செவ்வாய், 24 நவம்பர், 2020

கணபதியாரே !

 

..

தும்பிக் கரமுடன் தொந்தி பெருகிய
    தொன்மை நிறைந்திடும் கணபதியாரே!
எம்பிக் குதித்தினும் எண்ணும் பொருளினுள்
    இன்பம் கிடைப்பது விதியெனுமாயே!
நம்பி வருமெனை நல்கும் அறிவினை
    நன்மை பெருகிட அருளிடுவாயே!
தெம்பு துணைவரத் தென்னி மரமெனத்
    திண்மை முழுவதும் வழங்கிடுவாயே!
 
விந்தை உலகிது வெல்ல நினைப்பதை
     விண்ணின் உயர்வென வியந்திருந்தேனே!
எந்தன் மனமதில் என்றும் உறைந்துடன்
     இன்ப மருளிடும் பெருவிறைநீயே!
முந்தி இருத்திட முந்தன் வரந்தர
     முன்னை செயலினைத் தொடங்கிடுவேனே!
சிந்தை செயற்படச் செம்மை முறையுடன்
     சென்று நலமுடன் முடிப்பதுநீயே!
 
அன்னை மனமுடன் அந்தம் வியந்திடும்
    அன்பின் கருவறை உனதுளம்தானே!
மின்னும் மலரினுள் மெல்ல மணத்திடும்
    மென்மைக் குணமென நிறைந்திடுந்தேனே!
சொன்ன கவிதனில் சொக்கும் பொருளினில்
    தொன்மை இறையுனைக் கலப்பதனாலே
நன்மை பலமிகும் நஞ்சு அழிந்திடும்
    நன்றி யுடனுனை வணங்கிடுவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
24.11.2020

வெள்ளி, 20 நவம்பர், 2020

இதுவும் கடந்து போகும்!!


.
நிலையாய் இருக்கும் என்றேநாம்
   …..நெடிய வாழ்வை எண்ணுகிறோம்!
வலையைப் போட்டே இழுக்கின்றான்!
  ….. வகையாய் மாட்டி விடுகின்றோம்!
அலையாய் இன்பம் அடித்திருக்க
 …..  அமைதி யான வாழ்க்கையினைக்
கலைத்துப் போட்ட கோலத்தைக்
 …..   கண்டு நானும் துடித்திட்டேன்
.
காதல் கொண்ட வாழ்வினிலே
 …..  கணவன் என்றும் தெய்வம்தான்!
சேதம் இல்லா வாழ்வினிலே
 …..  சேர்ந்த துன்பம் என்சொல்வேன்?
சாதல் என்றும் பழையதுதான் !
…..   சகித்துப் போகச் சொன்னாலும்
பூத மனமோ மறக்காத
…..   பொல்லா நிலைதான் என்சொல்வேன்?
.
அந்த செய்தி நானென்றும்
…..   அறியா மலேயே இருந்திருந்தால்
சொந்தம் கண்ட அனாதைபோல்
 …..  சுடரும் முகமாய் இருந்திருப்பேன்!
வந்த செய்தி இதயத்தை
…..   வலிக்கச் செய்து விட்டதினால்
சிந்தை முழுதும் அவள்நினைவாய்
…..   சின்னத் தனமாய் அழுகின்றேன்!
.
என்ன சொல்வேன் ஆறுதலாய்?
  ….. எதைதான் சொன்னால் ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
…..   இதயம் ஏந்தி சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
…..   துணிவாய் முன்னோர் சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
…..   இதுவும் கடந்து போகுமென்றே!
.
பாவலர் அருணா செல்வம்
20.11.2020

செவ்வாய், 17 நவம்பர், 2020

ஊழியி னொளியாய் வருவாயே!



தானன தனனா தானன தனனா
தானன தனனா தனதானா !  (அரையடிக்கு)
 .
மாரியி னருளே! மாமணி நிழலே!
….மார்கழி எழிலே யதனோடே
..மாதவ முனியே சீரிய உயர்வே
……..மாந்தரின் நினைவாய் நிறைந்தோனே!
.
வீரிய முதிர்வாய் வாடிய உயிரோ
…….வேதனை படுதே பெருநோயால்!
..வீதலி லழுதோர் வீரிடுங் குரலோ
……..வேசடை வலியோ கடல்போலே!
.
ஊரினி லுழல்வோர் வேறுயிர் மறந்தே
…….ஓதிய பொருளாய் யுறைவோனே
..ஊடுறு வினையோ ஓடிய ழியவே
……ஊழியி னொளியாய் வருவாயே!
.
சேரிட முணர்ந்தே சேனையை யறிந்தே
…….சேவடி யுனதே பணிந்தோமே!
..சீயெனும் பிணியோ மாயென மறைந்தே
…….சீவனு யரவே அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
18.11.2020

 
வேசடை – துக்கம் கவலை
வீதல் – சாதல், கெடுதல்

தீபாவளி பாசம்

 

  அமுதன் ரகுவின் வீட்டில் நுழைந்த போது அவனின் மகள் புவனா, புது கவுன் போட்டுக்கொண்டு தெரு வாசலிலேயே நின்று கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

   “அவளிடம் இவன் புவனா.... இந்த கவுன் திபாவளிக்கு எடுத்ததா...?“ என்று அன்பாகக் கேட்டான்.

   அவள் இவனை முறைத்துவிட்டு, “இல்ல. இந்த கவுன் எனக்கு எடுத்ததுஎன்றாள்.

   உள்ளே போகும் போதே இப்படியா... என்ற யோசனையுடன் நுழைந்தவனை ரகு பெரியதாக வரவேற்காமல் வாடா...என்று மட்டும் சொன்னது இவனுக்கு மேலும் என்னவோ போல் ஆகிவிட்டது.

   என்ன செய்வது?  உதவி என்று கேட்க போகும் இடத்தில் மரியாதையை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா....? மனத்தைத் திடமாக்கிக் கொண்டான்.

   “என்னடா ரகு! இன்னைக்கு மழை வரும்ன்னு ரேடியோவில சொன்னாங்க. நீ கேட்டியா...?“

   “நான் கேக்கலைடா. அவங்களாத்தான் சொன்னாங்க.முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொன்னான் ரகு. அமுதன் ஐயோஎன்று தலையைப் பிடித்துக்கொண்டான்.

   “என்னண்ணா... தலைவலியா...? அவர்கிட்ட பேசினாலே தலை வலிக்கும் தான். தலைவலி மருந்து வேணுமா...?“ பாசத்துடன் கேட்டபடி வந்தாள் ரகுவின் மனைவி.

   “வேண்டாம்மா. கொஞ்சம் சூட காப்பி இருந்தா கொடுஎன்றான்.

   “க்கும். ரெண்டும் ஒன்னு தான். எதை சாப்பிட்டால் என்ன?“ ரகு முணுமுணுத்தது அவள் காதிலும் விழுந்தது.

   “இதோ பாருங்க... ரெண்டு நாளா சண்டை போட்டது போதும். இன்னைக்கு நல்ல நாளும் அதுவுமா எங்கிட்ட சண்டைக்கு வர்றாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வந்திடும்... ஆமா...

   “உனக்கு நல்ல கோபம் கூட வருமா...? போ... போயி அந்த கஷாயத்தைப் போட்டு இவனுக்குக் கொடு.என்றான் ரகு எரிச்சலுடன்.

   அவள் முறைத்துவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள்.

   ரகு அமுதன் கொண்டு வந்த பலகாரப்பையைத் திறந்து அதிலிருந்த அதிரசத்தை எடுத்துச் சாப்பிட்டான். அதிரசம் சூப்பர்டா. வீட்டுல செஞ்சிதா?“

   “ஆமாம். ஆமா... நீங்க எதுவும் பலகாரம் செய்யலையா...?“ இவன் கேட்கும் பொழுதே.... காபியைக் கொண்டு வந்தவள், “ஆமா... நாளும் கெழமையுமா உங்க பிரெண்ட் நாளு பலகாரம் செய்யவிடுறாரா?“ மூக்கைச் சிந்தாத குறையதாக இழுத்தாள்.

   “ஏன்டா... என்ன ஆச்சி? ஏன்ம்மா புது டிரெஸ் வாங்கலையா...?“

   “நான் எனக்கு ஒரு புடவை வாங்கினேன்

   “நீ என்னடா வாங்கினே...?“

   “நான் கடன் வாங்கினேன்டா.

   “ஐயோ... என்னச்சி உனக்கு?“ அவன் பேசாமல் இருக்கவும் இவன், அவனின் மனைவியிடம் என்னதான்மா ஆச்சி?“ கேட்டான்.

   “அது ஒன்னும் இல்லையண்ணா. இந்த வருடம் அவருடைய தங்கைக்கு தலைதீபாவளி இல்லையா...? அவுங்க அம்மா பணம் கேட்டு போன் பண்ணினாங்க. இவரும் இந்த வருஷம் நாம தீபாவளியை சிக்கனமா கொண்டாடிடலாம்ன்னு சொல்லிட்டு எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இருந்த பணத்தை ஊருக்கு அனுப்பிட்டாரு. கேட்டதுக்குத் தான் இவ்வளவு கோபம்.என்றாள்.

   “உங்கிட்ட சொல்லி இருந்தா நீ பணத்தை அனுப்பவா விட்டிருப்பே? எனக்கு அது வேணும் இது வேணும்ன்னு பணத்தைக் காலி பண்ணி இருக்க மாட்டே...கோபத்துடன் ரகு சொன்னான்.

   “ஆமா... அப்படியே நீங்க வாங்கி கொடுத்திட்டாலும்.... இப்ப கூட பாருங்ண்ணா. என் அண்ணன் தீபாவளிக்கு புவனாவிற்கு கவுன் வாங்க சொல்லி பணம் கொடுத்தது. அதுல சிக்கனமா எனக்கு ஒரு புடவையும் அவளுக்கு ஒரு கவுனும் எடுத்தேன். எங்களுக்குன்னு இவரு என்ன பெரிசா செய்திட்டாரு? நமக்கும் பொண்டாட்டி குழந்தைன்னு இருக்கிற எண்ணமே கொஞ்சம் கூட இவருகிட்ட இல்லண்ணா...குரல் தழுதழுத்தது.

   “சரி விடும்மா. இதையெல்லாம பெரிசா நினைச்சி கண் கலங்கிட்டு. ஏதோ நம்ம வசதிக்கு நம் தங்கைக்கு நம்மால முடிஞ்சதை செய்தோமே... என்ற திருப்தியாவது அவனுக்கு இருக்கட்டும். ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியில கிளம்பி போயிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

   வாசல் வரையில் வந்த ரகு அமுதனின் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாயைச் செறுகினான்.

   “ஏதுடா இது?“

   “எனக்குத் தெரியும்டா. உன் தங்கைக்கும் இந்த வருடம் தலை தீபாவளி என்று. நான் கடன்வாங்கும் பொழுதே உனக்கும் சேர்த்து தான்டா வாங்கினேன். என் பொண்டாட்டிக்கு அவ அண்ணன் கொடுத்தான். நம்ம தங்கச்சிக்கு நாம தானே கொடுக்கனும். இதுவே தீபாவளி கொண்டாடின திருப்தியை நமக்கு கொடுத்திடும்டா... ம்.. கிளம்பு

   அமுதன் நன்றி சொல்லமுடியாத நிலையில் ரகுவைப் பார்த்துவிட்டு நடந்தான்.

 .

அருணா செல்வம்


வெள்ளி, 13 நவம்பர், 2020

தீபாவளி வாழ்த்து!

 


புத்தம் புதிய பட்டாடை,
   பொன்னால் செய்த அணிகலமும்
சத்தங் கூட்டும் பட்டாசும்
   சத்து நிறைந்த பலகாரம்
நித்தம் நினைக்கும் நல்லன்பும்
   நிறைந்த தீப நன்னாளில்
மொத்தம் கிடைக்க வாழ்த்துகிறேன் 
   முன்னைத் தெய்வ மொழியாலே!

.
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய தீபவொளி வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
14.11.2020

வியாழன், 12 நவம்பர், 2020

காலம் வரையும் கோலம்!

 


என்றுமில்லாமல்
இவ்வருடம் ஆசைப்பட்ட
பட்டுப்புடவை
வாங்கியாச்சு.
மஞ்சள் நிறத்தில்
மரகத பச்சை இலையழகு!
பண்டிகைகளில்
நான் பார்க்கவே
பகட்டாகப் பண்டத்துடன்
வந்து பேசும்
அடுத்த தெரு
கவிதாவிடம் மிடுக்காகக்
காட்டிவிட வேண்டும்.
பணமின்றி நின்ற
பண்டிகையில்
பிள்ளைகளைத் தேடி
பலகாரம் தந்திடும்
பால்யதோழிக்கு நிறைய
பலகாரம் தரவேண்டும்.
பகல் பொழுதில்
பக்கத்து ஊரில்
அம்மாவுக்கு வாயல் புடவை
அப்பாவுக்கு கதர் வேட்டி
கூடவே ஆயாவுக்குப்
பிடித்த அதிரசம்….
கணவன் வந்ததும்
கிளம்பவேண்டியது தான்
மடியில் மாஸ்க்
விற்ற பணம்
பத்திரமாக இருந்தது.
வந்து சொன்னான்
வெளியில் போக முடியாது
ஊரடங்கு என்று!
.
பாவலர் அருணா செல்வம்
13.11.2020

திங்கள், 9 நவம்பர், 2020

குட்டி!!

 


 
குட்டி என்றே தலைப்பிட்டுக்
   ….. கொஞ்சும் தமிழில் பாடவந்தேன்!
மெட்டி போடும் பெண்நானோ
   ….. மெல்ல எண்ணிப் பார்க்கின்றேன்!
புட்டி குட்டி ஆசைகளைப்
   ….. போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்!
கொட்டி வளரும் கற்பனையில்
   ….. குட்டி என்றே எதையெடுப்பேன்?
 .
கட்டிப் போட்ட கன்றினையும்
  …..  காலைச் சுற்றும் பூனையையும்
விட்டே அகலா நாயினையும்
   ….. வெறுத்துத் துறத்தும் எலியினையும்
தொட்டால் சிலிர்க்கும் முயலினையும்
   ….. துள்ளி ஓடும் மானினையும்
குட்டி என்றே அழகாகக்
  …..  கொஞ்சும் கவியில் காட்டிடலாம்!
.
பிறந்து சிலநாள் ஆனவுடன்
  …..  பெரிய உருவாய் இவைமாறும்!
கறந்த பாலாய் இருந்தகுணம்
  …..  கரடு முரடாய் மாறிவிடும்!
சிறந்த சொல்தான் குட்டி!அது
   ….. சீக்கி ரத்தில் வளர்கிறதே!
புறத்தைக் கண்டே சொல்கின்றோம்!
  …..  பொதுவில் இவைதாம் குட்டியென்றே!
.
பாவலர் அருணா செல்வம்.

சனி, 24 அக்டோபர், 2020

கலைமகளே அருள வேண்டும்!

 


பெற்றெடுத்த தாயே என்றும்
    பெரும்பசியைப் போக்கி நிற்பாள்!
பற்றிருக்கும் தந்தை வாழ்வின்
    படியுயரும் வழியைச் சொல்வார்!
சுற்றமுடன் செல்லும் பாதை
   சுமையின்றி அறிந்தி ருக்கக்
கற்றறியும் கல்வி தன்னைக்
   கலைமகளே அருள வேண்டும்!
 
நிலையான வாழ்வு வாழ
    நெஞ்சத்தில் உறுதி வேண்டும்!
சிலைபோன்ற அழகு கூடச்
    சிறப்பான உழைப்பு வேண்டும்!
விலையில்லாச் செல்வம் பொங்க
    வினையில்லாக் கல்வி வேண்டும்!
கலையாத இவைகள் சேரக்
    கலைமகளின் அருளே வேண்டும்!
 
பொன்னோடு பொருளி ருந்தும்
    புகழ்பெருமை வீரங் கொண்டும்
அன்போடு துணையி ருந்தும்
    அழகான மழலைக் கண்டும்
இன்மொழியைக் கல்லா வாழ்வு
    இனிக்காத கரும்பு போலே!
கன்னியவள் நெஞ்சி லேறக்
    கலைமகளே அருள வேண்டும்!
 
கொக்கென்று பதவி கண்டு
    கொக்கரித்து நிமிர்ந்து நிற்பார்!
மக்காகப் படித்துப் பேசி
    மற்றவரைச் சிரிக்க வைப்பார்!
செக்கொன்றைச் சுற்றும் மாடாய்ச்
    செகத்தினையும் சுற்ற வைப்பார்!
சொக்கவைக்கும் கல்வி யற்றால்
    சுடரிருந்தும் குருடன் கண்ணே!
 
ஒருவிளக்கின் சுடரை ஏற்ற
    ஓராயி ரவழிக் காட்டும்!
அருட்மறையின் பொருளை எல்லாம்
    அறிவுருத்தி உயர்த்த நோக்கும்,
உருமாறும் வாழ்வில் நாளும்
    உயர்ந்திடவே தேடி வாழும்
கருவிருட்டில் என்னைக் காக்க
    கலைமகளைப் பணிந்தேன் நானே!

.
பாவலர் அருணா செல்வம்
24.10.2020

வியாழன், 22 அக்டோபர், 2020

ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா

 


இயற்கை!
.
மலர்தரும்மணம் மகிழ்வினைத்தரும்!
நிலம்தரும்வளம் உயிருறும்வரம்!
வளர்பிறைஎழில் இரவினித்திடும்!
குளம்தரும்குளிர் மனமுவந்திடும்!
கடல்தரும்பொருள் பணம்கொடுத்திடும்!
தடம்தரும்வழி இடம்அடைந்திடும்!
மொழிதரும்இசை புகழொளித்திடும்!
பொழிந்திடும்மழை உலகுயர்த்திடும்!
இங்கு
இயற்கை என்றும் இயல்பாய் இருக்கிறது!
செயற்கை நாளும் செயலை மறைக்கிறது!
இறைவன் எழுதி வைத்தான்
குறையே இல்லை! நிறைவாய் நெஞ்சே!
.
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

சிறுகதை, “வெவ்வேறு மனம்“,



வெவ்வேறு மனம் ! 

 

 வேலைவிட்டு வந்ததிலிருந்து தன் கணவன் ஏதோ கவலையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்தது போல் தெரிந்தது கோமதிக்கு.

    எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டாரே.... ஏன்...? இன்று என்னவாகியது...? யோசனையுடன் அருகில் சென்று மெதுவாக விசாரித்தாள். தொடக்கத்தில் ஒன்றுமில்லைஎன்றவர், அவள் திரும்பவும் கேட்க, சற்றுக் கோபத்துடனும் கவலையுடனும் சொன்னார்.

    “இன்னைக்கு எப்பொழுதும் வர்ற பஸ்சுல தான் வந்தேன். நான் ரெண்டு பேர் உட்கார்ற சீட்டுல உட்கார்ந்து இருந்தேன். ஒரு ஸ்டாப்புல ஒரு பொண்ணும் ஒரு ஆளும் ஏறினார்கள். அவங்களுக்கு உட்கார இடம் இல்லை. அந்தப் பொண்ணுக்கு நம்ம பொண்ணோட வயசு தான் இருக்கும். பார்க்கவும் நம்ம பொண்ணு மாதிரி தான் இருந்தாள். வயிறு கொஞ்சம் உப்புன மாதிரி.... கர்ப்பமாக இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.

   அதுக்கு அடுத்த ஸ்டாப்புல என் பக்கத்துல இருந்த ஆள் இறங்கிட்டாரு. அவர் இறங்கியதும், அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே நான் ஜன்னலோரம் நன்றாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் உட்கார இடம் கொடுத்தேன்.

   ஆனால் அவள் உட்காரவில்லை. நானும், “வந்து உட்காரும்மா...என்றேன். அவள் திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். அவனும் போய் உட்காருஎன்றான். ஆனால் அவள் உட்காராமல் என்னைப் பார்த்துப் பரவாயில்லைங்கஎன்று சொல்லி விட்டு நின்று கொண்டே வந்தாள்.

    எனக்குத் தான் என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அடுத்த ஸ்டாப் வந்தபோது எழுந்து நின்று கொண்டேன். பிறகு அவளும் அவனும் அமர்ந்து கொண்டார்கள். அதே சமயம் அவர்களுக்குப் பின்பிருந்த சீட்டு காலியாகவும் நான் அதில் அமர்ந்து கொண்டேன்.

    அப்போ அந்தப் பெண் அவள் கணவனிடம் சொன்னாள்... என்னங்க நீங்க. அந்த ஆள் இடம் விட்டதும் நீங்களும் உடனே என்னை உட்கார சொல்லிட்டீங்க. என்றாள்.

    ஏன் அதனால் என்ன...? அவன் கேட்டான்

    அதனால என்னவா...? கேட்க மாட்டீங்க. இப்போதெல்லாம் சின்ன பையன்களைக் கூட நம்பிடலாம். இந்த மாதிரி கிழடுகளை நம்பவே கூடாதுங்க... என்றாள். எனக்கு அதிலிருந்து மனசு என்னவோ போல் ஆகிவிட்டது. நான் என் பொண்ணு மாதிரி நினைச்சேன். சே.... ஏன் தான் பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு கோண புத்தி வருதோ...தலையில் கைவைத்த படி கவலையாகச் சொன்னார் சிவராமன்.

   “சரி விடுங்க. அவள் உங்களோட தோற்றத்தைப் பார்த்துப் பயந்திருப்பாள். அவளுக்கு உங்களோட வயசு தெரியாது இல்லையா...என்று சொல்லி விட்டு சிரித்த கோமதி அந்த சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினாள்.

 

சற்று நேரத்தில்

   கல்லூரி போய்விட்டு வந்த விமலா கோபமாக புத்தகத்தை வைத்துவிட்டு அமர்ந்தாள். என்னம்மா... என்னவாச்சி?“ அவளின் தலையைத் தடவி விசாரித்தார் சிவராமன்.

   “பாருங்கப்பா.... இன்னைக்குப் பஸ்சுல இடம் இல்லைன்னு ஒரு வயசானவர் பக்கத்துல போய் உட்காந்தேன். ஆனால் அந்த கிழம் பண்ணின அதம் இருக்குதே.... சே...கோபமாக முகம்சுளித்தாள். உடனே எழுந்து,  நல்லா நாலுபேருக்குத் தெரியிற மாதிரி திட்டுறது தானே...கோமதி கோபமாகச் சொன்னாள்.

    “இல்லம்மா... அவரைப் பார்க்க நம்ம அப்பா மாதிரி தெரிந்தார். அவரை எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்த பிடிக்கல. பேசாம எழுந்து நின்னுக்கினே வந்தேன்என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள்.

   சிவராமன் மனைவியைப் பார்த்தார். கோமதி அவரை அர்த்தத்துடன் பார்த்தாள். அவர் புரிந்து தலையாட்டினார்!

 

   ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு மனம் தான். அது ஒவ்வொரு நிகழ்வில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகட்டுகிறது.

 .

அருணா செல்வம்.