திங்கள், 9 டிசம்பர், 2013

தேவையின்றி அணைப்பவள்!!


பாவையவள் விழிகளுக்கும் வாய்தான் உண்டோ!?
   பார்வையாலே பேசிடுதே கதைகள் கோடி!
பூவையவள் புன்சிரிப்பில் காந்தம் உண்டோ!?
   போகையிலே உயிர்ஈர்த்தே ஒட்டும் தேடி!
சேவைகளைச் செய்தால்தான் நன்மை உண்டோ!?
   சில்லென்று பார்த்தாலே வருமே ஓடி!
தேவைகளை அறியாத காதல் உண்டோ!
   தெரிந்துவிட்டால் பிரிவாளோ என்னை ஊடி?

பட்டென்று பேசினாலும் அவளின் வார்த்தை
   பாசத்தின் பிணைப்பென்றே அறிந்து கொண்டேன்!
சட்டென்று கோபமுடன் செல்லும் போது
   சரிவினிலே ஏறுகின்ற பொறுமை கண்டேன்!
சிட்டென்று சிலநேரம் பறந்த போதும்
   சிந்தனையைத் தந்துசென்ற அன்பில் நின்றேன்!
திட்டென்று சொல்லிவிட்டு நிற்கும் போதோ
   தேவையின்றி அணைப்பவளை என்ன செய்வேன்?

எண்சீர் விருத்தம்.

அருணா செல்வம்.
09.12.2013

39 கருத்துகள்:

 1. \\ பட்டென்று பேசினாலும் அவளின் வார்த்தை
  பாசத்தின் பிணைப்பென்றே அறிந்து கொண்டேன்!//

  உண்மை. ஆண்களால்தான் புரிந்துகொள்ள முடிவதில்லை.

  அருணாவின் என்சீர் விருத்தம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /உண்மை. ஆண்களால்தான் புரிந்துகொள்ள முடிவதில்லை. /

   உண்மைன்னு நீங்களே சொல்லிவிட்டு.... பிறகு....????!!!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

   நீக்கு
 2. சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் தோழி அருணா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 3. ///பாவையவள் விழிகளுக்கும் வாய்தான் உண்டோ!?///

  நல்லவேளை இல்லை இருக்கிற ஒரு வாய்க்கே ஆள் தாங்க முடியல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வாய் மௌன மொழியால் மட்டும் பேசி ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களைத் தரும்ங்க “உண்மைகள்“

   நீக்கு
  2. அவங்க பேசும் போது உபயோகிக்கும் வார்த்தைகளுக்குகே பல அர்த்தங்கள் உண்டு அது அவர்களின் மூடுகளுக்கு தகுந்து மாறுபடும் அதை ப்ரிந்து கொள்வத்ற்கே பல மணிநேரம் எடுத்து கொள்ளும் இதில் வேற மௌன மொழியால் மட்டும் பேசி ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தால் மனிதன் அதை எப்படிங்க ப்ரிந்து கொள்வான்.. ?

   நீக்கு
 4. நின்னைச் சரணடைந்தால்
  இல்லையடி வேறு சொர்க்கம் ...
  என்று உரைக்கும்
  அழகான கவிதை சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி மகி அண்ணா.

   நீக்கு
 5. பாவையவள் தேவையின்றி அணைப்பாள் ஆனால் பாவி நானும் அடி தேவையில்லை என்பதால் அடிக்கவரும் என் மனைவியை அணைத்து கொள்வேன் ஹீ.ஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “பாவி“ என்றால் இப்படித்தான் செய்வார்களாம்.

   பாவம் உங்கள் மனைவி. அவர் அப்“பாவி“.

   நீக்கு
 6. உங்களின் இந்த மாதிரி கவிதைகளை படிக்கும் போது எனது இதயம் சிரித்து இதழ்கள் பூவாக மலருகின்றன.
  அழகிய கவிதைகளை படைக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுக்கு இப்படி திடீர் என்று “ஐஸ்“?

   நீங்கள் “ஐஸ்“ வைக்காமல் எது வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் கோபித்துக் கொள்ள மாட்டேன்.

   நீக்கு
  2. கவிதை எழுதி இருக்கீங்களே அதனால் கவிதை மாதிரி பின்னுட்டம் போடலாம் என்று எழுதியதுதான் ஐஸ் வைச்சா கொடுக்க வேண்டிய டீரிட்டை கொடுத்தரப் போறீங்களா என்ன? கடவுளை கூட நேரில் பார்த்துரலாம் ஆனா டீரிட்......???????ஹும்ம்ம்ம்ம்ம்ம்

   நீக்கு
 7. பாராட்டுக்கள் மட்டுமின்றி கலாய்த்து சிரிக்க வைக்க கமெண்டுகளும் என்னிடம் இருந்தும் வரும். அது பிடிக்கவில்லையென்றால் எந்த நேரத்திலும் நீங்கள் நீக்கி விடலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை...இதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்.

   என்னைப் பொறுத்தவரை என் கவிதைகளை நானே பலவாக விமசித்துக் கலாய்த்துப் பார்த்துக் கொள்வேன்.

