சனி, 21 டிசம்பர், 2013

கண்ணே கண்ணுறங்கு!!



 

கண்ணே! மணியே! கற்கண்டே!
  கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
   பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
   முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
   பேசும் கிளியே கண்ணுறங்கு!

இன்றோ உனக்கு வேலையில்லை!
   இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
   திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
   அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
   இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!

காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
   காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
   விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
   மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
   நலமாய் இன்றே கண்ணுறங்கு!

அருணா செல்வம்
11.12.13

செவ்வாய், 17 டிசம்பர், 2013

அண்ணாவின் ஆங்கில அறிவு!


                                                    



    அறிஞர் அண்ணாவின் திறமைகளையும் சாதனைகளையும் பாராட்டி அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் அவருக்கு “டாக்டர் பட்டம்“ வழங்கி கெளரவித்தது.
   பட்டம் பெறுவதற்கு முன், பட்டம் பெற இருப்பவர்கள் யேல் பல்கலைக்கழக அறிஞர்களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம்.
   பட்டம் பெற இருப்பவர், அதற்குத் தகுதியானவர் தானா என்பதை அறிய மிகவும் நாகரீகமாக நடத்தப்படும் சோதனைதான் அந்த உரையாடல்.
   அந்த உரையாடலின் போது யேல் பல்கலைக்கழக அறிஞர்கள் அண்ணாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர்.
   “பிகாஸ்என்ற சொல்லை அடுத்தடுத்துத் தொடர்ந்து மூன்று முறை வரும்படி அமைத்து ஓர் ஆங்கில வாக்கியம் அமைக்க வேண்டும். முடியுமா உங்களால்?“
   இது தான் அறிஞர்கள் கேட்ட கேள்வி.
   அதற்கு அண்ணா புன்னகைத்தவாறே, “நோ சென்டன்ஸ் பிகின்ஸ் ஆர் எண்டர் பிகாஸ்”.  பிகாஸ்”, பிகாஸ்இஸ் எ கன்ஜகஷன்! (No sentence begins or ends  with  ‘because’. Because’, ’because’ is a conjunction) என்றார்.
   இதன் தமிழ் விளக்கம் இது.
   ஏனென்றால்என்ற சொல்லைக் கொண்டு எந்த ஒரு வாக்கியமும் தொடங்குவதுமில்லை. முடிவதுமில்லை. “ஏனென்றால்”, ஏனென்றால்என்பது ஓர் இணைப்புச் சொல்“
   அறிஞர் அண்ணாவின் இந்த ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்த யேல் பல்கலைக்கழக அறிஞர்கள், டாக்டர் பட்டம் பெற அவர் தகுதியுடையவரே என்பதைப் புரிந்து கொண்டனர்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்

வெள்ளி, 13 டிசம்பர், 2013

நான் “கோழி வறுவல்“ செய்த கதை! (நகைச்சுவை)

(சைவம் மட்டும் உண்பவர்கள் தயவுசெய்து படத்தைப் பார்க்காமல் பதிவை மட்டும் சுவையுங்கள். நன்றி)


