திங்கள், 24 நவம்பர், 2014

காக்கா பிரியாணி!!



இது கோழி பிரியாணி

நட்புறவுகளுக்கு வணக்கம்.
     உங்கள் அனைவருக்கும் “காக்கா பிரியாணி“ செய்முறை விளக்கத்தைப் பதிவின் கடைசியில் விளக்குகிறேன். அதற்கு முன்பு எனக்கு “காக்கா பிரியாணி“ எப்படி அறிமுகமானது என்பதை விளக்கி விடுகிறேன்.
    ஒரு முறை நாங்கள் இந்தியா சென்றிருந்த போது என் கணவரின் உறவினர், எங்களை அவர் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து இருந்தார்கள். அது கிராமம் என்பதால் இரண்டு சின்ன குழந்தைகளை வைத்துக் கொண்டு எனக்குச் சரிப்பட்டு வராது என்று என் கணவரிடம் “நான் வரவில்லை“ என்றேன்.
    அவர், “விருந்துக்கு அழைத்த அந்த அம்மாவின் கணவர் எங்களின் கல்யாண நேரத்தில் தவறிவிட்டதால் வரவில்லை“ என்றும் “அவர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். போய் வருவது தான் முறை“ என்றும் என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். போகும் போது வெயில் அதிகமாக இருந்ததால், வழியில் நிறுத்தி இளநீர் வாங்கித் தர சொன்னேன்.
   என்னவர், “இப்போ இளநீரைச் சாப்பிட்டால் அங்கே போய் ஒழுங்காகச் சாப்பிட மாட்டே. அவர்கள் ஆசையாக சமைச்சிருப்பாங்க. கோழி கொத்துற மாதிரி சாப்பிடாமல் ஒழுங்கா சாப்பிடு. அப்போது தான் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்“ என்றார். நானும் பேசாமல் இருந்துவிட்டேன்.

    அந்த உறவினர் வீட்டில் அந்தம்மா, அவரின் மகன் மருமகள் நான்கு வயது பேரன் என்று இருந்தார்கள்.
   சம்பிரதாய பேச்சு முடிந்ததும் சாப்பாடு போட்டார்கள். கறி பிரியாணி, கறி வறுவல்..... என்று வாசனை கமகமவென்று இருந்தது. இந்த வாசனை மேலும் பசியைத் தூண்டியது. பிரியாணியை எடுத்துச் சுவைத்தேன். ருசி அபாரமாக இருந்தது. சிறு சிறு துண்டுகளாய் வெட்டிய கறி அழுத்தமாக இருந்தாலும் சுவையாகவே இருந்தது.
    இப்படி நான் ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது அந்த அம்மாவின் பேரன் ஓடி வந்து அந்த அம்மாவிடம், “ஆயா..... நம்ம அப்பு..... காக்கா பிரியாணியைச் சாப்பிட்டுட்டான்“ என்று சொன்னான்.
   அவன் சொன்னதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியுடன் வாயில் வைக்கப் போன கறியை இலையில் வைத்துவிட்டேன். அதே சமயம் அந்த அம்மா தன் பேரனிடம்..... “அவன் அப்படியெல்லாம் சாப்பிட மாட்டானே....“ என்றார்
   “இன்னைக்கி பிரியாணி செம டேஸ்ட்டா இருந்துச்சா.... அது தான் அப்பு சாப்பிட்டான்னு நினைக்கிறேன். நீ வந்து பாரேன்“ என்று தன் பாட்டியை அழைத்தான்.
   அதற்கு அந்த அம்மா.... “ அப்பு தானே சாப்பிட்டான். சரி விடு. நாம சாப்பிட்டா தான் தப்பு. நீ போய் விளையாடு“ என்று அனுப்பி விட்டார்.
   நான் நிமிர்ந்து என் கணவரைப் பார்த்தேன். அவர் இராமனுக்குக் குகன் கொடுத்த விருந்து போல் பிரியாணியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் என் இலையில் இருந்த கறியைப் பார்த்தேன். முதலில் பசுமையாக கண்ணுக்குத் தெரிந்த கறி இப்போது சுறுங்கி போய்... வற்றிப் போய் இருந்தது போன்று தெரிந்தது.
   சாப்பிட மனம் ஒப்பவில்லை.
   சாப்பாட்டை அப்படியே நகர்த்திவிட்டு வெள்ளை சாதம் ரசம் கேட்டேன். என் கணவர் நான் சாப்பாட்டை வீணாக்குகிறேனே என்று ஒரு முறை முறைத்தார். நான் ஏன் அவரை நிமிர்ந்து பார்க்கிறேன்....
   