   அதை நானே எழுதினால் நன்றாக இருக்காது அல்லவா...?
   இனி நீங்கள் எழுதினால் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.
   மிக்க நன்றி “உண்மைகள்“

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு
 9. எண்சீர் விருத்தம். அப்படி என்றால் என்ன? SSLC தமிழில் (இப்ப பத்தாம் வகுப்பு) இதையெல்லம் சொலித்தரமாட்டார்களா? எங்க தமிழ் வாத்தி தத்தி; இருந்தாலும் இதைக்கூட சொல்லித் தரவில்லை என்றால் எப்படி?

  இப்படி எழுதும் போது...எண்சீர் விருத்தம். என்றால் என்ன என்ற ஒரு சிறு குறிப்பு எழுதினால் நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நம்பள்கி.

   யாருக்கும் பத்தாம் வகுப்பில் எல்லாம் யாப்பு இலக்கணம் கற்றுக்கொடுப்பது இல்லை.
   யாப்பு இலக்கணத்தை நாமே விரும்பி எடுத்து படிக்க வேண்டும். தவிர அதில் உண்மையான ஈடுபாடு (ஆர்வம்) உடையவர்களால் தான் அதைப் படித்து அதன் படி கவிதைகளை எழுத முடியும்.

   நான் நிறைய புதுக்கவிகள் எழுதி இருக்கிறேன்.
   அக்கவிதைகளில் கருத்து இருக்கும். ஆனால் வடிவம் இருக்காது.
   சந்த நயத்தடனும் நல்ல வடிவுடனும் கருத்தமைத்து எழுதப்படும் பாடல் கற்றோர்களின் மனத்தில் இடம் பிடித்து விடுகிறது.

   நான் இந்த எண்சீர் விருத்தத்தின் அடிப்படை இலக்கணத்தை மட்டும் சொல்கிறேன். நீங்களும் எழுதிப் பாருங்கள்.

   “காய் - காய் - மா - தேமா
   காய் - காய் - மா - தேமா“

   நான் எழுதிய எண்சீர் விருத்தத்தின் இலக்கணம் இது.
   இதில் வரும் காய், மா, தேமா என்பதையெல்லாம் எப்படி அமைக்க வேண்டும் என்ற எளிய இலக்கணத்தைப் படித்தால் போதும்.
   தவிர, நான்கு அடிகளுக்கும் ஒரே எதுகை வரவேண்டும்.
   ஒவ்வோர் அடியிலும் முதல் சீரின் முதல் எழுத்தும் ஐந்தாம் சீரின் முதல் எழுத்தும் ஒரே எழுத்து மோனையாக வரவேண்டும்.
   இது ஒன்றும் பெரிய “கம்ப சூத்திரம்“ கிடையாது. எழுதி எழுதி பார்க்க வந்து விடும்.
   சித்திரமும் கைப்பழக்கம்
   செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல தான்.

   நீங்களும் எழுதிப் பாருங்கள் நம்பள்கி்.
   நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 11. அற்புதமான கவிதை
  படித்து மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி இரமணி ஐயா.

   நீக்கு
 12. வணக்கம்
  மனதை நெருடிய கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. விருத்தத்தின் ஈற்றடிகள் இரண்டில் பொதிந்த நேசம் உளம் சிலிர்க்க வைத்தது...

  மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 14. 1 இரண்டும் அருமை- கவிதை
  இனிமை எளிமை
  திரண்ட சொற்கள் -அன்னைப்
  தமிழின் பெருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 15. சகோதரிக்கு வணக்கம்
  இருவருக்குள் புரிந்துணர்வு இருந்து விட்டால் வாழ்க்கை முழுதும் இன்பம் தான்,. அழகான அன்பின் உணர்வைக் கவியாய் வடித்த விதமும் மரபுக் கவியாய் அமைந்த விதமும் மனதைக் கவர்கிறது. தொடர வாழ்த்துகள் சகோதரி..
  ===========
  பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபன் அவர்களும் நானும் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன். வருக.வெல்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோ.

   உங்கள் இருவரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
   நானும் நிச்சயம் பங்கு கொள்ள முயற்சிக்கிறேன். அழைப்பிற்கும் நன்றி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நாகராஜ் ஜி.

   நீக்கு
 17. தேவைகளை அறியாத காதல் உண்டோ!
  தெரிந்துவிட்டால் பிரிவாளோ என்னை ஊடி?///எண்சீர் விருத்தம் ?அற்புதம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி கவியாழி ஐயா.

   நீக்கு
 18. இங்கு பின்னூட்டம் போட்டவர்கள் முக்கால்வாசி பேருக்கு எண்சீர் விருத்தம்.நன்றாக தெரிந்து இருக்கு!

  இப்படி இருக்கும் போது தமிழ் எப்படி சாகும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருங்க சொன்னா தமிழ் சாகும்ன்னு...?

   எண்சீர் விருத்தம் பல பேருக்குத் தெரியவில்லை என்றாலும்... தமிழ் வாழும் தான் நம்பள்கி.

   கருத்தக்கு மிக்க நன்றி.

   நீக்கு