நட்புறவுகளுக்கு வணக்கம்.
   என் ஆசிரியர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் ஒருநாள் எண்சீர் விருத்தத்தின் இலக்கணத்தைத் தொலைபேசியில் சொல்லிக் கொடுத்துவிட்டு, “இந்த இலக்கணப்படி நாளை ஒரு பாடலை எழுதி (கணிணியில்) அனுப்பிவிடு“  என்றார்.
   ஆனால் நான் எழுத மறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அவரே என்னைத் தொலைபேசியில் அழைத்துப் “பாட்டை எழுதிவிட்டாயா...? என்று கேட்டார்.
   நான், “ஐயோ... மறந்துவிட்டேன். இன்றிரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்“  என்று சொல்லிவிட்டு சமைக்கச் சென்றேன்.
   அன்று, என்ன கருத்தில் கவிதை எழுதுவது? என்று சிந்தித்தபடி கோழி வறுவல் சமைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் இந்த ஞாபகம்.
   இந்த கோழி வறுவலையே ஒரு பாடலாக எழுதினால் என்ன என்று தோன்றியது.
   சமைத்து முடித்துவிட்டு இந்தப்பாடலைக் கடகடவென்று கணிணியில் அடித்து அனுப்பிவிட்டேன்.
   பிறகு தான் யோசித்தேன். நாம் செய்தது தவறோஎன்று.
   உடனே கவிஞர் அவர்களுக்கு... நீங்கள் கேட்டதும் அவசரத்தில் இப்படி ஒரு பாடலை எழுதிவிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும். இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தாலும் பரவாயில்லை. ஆனால் தயவு செய்து இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று இன்னொரு மின்அஞ்சலை உடனே அனுப்பினேன்.
   காத்திருந்தேன். அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. மறுநாள் என் படைப்பைப் பாராட்டி பதில் அனுப்பினார். ஆனால் இதை என்னைத் தெரிந்த அனைவரிடமும் சொல்லிவிட்டார். எனக்கு அப்பொழுது மிகவும் வெட்கமாக இருந்தது.
   பிறகு அவர், “அருணா... பழைய சமையல் குறிப்புகள் அனைத்தும் கவிதைகளில் தான் எழுதப்பட்டு உள்ளது. தற்பொழுது அப்படி யாரும் எழுதுவதில்லை. நீயே யாரும் சொல்லாமல் எழுதி இருக்கிறாய். உண்மையில் உண்னை பாராட்டுகிறேன்“ என்று சொன்ன பிறகு தான் என் மனம் ஆறுதல் அடைந்தது.

நான் எழுதிய முதல் எண்சீர் விருத்தம் இதுதான்.


கோழி வறுவல்!

தொட்டவுடன் சுடுமளவில் எண்ணெய் வைத்துத்
   தோலெடுத்த கோழியினை வதக்கி விட்டுப்
பட்டையையும் கிராம்பையும் பதமாய்த் தட்டிப்
   பட்டுப்போல் அரைத்துவைத்த இஞ்சி பூண்டும்
வெட்டிவைத்த வெங்காயம் மிளகாய் போட்டு
   வேண்டுகின்ற மசாலாத்தூள் உப்பும் சேர்த்துச்
சொட்டுத்தண்ணீர் இல்லாமல் வறுத்து வைத்தால்
   சோறுவேண்டாம் என்றவனும் திரும்பிப் பார்ப்பான்!

(காய் – காய் – மா – தேமா - காய் – காய் – மா – தேமா  என்ற இலக்கணத்தில் எழுதினேன்.) 
அருணா செல்வம்.

புதன், 11 டிசம்பர், 2013

யாருக்கு எந்த இடம்? (நகைச்சுவை)


   ஒருவர் ஒரு துறையில் வல்லுநராக இருந்தால் அவருக்கு அந்தத் துறையைச் சார்ந்த இடங்களில் பங்களிப்புத் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும். நான் படித்துச் சிரித்தேன். நீங்களும் படித்துச் சிரியுங்கள்

