவரை நாம் இப்படி ஒர் அழகியைப் பார்த்ததில்லையே.. அவன் மனம் அவனிடம் இல்லை!
    ‘சிற்பியே உங்களை அரசர் அழைக்கிறார்.” சேவகன் சொல்ல மனத்தை அடக்கிக் கடமைக்குக் கைகட்டினான்.


   

 கிண்ணத்தில் இருந்த மதுவைச் சுவைக்காமல் மங்கள நாயகியின் இதழில் தங்கியிருக்கும் மதுவைச் சுவைக்கும் எண்ணத்தில் நந்திவர்மன் பார்க்க அவள் புன்னகையுடன் தலைக்குனிந்தாள்;.
    தலைக்குனிந்த தாமரையை நிமிர்த்தினான். ‘மங்களா உன்னைப் பிரிந்து இருக்கும் நேரம் நரகம் தான். ஆனால் அரசனுக்கென்ற கடமை இருக்கிறதே. என்ன செய்வது? நீ விரும்பியது போல்; கருவினில் அமர்ந்தாள் கோவில் வேலை நான் திரும்பும் தினத்துக்குள் முடிந்துவிடுமென்று நினைக்கிறேன். நம் தலைமைச் சிற்பி உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் மங்கையின் திருஉருவ சிலை செய்யும் வேலையை முடித்திருப்பார்”.  பெருமூச்சுடன் பேச்சைச் சற்று நிறுத்தினார்.
    “அதற்கு நாம் என்ன செய்வது மன்னா.. நாட்டில் வேறு சிற்பியே இல்லையா..?”
    ‘ஏனில்லை? அவர் மாணவன் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவன் அரசியாரைப் பார்த்ததில்லையாம். அதனால் யாராவது முன்மாதிரியாக அமர்ந்தால் தான் அந்த சிலையை செதுக்கமுடியும் என்றான்.”
   ‘அதற்கென்ன.. யாராவது ஓர் அழகியை மாதிரிக்கு அமர்த்தலாம் அல்லவா..”
   ‘அமர்த்தலாம் தான். ஆனால் அவன் நேற்றிரவு நம் அரண்மனையில் ஒரு பணிப்பெண்ணைப் பார்த்தானாம். அவளது அழகும் உடல்வாகும் அவனைச் சிலைவடிக்கத் தூண்டியதாம். அந்த பெண்ணை முன் மாதிரியாக அமர்த்தினால் அவன் அந்த சிற்பத்தை நன்கு செய்துத் தருகிறேன் என்றான்.”
   இளைய ராணியின் மனத்தில் நேற்று தன்னை அதிசயமாகப் பார்த்த அந்த இளைஞன் கண்முன் தெரிந்தான். அவன்தான் மன்னர் அழைத்த சிற்பி என்பதைப் பணிப்பெண் சொல்ல அறிந்திருந்தாள.;
   இந்த உடல்வாகு ஒரு சிற்பியைச் சிலைவடிக்கத் தூண்டியதா..!! மனத்தை இலேசாக கர்வமேகம் மூடியது. நேற்று அந்த சிற்பி பார்த்தப் பார்வை அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தி இருந்தது. அதனால் தான் அவன் யாரென்று விசாரித்தாள்.
   ஆனால் அழகு என்பது அந்த அழகைத் தாங்கிய உடலுக்கோ மனத்திற்கோ சொந்தமில்லை. அது அவளைக் கொண்டவனுக்கு மட்டுமே மணமானப் பின் சொந்தமாகி விடுகிறது. அடுத்தவர் அவள் அழகை பார்க்கக் கூடாது. ரசிக்கக் கூடாது. புகழக் கூடாது. இது தானே பண்பாடு.
   பண்பாட்டை மீறி நாம் நடக்கிறோமா..?
   அமைதியாக யோசனையில் ஆழ்ந்திருந்த மனைவியைப் பார்த்தார் மன்னர். “என்ன மங்கள நாயகி. யார் அந்த அழகி என்று யோசிக்கிறாயா..? நல்ல வேலை. அந்தச் சிற்பி உன்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை தான் மாதிரியாக அமர்த்த வேண்டுமென்று என்னிடமே கேட்டிருப்பான். உன்னைவிட அழகி இந்த அரண்மனையில் யார் இருக்கிறார்கள்?”
   இளையராணி முத்தாக நகையொன்றை விடுத்துவிட்டு கேட்டாள்.
   ‘அப்படி கேட்டிருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீங்கள் மன்னா..”
   ‘நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் அவனின் இரண்டு கட்டைவிரல்களை மட்டும் எடுத்துவிடுவேன்.’’ சொல்லும் பொழுது குரலிலே அழுத்தம் தெரிந்தது.
   புரிந்து கொண்டாள். கலையென்பது கற்பனையில் மட்டுமே கண்டு களிப்புற்று மகிழ்வது. கலைஞன் காணும் கனவுகளில் தெரியும் காட்சியாகத்தான் இருக்க முடியும். உண்மை ஒருநாளும் கலையாகாது. புரிந்ததும் சொன்னாள்.
    “மன்னா நான் நேற்றே விசாரித்தேன். அந்தப் பெண் மணமானவள். சிலைவடிக்க உதவுவாளா என்று தெரியவில்லை”
   “ஏன் கலைஞன் கடவுளின் அம்சம் அல்லவா.. அவருக்கு உதவ தயங்குவதா?” மன்னன் கேட்க மங்கள நாயகி மனத்திற்குள் சிரித்தாள்.
   “இருந்தாலும் அவன் ஆண்மகன் அல்லவா? இவளும் அடுத்தவனின் உரிமை அல்லவா…?’
   பேசிக்கொண்டு இருக்கும் போழுதே “மன்னா.. வணங்குகிறேன். உங்களைக் காண ஒற்றன் வந்துள்ளான்”. சேவகன் சொன்ன செய்தியில் மன்னன் மனம் பதிய
   “மங்களா.. கோவில் திருப்பணி வேலையை உன்பொருப்பில் விட்டுச் செல்கிறேன். நீயே பார்த்துச் செய். நான் அந்த சிம்ம விஷ்ணு பல்லவனைத் தோற்கடித்து விரட்டியடித்து விட்டு வரும் பொழுது கோவில் வேலை முற்று பெற்றிருக்க வேண்டும். நான் வருகிறேன்.” அன்பு மனைவியுடன் ஆனந்தகளிப்பாட இருந்த மன்னன் கோபத்துடன் போர் களிப்பாடக் கிளம்பினான்.