    திரும்பி போகும் போது வண்டியை ஓட்டிக்கொண்டே என் கணவர், “பிரியாணி நல்லாத்தானே இருந்துச்சி. நீ ஏன் சாப்பிடல. அவங்க எவ்வளவு ஆசையா நமக்காகச் செய்தாங்க.“ என்றார்.
    நான், “பிரியாணி நல்லா தாங்க இருந்துச்சி. ஆனா அந்த கறி காக்கா கறின்னு சொன்னதும் எனக்குச் சாப்பிட பிடிக்கலைங்க“ என்றேன்.
    அவர், “என்னது...?“ என்ற படி ஒரு சடென்பிரேக் போட்டுத் திரும்பி என்னைப் பார்த்தார். “என்ன சொன்ன? காக்கா கறியா...?“ என்றார் திரும்பவும் அதிர்ச்சி மாறாமல்.
    “ஆமாங்க. அந்த குட்டிப் பையன் சொன்னானே....“ என்றேன்.
    “எது..... காக்கா பிரியாணியை அப்பு சாப்பிட்டுடுச்சின்னு சொன்னானே... அதுவா...?“ என்றார்.
   நான், சற்று அருவருப்புடன் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினேன். அவர், “அட ச்சீ..... இதுக்காகவா சாப்பிடலை.....?“ என்றார் நெற்றியில் தட்டிக்கொண்டு.
    “எனக்கு காக்கா கறி சாப்பிட்டு பழக்கமில்லைங்க“ என்றேன்.
    “ஐயோ... அருணா... எனக்கு மட்டும் காக்கா கறி சாப்பிட்டு பழக்கமா....?“ என்றார்.
    நான் புரியாமல் அவரைப் பார்த்தேன். நல்லா தானே சாப்பிட்டீங்க... என்று மனத்தில் ஓடியதை வெளியில் சொல்லவில்லை.
   அவர் சற்று பொறுத்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அட அசடு..... அந்த அம்மா எப்போ சாப்பாடு செய்தாலும் அவங்க கணவர் நினைப்பா காக்காவுக்குச் சாப்பாடு வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க. அப்படி இன்னைக்குக் காக்காவுக்கு வச்ச பிரியாணியை அவங்க வீட்டு நாய் அப்பு சாப்பிட்டுடுச்சி. அதை தான் அந்த சின்ன பையன் சொன்னான்.... நீ இப்படி லூசு மாதிரி புரிஞ்சிக்கிட்டியே.....“ என்றார் சிரிப்பு மாறாமல்.
   “காக்காவுக்கு வச்ச பிரியாணியைத் தான் அந்த சின்ன பையன் “காக்கா பிரியாணி“ என்றானா...“ என்றேன் மீண்டும் தெளிவு ஏற்பட...
    என்னவர்.... “பின்னே... உன்னோட சொந்தக்காரங்க சாப்பிடுறதையா என் சொந்தக்காரங்க போடுவாங்க.....?“ என்று அவர் சொல்ல... நான் முறைத்தாலும்..... இந்த மாதிரி நாம அசடா இருக்கிறோமே..... எப்போ தான் எல்லாம் புரிஞ்ச தெரிஞ்ச பெரிய மனுசியாவது.... என்று எண்ணியபடி பைக்கில் ஏறி அமர்ந்தேன்.