   ஒரு சமயம் ஒரு கால்பந்தாட்ட சங்கம் தாங்கள் நடத்தும் ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்குத் தலைமை தாங்க ஜெய்ப்பூர் மகாராஜாவை அழைத்தனர்.
   மகாராஜாவிற்குக் கால்பந்தாட்டம் பற்றி எதுவுமே தெரியாது. கால்பந்தாட்டத்தை அவர் ஒருமுறை கூடப் பார்த்ததும் இல்லை.
   இருந்தாலும் அழைப்பு விடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, குறிப்பிட்ட நாளில் கால்பந்தாட்டப் போட்டிக்குத் தலைமை தாங்கச் சென்றார்.
   போட்டி துவங்கியது.
   இரு அணிகள் மோதின.
   பந்து இங்கும் அங்கும் பறந்தது.
   வீரர்கள் மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடினர்.
   விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த மகாராஜாவிற்கு ஒரே எரிச்சல். சட்டென்று எழுந்து அரண்மனைக்குக் கிளம்பிவிட்டார்.
   மறுநாள், அந்தக் கால்பந்தாட்ட கிளப்புக்கு 51 கால்பந்துகளை அனுப்பி வைத்தார் மகாராஜா. கூடவே ஒரு கடிதமும் இருந்தது.
   கிளப் தலைவர் கடிதத்தைப் படித்தார்.
   அதில்...
   சங்க நிர்வாகி அவர்களுக்கு மகாராஜா எழுதிக்கொள்வது.
   நேற்று நடந்த விளையாட்டில் பல வீர்ர்கள் ஒரு பந்துக்காக முட்டி மோதி சண்டை போட்டுக் கொண்டதைப் பார்த்தேன். கேவலம் ஒரு பந்துக்காக அவ்வளவு சண்டையா? அதனால்தான் 51 பந்துகளை அனுப்பியிருக்கிறேன். ஆளுக்கு ஒரு பந்தாகக் கொடுத்துச் சண்டைகிண்டை போடாமல் சந்தோஷமாக விளையாடச் சொல்லுங்கள்.  இப்படிக்கு மகாராஜா“
   என்று எழுதி இருந்தது. இதைப்படித்த கிளப் தலைவருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இதைப்படித்த உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

படித்ததில் சிரித்தது.

அருணா செல்வம்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

உலகில் நானே உயர்ந்தவன்!!


   ஒரு சமயம் யோகி ஒருவர் ஒரு ஞானியிடம் வந்தார்.
   அவர் ஞானியிடம், “சாமீ... எனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறது. பூமிக்குக் கீழ் நீண்ட நேரம் புதையுண்டு மூச்சை அடக்கும் சக்தி இருக்கிறது. தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருக்கும் அபரிமிதமான சக்தியும் இருக்கிறது“ என்றார் பெருமையாக.
   ஞானி அவர் சொன்னதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. யோகிக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “சாமீ... இந்த விசயங்கள் எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை அல்லவா...? அப்படியென்றால் உலகில் நான் மட்டும் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதைத் தங்களின் வாயால் சொல்லுங்கள்“ என்றான்.
   ஞானி அந்த யோகியைக் கூர்ந்து பார்த்தார்.
   பேச்சில் மட்டுமல்ல, அவரது கண்களிலும் அகந்தை சுடர் விட்டது.
   அதை அழிக்க எண்ணிய ஞானி, “ஐயனே... பாருங்கள்... பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றன. புழுக்கள், விஷ ஜந்துக்கள் போன்றவை பூமிக்கடியில் நீண்ட காலம் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீருக்குள்ளேயே பிறந்து வாழ்கின்றன. இவையெல்லாம் எனக்கும் சாத்தியம் என்கிறீர்கள். அப்படிப்பட்ட அற்ப ஜந்துக்களைப் போலத்தான் இப்போது நீங்கள் எனக்குத் தெரிகிறீர்கள். அவையெல்லாம் தெரிந்ததால் உங்களுக்கு என்ன பயன்...?“ என்று கேட்டார்.
   யோகி விழித்தார்.
   “பறப்பதால், பூமிக்கடியில் மூச்சை அடக்குவதால் நீங்கள் அடையப் பாகும் லாபம் என்ன?“ திரும்பவும் கேட்டார் ஞானி.
   யோகி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.
   ஞானி புன்னகைத்து, “உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. கருணை போன்ற நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும். அகந்தை போன்ற தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும். இவற்றை விட்டு விட்டு பறப்பதாலும் மூச்சை அடக்குவதாலும் யாதொரு பயனும் இல்லை.“ என்றார்.
   “உலகிலேயே நான் தான் உயர்ந்தவன், வஸ்தாது“ என்ற அகந்தை கொண்டிருந்த அந்த யோகி, ஞானியின் விளக்கத்தைக் கேட்டு வெட்கித் தலை குனிந்தான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

திங்கள், 9 டிசம்பர், 2013

தேவையின்றி அணைப்பவள்!!