   “மகாராணி அந்தச் சிற்பி… மாமன்னர் தன் இரு கைகளையும் வெட்டி எடுத்தாலும் பரவாயில்லை. தான் பார்த்தப் பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண்ணைச் சிலைவடிக்க மாட்டேனென்று சொல்கிறார். ஆனால் யார் அந்த பெண் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லையே...’ என்றாள் பணிப்பெண்.
   “சரி நீங்கள் போங்கள்.’ உத்தரவு விட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பினாள்.
   கோவில் கட்டுமான வேலை நடந்து கொண்டு இருந்தது. மாதிரிப் பணிசெய்யும் குன்றுகளில் அமைந்த மாடக்கோவிலுக்குச் சென்றாள.; அவள் எதிர் பார்த்தது போலவே அவன் வலையங் கோட்டை ரதங்களை உளி கொண்டு செதுக்கிக் கொண்டு இருந்தான்.


    இவளைக் கண்டதும் ஆனந்த வெள்ளம் பெருக ஓடி வந்தான் அருகில். ‘பேரழிகியே வா வா. நீ எப்படியும் வருவாய் என்று எனக்குத் தெரியும். நம் அரசியார் எப்படியும் உன்னை இங்கு அனுப்புவார் என்று அறிந்தே உனக்காகக் காத்திருந்தேன். வா.. உன்னை செதுக்கவே என் உளி காத்துக்கொண்டு இருக்கிறது.”
    அவன் ஆசையுடன் அழைத்த அழைப்பு அவளை பாதித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “சிற்பியே நான் மணமானவள் என்று உமக்குத் தெரியும் அல்லவா..?”
    “தெரியும். நான் வணங்கும் பராசக்தியும் மணமானவள் தான். நான் அவளை சிற்பமாக செதுக்கவில்லையா..? நான் ஒரு கலைஞன். என் பார்வையில் அழகு மட்டும் தான் தெரியும். அதை அடைய நான் ஆசைப்படக் கூடாது என்பதும் எனக்குத் தெரியும். தயங்காதே பெண்ணே! என் கை உன்மீது படாது. வா வந்து இந்த இடத்தில் உட்கார்”
    “சிற்பியே நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் நான் மணமானவள் என்பது என்மனத்தில் நன்கு படிந்துள்ளது. வேரோர் ஆண் என்உடம்பை உற்று பார்ப்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் இந்த செயலுக்கு நான் உடன்பட மாட்டேன். நீங்கள் அரசர் உத்தரவின்படி வேரொருப் பெண்ணை அவசியம் சிலையாக வடிக்கும்படி சொல்லிவிட்டு போகத்தான் நானே நேரில் வந்தேன்;. வருகிறேன்.’ கிளம்பினள்.
    “நில் பெண்ணே! நான் ஒரு கலைஞன். நீங்கள் போடும் உத்தரவில் எல்லாம் என்னால் சிலைவடிக்க முடியாது. பெண்ணே… தயவுசெய்து உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன். கலையைக் கலையாக மட்டும் பார். உன்சிலை உருவாகி விட்டால் எனக்கும் புகழ் கிடைக்கும.; என்னால் உன் உருவம் உலகம் உள்ள அளவில் மட்டும் இருக்கும். சற்று யோசித்து பார். இதை நான் எனக்காகக் கேட்கவில்லை. என் உள்ளிருக்கும் திறமையை இவ்வுலகிற்கு காட்டுவதற்காகவும் தான் கேட்கிறேன். தயவு காட்டு பெண்ணே.” இரு கைகூப்பி நின்றான்.
    மங்கள நாயகி யோசித்தாள். இவன் சொல்வதும் உண்மை தான். இந்த சிற்பி தன் உருவச்சிலையைச் செதுக்கினால் அந்த கற்சிலை உலகம் உள்ள மட்டும் நிலைத்து நிற்கும். அதுமட்டுமல்லாமல் இந்த கலைஞனின் திறமையும் உலகறிய வெளிப்படும்.
    ஆனால் மன்னருக்குத் தெரிந்தால்…?
    “சிற்பியே உன் விருப்பத்திற்கு நான் உதவுகிறேன். ஆனால் ஒரு வேண்டுகோல். இந்த சிலைக்கு நான் தான் முன்மாதிரியாக அமர்ந்தேன் என்று யாருக்கும் தெரியக் கூடாது.’’ என்றாள்.
   சிலைசிருட்டியன் மனத்திற்குள் சிரித்தான். சரி என்று தலையாட்டிவிட்டு அவள் அமர இடத்தைக் காட்டினான். அமர்ந்தாள்.


