வெள்ளி, 25 ஜூலை, 2014

தலை எழுத்தையும் மாற்றலாம்!!    இளைஞன் ஒருவனுக்கு ஆன்மீக ஆர்வம் வந்ததால் அவன் ஒரு முனிவரிடம் சீடனாகிப் படிப்படியாக ஞானி ஆனான்.
    முனிவனின் மனைவி கருவுற்றிருந்தாள். அந்தச் சமயத்தில் முனிவர் தன் பொறுப்புகளைத் தன் சீடரிடம் ஒப்படைத்து விட்டு முனிவர் இமயம் சென்று விட்டார். (ஏன் என்றெல்லாம் கேட்காதீர்கள்....)))
   முனிவரின் மனைவி பிரசவ வலியால் துடித்த போது, அந்த அறைக்குள் ஒருவர் நுழைந்தது சீடனின் ஞானக் கண்ணுக்குத் தெரிந்து விட்டது. உடனே....
   “யார் அது? நில்லும்“ என்றார்.
   வந்தவர் தன்னை இவன் கண்டுகொண்டானே என்று விழித்து, சற்றுக் கழித்து “ஏன்?“ என்று கேட்டார்.
    “பெண் பிரசவிக்கும் இடம் அது. அங்கே நீர் போகக்கூடாது“ என்றார் சீடர்.
   “நான் பிரம்மன். பிறக்கும் பிள்ளைகளுக்குத் தலையெழுத்து எழுதப் போகிறேன். என்னைத் தடுக்காதே“ என்றார் வந்தவர்.
   சீடன்... “பிரம்மாவா? வணக்கம். சரி. குழந்தைக்கு என்ன தலையெழுத்து எழுதப்போகிறீர்கள்?“
   “அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. நேரமாகிறது. வழியை விடு“ என்றார் பிரம்மா.
   “வரும் போதாவது சொல்வீர்களா....?“ வழியை விடாமல் கேட்டான் சீடன்.
   “சரி. முதலில் என்னை உள்ளே விடு“ என்று சொல்ல அவன் வழிவிட உள்ளே சென்றார்.
   பிரசவம் நடந்தது. இரட்டைக் குழந்தை. ஆண் ஒன்று. பெண் ஒன்று. தலையெழுத்தை எழுதிவிட்டு பிரம்மா வெளியில் வந்தார்.
   வந்ததும், “என்ன எழுதீனீர்?“ என்று கேட்டான் சீடன்.
   “சொல்ல மாட்டேன்“
   “சொல்லாமல் செல்ல உம்மை விடமாட்டேன்“ என்றான் பிடிவாதமாக சீடன்.
   “அது மோசமான விதி. ஆண் குழந்தை மாடு மேய்த்துப் பிழைக்க வேண்டும். பெண் வேசியாகப் பிழைத்து வாழ வேண்டும்“ என்றார் பிரம்மா.
   “அப்படியா....?“ என்று கவலைப்பட்ட சீடன், “இவர்கள் இருவருக்கும் உள்ள செல்வ நிலை என்ன?“ என்று கேட்டான்.
   “அதிகம் இல்லை. ஆணுக்கு ஒரே ஒரு மாடுதான் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு ஒரே ஒரு ஆழாக்கு முத்து தான் விதிக்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு தான் புத்தியுடன் அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டும்“ என்றார் பிரம்மா.
   “அந்த ஒரு மாடும் ஆழாக்கு முத்தும் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்குமா?“ என்று கவலையுடன் கேட்டான் சீடன்.
  “நிச்சயம் கிடைக்கும்“ என்று சொன்ன பிரம்மா மறைந்து விட்டார்.

   சில நாட்கள் கழித்து வந்த முனிவரிடம் நடந்த உண்மையைச் சொல்லி விட்டு சீடன் தனியாக தவம் செய்ய போய்விட்டான்.
   இந்த உண்மையை அறிந்த முனிவரும் அவர் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள்.
   