பாவையவள் விழிகளுக்கும் வாய்தான் உண்டோ!?
   பார்வையாலே பேசிடுதே கதைகள் கோடி!
பூவையவள் புன்சிரிப்பில் காந்தம் உண்டோ!?
   போகையிலே உயிர்ஈர்த்தே ஒட்டும் தேடி!
சேவைகளைச் செய்தால்தான் நன்மை உண்டோ!?
   சில்லென்று பார்த்தாலே வருமே ஓடி!
தேவைகளை அறியாத காதல் உண்டோ!
   தெரிந்துவிட்டால் பிரிவாளோ என்னை ஊடி?

பட்டென்று பேசினாலும் அவளின் வார்த்தை
   பாசத்தின் பிணைப்பென்றே அறிந்து கொண்டேன்!
சட்டென்று கோபமுடன் செல்லும் போது
   சரிவினிலே ஏறுகின்ற பொறுமை கண்டேன்!
சிட்டென்று சிலநேரம் பறந்த போதும்
   சிந்தனையைத் தந்துசென்ற அன்பில் நின்றேன்!
திட்டென்று சொல்லிவிட்டு நிற்கும் போதோ
   தேவையின்றி அணைப்பவளை என்ன செய்வேன்?

எண்சீர் விருத்தம்.

அருணா செல்வம்.
09.12.2013

வெள்ளி, 6 டிசம்பர், 2013

பணக்காரன்! (சிறுகதை)


   பெட்ரோலுக்குப் பணத்தை எண்ணி டிரைவரிடம் கொடுத்து விட்டு நிமிரும் போது தான், தன் பால்ய நண்பன் செந்திலைப் பார்த்தான் மனோகரன்.
   “செந்தில்...“ என்று கூப்பிட்டதும் ஓடி வந்து கைகுலுக்கினான். நட்பின் உண்மையைக் கையின் தொடுதலிலும் முக மலர்ச்சியிலும் இருவரும் உணர்ந்தார்கள்.
   “என்ன மனோ.... இவ்வளவு காலையில இங்க வந்திருக்கிறே...?“ ஆச்சர்யத்துடன் கேட்டான் செந்தில்.
   “பொண்ணுக்குக் கல்யாணம் வைச்சிருக்கிறேன். அதுக்காகத்தான் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். அவரு காலையிலேயே இங்கே ஜாகிங் வருவார். பார்த்துப் பேசிட்டேன். “ என்றான் மனோகரன்.
   “யாரு... நம்ம ரம்யாவுக்கா....? பேஷ் பேஷ்... ரொம்ப சந்தோஷம்டா.“
   “நீ எப்போ உன் பையனுக்குக் கல்யாணம் பண்ண போறே...?“
   “ம்... பொண்ணெல்லாம் பெரிய இடத்துல பார்த்துட்டேன். கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வைக்க உன் வீட்டுக்கு வர்றேன்.“
   “சீக்கிரம் வா. ஆமா... நீ எங்க இந்த நேரத்துல?“
   “நான் எப்பவும் ஜாகிங் வருவேன்.“
   “நடந்தா போவே...? வாயேன்... என் வண்டிலிலேயே போயிடலாம்“
   “இல்ல... போற வழியில கையோட பால் காய்கறி வாங்கிக்கினே வீட்டுக்குப் போயிடுவேன்.“ என்றான் செந்தில்
   “சரி செந்தில். நான் கிளம்புறேன்“
   “இந்த நேரத்துல நிறைய டிராபிக் இருக்கும். பார்த்துப் போ.“ என்று கையசைத்து அனுப்பிவிட்டு நடையைத் தொடர்ந்தான் செந்தில்.
  
   காரின் பின் இருக்கையில் சாய்ந்து கொண்டு யோசித்தான் மனோகரன். இருவருக்கும் ஒரே வயது. ஒரே படிப்பு. இருவரும் ஒரே நேரத்தில் தான் வேலையில் சேர்ந்தார்கள். ஆனாலும், செந்திலை விட தான் அதிக சம்பளம் வாங்கும் கர்வம் கூட இருந்தது மனோகரனுக்கு.
   இருந்தாலும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கிய செந்தில் தன் மகனையும் மகளையும் மேல் படிப்பு படிக்க வைத்துப் போன வருடம் மகளுக்கு மிகவும் வசதியான இடத்தில் பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு சீதனம் கொடுத்துச் செலவு செய்து கல்யாணம் செய்து வைத்தான்.
   அடுத்து பையனுக்கும் கல்யாணம் செய்ய இருக்கிறான். இரண்டு வீடு கட்டிவிட்டான். விலை உயர்ந்த கார் வீட்டின் முன் நிற்கும் அளவிற்கு வசதியாக இருக்கிறான்.
   ஆனால் அவனைவிட அதிகமாக சம்பாதித்த தான், இன்று மகளுக்குக் கல்யாணம் செய்ய அடுத்தவரிடம் கடன் கேட்கும் நிலையில் இருக்கிறோமே... என்று வருத்தத்துடன் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
   செந்தில் ஒரு முட்டாள். இவ்வளவு பணம் இருந்தும்.. வீட்டில் கார் இருந்தும் அனுபவிக்கத் தெரிகிறதா...? கஞ்சன். இவ்வளவு கஞ்சத்தனமாக இருந்தால் சேர்த்து வைக்கலாம் தான்... என்று தன் மனத்தைத் தானே தேற்றிக்கொண்டான்.
   “இந்தாம்மா.... நாளையிலேர்ந்து நான் பால் வாங்கி வந்து தர மாட்டேன். உன் புருஷனை வாங்கிக் கொடுக்கச் சொல்லு. இல்லைன்னா நீயே எழுந்து போய் சம்பாதித்து வாங்கி சாப்பிடு.“ என்று செந்திலின் குரல் அருகில் கேட்க திரும்பிப் பார்த்தான் மனோகரன்.
   கார் ஒரு சந்தின் முனையில் டிராபிக்கில் நின்றிருந்தது. அந்தத் தெரு ஓரத்தில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் தான் செந்தில் சத்தமாக இப்படிச் சொல்லிக்கொண்டு இருந்தான்.
   “ஐயா... சாமீ... நீங்க இவ்வளவு செஞ்சதே பெரிய புண்ணியமுங்க. புள்ளைய பெத்துட்டு என்னால நகர முடியாத நேரத்துல எனக்கு உங்க செலவுல பால் வாங்கி இத்தனை நாளும் கொடுத்தீங்க. உங்கள நா வாழ்நாள் பூரா மறக்கமாட்டேங்க. நீங்க உங்க புள்ள குட்டியோட நல்லா இருக்கனும் சாமி...“ அவள் பெரிய கும்பிடு போட்டாள்.
   “அட.. இவனைப்போய் கஞ்சன்னு நினைத்தோமே... என்று நினைத்துக்கொண்டே செந்திலைப் பார்த்தான். அவன்,
   “ரெண்டு கிலோ பழம் அம்பது ரூபாய்ன்னுற. ஆனா.. ஒரு கிலோ பழத்தை முப்பது ரூபாய்க்குத் தான் தருவேன்னு சொல்லுற. இது எப்படி நியாயம்.“ செந்தில் ஒரு தள்ளுவண்டி பழக்கடைக் காரனிடம் பேரம் பேசிக்கொண்டு இருந்தான்.
   “சார்... ரெண்டு ரெண்டு கிலோவா வித்தாத்தான் இன்னைக்குள்ள பழத்தை எல்லாம் வித்திட முடியும்“ என்றான் வியாபாரி.
   “அப்போ சரி. ரெண்டு கிலோ பழம் கொடு. இந்தாங்க மேடாம் நீங்களும் ஒரு கிலோ தானே கேட்டீங்க. ரெண்டு பேரும் பிரிச்சிக்கலாம்“ அவன் சொல்ல பக்கத்தில் இருந்த பெண் தலையாட்டினாள்.
   “சே... ஒரு கிலோவிற்கு ஐந்து ரூபாய் தானே அதிகம்... கொடுத்துட்டு வாங்கிக்கொண்டு போய் இருக்கலாம். இதுக்குபோய் பேரம் பேசிக்கொண்டு... என்று எண்ணியபடி மனோகரன் சுற்றும் முற்றும் பார்த்தான். “என்ன டிரைவர்... இவ்வளவு நேரம் கார் ஓட்டிக்கினு வந்திங்க... என் பிரெண்ட் நடந்துக்கினே இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்...“ ஆச்சர்யத்துடன் கேட்டான்.
   “ஆமாம் சார். அவர் நடைபாதையில் நடந்தே வந்திட்டாரு. நாம காருல வருவதால டிராபிக்குல மாட்டிக்கினு நிக்கிறோம். ஆனால் பாருங்கள் சார்... அவர் அஞ்சு ரூபாயாக இருந்தாலும் அதை விட்டுக்கொடுக்காமல் எப்படி பேசி வாங்கிட்டார்.“ என்றார் அந்த வயதான டிரைவர்..
   “ஒரு அஞ்சு ரூபாய் தானே... கஞ்சன். அதை மிச்சப்படுத்தி என்னவாகிடப் போகுது...“ சற்றுக் கோபத்துடன் சொன்னான் மனோகரன்.
   “இது கஞ்சத்தனம் இல்லை சார். சிக்கனம். நூறு ரூபா சம்பாதித்தாலும் அதுல ஒத்தை ரூபாய சேமிச்சி வைக்கனும். நிறைய பணம் சாம்பாதிக்கிறவங்க எல்லாம் பணக்காரன் இல்லைங்க. நாளைக்குன்னு சேமிச்சி வைக்கிறவன் தாங்க பணக்காரனாக முடியும். இந்த சூட்சமத்தோட எல்லாரும் வாழுறது இல்லைங்க“ என்றார் டிரைவர்.
   செந்திலுக்கு எப்படி இவ்வளவு வசதி வந்தது என்பது புரிந்தது மனோகரனுக்கு. திரும்பி செந்திலைத் தேடினான். அவன் நடந்தே ரொம்ப தூரம் போய்விட்டு இருந்தான்.

அருணா செல்வம்

07.12.2013

வியாழன், 5 டிசம்பர், 2013

யார் பெருந்தீனிக்காரர்? (சிரிக்க-சிந்திக்க)


   மொகலாயப் பேரரசர் அக்பருக்கு மாம்பழம் என்றால் உயிர். அதற்காகவே அவரது அரண்மனைத் தோட்டத்தில் சுவையான மாம்பழங்களைத் தரும் மாமரங்கள் பல இருந்தன.
   ஒருநாள்...
   அக்பர் உண்டு மகிழ்வதற்காகத் தோட்டத்திலிருந்து பல சுவையான மாம்பழங்கள் பறிக்கப்பட்டு அவர் முன்னே கொண்டு வந்து வைக்கப்பட்டன.
   அக்பர் அரசியாருடன் மாம்பழங்களைச் சாப்பிட விரும்பி அவரையும் அழைத்து மாம்பழங்களைச் சாப்பிடச் சொன்னார்.
   “எனக்கு வேண்டாம். நீங்கள் சாப்பிடுங்கள்“ என்றார் மாம்பழத்தை விரும்பாத அரசியார்.
   உடனே அக்பர் மகிழ்ச்சியுடன் பழங்களைச் சுவைத்துச் சாப்பிட்டார். அதை அரசியார் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.
   அக்பரோ பழங்களைச் சாப்பிட்டு சாப்பிட்டு அதன் கொட்டைகளை அரசியரின் அருகே போட்டுக் கொண்டிருந்தார்.
   அப்போது மதியூகி பீர்பால் அங்கு வந்தார்.
   உடனே அக்பர் அரசியாரைக் கிண்டல் செய்ய எண்ணி, “ஓய் பீர்பால்.... பார்த்தீரா இந்த அநியாயத்தை? அரசியார் எத்தனை பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார். இது பெருந்தீனி தின்பதற்குச் சமம் அல்லவா?“ என்றார்.
   அதைக் கேட்ட அரசியார் திகைத்தார்.
   பீர்பால் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்டு அக்பரின் மூக்கை உடைக்க எண்ணினார்.
   “அரசே... அரசியை விட நீங்கள் தான் பெருந்தீனிக்கார்ர்“ என்றார்.
   அதைக் கேட்ட அரசர், “பீர்பால்... எதை வைத்து என்னைப் பெருந்தீனிக்காரன் என்கிறாய்?“ என்று கேட்டார்.
   அதற்கு பீர்பால், “அரசே... அரசியாரோ கொட்டைகளையாவது மீதம் வைத்திருக்கிறார். நீங்களோ கொட்டைகளையும் சேர்த்து விழுங்கி விட்டிருக்கிறீர்களே....“ என்றார் சிரித்தபடி.
   அதைக் கேட்ட அக்பர் அசடு வழிந்தார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