                              (தொடரும்)(மன்னிக்கவும்… சிறுகதை வரலாற்று கதை என்பதால் சற்று நீண்ண்ண்டு விட்டது. பயம் வேண்டாம். நிச்சயம் அடுத்த பதிவில் முடிந்துவிடும். நன்றி.) 

14 கருத்துகள்:

 1. சரித்திரக் கதைக்கே உரிய தமிழ் நடை உங்களிடம் அருமையாக உள்ளது. அந்தச் சிலைக்கு மாடலாக இருந்ததால்தான் அதைக் கும்பிட அரசிக்கு மனம் வரவில்லை போலிருக்கிறது. தொடரும் பகுதிக்கு ஆவலோட காத்திருக்கேன்பா ஃப்ரெண்ட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபிரெண்ட்.... எல்லாருமே யுகிக்கிறதை நானும் எழுதிவிட்டால் தொடரில் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும் இல்லையா...

   இது வேற மாதிரி முடியும் ஃபிரெண்ட்.
   காத்திருங்கள்.

   நீக்கு
 2. கதையின் கருவும் சொல்லிச் செல்லும் விதமும் அருமை
  தொடர்பவர்கள் திருப்தக்ிகென இல்லாமல்
  கதையின் போக்கில் பதிவுகளை முடிவு செய்யவும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் ஆலோசனைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

   நீக்கு
 3. அன்னைத் தமிழில் அழகு நடை! கன்னல் தமிழில் கவிதை நடை! அருமை! கதைசொல்லும் பாங்கிலே தெரிகிறது கற்றனை நடை!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க புலவர் ஐயா.

   நீக்கு
 4. சுவரஷ்யமாக இருக்கிறது...எனக்கு வரலாறு தெரியாது என்பதால் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காலத்தில் சிட்டுக்குருவியைத் துர்து அனுப்பியதாக
   நானும் படித்ததில்லை. அதனால் உங்களுக்கு வரலாறு தெரியாது தான்.
   கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்குக் கதையின் முடிவைச் சொல்கிறேன்.
   நன்றிங்க சிட்டுக்குருவி.
   (இது கா.கா பிடிக்கிறது கிடையாதுங்க)

   நீக்கு
 5. பெயரில்லா24 மே, 2012 அன்று 6:01 AM

  உங்கள் பதிவுகள் ஏனோ இப்போது டாஷ்போர்டில் வருவதில்லை...
  இந்த வார இறுதியில் படிக்காத அத்தனையையும் படிக்கிறேன்...
  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிங்களா...?
   நான் தான் நீங்கள் படிக்கக் கொடுத்து வைக்காதவன்.

   முடிந்தால் படியுங்கள்.
   நன்றிங்க ரெவெரி!

   நீக்கு
 6. அழகு தமிழ்.அரச வரலாற்றில் தமிழ் இன்னும் அழகாகிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிங்க என் இனிய தோழி ஹேமா...

   அரச கதைகளைப் படிக்கும் ஆவல் ஒருசிலருக்கு இருக்கிறது தான் போலிருக்கிறது. யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை என்று நல்ல நல்ல கற்பனையை எல்லாம் மூடி வைத்திருந்தேன்.

   நீக்கு
 7. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/09/blog-post_6.html?showComment=1378424615986#c2485677240117282867

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு