வெள்ளி, 9 ஜனவரி, 2015

அவளும் அப்படித் தான்!!



    “என்ன? நீங்க சொல்லறது உண்மை தானா...? என்னால நம்பவே முடியலைங்க.... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க“ மாணிக்கம் வந்தவர் சொன்னதை நம்ப முடியாமல் கேட்டான்.
    “என்னப்பா.... என்னத்தை விளக்கமா சொல்லுறது? உனக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு தான் நெனச்சேன். உன் தங்கச்சிய அவ புருஷன் போட்டு அடிக்கிறதை எத்தனை முறை நான்மாடியிலே இருந்து பார்த்திருக்கேன் தெரியுமா? அந்தப் பொண்ணு எல்லாத்தையும் மறைச்சிட்டு எங்க கிட்ட சிரிச்சி பேசும். என் மனைவி கேட்டா கூட அதெல்லாம் ஒன்னுமில்லையேன்னு மழுப்பிடும். ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டாக் கூட அந்த மனுஷனுக்கு வேலை போனதிலிருந்து ரொம்ப தான் அவளைப் போட்டு வதைக்கிறான்.
   எனக்கே மனசு தாங்கலை. அதுதான் உன்கிட்ட சொல்லுறேன். நான் அந்நியன். அந்த வீட்டு மாடியில குடியிருக்கிறவன். நான் கேட்டா அது தப்பாயிடும். நாளைக்கு ஏதாவது ஒன்னுன்னா நீங்க சொல்லவே இல்லையேன்னு என்மேல வருத்தப்படக் கூடாதுன்னு தான் உன் காதிலே போட்டேன். இனி உன் பாடு. உன் தங்கச்சி பாடு. நான் கிளம்புறேன்...“
    வந்தவர் கிளம்பிவிட்டார்.
    அவர் பாரம் குறைந்து விட்டது. ஆனால் மாணிக்கத்தால் இந்த பாரத்தைச் சுமக்க முடியவில்லை. ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. கன்னமும் மீசையும் துடித்தது. அவனைப் பார்க்கும் போது அவன் மனைவி சுந்தரிக்குப் பயமாக இருந்தது.
   “என்ன திமிர் இருந்தால் என் தங்கச்சிய அடிப்பான் அவன்... கேட்க ஆளில்லைன்னு நெனச்சிட்டானா? அவ்வளவு திமிர் அவனுக்கு எப்படி வந்தது. கேட்க மாட்டேன்னு நெனச்சிட்டானா....  வர்றேன். காலையிலேயே கிளம்பி வர்றேன். அவன் சட்டையைப் பிடிச்சி இழுத்து நடு ரோட்டுல போட்டு உதைக்கிறேன். அவனைச் சும்மா விட போறதில்லை நான்....
    ஏய்.... என்ன திரு திருன்னு முழிக்கிறே. நாளைக்கிக் காலையிலேயே ஊருக்குப் போகனும். என் டிரெசை அயர்ன் பண்ணி வை...“
   தன் மனைவியைப் பார்த்து அதட்டினான். அவள் அங்கிருந்து நகரவே இல்லை.
   “என்ன? சொல்றேனில்ல.... காதுல விழலையா? போய் செய்...“ என்றான்.
   “ஏங்க.... நீங்க போவறது அவசியம் தானா...?“ மெதுவாகக் கேட்டாள்.
    “என்ன...? என்ன....? அவசியமில்லைன்னு சொல்லுறியா? என் கண்ணுக்குக் கண்ணா வளர்த்த தங்கச்சிய அவன் அடிப்பான்.... என்னைக் கேட்டுக்கினு சும்மா இருக்க சொல்லுறியா...?“
    நான் கேட்க “வேணான்னு சொல்லலைங்க. அவளே வந்து சொன்னாள்ன்னா நாம கேட்கலாம். சாதாரண புருஷன் பொண்டாட்டி சண்டையில நாம தலையிடுறது நல்லதில்லைங்க....“
   “எது சாதாரண சண்டை? அடுத்தவன் பார்த்துட்டு வந்து சொல்ற அளவுக்கு இருக்குது. நான் போய் கேக்கலைன்னா என்ன நினைப்பாங்க...?“
   “அவங்க எதையாவது நெனச்சிட்டுப் போவட்டும். ஆனால் நீங்க இப்போ போவறது நல்லதா படலைங்க...“
    “ஏய்.... இதுக்கு மேல உன் அட்வைசைக் கேக்க நான் தயராயில்லை. என்னுடைய தங்கச்சிய பத்தி எனக்குத் தான் தெரியும். இதுக்கு மேல நீ வாயைத் திறந்தால் உன் வாயில ஒரு பல்லும் இருக்காது.... ஆமா....“
   கோபமாக எழுந்து போய்விட்டான் மாணிக்கம். இதற்கு மேல் அவனிடம் எதையும் பேச முடியாது. பெருமூச்சுடன் தன் வேலையைக் கவனித்தாள்.

