செவ்வாய், 17 ஜூன், 2014

வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்குழந்தை உள்ள பெற்றோரா? படியுங்கள்.நட்புறவுகளுக்கு வணக்கம்.

    உங்கள் வீடுகளில் அல்லது தெரிந்தவர் வீடுகளில் வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்கள் இருக்கிறார்களா...? இந்தப் பதிவைப் படியுங்கள்.
   என் தோழி இளம் மருத்துவர். அவள் கடந்த சில மாத காலமாக குழந்தைகள் பிரசவிக்கும் பிரிவில் பணி செய்கிறாள். அவள் சொன்னதை உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.
   அவள் அங்கே இருந்த நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் நான்கு குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாகவும் இரண்டு குழந்தைகள் குறைமாத குழந்தையாகவும் தான் பிறக்கின்றனவாம்.
    அவள், “பொதுவாக மருத்துவர்கள் 25 வாரத்திற்கு மேல் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தைகளுக்குத் தங்களால் முடிந்த அளவிற்கு மருத்துவம் செய்து காப்பாற்றுவார்கள்.
   25 வாரத்திற்குள் குழந்தை வெளியாகிவிட்டால் அந்த குழந்தைக்கு எந்த மருத்துவமும் பார்க்காமல் உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விடுவார்கள். பொதுவாக 25 வாரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். அப்படியே காப்பாற்றினாலும் அக்குழந்தைகள் ஊனமுள்ள குழந்தையாகத்தான் இருக்குமாம்.
   தவிர போன வாரத்தில் நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்துவிட்டது. அந்தப் பெண் அழுது கேட்டுக்கொண்டற்கு இணங்க, மருத்துவர்கள் அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார்கள். பிறந்த போதே குழந்தை மூச்சிவிட சிரமப்பட்டதால் அந்த 900 கிராமே உள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜன் குழாய்கள் இணைத்து மூன்று நாட்கள் வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதன் துடிப்பு மெல்ல மெல்ல அடங்க அந்தப் பெண்ணிடம், “இனி எங்களால் காப்பாற்ற முடியாது“ என்று சொல்லவும் அந்த பெண் “என் குழந்தையை என்னிடமே கொடுத்துவிடுங்கள். நான் காப்பாற்றிக் கொள்கிறேன்“ என்று அழுதாள்.
   மருத்துவர், “உங்களின் குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் இறந்து விடும். ஆனால் வேறு வழியில்லாமல் நாங்கள் அதை எடுக்கத் தான் வேண்டியுள்ளது“ என்று சொல்லவும், அந்தப் பெண் “என் எதிரிலேயே எடுங்கள்“ என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்றிருந்தாள்.
   ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் அந்தக் குழந்தை இரண்டு நிமிடத்திலேயே இறந்து விட்டது. பாவம் அந்தப் பெண் கதறி அழதாள்“ என்று என் தோழி சொன்னாள்.
   எனக்கும் கவலையாக இருந்தது. இருந்தாலும் நான், “நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஏன் ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்தது.?“ என்று கேட்டேன்.
   “அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே கருப்பை வலுவில்லாமல் இருந்தது. அவளுடைய டாக்டர் அதிக வேலைகள் செய்யாமல், வெயிட்டான பொருட்கள் எதையும் தூக்காமல் முடிந்தவரையில் ரெஸ்ட்டிலேயே இருக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் எப்படி இருந்தாளோ.... இப்படி ஆகி விட்டது. தவிர இப்போது இருக்கும் பெண்களுக்கு முதல் முறையிலேயே கரு தங்குவது இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வெளியாகி விட்டு தான் கருவே தங்குகிறது.“ என்றாள்.
   இதைக் கேட்டதும் எனக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.

   பெற்றோர்களே.... ஏன் இப்போது இருக்கும் பெண்களுக்கு இப்படியாகிறது என்று யோசித்தால், பெண்களின் கருபப்பை வலு இல்லாமல் இருப்பது தான் காரணம் என்பது நமக்கே புரிந்து கொள்ள முடியும்.
   நான் பெரிய பெண்ணாகி வீட்டிற்குள்ளேயே இருந்த பதினொரு நாளும் காலையில் எழுந்ததும் இரண்டு நாட்டு கோழி முட்டையை உடைத்து எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பச்சையாகவே வாயில் ஊற்றுவார்கள். பிறகு திரும்பவும் உடைத்த அதே இரண்டு முட்டை அளவு நல்லெண்ணையை வாயில் ஊற்றி விழுங்கச் சொல்வார்கள்.
   அதன் பிறகு நிறைய நெய் ஊற்றி செய்த உளுந்து களியைச் சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பாட்டுடன் இந்த மூன்றையும் நிச்சயம் பதினொரு நாளும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொடுப்பார்கள். (ஏன்டா நாம் பெரியபெண் ஆனோம் என்று  இருந்தது) இருந்தாலும் சில நாட்கள் சாப்பிட்டேன்.
   
    ஆனால் இப்போது இருக்கும் பெண் பிள்ளைகள் அதையெல்லாம் சாப்பிடுவதை மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள். தவிர இங்கே வயதுக்கு வந்த விசயத்தைக் கூட தன் பெற்றோர்களிடம் தெரிவிப்பது இல்லையாம்.
    பெற்றோர்கள் (நம்மவர்களே) “இப்போது இருக்கும் குழந்தைகள் நிறைய செர்லக்ஸ் சாப்பிடுகிறார்கள். அதிலேயே எல்லா சத்தும் இருக்கிறதே“ என்று அலட்சியமாக சொல்கிறார்கள். இது தவறு.
    ஒரு பெண் பூப்படைந்த நாட்களில் அவளின் கருப்பைக்கும் உடலுக்கும் போஷாக்கான உணவைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் பிற்காலத்தில் குழந்தைபிறக்கும் பொழுது ஏற்படும் பிரட்சனைகள் குறையும்.
   பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுங்கள்.

டிஸ்கி – நாளைக்கு “அ உ“ போல் கணவன் அமைந்தால் “பூ க“தைச் சுற்றி அடிக்கவும் வசதியாக இருக்கும்.

அருணா செல்வம்.

18.06.2014

28 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பலருக்கு உடல் பலத்தினை விட அழகின் மேல் அதிக ஆர்வம் இருக்கிறது..... :(

பக்குவமான அறிவுரை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முன்னோர்கள் "சும்மா" எதையும் சொல்லி வைக்கவில்லை + செய்யவில்லை... இன்றைய "நவீன" பெற்றோர்களும் உணர வேண்டும்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

Avargal Unmaigal சொன்னது…

பூரிக்கட்டையை தூக்க கூட வலுவில்லாத அளவிற்காக இந்த பெண்கள் ஆகிவிட்டார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கியகாரணம் அம்மியில் மசாலா அரைக்காமல் சமுகதளங்களில் அரைப்பதே பெண்களின் வலுவின்மைக்குகாரணம்

Avargal Unmaigal சொன்னது…

பூரிக்கட்டையை தூக்க கூட வலுவில்லாத அளவிற்காக இந்த பெண்கள் ஆகிவிட்டார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கியகாரணம் அம்மியில் மசாலா அரைக்காமல் சமுகதளங்களில் அரைப்பதே பெண்களின் வலுவின்மைக்குகாரணம்

உளுந்தம் களி மட்டுமல்ல உளுந்து சாதம், உளுந்த வடை, சிக்கன் சூப். முழுகோழி கறி. முதலியவை உடலுக்கு வலிமை கொடுக்கும்.

unmaiyanavan சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

காமக்கிழத்தன் சொன்னது…

நல்ல விழிப்புணர்வுப் பதிவு. மகிழ்ச்சியும் பாராட்டும்.

அதென்ன “அ உ“ போல் கணவன்? புரியவில்லை அருணா [பூ.க......’பூரிகட்டை’?]

குலவுசனப்பிரியன் சொன்னது…

//பெற்றோர்களே.... ஏன் இப்போது இருக்கும் பெண்களுக்கு இப்படியாகிறது என்று யோசித்தால், பெண்களின் கருபப்பை வலு இல்லாமல் இருப்பது தான் காரணம் என்பது நமக்கே புரிந்து கொள்ள முடியும்.//
மருத்துவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். கற்கால மனிதர்கள் போல யோசனை சொல்ல வேண்டாம்.

வீட்டிற்குள்ளேயே இருந்த பதினொரு நாளும் காலையில் எழுந்ததும் இரண்டு நாட்டு கோழி முட்டையை உடைத்து எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பச்சையாகவே வாயில் ஊற்றுவார்கள். பிறகு திரும்பவும் உடைத்த அதே இரண்டு முட்டை அளவு நல்லெண்ணையை வாயில் ஊற்றி விழுங்கச் சொல்வார்கள்.//
வீட்டில் அடைப்பதே தவறு. இதற்குமேல் இந்தக் கொடுமை வேறா?

கரு தங்காததற்கு ஹார்மோன் குறைபாடுகள், பெண்ணிற்கு அதிக வயது முதலான பலக் காரணங்கள் உள்ளன. இங்குள்ள என் உறவினருக்கு 6 முறை கரு சிதைவுற்றது, அவருக்கிருந்த ஹார்மோன் குறையை அதற்குப் பிறகுதான் மருத்துவர்கள் கண்டு சரிசெய்தார்கள். அவர்களுக்கு இப்போது நல்ல அறிவும் ஆரோக்கியமும் கூடிய மகள் இருக்கிறாள்.

இதைப் போல உறவினர்களிடையே இருந்திருந்தால் எத்தனை ஏச்சும் பேச்சும் கேட்டிருக்க வேண்டி இருக்கும்?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நீங்கள் இப்பதிவை முற்றாக எங்கள் இங்கு வாழும் இந்திய,இலங்கைத் தமிழ்ப் பெண்களைக் கருத்தில் கொண்டு எழுதியுள்ளீர்கள்.
இந்த ருதுவான வேளைச் சாப்பாட்டு முறை ஏனைய உலகமக்களில் உண்டா? அவர்கள் இதை இயற்கையின் நிகழ்வாகக் கடந்து செல்கிறார்கள் ஆனால் நாம் மிகப் பெருதுபடுத்துகிறோம்.
"உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு" எனும் மனப்போக்குடன் பெண்பிள்ளைகளின் உணவு விடயத்தில் அக்கறைகாட்டாமல் வளர்க்கப்படுவதால், அந்த நேரத்தில் உள்ள இரத்தப்போக்குக்கு ஈடு கட்ட
சற்றுச் சத்தான உணவூட்டல் நடக்கிறது. அவ்வளவே! ஆனால் இவை இல்லாவிடில் கருப்பை பலவீனப்படுமென்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
நான் பல ஏழையாக வாழ்ந்து சரியாக உணவின்றி பலநாள் இளமையிலேயே பட்டினியுடன் வாழ்ந்து ஒரு ஏழைக்கே வாழ்க்கைப்பட்டு இறுதிவரை ஏழையாக வாழ்ந்த பெண்களை அறிவேன்.
அவர்கள் வீட்டில் பிள்ளைச் செல்வத்துக்குக் குறையிருந்ததேயில்லை.
இங்கு எந்த வீட்டில் பிள்ளைகளுக்கு பட்டினியென்றால் என்ன என்று தெரியுமா? இப்போ உடல் பருமனாகுதே என பயப்படுமளவுக்குச் சாப்பிடுகிறார்கள். ஆனால் முழு உடலும் வலுப் பெறுமளவுக்கு
வேலையோ,பயிற்சியோ செய்வதுமில்லை, பெற்றோர் செய்யவிடுவதுமில்லை.
சதா கணனியையோ, கைத்தொலைபேசியையோ நோண்டிக்கொண்டு, வாய்க்கு மாத்திரம் நல்ல பயிற்சி
நொறுக்குத் தீனிகள் மூலமும், பேசுவது மூலமும் , காலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இக்குற்றச்சாட்டு இருபாலாரையுமே சாரும்.
அன்றைய நம் முன்னோர் போல் நாம் இன்று வாழவில்லை. அதனால் அவற்றில் எடுக்க வேண்டியதை எடுப்போம்.
நாளும் நிறையுணவு, உடற்பயிற்சி, ஆன தூக்கமென உடலாரோகியத்தைப் பேணி, திருமணத்தின் பின் குழந்தைப்பேற்று மருத்துவரை நாடி உரிய ஆலோசனை பெற்றால் நலமான குழந்தையைப் பெறலாம்.
இவற்றையெல்லாம் தாண்டி சில சிக்கல்கள் இருக்கலாம். அது எல்லோருக்குமல்ல.
அதனால் தேவையற்ற பயத்துடன் வாழவேண்டியதல்ல.
எனவே உங்கள் பிள்ளைகளைச் சோம்பேறியாக இருக்க விடாதீர்கள்.
saamaaniyan சொன்னது…

ந்த பிரச்சனைக்கு ‍ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணம் !

ஆனால் இன்றை பெண்களுக்கு அதிகம் ஏற்படும் ‍ஹார்மோன் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சமீப காலமாக கூறப்படும் காரணம் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ! ( நமக்கு தெரிந்த வார்த்தையில்... யூரியா ! )

தொழில் புரட்சியின் விளைவாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உலகெங்கும் பரவலாக்கப்பட்ட இந்த பூச்சிகொல்லி மருந்துகளின் " பயன் " பற்றிய தகவல்கள் மனம் பதைக்க வைப்பவை ! " ராபின் பறவை " என்ற சிறு பறவையினத்தின் முட்டைகளில் படிந்த இந்த மருந்துகளின் மூலம் அவற்றின் கருக்கள் வலுவிழந்து அந்த பறவியினமே அழிந்ததை பற்றியெல்லாம் கூற பல பதிவுகள் தேவை !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

Unknown சொன்னது…

பயன் தரும் நல்ல தகவல்! அனைவரும்(குறிப்பாக பெண்கள்) அறிய வேண்டிய செய்தி!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

உண்மை தான் தனபாலன் அண்ணா.

வரும் முன் காத்தவர் கற்காலத்தோர்.
வந்த பின் பார்ப்பவர் தற்காலத்தோர்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

-பூரிக்கட்டையை தூக்க கூட வலுவில்லாத அளவிற்காக இந்த பெண்கள் ஆகிவிட்டார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. -

நான் இப்படி எழுதவில்லையே...

அருணா செல்வம் சொன்னது…

-முக்கியகாரணம் அம்மியில் மசாலா அரைக்காமல் சமுகதளங்களில் அரைப்பதே பெண்களின் வலுவின்மைக்குகாரணம்-

அப்படியா...? இதற்கு என்ன செய்யலாம்....

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுப்ரமணியன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

-நாளைக்கு “அ உ“ போல் கணவன் அமைந்தால் “பூ க“தைச் சுற்றி அடிக்கவும் வசதியாக இருக்கும்.-

நாளைக்கு அடி உதை கொடுப்பது போல் கணவன் அமைந்தால் பெண்கள் தங்களின் பூங்கரத்தைச் சுற்றி அடிக்கவும் வசதியாக இருக்கும் என்பதைச் “சும்மா” நகைச்சுவைக்காகச் சுறுக்கி எழுதினேன் ஐயா.

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி காமக்கிழத்தன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

குலவுசனப்பிரியன் அவர்களுக்கு வணக்கம்.

தற்கால மனிதர்கள் போல யோசித்துக் கருதிட்டமைக்கு மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

யோகன் -பாரீஸ் அவர்களுக்கு வணக்கம்.

உரிய நேரத்தில் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் சத்தானதாகச் சாப்பிட்டாலே போதும் என்பது தான் பதிவின் உட்கருத்து.

தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

செடி வளர்ந்து வரும் போதே நல்ல இயற்கை உரத்தை அளித்தால் மரமானப் பிறகு செயற்கை உரத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை என்பதைத் தான் நான் எழுதினேன்.

சாமானியன் அவர்களே.... ஹார்மோன் குறைபாடு எதனால் வருகிறது என்பது தெரிந்தால் எழுதுங்களேன்.

நீங்கள் சொன்ன புச்சிக்கொள்ளி மருந்தை நினைத்தாலே பயமாகத் தான் இருக்கிறது.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சாமானியன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

Mahesh Prabhu சொன்னது…

பலகதைகள் எனப்பேசி பல விசயங்களை இழந்து விட்டோம். உங்கள் பதிவு சிலரையாவது மாற்றும் என் நம்புவோம் சகோதிரி....

Yarlpavanan சொன்னது…

சிறந்த உளநல வழிகாட்டல்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகச் சிறந்த ஒரு இடுகை சகோதரி! தாங்கள் கூறியுள்ளவற்றைத்தான் நம் பெரியோர்களும் செய்தார்கள்! அது பழைய முறைகள் என்று ஒதுக்குவதற்கில்லை! இப்போது வாழ்க்கை முறையே மாறிவிட்டதால்தான் பல பிரச்சினைகள் பெண்களுக்கு! ஹார்மோன் பிரச்சினைகள் உட்பட.....தாங்கள் சொல்லியிருக்கும் வழி முறைகளை யாருங்க இப்ப பின்பற்றுகின்றார்கள்...

வாழ்த்துக்கள்!

ezhil சொன்னது…

பொதுவாகவே வளர் இளம் பருவத்தில் , பாலியல் மாற்றங்கள் ஹார்மோன் மாற்றங்கள் ,உடல் வளர்ச்சி , மன வளர்ச்சி நடைபெறும் காலத்தில் இரு பாலருமே நல்ல சமச்சீர் உணவு உட்கொள்ள வேண்டும். மாறி வரும் நாகரீக உலகில் அதற்கு யார் முக்கியத்துவம் தருகிறார்கள். அதன் விளைவு பின்னால் தான் தெரிய வருகிறது. அப்போது என்ன மாற்றம் செய்துவிட முடியும்