வெள்ளி, 4 ஜூலை, 2014

சாமி இருக்கா? இல்லையா? (முடிவு)


வணக்கம் நட்புறவுகளே....

    போன பதிவில் மருத்துவ மனையிலிருந்து போன் வந்தது என்று முடித்திருந்தேன் இல்லையா....? அதில் தோழியின் கணவர் இப்படி சொன்னார்.

    “டாக்டரை இப்பொழுது தான் பார்த்தோம். தலையில் பலமாக அடிபட்டதால் தையல் போட்டிருக்கிறார்கள். இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கிறது. இன்னும் மயக்கம் தெளியவில்லை. மயக்கம் தெளிந்ததும் தான் எதுவும் சொல்ல முடியும். மற்றபடி உயிருக்கு ஆபத்தில்லை என்று சொன்னார். மதுவிடம் சொல்லுங்கள். அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.“ என்றார்.
   நானும், “சரி“ என்று சொல்லிவிட்டு “எப்படி விபத்து நடந்ததாம்?“ என்று கேட்டேன்.
    “கடையில் மின்சார மாடிபடிகட்டில் இருவரும் விளையாடிக்கொண்டே ஏறியதால் தவறி விழுந்துவிட்டானாம்.... சரி நான் பிறகு போன் பண்ணுகிறேன்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
    எங்களுக்கு அப்போது தான் ஓரளவிற்கு சரியாக மூச்சு விட முடிந்தது. நேராக பூஜை அறையை நோக்கி ஓடினேன். அவள் கணவர் சொன்னதைச் சொன்னேன். உடனே என் தோழி, “நீ நம்பின சாமி உன்னைக் கைவிடலையடி.... பிள்ளையை எப்படியோ காப்பாத்திட்டான்....“ என்று இவள் ஆனந்த கண்ணீருடன் அழ அவளும் சேர்ந்து அழ....
    “போதும் போதும் அழுதது. எழுந்து முகம் கழுவிட்டு எதையாவது  சாப்பிடு. கைக்குழந்தை இன்னும் கொஞ்ச நேரத்தில் முழிச்சிக்கும். அதுக்கு பால் கொடுக்கனும்.“ என்றாள் மாமி.
    ஆனால் மது அதைக் காதில் வாங்கியது போல் தெரியவில்லை. “என் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் தான் நான் சாப்பிடுவேன். அதுவரைக்கும் இங்கே தான் இருப்பேன்“ என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டாள்.
    எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நாங்களும் அவளுடன் பூஜை அறையிலேயே அமர்ந்து விட்டோம்.
    “சாமி இருந்தா அது பாட்டுக்கு இருக்கப் போவுது. இவ அதை பிடிச்சிக்கினு தொங்கிக்கினே இருக்கனுமா... கை புள்ளக்காரி. பச்சை உடம்பு. குழந்தைக்குப் பால் கொடுக்கனும். இப்படி எதுவும் சாப்பிடாமல் இருந்தால் ஒடம்பு என்னாவறது? குழந்தைக்காவது சாப்பிட வேண்டாமா...?“ என்று இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே இருந்தாள் மாமி.
   மது அவள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் முருகன் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுடன் என் தோழியும் சேர்ந்து மனம் உருக சொன்னாள். எனக்கு அதெல்லாம் தெரியாது என்றதால் நான் அவர்களுடன் பேசாமல் அமர்ந்திருந்தேன்.
    அரைமணி நேரம் கழிந்திருக்கும். போன் வந்தது. வழக்கம் போல் பப்பு போனை எடுத்துவிட்டாள். அவள் பிரென்சு மொழியில் பேசியதால் மருத்துவமனையிலிருந்து வந்த போன் இல்லை என்று புரிந்ததால் அவள் பேசிவிட்டு தரட்டும் என்று காத்திருந்தேன். (எனக்கு அப்பொழுது அவ்வளவாகப் பிரென்சு பேச தெரியாது. ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வேன்)
   அவள் போனில், “சாமி இருக்கா இல்லையா என்று இன்னும் முடிவா தெரியலை. ஆனால் சாமி இருக்கிறமாதிரி தான் தெரியுது“ என்றாள்.
    அவள் இப்படி பேசியதைக் கேட்டதும் எனக்குக் குழப்பம். யாரு அது இந்த நேரத்தில் இப்படி கேள்வி கேட்டு பேசுவது....? என்று நினைக்கும் போதே.... பப்பு என்னிடம் போனை நீட்டினாள். எனக்குக் குழப்பமாகவும் தயக்கமாகவும் இருந்ததால்..... “நீயே எதையாவது பேசி போனை வைத்துவிடு“ என்றேன் சாடையாக பப்புவிடம்.
    அவள்.... “இப்போ எதுவும் சொல்ல முடியாது. நீங்க அப்புறமா போன் பண்ணுங்கள்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
    இந்த போன் அந்த நேரத்தில் குழப்பத்தைத் தந்தாலும் அதிலேயே மூழ்கி விடும் அளவிற்கு போக நேரமே இல்லை. மூன்று பேருமே சின்ன சின்ன குழந்தைகள் வைத்திருந்ததால் அவர்களைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.
    அதில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் பிள்ளையின் நினைவு வேறு. அன்றைய பொழுது ஏன்தான் வந்ததோ!! என்றிருந்தது.
    இப்படியே ஒருமணி நேரம் சென்றிருக்கும். மருத்துவமனையி லிருந்து போன் வந்தது. “பையன் விழித்துவிட்டான். எதுவும் பயம் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். ரெண்டு மூனு நாளில் முழுவதும் செக்கப் செய்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிடுவார்களாம். பையன் விழத்ததிலிருந்து அம்மாவைத் தான் கேட்கிறான். அதனால் மதுவைக் கிளம்பி இருக்கச் சொல்லுங்கள். நான் வந்து அழைத்துக் கொண்டு போகிறேன்.“ என்றார் மதுவின் கணவர்.
    எங்களுக்கு அப்பொழுது தான் நிம்மதியான மூச்சே வந்தது.

    சொன்னவர் சற்று நேரத்திலேயே வந்துவிடவும்... என்னை வீட்டிலேயே குழந்தைகளைக் கவனிக்கச் சொல்லிவிட்டு மது, மாமி, தோழி மூவரும் மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள்.
   போகும் போது பப்பு மாமியை வழி மறைத்துக் கேட்டாள்.
   “பாட்டி இப்பவாவது சொல்லு. சாமி இருக்கா இல்லையா? அவர் திரும்பவும் போன் பண்ணுகிறேன் என்றார். சொல்லிட்டு போ.“ என்றாள்.
   மாமி நின்று பப்புவைப் புன்சிரிப்புடன் பார்த்தார். தோழி தன் குழந்தையை ஒரு முறைமுறைத்து “உள்ளே போ. எந்தெந்த நேரத்துல எது கேட்கிறதுன்னு தெரியாமல்.... போ. போய் விளையாடு“ என்று கோபமாகச் சொன்னாள்.
   ஆனால் பப்பு மாமியையே பார்த்தாள். மாமி சொன்னாள் “சாமி இல்லன்னு யாரு கண்ணு சொன்னது? சாமி இருக்குது. இப்போ ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்குது. யாராவது போன் பண்ணி கேட்டாள் சாமி ஆஸ்பத்திரிக்கு போயிருக்குன்னு சொல்லு“ என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
   இதைக் கேட்டதும் நான் பப்புவைப் பார்க்க, பப்பு என்னைப் பார்க்க... ஐயோ.... ஏதாவது லூசுங்கக் கிட்ட மாட்டிக்கிட்டோமா என்று தலையைப் பிச்சிக்கலாம் போல இருந்தது எனக்கு.

   கடைசியில் மறுநாள் தான் தெரிந்தது. மாமியின் கணவர் பெயர் நாராயண சாமியாம். அதைச் சுறுக்கி அவரின் நண்பர்கள் “சாமி“ என்றே கூப்பிடுவார்களாம்.
   போனில் பேசியவர் நண்பர் “சாமி“யைக் கேட்க.... நாங்கள் இருந்த தருவாயில் “காட் சாமி“யை நினைக்க.... பையனுக்கு விபத்து என்றதும் “சாமி“ இல்லை என்று சொன்ன மாமி, அவனுக்கு ஒன்றும் இல்லை என்றதும்.... “சாமி“ இருக்கார் என்று சொன்னது, அதுவும் ஆஸ்பிடலுக்குப் போயிருக்கிறார்.... என்று சொன்னதும்..... இன்று நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.

அருணா செல்வம்

04.07.2014

30 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அட இப்படி ஒரு குழப்பம்! இதை பதிவா போட்டு இங்கேயும் சாமி இருக்கு இல்லைன்னு அடிச்சுக்க வைச்சிட்டீங்களே சகோ! நல்லதொரு பகிர்வு! நன்றி!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

கண்முன் தொிந்தன காட்சிகள்! நன்னடையில்
எண்ணும் எழுத்தும் இணைந்து!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

கண்முன் தொிந்தன காட்சிகள்! நன்னடையில்
எண்ணும் எழுத்தும் இணைந்து!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

கடவுளைப் பற்றிய விவாதம் தொடங்கி விட்டீர்கள் என்று நினைத்தேன். கடைசியில் நல்ல நகைச்சுவையில் முடித்து விட்டீர்கள்!
த.ம.2

ஸ்ரீராம். சொன்னது…

ஐயோ சாமி.... இதான் மர்மமா... சரியாப் போச்சுபோங்க! :))))

Yarlpavanan சொன்னது…

இது
வெற்றுச் சிரிப்பல்ல
சற்றுச் சிந்திக்க வைத்த
சாமி இருக்கா? இல்லையா?
பட்டிமன்றமே!

Unknown சொன்னது…

எல்லோருக்கும் இப்படி பல்பு கொடுத்துட்டீங்களே !
சரி முதல்லே இருந்து ஆரம்பிப்போம் ,,கடவுள் உண்டா ,இல்லையா ?
த ம 4

ஆத்மா சொன்னது…

முதலாவது பதிவு படிக்கும் போதே முடிவு இப்படித்தான் இருக்கும் என்று என் மனது சொல்லியது சரியாப் போச்சு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
அருமை சகோதரியாரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 5

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா...

மாதேவி சொன்னது…

சாமி இருக்கா? இல்லையா? :)))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா இது சாமி-ஆசாமி குழப்பமா! :))))

saamaaniyan சொன்னது…

இரண்டு பாகத்தையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்...

தலைப்பை பார்த்ததும், பதிவின் ஆரம்பத்தை படிக்க ஆரம்பித்ததும் மிக தீவிரமான ஒரு விவாதத்தை ஆரம்பிக்க போகிறீர்களோ என்ற எண்ணத்துடன் படித்தேன்... இறுதியில்.... !

மிக சுவாரஸ்யமான பதிவு. அதுசரி,... சாமி இருக்குங்களா ?!!!

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆரம்பத்தில் பதட்டப்பட வைத்து கடைசியில் சிரிக்க வைத்துவிட்டது...

அருணா செல்வம் சொன்னது…

அடிச்சிக்க வச்சிடேனா....!!!!

ஏங்க இப்படி......

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் (?)
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

காட்சியைக் கண்டு கருத்திட்ட தங்களின்
சாட்சியே சாற்றிடும் சார்பு!

நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

கடவுளைப் பற்றிய விவாதம் செய்யும்
அளவிற்கு போகும் வயது எனக்கு இன்னும் வரவில்லை ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஐயோ சாமி இல்லைங்க....
நாராயண சாமியாம்....)))

நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

சும்மா வெற்றாய்ச் சிரித்துவிட்டுப் போங்கள் ஐயா.
இதைப்பற்றி பட்டிமன்றம் வைக்கும்
அளவிற்கு சிந்தித்தால் “பட்டி“ மன்றமாகி விடும் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

உண்மையில் இது நான் வாங்கிய “பல்பு“ ங்க.

திரும்பவும் முதலில் இருந்தா....?

-கடவுள் உண்டா? இல்லையா...?-

உண்டெண்டால் அது உண்டு.
இல்லையென்றால் அது இல்லை. - க க.

அவ்வளவு பெறிய ஆளே இப்படிச் சொல்லிவிட்டார்.
இனி நாம் என்ன சொல்வது?

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

சிட்டு.... நீங்கள் அதி புத்திசாலிங்க.
எனக்கு இன்னும் அவ்வளவு விவரம் பத்தாதுங்க.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஆத்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஹி ஹி ஹி....

நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

நாராயண சாமி இருக்கிறாருங்க.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஆசாமிகளே சாமி பெயர்களை வைத்திருப்பதால் வந்த
குழப்பம்ங்க....

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

“சாமி இருக்குங்களா....?“

இல்லாதது போல் இருப்பது தான் “சாமி“

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சாமானியன்.

குழந்தைகளுக்கு இங்கே விடுமுறை அல்லவா.... அதனால் தான் வலை பக்கம் அதிகம் வரமுடியவில்லை. வருகிறேன்.

அருணா செல்வம் சொன்னது…

சிரித்தீர்களா.....

தங்களின் வருகைக்கும் சிரித்ததற்கும்
மிக்க நன்றி குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! இப்புடிச் சொல்லிபுட்டாய்ங்களே! நானும் ஏதோ சாமிய பத்திதான் முடிவுக்கு வராய்ங்க போலருக்கு, இல்ல இருக்க இல்லியானு முடிவ நம்மகிட்ட விட்டு நம்மதலைய பிச்சுக்கவைப்பாய்ங்களோனு நினைச்சா....நாராயணசாமியாம்ல......ஹஹாஹா....

நல்ல குழப்பம் ...ஸாரி எங்களுக்கல்ல உங்கள் எல்லோருக்கும் அன்று.......அருமை!