   ஆண்டுகள் பல கழிந்த பிறகு சீடன் ஞானம் பெற்ற ரிஷியாக திரும்பி அவ்வூருக்கு வந்தான். அங்கிருந்த மாடு மேய்ப்பவனைக் கண்டதும் தன் ஞானத்தால் யார் இவன் என்பதைக் கண்டு கொண்டான்.
   ரிஷி அவனைப்பற்றி சொன்னதும் அவன் மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது. மற்றபடி எதுவும் இல்லை. அவனின் வறுமையைப் பார்த்த ரிஷி “இந்த மாட்டை விற்று வீட்டிற்கும் உன் மனைவி குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கு“ என்றார்.
   “ஐயோ என்னிடம் இருப்பது இந்த ஒரே ஒரு மாடு தான். அதனால் நாங்கள் கால் வயிறு கஞ்சியாவது குடிக்கிறோம். இதுவும் இல்லை என்றால்...“
   “நான் சொல்வதைச் செய்.“ என்றார் ரிஷி.
   அவன் மறுநாளே சென்று மாட்டை விற்றுவிட்டு வீட்டிற்கு வேண்டியதை வாங்கினான். அவன் மனைவிக்குச் சந்தோஷம். ஆனால் மாடு போச்சே என்று இரவெல்லாம் தூங்காமல் கவலைப்பட்டான் அவன்.
  காலை விடிந்ததும் பார்த்தால் அவன் முற்றத்தில் ஒரு மாடு நிற்கிறது.
   அதைக்கண்ட ரிஷி, “இதையும் விற்று விடு.“ என்றார். அதன்படி அவன் செய்ய மறுநாளும் ஒரு மாடு.... இப்படியாக அனைத்து மாடுகளையும் விற்று பொருள் சேர்த்து வளமாக வாழ்ந்தான்.
 
   ஒரு நாள் “உன் சகோதரி எங்கே?“ என்று கேட்டார் ரிஷி. “அவள் பக்கத்து ஊரில் விபச்சாரம் பண்ணுகிறாள்“ என்றான் கவலையாக.
   உடனே அவர் அங்கே சென்று நடந்ததைக் கூறி, “உன்னிடம் எவ்வளவு முத்து இருக்கிறது?“ என்று கேட்டார். அதற்கு அவள் “ஒரு ஆழாக்கு முத்து இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக விற்று தான் பிழைக்கிறேன்“ என்றாள் கவலையாக.
   “அந்த ஆழாக்கு முத்தையும் விற்று விடு. இனி ஆழாக்கு முத்து கொண்டு வராதவர் யாரும் இங்கே வரக்கூடாது என்று சொல்லிவிடு“ என்றார்.
   அவளும் அதன்படி செய்தாள். அன்றிரவு வந்தவன் ஆழாக்கு முத்துடன் வந்தான். மறுநாளும் அப்படியே என்று... அவள் ஒவ்வொரு நாளும் ஆழாக்கு முத்தை விற்று சந்தோஷமாக வாழ்ந்தாள்.

   ரிஷி அவர்களை விட்டு விலகி நிஷ்டையில் ஆழ்ந்தார். பிரம்மா அவன் முன் தோன்றி, “என்னை இந்த மாதிரி சிரமப்படுத்தி விட்டீரே!“ என்றார்.
   “ஏன்? என்ன செய்தேன்?“ என்று கேட்டார் ரிஷி.
   “தினசரி அவனுக்கு ஒரு மாடும், அவளுக்கு ஆழாக்கு முத்தும் கொடுக்க ஆளைத் தேடி சிரமப்படுகிறேனே“ என்றார் பிரம்மா.
   “இது உம் விதி. அவர்களுடைய விதியை அவ்வாறு ஆக்கியதற்கு தண்டனையாக உமக்கு விதித்த விதி இது“ என்றார் சிரித்தவாறு ரிஷி.

கதை சொல்லும் நீதி என்னவென்றால் “விதியையும் மதியால் வெல்லலாம்“ என்பதே.