கோபமா என்னுடன்?



காலை உறக்கம் கலைந்ததுமே
    கண்முன் வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
    விழுங்கு வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
    சூழும் மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
    நுவலும் பொருளில் தெரிகின்றாய்!

என்னில் உள்ளே இருந்தாலும்
    எதிரில் காண ஓடிவந்தால்
“என்னை ஏனோ மறந்துவிட்டாய்!“
    என்றே கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
    ஊடல் கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
    என்தன் உயிரே என்செய்வேன்?!  
     
எந்த நிலையில் உனைமறந்தேன்
    என்று தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
    அந்தக் கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
    சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
    இருக்கும் நேரம் அதுவென்பேன்!

மறத்தல் என்பது மனிதருக்கு
    மகேசன் கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
    சீராய் வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
    மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
    இனிமை அதுவே தருமென்பேன்!
      
அருணா செல்வம்.
04.12.2013


இந்த அறுசீர் விருத்தத்தை ஆணுக்காக பெண் பாடியதாகவோ, அல்லது பெண்ணுக்காக ஆண் பாடியதாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி.

திங்கள், 2 டிசம்பர், 2013

ஐம்பது சதவிகித முட்டாள்கள்!! (சிரிக்க-சிந்திக்க)


   உலகில் கம்யுனிஸ சித்தாந்தத்தை ஏற்படுத்தியவர், ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் (Karl Marx . 1818-1883 ) இவரும் இவரது நண்பருமான ஃபிரெடரிக் ஏங்கெல்ஸீம் (Friedrich Engels) இணைந்து எழுதிய “டாஸ் கேபிடல்“ என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. இந்நூலை “கம்யுனிஸத்தின் பைபில்“ என்றும் குறிப்பிடுவர்.
   திடீரென ஏற்படும் சிக்கலில் இருந்து விடுபடுவதில் கைதேர்ந்தவர், கார்ல் மார்க்ஸ்.
   ஒரு சமயம் அமெரிக்காவில் செனட் சபையில் பேசுவதற்காக கார்ல் மார்க்ஸ் அழைக்கப் பட்டிருந்தார்.
   உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசுவதில் கார்ல் மார்க்ஸ் வல்லவர்.
   அவர் தன் பேச்சினூடே, “அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள்“ என்றார்.
   அதைக்கேட்ட செனட் சபையே ஒரு கணம் ஆடிப்போய் விட்டது.
   எங்கும் கூச்சல் குழப்பம் எழுந்தது.
   “அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள்“ என்று நீங்கள் பேசியதை உடனே வாபஸ் பெற வேண்டும்“ என்று பலர் கத்தினர்.
   உடனே கார்ல் மார்க்ஸ், “சரி சரி... அமைதியுடன் இருங்கள். அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் முட்டாள்கள் என்று நான் பேசியது தவறு என்று நீங்கள் கருதுவதால் நான் பேசியதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதனால் அவ்விடத்தில் அமெரிக்கர்கள் ஐம்பது சதவிகித்தனர் அறிவாளிகள் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்“ என்றார்.
   அதைக் கேட்ட கூட்டத்தினர், அடுத்து என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துப் போய் நின்று விட்டனர்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.