   மறுநாள் காலையில் தங்கையின் வீட்டில் கால் எடுத்து வைத்தவுடன் முகம்மலர வரவேற்றது தங்கையின் கணவன் தான். ஏதோ வேலையாக வெளியே கிளம்ப ஆயுத்தமாக இருந்தான்.
   “வாங்க மாமா.... என்ன திடிர்ன்னு வந்திருக்கிறீங்க? ஆச்சர்யமா இருக்குது! ஏதாவது முக்கிய விசயமா?“
    ஆவலுடன் கேட்ட மாப்பிள்ளையிடம் ஏன்டா என் தங்கையை அடித்தாய்”  என்று கேட்க மனம் வரவில்லை மாணிக்கத்திற்கு.
    “சும்மா தான். உங்களை எல்லாம் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்“ முழப்பிவிட்டான்.
    “அப்படியா மாமா. என்னை ஒரு வேலைக்கிக் கூப்பிட்டு இருக்காங்க. நான் போயிட்டு வந்திடுறேன். வந்த பிறகு சாவகாசமா பேசலாம் மாமா..... சரசு.... உன் அண்ணனை நல்லா கவனி. நான் போற வழியில அவருக்குப் பிடிச்ச புரி மசாலாவை வாங்கி யாருகிட்டேயாவது கொடுத்து அனுப்புறேன். என்ன... வரட்டுமா...?“
    பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பி விட்டான்.
    சரஸ்வதி மாணிக்கத்திற்குக் காபி கலந்து கொடுத்து விட்டு அண்ணி, குழந்தைகளின் நலன் விசாரித்தாள். ஊர் விசயங்களைக் கலகலப்பாக பேசினாள்.
    அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவள் மனத்தில் இல்லையே என்று வருத்தமாக இருந்தது மாணிக்கத்திற்கு. பேசிக்கொண்டு இருந்த போதே புரி மசாலா வர அண்ணனுக்குப் பரிமாறிவிட்டு அருகில் அமர்ந்த தங்கையிடம் கேட்டான்.
   “என்ன சரசு... நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா...?“
   “என்ன கேள்வி பட்டிங்க...?“
   “உன்புருஷன் உன்னை எப்போ பார்த்தாலும் அடிக்கிறானாமே....“
   “இல்லையே... யார் சொன்னது உனக்கு...?“
   “யார் சொன்னால் என்ன.... மறைக்காமல் சொல்லு. அவனைக் கேட்க ஆளில்லைன்னு நெனச்சிட்டானா...?“ சற்றுக் கோபமாகக் கேட்டான்.
    “அப்படியெல்லாம் இல்லைண்ணா. எப்பவாவது கோபம் அதிகமானால் அதைக் கட்டுபடுத்த முடியாமல் அடிச்சிடுறார். அதுவும் எப்போவாவது தான்....“ சற்று தயங்கியே சொன்னாள்.
   “என்னம்மா இப்படி சொல்லுற? அவனுக்கு எதுக்காவது கோபம் வந்தா அதுக்காக உன்னை போட்டு அடிப்பானா...?“
   “அப்படியில்லையண்ணா. அவருக்கு தன் மேலேயே கோபம். தான் குறைவா சம்பாதிக்கிறோமே என்ற ஆத்திரம். வீட்டுச் செலவுக்கு அது பத்தவில்லையே என்ற ஆத்திரம். தன் தங்கையை கல்யாணம் செஞ்சி கொடுக்கனுமே என்ற ஆத்திரம். அவர் மேல இருக்கிற இந்த ஆத்திரத்தால அவரையே அவரால அடிச்சிக்க முடியலை. நான் ஏதாவது கேட்கப் போய் அந்த ஆத்திரத்தை என் மேல திருப்பி விடுறார். அவ்வளவு தான்....“
   “அதுக்காக நீ தான் கிடைச்சியா? அவன் அம்மாவை அடிக்க வேண்டியது தானே? அவன் தங்கச்சிய உதைக்கிறது தானே.. அவனால கட்டிக்கொடுக்க முடியலைன்னா ஒரு கூலி வேலை செய்யிறவனுக்குக் கட்டிக்கொடுக்கிறது தானே... இவன் இருக்கிற லட்சணத்தில் தங்கைக்கு பணக்கார இடமா பார்த்தால் முடியுமா...?“
   “என்னண்ணா சொல்லுற? நீ மட்டும் உன் தங்கச்சிக்கு நல்ல இடமா... சம்பாதிப்பவனா பார்த்து தானே கட்டிக்கொடுத்த. உன் வருமானத்துல எனக்கு ஒரு கூலிவேலை மாப்பிள்ளையை ஏன்ணா பார்க்கலை. என் மேல நீ வச்ச பாசத்தால தானே வரவுக்கு மீறி கடன் வாங்கி கல்யாணம் செய்து வச்சே. அப்போ உனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது. எத்தனை முறை என் கண்ணெதிரிலேயே அண்ணியை அடிச்சிருப்ப. அவங்க நிலையையில தான் இப்போ நான் இருக்கிறேன். விடுங்கண்ணா“ என்றாள்
   மாணிக்கம் யோசித்தபடி பேசாமல் இருந்தான். சரஸ்வதி சொல்லவது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்காக...
   “இல்லை சரசு... என் மனசு கேட்கலை. நான் அவன் வந்ததும் இதைக் கேட்கத் தான் போறேன்...“ என்றான்.
    “வேண்டாம்ண்ணா. நீ இதை கேட்டால் உங்களுக்குள்ள இருக்கிற மதிப்பு போயிடும். நீ எப்படி அண்ணி வீட்டுக்காரர்களை மதிக்கலையோ.... அதே மாதிரி இவரும் நடந்துக்குவார். எனக்கும் உன் வீட்டுக்கு வர போற உறவும் போயிடும். எனக்கு அண்ணியோட வாழ்க்கையே பாடமாயிடுச்சி. அதனால் நீ இதை கண்டும் காணாமல் இருந்திடு. அது தான் நமக்கு நல்லது...“ என்றாள் சரஸ்வதி.

   மாணிக்கம் தன் தங்கையைக் கண்கலங்க பார்த்தபடி கிளம்பினான்.
   “அண்ணா...“ போகும் போது கூப்பிட்டாள்.
   “என்னம்மா....?“
   “நீ... அண்ணிய அடிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சி பு வாங்கிக்கினு வந்து சமாதானப் படுத்துவியே.... அது மாதிரி இல்லையண்ணா இவர். அன்னைக்கி ராத்திரியே சமாதானப்படுத்திடுவார்.....“ சொல்லிவிட்டு வெட்கத்துடன் சிரித்தாள்.
   “குறும்பக்கார பொண்ணு....“ சொல்லியபடியே கிளம்பினான்.
  
   நாம் நடந்து வந்த பாதையைத் தான் நம் சந்ததியனரும் தொடருவார்கள். நாம் நேரான பாதையில் நடந்துச் செல்ல முயலுவோம்.

அருணா செல்வம்.
28.05.1998

   

10 கருத்துகள்:

  1. அருமை...

    கண்டும் காணாமல் இருப்பது நல்லது தான்...

    ஆனால் நமக்குள்...? கண்டும் காணாமல் இருக்கக் கூடாது...

    பதிலளிநீக்கு
  2. #சம்பாதிப்பவனா பார்த்து தானே கட்டிக்கொடுத்த#
    இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கிற இடமா மாணிக்கம் பார்த்திருக்கலாம் ,:)
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. அழகிய சிறுகதை....

    100 சதவீதம் உண்மைதான் ஆண்களின் இயலாமையை காட்ட சிறந்த அடம் மனைவியாகத்தான் இருக்கிறது... கொஞ்சம் ஆண்கள் மனதை கட்டுப்படுத்தும் நிலை வந்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்....

    கணவன் மனைவி சண்டையில் மூன்றாமர் தலையீடு இல்லாத வரை குடும்பம் சுமுகமாகவே இருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. பிறர் குற்றம் காணும் முன் தன் குற்றம் காண வேண்டும் என்பதை சொல்லும் கதை! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் !

    நாம் நடந்து வந்த பாதையைத் தான் நம் சந்ததியனரும் தொடருவார்கள்.
    நாம் நேரான பாதையில் நடந்துச் செல்ல முயலுவோம்.

    அருமையான நற் கருத்தைச் சொன்னீர்கள் தோழி ! வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  6. பெண்களிடம் இன்றளவும் நீடிக்கும் இம்மாதிரி நல்ல குணங்களால்தான் குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறாமல் இருக்கிறது.

    நிறைவானதொரு படைப்பு அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
  7. அழகிய, ஆழமான பொருள் பொதிந்த கதை!

    பதிலளிநீக்கு
  8. Nalla kathai sagothari. (Tamil font sariyaga velai seiyavillai athanaal than english)

    பதிலளிநீக்கு