நட்புறவுகளே......
    பதிவின் தொடக்கத்தில் சொன்னது போல் “காக்கா பிரியாணி“ செய்முறையை விளக்குகிறேன்.
    அனைவருமே இதைச் செய்யலாம். மிகவும் ஈஸியான வேலை தான்.
அதாவதுங்க.....
     வெஜிடெபுள்ஸ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி..... என்று எந்த வகை பிரியாணி செய்தாலும்... அதிலிருந்து ஒரு பிடியளவு எடுத்துக் காக்காவுக்கு வைத்தால்...... அது தான் “காக்கா பிரியாணி“

செய்துப்பாருங்கள். 

அன்புடன்
அருணா செல்வம்.

24.11.2014

42 கருத்துகள்:

  1. ஆஹா காக்கா பிரியாணி, இதுதான் மேட்டரா?

    நல்ல நடையில் அசத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் காக்கா கறியில் செய்த பிரியாணி என்று நினைத்து விட்டீர்களா.....?

      நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  2. ஹா... ஹா... ஆனாலும் செம பிளேட் போட்டீங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம பிளேட்...... ரத்தம் வந்ததா அண்ணா.....?

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. உங்க கணவர் வீட்டு பக்கம் பண்ணியது காக்கா பிரியாணிதான். ஆனால் அதை மறைத்து அவர் சமாளித்த விதம் மிக அருமை. அதையும் நீங்க நம்பி காக்கா பிரியாணி என்று பதிவு வேற....

    உங்க வீட்டுக்காரர் உங்களை ஏமாற்றியதை எப்படி அழகாக இங்கே சமாளிச்சு இருக்கிறார் பாருங்க
    ///நீ இப்படி லூசு மாதிரி புரிஞ்சிக்கிட்டியே.....“ என்றார் சிரிப்பு மாறாமல்.///

    அதுமட்டுமல்லாமல் நீங்களும் உங்களைப் பற்றி இப்படி ". இந்த மாதிரி நாம அசடா இருக்கிறோமே.....//// என்று உண்மையை சொல்லீட்டீங்க...

    ஹாஹஹஹஹஹஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கணவர் வீட்டு பக்கம் பண்ணியது காக்கா பிரியாணிதான். ஆனால் அதை மறைத்து அவர் சமாளித்த விதம் மிக அருமை. அதையும் நீங்க நம்பி காக்கா பிரியாணி என்று பதிவு வேற....

      அட. நீங்கள் காக்கா பிரியாணியைச் சாப்பிட்டது போலவே சொல்கிறீர்கள்.....!!!

      உங்க வீட்டுக்காரர் உங்களை ஏமாற்றியதை எப்படி அழகாக இங்கே சமாளிச்சு இருக்கிறார் பாருங்க
      ///நீ இப்படி லூசு மாதிரி புரிஞ்சிக்கிட்டியே.....“ என்றார் சிரிப்பு மாறாமல்.///

      ஆமாம்..... நீ இப்படி லுர்சு மாதிரி புரிஞ்சிக்கிட்டியே.....

      அதுமட்டுமல்லாமல் நீங்களும் உங்களைப் பற்றி இப்படி ". இந்த மாதிரி நாம அசடா இருக்கிறோமே.....//// என்று உண்மையை சொல்லீட்டீங்க...

      புரிஞ்சிக்காத லுர்சுகளிடம் நாமும் அசடாக இருப்பதே நல்லது.

      நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  4. உங்களுக்கு முன்னோர்கள் ஆசி நிறைய இருக்கும் போலிருக்கே :)
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் உங்களைப் போன்ற முன்னோர்களின் ஆசி நிறைய இருக்குங்க பகவான் ஜி.

      நன்றி.

      நீக்கு


  5. வணக்கம்!

    காக்கா பிரியாணி செய்யும் கலையறிந்து
    சோக்கா உரைத்தீா் சுவைத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலையறிந்து செய்யும் கடமையும் நெஞ்சுள்
      நிலையறிந்து நிற்கும் நினைத்து!

