வெள்ளி, 29 மார்ச், 2013

இன்பம் இதுதான்!!





நாடுவிட்டு நாடுவந்த பின்பும் கூட
    நம்மொழியின் மேல்பற்றே உள்ள தையா!
கூடுவிட்டுக் கூடுபாயும் மாயம் போலக்
    குடிகொண்ட நாட்டுமொழி வந்த தையா!
வீடுவிட்டு வெளிசென்றால் விருப்ப மின்றி
    வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா!
கோடுபோட்டு வாழ்ந்தாலும் கொள்கை தன்னைக்
    கூறுபோட்டு விற்கவேண்டி உள்ள தையா!

மேசைநிறைய புத்தகங்கள் இருந்த போதும்
    மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!
வீசைஎன்ன விலையென்று கேட்டுக் காசை
    வீசுவதால் உண்மையன்பு கிடைத்தி டாது!
ஓசையுடன் பாட்டெழுதிப் படைத்திட் டாலும்
    உள்ளிருக்கும் வாசகங்கள் புரிந்தி டாது!
காசைத்தே டும்உலகில் வாழ்ந்த போதும்
    கவிதைமொழி தமிழருக்குக் கசந்தி டாது!

தென்னவரின் தேமதுரத் தமிழின் ஓசை
    தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே
அன்னமிடும் அம்மாகைப் பக்கு வத்தை
    ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே
விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை!
    வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்
மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து
    எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!

நம்மொழியின் மேல்பற்று நன்றே கொண்டு
    நாட்டமுடன் வந்துநாமும் பேசு கின்றோம்!
எம்மொழிக்கே இணையாக மொழியும் உண்டோ?
    இருந்திருந்தால் மனமங்குச் சென்று தங்கும்!
செம்மொழியாய்த் தேமதுரத் தமிழின் ஓசை
    செழிப்பாகக் கேட்டிடவே காத்து நிற்போம்!
எம்முறையும் எம்தமிழின் இனிமை கேட்டால்
    இன்பமிதே! வேறில்லை என்றே சொல்வோம்!

அருணா செல்வம்.

32 கருத்துகள்:

இராய செல்லப்பா சொன்னது…

வலைப்பூ ஆரம்பித்த ஒரே மாதத்தில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், வலைவீசுவோர் (அதாவது bloggers) பெரும்பாலும் மிகவும் ‘பிசி’ யானவர்கள் என்பதே. சோம்பேறிகள் யாராவது வலைவீசுகிறார்களா என்று தெரிந்தால் சொல்லுங்கள்...எனவே, இல்லத்தையும் பார்த்துக்கொண்டு, உள்ளத்தையும் பார்த்துக்கொள்ள வலைவீசும் உங்கள் முயற்சிகள் வாழ்க! எத்தனை முறை கேட்டாலும் இனிப்பன்றி வேறுண்டோ தமிழில்? நல்ல கவிதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பு... பாராட்டுக்கள்...

மிகவும் பிடித்த வரிகள் :

/// விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை!
வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்
மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து
எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்! ///


வாழ்த்துக்கள்...

கவியாழி சொன்னது…

வீடுவிட்டு வெளிசென்றால் விருப்ப மின்றி
வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா!//
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை அப்படி செய்துவிட்டது ஆனால் நம்மவரை நம் மக்களிடமாவது நம்தமிழில் பேசலாமே தவறில்லையே

இளமதி சொன்னது…

மிகமிகச் சிறப்பாக இருக்கிறது உங்கள் கவிதை. உணர்வுபூர்வமான ஆழமான அழகிய சொற்கள். அருமை. வாழ்த்துக்கள் தோழி!

தாய்மொழிக்கு ஈடாக தரணியிலே உண்டோ நம்
தமிழ்மொழியின் தரத்திற்கு நிகரும் வேறுண்டோ
கூறியஉம் கவியினிலே குளிருது என்நெஞ்சம்
பாரினிலே காப்போமிதைப் பற்றுடனே என்றுமே...

அம்பாளடியாள் சொன்னது…

இது தான் இங்கு உள்ள பிரச்சனையே இருந்தாலும் எங்கள்
தமிழ் மக்களின் மொழிப் பற்றைப் போற்றியே யாக வேண்டும்
தோழி .காரணம் அகதியாக வந்தவர்களாயினும் வெளி நாட்டில்
இருப்பவர்களுக்கு இடையில் உள்ள இந்தப் பற்று வர வர
வீறு கொண்டு எழுவதை இங்கு எந்நாளும் பார்க்க முடிகிறது .
சிறந்த கவிதை வாழ்த்துக்கள் தோழி .

கார்த்திக் சரவணன் சொன்னது…

வேலைக்காகவும் தொழிலுக்காகவும் புலம்பெயர் தமிழர்களின் நிலை... எங்கிருந்தாலும் தமிழர்களுடன் தமிழில் பேசுவோம்...

பால கணேஷ் சொன்னது…

தமிழை ரசித்து தமிழுக்காய் எழுதிய கவிதை அருமை. கவிதைக்குக் கீழே தமிழரிடம் தமிழ் பேசுங்கள்ன்னு எழுத்து்க்கள் சுத்திச் சுழல்றதை ரொம்பவே ரசிச்சேன். எப்படி இப்படி பண்ண முடிஞ்சது அருணா?

Yarlpavanan சொன்னது…

கூடுவிட்டுக் கூடுபாயும் மாயம் போலக்
குடிகொண்ட நாட்டுமொழி வந்தாலும் கூடவே
நாடுவிட்டு நாடுபோயும் நம்மொழி மறவாத
நம்முறவுகளை மதிப்போம்!

சிறந்த பதிவைத் தந்த ஆசிரியருக்கு நன்றி.

Prem S சொன்னது…

//எம்முறையும் எம்தமிழின் இனிமை கேட்டால்
இன்பமிதே! வேறில்லை என்றே சொல்வோம்!
//

உண்மை தான்

பெயரில்லா சொன்னது…

சிறப்பான கவிதை. நன்றி.
பிற மொழி கலப்பின்றி பேசுவது என்பது இக்காலத்தில்
நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று. ஆனால் தேவையற்ற இடத்தில்
முழுக்க முழுக்க அந்நிய பாஷையில் அலட்டுவதை கட்டாயம்
தவிர்க்கத்தான் வேண்டும். மற்ற மொழிகள் மூலம் வளர்ச்சி பல கண்ட
நாம் அனைத்து மொழிகளையும் அரவணைத்து செல்வோம்.
தாய்மொழிக்கு , தமிழுக்கு அரியணை அளிப்போம் என்பதே
சரியான மொழிக் கொள்கையாக இருக்க முடியும்.

பூ விழி சொன்னது…

அருமை அருமை அருமை நல்ல படைப்பு இதோபோல் இனியும் படைப்புகள் கொடுக்க வாழ்த்துகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உள்ளத்தை கொள்ளை கொண்ட அழகான கவிதை
தமிழ்மீது அளவு கடந்த பற்று உள்ளவர்களே இதிபோல் கவிதைகளை படைக்க முடியும்.உங்கள் குருவுக்கு நீங்கள் சரியான சீடர் நீங்கள் தான்.

Unknown சொன்னது…


செம்மொழியாய்த் தேமதுரத் தமிழின் ஓசை
செழிப்பாகக் கேட்டிடவே காத்து நிற்போம்!
எம்முறையும் எம்தமிழின் இனிமை கேட்டால்
இன்பமிதே! வேறில்லை என்றே சொல்வோம்!

தங்கச் சுரங்கம் ! தங்கள் கவிதை கருத்திய் அரங்கம்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

// மேசைநிறைய புத்தகங்கள் இருந்த போதும்
மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!// பிடித்த வரிகள்! அருமையான கவிதை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

S.டினேஷ்சாந்த் சொன்னது…

//தென்னவரின் தேமதுரத் தமிழின் ஓசை
தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே
அன்னமிடும் அம்மாகைப் பக்கு வத்தை
ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே
விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை!
வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்
மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து
எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!//என்ன ஒரு அழகு இந்தக் கவிதை

அருணா செல்வம் சொன்னது…

முதன் முதலில் என் வலைக்குள் வந்த உங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐயா, யார் தான் உலகில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள்? ஆனால் ஒவ்வொருத்தர்க் குள்ளும் தங்களுக்குப் பிடித்தத் தங்களின் மனத்தில் பதிந்துள்ள கருத்துக்களை வெளியிட அல்லது வெளியில் தெரிவிக்க முயற்சிக்கிறார்கள்.
இதில் நல்ல அங்கிகாரமும் உடனுக்குடன் கிடைக்கிறது. அதே சமயம் அவர்களின் கருத்துக்கு உடன் படாவதர்கள் தங்களின் மனக் கருத்தையும் பின்னோட்டம் மூலம் சொல்கிறார்கள்.
அந்த பதிவின் கருத்தை ஏற்றுக் கொள்வதோ... ஏற்றுக் கொள்ளாததோ... பதிவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் அப்பதிவைப் படிப்பவர்கள் சிந்திக்கிறார்கள்.
அந்தச் சிந்தனையே படிப்பவருக்கும் பதிவிடுவோருக்கும் நல்ல கருத்தை அல்லது உண்மையைக் கொண்டு சென்று சேர்க்கிறது.
இது ஓர் ஆரோக்கியமான முறையாக இருப்பதால் வலைகளில் பதிகப்பவர்கள் அதிக வேலையுள்ளவர்களாக (பிசி) இருந்தாலும் அதிலிருந்து கொஞ்சம் விடுபட்டு தங்களுக்கென்ற மனக்கருத்தை மற்றவர்களுக்கும் வெளியிட முயற்சிக்கிறார்கள்.
இதில் நிறைகுறைகள் இருந்தாலும் நம் தமிழ்மொழி உலகம் தோறும் இப்படியான வலைத்தளங்கள் மூலமாக பரந்து மேலும் மேலும் விரிகிறது. இந்த வளர்ச்சி பிற்கால சந்ததியினருக்கு நல்ல உறுதுணையாக நிச்சயம் இருக்கும்.
இவையெல்லாம் என் தனிப்பட்டக் கருத்துக்கள்.
நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். அதுமட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் ஊக்குவிப்பும் கொடுங்கள்.

தங்களின் வருகைக்கும் யோசிக்கத் துாண்டிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி செல்லப்பா ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் கவியாழி ஐயா.

நீங்கள் சொன்ன கருத்து நம் நாட்டில் உள்ளவர்களுக்கு
அவசியம் தேவைதான்.
வெளிநாடுகளில் தமிழர்கள் சேர்ந்தால் தமிழில் தான் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் பிறமொழிக்காரர்கள் அந்த நேரத்தில் இருந்தால் அவர்களை மதித்து தமிழில் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

குளிர்தமிழில் கொஞ்சும் இளமதியின் பாக்கள்
களிப்புட்டி நெஞ்சம் கவரும்!- உளியின்
செதுக்கலாய் செய்யும் சிலைபாக்கள் என்மைப்
புதுப்பிட வைக்கும் புகழ்ந்து!

தங்களின் வருகைக்கும் அழகிய கவிதை வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் நல்ல உண்மையைச் சொன்ன கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் பால கணேஷ் ஐயா.
அந்தத் தமிழ் எழுத்தை இணையத்தில் இருந்து தான் எடுத்தேன். ஆனால் அது அப்படிச் சுழலும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் என் கவிதையைப் பதித்துவிட்டு அந்த வார்த்தையை எடுத்து ஒட்டியப் பின் நான் என் பதிவின் முன்னோட்டத்தைப் பார்க்கும் பொழுது தான் அந்த எழுத்துக்கள் சுழலுவதைக் கண்டேன்.
எனக்கும் அப்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்காக நான் எதுவும் தனிப்பட்ட செயலைச் செய்ய வில்லை. (முக்கியமாக எனக்கு இந்த மாதிரி டெக்னிக் எல்லாம் கொஞ்சமும் தெரியாது். “சுட்டு“க்கொண்டு வருவது தான்.)
இதனால் கிடைக்கும் புகழ் யாவும் அதனைச் செய்வர்க்கே சென்று சேரட்டும். நானும் செய்தவரை உங்களுடன் சேர்ந்து புகழ்கின்றேன்.
தவிர கவிதையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பிரேம்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி ஸ்ரவாணி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மலர் பாலன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றியுடன் வணங்குகிறேன் புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பிடித்த வரியைக் குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி கிரேஸ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அப்படியா..?
நன்றி தனபாலன் ஐயா.
நேரமின்னை. அதிக வேலை!
(யார் பதிவையும் படிக்காததால் கருத்திடவும் முடியவில்லை.
அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது)

இருப்பினும் வலைச்சரம் போய் பார்க்கிறேன்.
நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி டினேஷ்சாந்த்.