சனி, 23 ஜூலை, 2022

தாப்பிசைப் பொருள்கோள் வெண்பா!

 


குற்றமும் இல்லை! குறையும் இதிலில்லை!
முற்றும் அறிய முடியாது! - நற்றமிழில்
கற்றோர் களிப்படைவார்! காதல் உணர்வறிவார்!
பற்றுடையோர் காண்பார் பயன்!

.
பாவலர் அருணா செல்வம்
24.07.2022

வியாழன், 21 ஜூலை, 2022

விற்பூட்டுப் பொருள்கோள் வெண்பா !

 


குடியுயர்த்தும் போதை குலமழிக்கும் நேர்மை
படியளக்கும் பொய்மை பகைவளர்க்கும் சான்றோர்
வழியுயர்த்தும் தீமை மதியழிக்கும் வாய்மை
அழியா உயர்த்திடும் அன்பு!
.
பாவலர் அருணா செல்வம்
22.07.2022

 
விற்பூட்டுதல்!
.
அன்பு குடியுயர்த்தும்
போதை குலமழிக்கும்
நேர்மை படியளக்கும்
பொய்மை பகைவளர்க்கும்
சான்றோர் வழியுயர்த்தும்
தீமை மதியழிக்கும்
வாய்மை அழியா உயர்த்திடும்.

புதன், 20 ஜூலை, 2022

ஏனிப்படி ஆனாள் ?

 


ஆனிப்பொன் தேர்போல் அசையுங் கொடியிடை!
தேனிக்கள் மொய்த்திடும் தேனரும்பும் பூவிதழ்!
வானிருக்கும் மீன்போல வண்ணமிடுங் கண்ணுடையாள்!
ஏனிப் படியானாள்? என்றுரைப்பாய் தோழியே!
.
பாவலர் அருணா செல்வம்
20.07.2022

(வெண்டளையால் அமைந்த கலிவிருத்தம்)


செவ்வாய், 12 ஜூலை, 2022

எளியோர்க்கு ஈதல் !

 


ஞான முள்ள மனிதரெல்லாம்
        ஞாலந் தன்னில் பிறந்தாலும்
ஈனப் பிறவி நம்பிறப்பில்
       இனிமை கொஞ்சம் சேர்வதற்கு
தானம் செய்தால் பலநன்மை
      தானாய் வந்து சேருமென்று
வானம் சென்ற முன்னோர்கள்
     வாழ்வின் வகையாய்ச் சொன்னார்கள்!
 
உண்டு நன்றாய் உடல்வளர்த்தோம்!
      உதவி செய்தார் உரியோர்கள்!
கண்டு கேட்டும் உயிர்வளர்த்தோம்!
      கருத்தாய்ச் சொன்னார் உயர்ந்தோர்கள்!
பண்பு கொண்ட மனமிருந்தும்
      பாவம் விதியாய் நுழைந்துவிட்டால்
தொண்டு செய்த உன்னுடனே
      துணையாய் வந்து தலைக்காக்கும்!
 
பணமும் பொருளும் நிறைந்திருக்க
       பாலும் பழமும் மிகுந்திருக்க
உணவோ உண்ண அழைத்திருக்க
       உன்னைப் பசித்தோன் பார்த்திருக்க
குணமாய்க் கொஞ்சம் கொடுத்திட்டால்
       குறைந்தி டாமல் பெருகிவிடும்!
கணக்காய் எண்ண முடியாமல்
       கடிதில் கூடும் மனநிறைவு!
 
பதவி பெயரும் புகழெல்லாம்
       பகட்டாய் நம்மைக் காட்டிவிடும்!
நிதமும் தேவை எனச்சேர்த்தால்
       நெஞ்சோ பயமாய் அதைக்காக்கும்!
முதலும் முடிவும் அறியாத
        மோகம் கொண்ட வாழ்வினிலே
உதவி செய்ய பழகிவிட்டால்
        உன்னை அதுவே காத்துநிற்கும்!
  
இல்லை என்று கேட்காமல்
        ஏங்கி பார்க்கும் சிலவிழிகள்!
தொல்லை என்றே எண்ணாமல்
        துளியாய்க் கொஞ்சம் கொடுத்துப்பார்!
சொல்லில் சொல்ல முடியாமல்
        சொல்லும் பார்வை உன்னுருவைக்
கல்லில் இல்லாத் தெய்வமெனக்
       கண்முன் கண்ட மனம்நெகிழ்வார்!
    
தெய்வம் எங்கே எங்கென்று
       தேடித் தேடி அலைகின்றார்!
உய்யும் வாழ்வில் உன்னெதிரில்
       ஒளியைப் பொங்கி வரமாட்டார்!
மெய்யும் மனமும் வாடிவிட்ட
       மெலியோக் கொஞ்சம் கொடுத்துப்பார்!
வைய்யம் நிறைந்த தெய்வமெல்லாம்
       வந்தே அமர்வார் உன்னுருவில்!
 
எடுக்க எடுக்கக் குறைந்துவிடும்
        ஏற்ற மில்லாப் பெருஞ்செல்வம்!
அடுக்க அடுக்க ஏக்கந்தரும்
        ஆசை அடங்காத் துயர்வெள்ளம்!
கொடுக்கக் கொடுக்க வளர்கின்ற
        குணமே உயிரின் மனநிறைவு!
தடுக்கத் தடுக்க எவர்வந்தும்
        தகர்க்க முடியா நிறைவன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
13.07.2022

செவ்வாய், 5 ஜூலை, 2022

ஒன்றில் ஐந்து!



பாடி அழைத்தால்!
அறுசீர் விருத்தம்!

.
பாடி அழைத்தால் பணிந்தே
    பண்பாய் முந்தி வெறுப்பின்றி
ஓடி வருவாள் உடனே! 
         ஒன்ற உள்ளம் விருப்பின்றி
மூடி மறைத்தால் முகத்தை
    முற்றும் தீபோல் அடர்வின்றி
ஊடி நகர்வாள் ஒதுங்கி
    ஓய்ந்தே நன்றே மகிழ்வின்றி! 
.
கலித்துறை!
.
பாடி அழைத்தால் பணிந்தே பண்பாய் முந்தி
ஓடி வருவாள் உடனே ஒன்ற உள்ளம்!
மூடி மறைத்தால் முகத்தை முற்றும் தீபோல்
ஊடி நகர்வாள் ஒதுங்கி ஓய்ந்தே நன்றே!
.
கலிவிருத்தம்!
.
பாடி அழைத்தால் பணிந்தே பண்பாய்
ஓடி வருவாள் உடனே ஒன்ற!
மூடி மறைத்தால் முகத்தை முற்றும்
ஊடி நகர்வாள் ஒதுங்கி ஓய்ந்தே!
.
வஞ்சி விருத்தம்!
.
பாடி அழைத்தால் பணிந்தே
ஓடி வருவாள் உடனே!
மூடி மறைத்தால் முகத்தை
ஊடி நகர்வாள் ஒதுங்கி!
.
வஞ்சித்துறை!
.
பாடி அழைத்தால்
ஓடி வருவாள்!
மூடி மறைத்தால்
ஊடி நகர்வாள்!
.
பாவலர் அருணா செல்வம்
06.07.2022

ஞாயிறு, 3 ஜூலை, 2022

கடவுள் வணக்கம்! (கலிவிருத்தம் 1)

 



(கலிவிருத்தம் 1)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
உலகம் பாடிடும் ஓமெனும் நாதமும்
புலரும் காலையின் பூவதன் வாசமும்
உனது நல்லருள் உற்றிடும் நன்மையில்
எனது பண்ணிலும் இன்பினை நல்கவே!
.
(கலிவிருத்தம் 2)
(விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்)
.
கற்றவர் கூடிடும் காலம் மின்னிடும்!
பற்றினை விட்டவர் பாதை பண்பிடம்!
பெற்றவர் கூறிடும் பெருமை ஏற்றிடும்!
உற்றிடும் அன்பினில் உயிரைச் சேர்த்திடு!

.
(கலிவிருத்தம் 3)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
மானின் துள்ளலாய் மாதவள் ஓடவும்
மீனின் மேனியாய் மெல்லிடை ஆடவும்
தேனின் இன்புடன் செவ்விதழ் பேசவும்
வானின் தூரலாய் வஞ்சியோ பாடினாள்!

.
பாவலர் அருணா செல்வம்
04.07.2022

செவ்வாய், 14 ஜூன், 2022

தோழ தோழியருக்கு வணக்கம் !

 



     கடந்த சில நாட்களாக கி.பி மூன்றாம் நுற்றாண்டில் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அடங்கிய கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு என்ற நுலில் இருந்த 99 மலர்களின், அவர் அக்காலத்தில் குறிப்பிட்ட பெயரையும். அதையே நாம் இக்காலத்தில் அறிந்திருக்கும் பெயருடன், அம்மலரின் அல்லது அம்மரத்தின் பயனையும் நேரிசை வெண்பாவாக எழுதிப் பதித்திருந்தேன். இதில் “வாரம்“ என்ற மலரைப்பற்றி இணையத்தில் தேடியும் தெரிந்தவர்களிடம் கேட்டும் என்னால் அறியமுடியவில்லை. அதனால் அம்மலரை மட்டும் நான் எழுதவில்லை.
    மற்ற 98 மலர்களை அனேகமாகச் சரியாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருப்பின் மன்னித்துச் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
     தவிர, என் பாடல்களைப் படித்து அதற்கு விருப்பக் குறியிட்டும் கருத்துக்கள் எழுதியும் என்னை ஊக்குவித்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
நன்றியுடன்
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

99. தாழை! (தென்னந்தாழை)

 


.
தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!
தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்
குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்
உடலெரிச்சல் போக்கும் உணவு!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022
 

(கைதை என்பது தாழம்பூ
தாழை என்பது தென்னந்தாழை)

நெய்தல் மலர்! (வெள்ளாம்பல்)

 


நெய்தல் மலர்உவர் நீரில் மலர்ந்திடும்!
தெய்வத்தின் மேல்சாற்றார்! தேனெடுக்க _ மொய்த்திடும்
வண்டு மதிமயங்கும்! வைகறையில் பூக்குமிதன்
தண்டுமிகக் குட்டையான தாம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

 
(குறிஞ்சிப்பாட்டில் இரண்டு நெய்தல் மலர்கள் உள்ளன.
நீள்நறு நெய்தல் என்பது நீலாம்பல்
மணிக்குலைக் கள்கமழ் நெய்தல் என்பது வெள்ளாம்பல்)
 
(நெய்தல் நிலப் பூக்களாக அடும்பு, புன்னை, ஞாழல், கோங்கு, தாழை, தும்பை, நெய்தல் ஆகும்)
 
(ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்ற பெயர்களைக் கொண்ட நீர் மலர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையாகும்)

வியாழன், 9 ஜூன், 2022

வடவனம்! (கருந்துளசி)

 


வாய்நாற்றம் போக்கும் வடவனம்! கண்புரை
நோய்,சளி தொல்லை நொடிந்தோடும்! - மாய்ந்த
கருவை வெளியேற்றும்! காய்,தண்டு, பூவும்
தரும்பயன் என்றும் தழைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

 

(துழாய் என்பது செந்துளசி

வடவனம் என்பது கருந்துளசி.

சிலர் ஆலமரம் என்றும். ஒருசிலர் திருநீற்றுப் பச்சிலை என்றும்

சொல்கிறார்கள்)