      அழகிய பாடலுக்கு நன்றி கவிஞர்.

      நீக்கு
  6. காக்கா பிரியாணிப் பதிவு செம ருசி
    படித்துச் சிரித்து மகிழ்ந்தோம்
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  7. ஹாஹா.... ரசித்தேன்,காக்கா பிரியாணியை:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேலை..... சுவைத்தேன் என்று எழுதவில்லை.

      நன்றி டீச்சர்.

      நீக்கு
  8. நாங்கள் சைவமாக்கும்! அதனால் எங்கள் வீட்டில் காக்கா பிரியாணி கிடையாது. காக்கா சாதம்தான்! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கா சாதம்.....???? ஹா ஹா ஹா....

      ஆனால் காக்கா சைவம் கிடையாதுங்க.
      நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  9. ஹஹ்ஹஹ் சகோதரி நல்ல காலம் "உங்கள் குரல் கா கா என்று மாறவில்லையே? விவேக் ரன் படத்தில் காக்கா பிரியாணி சாப்பிட்டுக் குரல் மாறியது போல்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்டால் தானே மாறும்......?

      இருந்தாலும் கோழி சாப்பிடுகிறேன்..... ஆனால் கொக்கரக்கோ என்று கூவுவது இல்லையே.....

      நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  10. சுவையான காக்கா பிரியாணி தான் ...

    பதிலளிநீக்கு
  11. சஸ்பென்ஸ் சூப்பர்!கலக்கிட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பித்தன் ஐயா.

      நீக்கு
  12. ஹீ ஹீ இப்படியா டீச்சரிடம் நானும் பல்ப்பு வாங்கணும்! சிரிப்புப்பு புரியாணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் வாங்கும் பல்புகள் பிரகாசமாக எரியட்டும்....

      நன்றி தனிமரம்.

      நீக்கு
  13. காக்கா பிரியாணியை தாத்தா பிரியாணி என்று சொல்லுங்க! இப்பவும் தினமும் எங்கப்பா மதியம் காக்காய்க்கு சோறு வைப்பார். சில நாட்கள் தாமதம் ஆகி விட்டால் சில காக்கைகள் கரையும். அப்போ நான்,"அப்பா தாத்தா வந்திருக்கார்-அவருக்கு சீகிரம்ம்சொறு வையுங்க:" என்று கிண்டல் செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டிச்சேரியில்.... என் ஆயா இருந்த வரையில் இந்த பிரட்சனை எங்கள் வீட்டிலும் இருந்தது...... அதெல்லாம் கூட சுவையான நினைவுகள் தான் நம்பள்கி.

      நன்றி .

      நீக்கு
  14. காக்கா பிரியாணி இன்றுதான் முதல் முறையாக சாப்பிட்டேன்.
    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவை வித்தியாசமாக இருந்ததா கில்லர் ஜி?

      மிக்க நன்றி.

      நீக்கு
  15. ஹா..ஹா...காக்கா பிரியாணி சூப்பரா இருந்ததுங்க....

    பதிலளிநீக்கு
  16. நல்லவேளை... காக்கா பிரியாணியா என்று ஓட்டம்பிடிக்கப் பார்த்தேன். இவ்வளவு சுவையான உங்கள் தயாரிப்பில் நாங்கள் விரும்பிச் சாப்பிடும் கறி கோழி பிரியாணியை விட உங்கள் காக்கா பிரியாணி சுவையாக இருந்தது. சிக்கன் பிரியாணியும் நாப்பழக்கம், காக்கா பிரியாணி கைப்பழக்கம் என்பது சரிதான்! பிடியுங்கள் தம11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் செய்த பிரியாணியைச் சாப்பிடாமல் போக முடியுமா....?

      சுவைத்து ரசித்துச் சாப்பிட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  17. முடிவை ஒரு அளவுக்கு ஊகிக்க முடிந்தாலும் கதையின் நடை அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு