வெள்ளி, 6 டிசம்பர், 2013

பணக்காரன்! (சிறுகதை)


   பெட்ரோலுக்குப் பணத்தை எண்ணி டிரைவரிடம் கொடுத்து விட்டு நிமிரும் போது தான், தன் பால்ய நண்பன் செந்திலைப் பார்த்தான் மனோகரன்.
   “செந்தில்...“ என்று கூப்பிட்டதும் ஓடி வந்து கைகுலுக்கினான். நட்பின் உண்மையைக் கையின் தொடுதலிலும் முக மலர்ச்சியிலும் இருவரும் உணர்ந்தார்கள்.
   “என்ன மனோ.... இவ்வளவு காலையில இங்க வந்திருக்கிறே...?“ ஆச்சர்யத்துடன் கேட்டான் செந்தில்.
   “பொண்ணுக்குக் கல்யாணம் வைச்சிருக்கிறேன். அதுக்காகத்தான் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். அவரு காலையிலேயே இங்கே ஜாகிங் வருவார். பார்த்துப் பேசிட்டேன். “ என்றான் மனோகரன்.
   “யாரு... நம்ம ரம்யாவுக்கா....? பேஷ் பேஷ்... ரொம்ப சந்தோஷம்டா.“
   “நீ எப்போ உன் பையனுக்குக் கல்யாணம் பண்ண போறே...?“
   “ம்... பொண்ணெல்லாம் பெரிய இடத்துல பார்த்துட்டேன். கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வைக்க உன் வீட்டுக்கு வர்றேன்.“
   “சீக்கிரம் வா. ஆமா... நீ எங்க இந்த நேரத்துல?“
   “நான் எப்பவும் ஜாகிங் வருவேன்.“
   “நடந்தா போவே...? வாயேன்... என் வண்டிலிலேயே போயிடலாம்“
   “இல்ல... போற வழியில கையோட பால் காய்கறி வாங்கிக்கினே வீட்டுக்குப் போயிடுவேன்.“ என்றான் செந்தில்
   “சரி செந்தில். நான் கிளம்புறேன்“
   “இந்த நேரத்துல நிறைய டிராபிக் இருக்கும். பார்த்துப் போ.“ என்று கையசைத்து அனுப்பிவிட்டு நடையைத் தொடர்ந்தான் செந்தில்.
  
   காரின் பின் இருக்கையில் சாய்ந்து கொண்டு யோசித்தான் மனோகரன். இருவருக்கும் ஒரே வயது. ஒரே படிப்பு. இருவரும் ஒரே நேரத்தில் தான் வேலையில் சேர்ந்தார்கள். ஆனாலும், செந்திலை விட தான் அதிக சம்பளம் வாங்கும் கர்வம் கூட இருந்தது மனோகரனுக்கு.
   இருந்தாலும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கிய செந்தில் தன் மகனையும் மகளையும் மேல் படிப்பு படிக்க வைத்துப் போன வருடம் மகளுக்கு மிகவும் வசதியான இடத்தில் பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு சீதனம் கொடுத்துச் செலவு செய்து கல்யாணம் செய்து வைத்தான்.
   அடுத்து பையனுக்கும் கல்யாணம் செய்ய இருக்கிறான். இரண்டு வீடு கட்டிவிட்டான். விலை உயர்ந்த கார் வீட்டின் முன் நிற்கும் அளவிற்கு வசதியாக இருக்கிறான்.
   ஆனால் அவனைவிட அதிகமாக சம்பாதித்த தான், இன்று மகளுக்குக் கல்யாணம் செய்ய அடுத்தவரிடம் கடன் கேட்கும் நிலையில் இருக்கிறோமே... என்று வருத்தத்துடன் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
   செந்தில் ஒரு முட்டாள். இவ்வளவு பணம் இருந்தும்.. வீட்டில் கார் இருந்தும் அனுபவிக்கத் தெரிகிறதா...? கஞ்சன். இவ்வளவு கஞ்சத்தனமாக இருந்தால் சேர்த்து வைக்கலாம் தான்... என்று தன் மனத்தைத் தானே தேற்றிக்கொண்டான்.
   “இந்தாம்மா.... நாளையிலேர்ந்து நான் பால் வாங்கி வந்து தர மாட்டேன். உன் புருஷனை வாங்கிக் கொடுக்கச் சொல்லு. இல்லைன்னா நீயே எழுந்து போய் சம்பாதித்து வாங்கி சாப்பிடு.“ என்று செந்திலின் குரல் அருகில் கேட்க திரும்பிப் பார்த்தான் மனோகரன்.
   கார் ஒரு சந்தின் முனையில் டிராபிக்கில் நின்றிருந்தது. அந்தத் தெரு ஓரத்தில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் தான் செந்தில் சத்தமாக இப்படிச் சொல்லிக்கொண்டு இருந்தான்.
   “ஐயா... சாமீ... நீங்க இவ்வளவு செஞ்சதே பெரிய புண்ணியமுங்க. புள்ளைய பெத்துட்டு என்னால நகர முடியாத நேரத்துல எனக்கு உங்க செலவுல பால் வாங்கி இத்தனை நாளும் கொடுத்தீங்க. உங்கள நா வாழ்நாள் பூரா மறக்கமாட்டேங்க. நீங்க உங்க புள்ள குட்டியோட நல்லா இருக்கனும் சாமி...“ அவள் பெரிய கும்பிடு போட்டாள்.
   “அட.. இவனைப்போய் கஞ்சன்னு நினைத்தோமே... என்று நினைத்துக்கொண்டே செந்திலைப் பார்த்தான். அவன்,
   “ரெண்டு கிலோ பழம் அம்பது ரூபாய்ன்னுற. ஆனா.. ஒரு கிலோ பழத்தை முப்பது ரூபாய்க்குத் தான் தருவேன்னு சொல்லுற. இது எப்படி நியாயம்.“ செந்தில் ஒரு தள்ளுவண்டி பழக்கடைக் காரனிடம் பேரம் பேசிக்கொண்டு இருந்தான்.
   “சார்... ரெண்டு ரெண்டு கிலோவா வித்தாத்தான் இன்னைக்குள்ள பழத்தை எல்லாம் வித்திட முடியும்“ என்றான் வியாபாரி.
   “அப்போ சரி. ரெண்டு கிலோ பழம் கொடு. இந்தாங்க மேடாம் நீங்களும் ஒரு கிலோ தானே கேட்டீங்க. ரெண்டு பேரும் பிரிச்சிக்கலாம்“ அவன் சொல்ல பக்கத்தில் இருந்த பெண் தலையாட்டினாள்.
   “சே... ஒரு கிலோவிற்கு ஐந்து ரூபாய் தானே அதிகம்... கொடுத்துட்டு வாங்கிக்கொண்டு போய் இருக்கலாம். இதுக்குபோய் பேரம் பேசிக்கொண்டு... என்று எண்ணியபடி மனோகரன் சுற்றும் முற்றும் பார்த்தான். “என்ன டிரைவர்... இவ்வளவு நேரம் கார் ஓட்டிக்கினு வந்திங்க... என் பிரெண்ட் நடந்துக்கினே இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்...“ ஆச்சர்யத்துடன் கேட்டான்.
   “ஆமாம் சார். அவர் நடைபாதையில் நடந்தே வந்திட்டாரு. நாம காருல வருவதால டிராபிக்குல மாட்டிக்கினு நிக்கிறோம். ஆனால் பாருங்கள் சார்... அவர் அஞ்சு ரூபாயாக இருந்தாலும் அதை விட்டுக்கொடுக்காமல் எப்படி பேசி வாங்கிட்டார்.“ என்றார் அந்த வயதான டிரைவர்..
   “ஒரு அஞ்சு ரூபாய் தானே... கஞ்சன். அதை மிச்சப்படுத்தி என்னவாகிடப் போகுது...“ சற்றுக் கோபத்துடன் சொன்னான் மனோகரன்.
   “இது கஞ்சத்தனம் இல்லை சார். சிக்கனம். நூறு ரூபா சம்பாதித்தாலும் அதுல ஒத்தை ரூபாய சேமிச்சி வைக்கனும். நிறைய பணம் சாம்பாதிக்கிறவங்க எல்லாம் பணக்காரன் இல்லைங்க. நாளைக்குன்னு சேமிச்சி வைக்கிறவன் தாங்க பணக்காரனாக முடியும். இந்த சூட்சமத்தோட எல்லாரும் வாழுறது இல்லைங்க“ என்றார் டிரைவர்.
   செந்திலுக்கு எப்படி இவ்வளவு வசதி வந்தது என்பது புரிந்தது மனோகரனுக்கு. திரும்பி செந்திலைத் தேடினான். அவன் நடந்தே ரொம்ப தூரம் போய்விட்டு இருந்தான்.