நன்றி.
அருணா செல்வம்

(எப்போதோ கேட்ட கதை)

32 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கதை நல்லா இருக்கு [ விதியே என்று தான் படித்தேன் ;))))) ] இருப்பினும் மதியுடன் எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

வருண் சொன்னது…

ஆக, பிரம்மா கணக்குப் படி அவன் ஏழையோ பணக்காரணோ, மாடு மேய்க்கணும்? அவ்ளோதான்!

நம்ம சின்ன முனிவர் அவனை ஏழை பணக்கார மாடு மேய்க்கிற்வனா (ஏழை அண்ணாமலை) இல்லாமல் பணக்கார மாடு மேய்ப்பவனா ( (பண்க்கார அண்ணாமலையா) ஆக்கிப்புட்டாரு.

சோபம்பேறி பிரம்மனை பிஸியா நெறையா செய்ய வச்சுட்டாரு! :)

பிரம்மன் கணக்கு : அவன் இன்னும் மாடு மேய்க்கிற்வன்ந்தான்

சின்ன முனிவர் கணக்கு: அவன் இப்போ பணக்காரன்.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் ரெண்டு பேரு கணக்கும் சரியாத்தான் வருது.

ஆனால் அவன் டெய்லி ...

"கட்டாந்தரையில் ஒரு துண்டை விரிப்பேன் தூக்கம் கண்ணை
சொக்குமே அது அந்த காலமே

மெத்தை விரித்தும் சுத்த பண்ணீர் தெளித்து தூக்கம்
கண்ணில் இல்லையே" னு

சோகமாப் பாடிக்கிட்டே இருப்பான்னு நெனைக்கிறேன்! :(

----------------

ஆமா, நீங்க என்ன நினைக்கிறீங்க, அருணா? :)))

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விதியை மதியால் வெல்லலாம்
அருமையான கதை சகோதரியாரே

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. புத்தியிருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்.

'பசி’பரமசிவம் சொன்னது…

நான் எப்போதும் கேட்காத கதை.

உங்கள் கற்பனையில் உருவானதோ?

சுவையான கருத்துச் செறிவுள்ள கதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிரம்மாவிற்கு சரியான தண்டனை தான்...!

KILLERGEE Devakottai சொன்னது…

பொருத்தமாய் கொண்டு வந்து முடித்துள்ளீர்கள் ''கதை''யை பாராட்டுக்கள்.

தற்போது எனது பதிவு ''விசித்திகன்''

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கதை நன்றாக உள்ளது.
விதியை மதியால் வெல்லலாம் சரிதான்! நீதி சரிதான்!... ஆனால் இதில் என்ன மதி யை அந்த முனிவர் உபயோகித்தார்? பிரம்மாவின் விதியை நிர்ணயிக்க இல்லையா? ஆனால் மதியால் உழைக்க வேண்டிய அந்தப் பையனும், பெண்ணும் ஒன்றும் செய்யவில்லையே....முனிவரும் உழைக்காமல் எப்படிக் கொடுத்தார் மாடுகளை?.....ம்ம் எங்கேயோ உதைக்கிறது.....

ஐயோ சகோதரி தங்களிடம் இது நாங்கள் தர்கத்திற்காகவோ, விதண்டாவாதத்திற்காகவோ சொல்லவில்லை.....தாங்கள் கேட்டதைத்தான் சொல்லி இருக்கின்றீர்கள்! உங்களிடம் கேட்கவில்லை இந்தக் கேள்விகளை.....பொதுவாகத்தான்.....மனதில் தோன்றியதைச் சொல்லியுள்ளோம்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சிந்தனைக்கு அறிவான கதை பகிர்வுக்கு நன்றி.
த.ம4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” சொன்னது…

விதியை மதியால் வெல்லலாம்! சுவையான கதை! பகிர்வுக்கு நன்றி!

Unknown சொன்னது…

பிரம்மாவையும் விடாத விதியை எண்ணி சிரித்தேன் !
த ம 5

yathavan64@gmail.com சொன்னது…

நீதி கதையை சொல்லிவிட்டு மீதிக் கதையை கோட்டை விட்டு விடாதீர்கள்!
மதியால் யாராவது வென்றுவிட போகிறார்கள்.
புதுவை வேலு (kuzhalinnisai.blogspot.com)

அருணா செல்வம் சொன்னது…

நானும் விதியே என்று தான் எழுதினேன் ஐயா.
எதையாவது புதியதாக எழுத வேண்டும் என்று நினைத்தால் எதுவும் வரவில்லை. மண்டை காய்ந்து விட்டது என்று நினைக்கிறேன்.....)))

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வை. கோ ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் ரெண்டு பேரு கணக்கும் சரியாத்தானே வருது.

இவ்வளவு நாட்கள் சோகமா இருந்தாரு. இப்போ சந்தோஷமா பாடிகிட்டு இருப்பாருன்னு நினைக்கிறேன்....

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வருண் சார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

இது என் சின்ன வயதில் படித்தது.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நம்பி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

பாவம் இல்ல பிரம்மா....

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கில்லர் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…மாடு மேய்ப்பவனின் விதியை ரிஷி அறிந்ததால் அவனுக்கு என்று விதிக்கப்பட்ட மாட்டை விற்கச் சொன்னார்.

ஆண் குழந்தைக்கு என்றுமே அவனுடன் ஒரு மாடு இருக்க வேண்டியது அவனின் விதி. அதனால் மாட்டை விற்றதும் அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஒரு மாடு அவனிடம் வந்து விடுகிறது. அதை விற்றதும் வேறொரு மாடு கிடைத்து விடுகிறது.

இந்தக் கதையின் தத்துவப்படி..... “விதி“யை அறிந்தால் மட்டுமே அதை வெல்ல முடியும். ஆனால் பொதுப்படையாக முயற்சிக்க வேண்டும் என்பதற்காக விதியை மதியால் வெல்லலாம் என்பது சொல்வழக்கு.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

யாரையும் அது விட்டு வைக்காது என்பதால் தான் திருவள்ளுவரும் ”ஊழ்“ என்ற தலைப்பில் எழுதினார் போல...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

/மதியால் யாராவது வென்றுவிட போகிறார்கள்./

ஐயா நான் எல்லாம் அறிந்த ஞானி இல்லை.

தவிர யானைக்கு அடி சறுக்கினால் அது எழுவது மிகவும் கடினம். நான் சிறு பூனை தான். அடி சறுக்கினாலும் அடி பலமாகப் படாது என்ற தைரியம் என்னுள் இருக்கிறது.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நம்பி ஐயா.

Avargal Unmaigal சொன்னது…

என்ன மண்டை காய்ந்துடுச்சா அச்சசோ எனக்கு முன்னவே தெரிஞ்சு இருந்தா இரண்டு பாட்டில் சரக்கை அனுப்பிச்சு இருப்பேனே

Avargal Unmaigal சொன்னது…


நீங்க பூனையா? முதலில் உங்க போட்டோவை போடுங்க அதுக்கு அப்புறம்தான் நாங்க் முடிவு பண்ண முடியும் நீங்க பூனையா அல்லது யானையா என்று

Iniya சொன்னது…

விதியை மதியால் வெல்வது இப்படித் தானா? உண்மையில் great
முயற்சி செய்து பார்ப்போம் வெல்வதற்கு இதை பின் பற்றி.
பகிர்வுக்கு நன்றி ...!

saamaaniyan சொன்னது…

நீதிக்கதை என்ற நோக்கத்தில் நல்ல கதைதான்...

என் மனதை நெருடிய ஒன்று...

நாளுக்கு ஒரு மாடு ஆணின் வீட்டில் நிற்பதில் சந்தோசம் ! மாடு மேய்த்தலையும் இழிவாக சொல்லுவதற்கில்லை ! ஆனால் அவனின் சகோதரி... ஆழாக்கு முத்துக்கும் விபச்சார நரகத்தில்தான் உழல வேண்டும் என்பதைதான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !
http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html
( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

UmayalGayathri சொன்னது…

நல்ல கதை. நன்றாக எழுதியுள்ளீர்கள்.விதியை மதியால் வெல்லலாம் என்று. நன்றி சகோதரி.

Unknown சொன்னது…

மிகவும் அருமை சகோதிரி