அருணா செல்வம்

07.12.2013

28 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

போதுமென்று நினைப்பவன்தான் உண்மையான பணக்காரன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். உண்மைதான். சிக்கனத்தில் சிறந்த வாழ்வு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முயலும் ஆமையும் கதை நினைவுக்கு வந்தது ..!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சிறுகதை சிறப்பாக உள்ளது..சிக்கனத்தில் சிறந்த வாழ்வு வாழ்த்துக்கள்......

எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

கதை ரொம்ப அருமை சகோதரி..
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கருத்துள்ள கதை.....

பாராட்டுகள்....

த.ம. 4

உஷா அன்பரசு சொன்னது…

சேமிப்பை பத்தி இவ்வளவு அழகா சொல்லிட்டிங்க... அதனால உங்களை தாரளமா பாராட்டுறேன்....! நான் தாராளமாய் பாராட்டியதற்கு சிக்கனமாய் ' நன்றி' மட்டும் சொல்ல கூடாது... என் சேமிப்பில் ஒரு பெரிய தொகையை போடனும் ... ஆமா ...!

Ranjani Narayanan சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பின் வந்தேன். நல்ல கதை ஒன்று படிக்கக் கிடைத்தது. எங்கே செலவழிக்கணும், எங்கே சேமிக்கணும் னு புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும், இல்லையா?

அம்பாளடியாள் சொன்னது…

உண்மை தான் சிக்கனமாக வாழும் வாழ்வே மகிழ்ச்சி தரும் .
பணத்தைச் சம்பாதிப்பதோடு நின்று விடாமல் அதைப் பக்குவமாய்ச்
செலவளிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் .அருமை ! வாழ்த்துக்கள்
தோழி அருணா .

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

எனக்கு நல்ல சவுக்கடி கொடுத்த கதை...ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒன்றும் சேர்த்துவைக்க முடியவில்லை.

ezhil சொன்னது…

சிக்கனத்தோட அருமையை அழகாச் சொல்லீட்டிங்க...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல கதை

நம்பள்கி சொன்னது…

அருமை!
+1

ஆத்மா சொன்னது…

இனிமே நானும் ஒரு ரூபா சேமிக்கப் போறேன் :)

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம்.

அருணா செல்வம் சொன்னது…

முயலாமையால் எதையும் சாதித்து விட முடியாது என்னும் கருத்தை வலியுருத்தும் கதையை இக்கதைக்கு பொறுத்திப் பார்த்த விதம் நன்று.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

நிச்சயம் உங்களின் வலைக்கு வருகிறேன் ரூபன்.

அழைப்பிற்கும் நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

ரூபன்... உங்களின் வலையில் கருத்திட முடியவில்லை.
பாருங்கள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

ஐயோ.... நான் ரொம்ம்ம்ம்ம்ப சிக்கனம் தெரியுமா....? வார்த்தையைக் கூட அளந்து தான் பேசுவேன்.

அதனால் தான் இவ்வளவு எழுதுகிறேனோ.....
தவிர எனக்கு ஒரு ரூபாயே பெரிய தொகைதான்.
இருந்தாலும் உஷா உங்களுக்கு கோடி கோடி கோடி முறை “நன்றி“
போதுமா?

அருணா செல்வம் சொன்னது…

புரிந்தால் நன்றாக தான் இருக்கும்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரஞ்சனி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு“ என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
முயற்சிப்போம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

உங்களை என் வலைப்பக்கம் வரவழிக்க வேண்டும் என்றால் அதற்கு நான் சிறுகதை எழுதினால் தான் சாத்தியமாகிறது.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

தமிழ்விடுதி சத்யபிரபு சொன்னது…

Very good story and very useful thought. melum thodara vazhthukkal