சனி, 12 ஏப்ரல், 2014

காதல் என்பது இவ்வளவு தானா...? (நிகழ்வு)




      
    நான் பிரான்ஸ் வந்த புதியதில், நான் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் என் பக்கத்து போஷனில் ஒரு கணவன் மனைவி இரண்டு ஆண் பிள்ளைகள் என்று ஓர் அழகான பிரென்சு குடும்பம் வாடகைக்கு வந்தார்கள்.
    பக்கத்து வீடு என்பதால் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நல்ல தோழமை ஏற்பட்டது. என்னை விட அந்தப் பெண் பத்து வயதுக்கு மேல் பெரியவர்(ள்). (இருந்தாலும் அனைவரையும் பெயர்விட்டு அழைப்பது தான் இங்கே மரியாதை என்கிறார்கள்.) அந்தப் பெண்ணும் வேலைக்குப் போவதால் சனி ஞாயிறுகளில் அதிகமாகப் பேசிக்கொள்வோம். அப்படி பேசும் பொழுது ஒரு நாள் காதல் விசயம் வந்தது. அவள் ஒரு நாள் என்னிடம்... “அருணா... செல்வம் தான் முதன் முதலில் காதலைச் சொன்னாரா? நீ முதலில் சொன்னாயா...?“ என்று கேட்டாள்.
   நானும் (கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு) “எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை. இருவருக்கும் வீட்டில் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள்“ என்றேன்.
   அதைக் கேட்டதும் அவளால் தன் அதிர்ச்சியை அடக்க முடியவில்லை. (ஏதோ நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது போல் என்னை விநோதமாகப் பார்த்தாள்) அவளாள் இதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
   “எப்படி... எப்படி...?“ என்று பல கேள்விகள் கேட்டாள். என்னால் அவளின் அனைத்துக் கெள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்றாலும் “எங்கள் நாட்டில் இப்படித் தான் வழக்கம். அதற்காக காதல் கல்யாணம் என்பதெல்லாம் இல்லாமல் இல்லை“ என்று பொதுப்படையாகச் சொல்லிவைத்தேன்.
   நட்புறவுகளே.... எனக்குத் தெரிந்து இந்த நாட்டில் காதலிக்காமல் கல்யாணம் கிடையாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதினெட்டு வயதிற்கு மேல் காதலிக்கவில்லை என்றால் தான் கவலை படுகிறார்கள். தானே தன் துணையை ஆணோ பெண்ணோ தேடவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை அப்படியே தனிமையில் தான் போகிறது. இப்படிப்பட்டவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
   அதனால் தான் அவளின் ஆச்சர்யம் மேலோங்கியது. அதன் பிறகு அவளின் காதல் கதையைப் பற்றி சொன்னாள். படிக்கும் பொழுது துவங்கியதிலிருந்து பத்து பனிரெண்டு வயதில் இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு போன மாதம் இங்கே இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வரையில் சொன்னாள்.
   சிறு சிறு குடும்ப சண்டைகள் என்று அவர்களுக்குள் நடந்தாலும் நான் அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடி பெயர்ந்தது வரையில் நன்றாகத் தான் இருந்தார்கள். அதன் பிறகு கடந்த பத்து வருடத்தில் நேற்று தான் அவளை ஒரு கடையில் பார்த்தேன்.
   பிள்ளைகள் மற்றும் உடல்நலம் என்று பலவிசயங்களைப் பேசிவிட்டு அவளின் கணவரைப் பற்றி விசாரித்தேன். அப்பொழுது தான் அவள் சொன்னாள். “நீ அங்கிருந்து வந்த ஒரு வருடத்தில் எங்களுக்குள் விவாகரத்து ஆகிவிட்டது. அவர் அடுத்த இரண்டு வருடத்திலிருந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழுகிறார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள். இப்பொழுது இவருடன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறதாம். போனமுறை போயிட்டு வந்த என் சின்ன மகன் சொன்னான்“ என்றாள்.
   எனக்கோ உண்மையில் பயங்கர அதிர்ச்சி.... என்னமோ எவ்வளவோ வருடங்களாக காதலித்தவர்களாம்.... பிறகு எப்படி இப்படியானது...? என்ன காரணமாக இருக்கும்....? கேட்டுவிட்டேன்.
   “அது பழைய கதை. விடு அருணா“ என்றாள். 
   “அப்போ நீங்க காதலிச்சோம் என்று சொன்னதெல்லாம் சும்மாவா...?“ என்றேன்.
   “இல்லை. அது அந்த வயதில் உண்மை தான். காதலிச்சதுக்காக அவரிடம் எவ்வளவு அன்பா இருக்கனுமோ அவ்வளவு அன்பா இருந்தேன். ஆனால் அதுக்காக அடிமையாக என்னால் வாழ முடியாது.“ என்றாள்.
   அன்புக்குப் பணிவது அடிமைத்தனமா...? நான் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். அவளே... “என்ன அருணா... என்னைப்பற்றி கேட்க மாட்டாயா...?“ என்றாள்.
   இதற்கு மேல் இவளைப்பற்றி கேட்க எனக்கு விருப்பம் இல்லாததால் நான் பேசாமல் இருக்க அவளே தொடர்ந்தாள், “நான் இப்போ ஒருவருடன் வாழுகிறேன்“ என்றாள். எனக்கு இது அதிர்ச்சியாக இல்லை. இங்கே கழுதை கெட்டா குட்டிச்சுவர் என்ற கதை என்பது எனக்குத் தெரிந்தது தானே!
   நான் ஏதாவது சொல்ல வேண்டுமே என்ற நோக்கத்தில், “எப்போ கல்யாணம்...?“ என்று கேட்டு வைத்தேன்.
   “ஐயோ கல்யாணமா....? ஒருத்தரிடம் ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டது போதும்பா. இன்னொரு கல்யாணமா...? வேண்டவே வேண்டாம். அவர் என்னைக் காதலிக்கிறதாக சொன்னார். நானும் ஏத்துக்கிட்டேன். இப்போ ஒன்னா வாழுறோம். இது போதும்“ என்றாள்.
   “பிற்காலத்தில் உனக்கு ஒரு துணை வேண்டாமா...?“ கேட்டேன்.
   “பிற்காலத்தை நினைச்சிக்கினு இப்போ வாழுற வாழ்க்கையை நான் வீணாக்கிக்க விரும்பலை. இப்போ என் இஷ்டம். எந்த நேரத்திலேயும் எங்கே வேண்டுமானாலும் போகிறேன். பிடிச்சதை சாப்பிடுறேன். விருப்பட்டதை வாங்கிக்கிறேன். யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிக்கிறது“ என்றாள்.
   எனக்கு அவளிடம் மேற்கொண்டு எதுவும் பேச இல்லாதது போல் தோன்றவே அவளின் தொலைபேசி எண்ணை மட்டும் கேட்டுக் குறித்துக் கொண்டு வந்து விட்டேன்.
  
   இருந்தாலும் மனம் அவளைப் பற்றியே சுழல்கிறது.
   என்ன காதல் இது? காதல் என்பது உண்மையில் வெறும் இனக்கவர்ச்சி தானா...? எத்தனை நாட்களுக்கு அது நீடிக்கும்...? புரியவில்லை.
   காதலித்துக் கல்யாணம் செய்துக்கொண்டால் அன்றோடு காதல் முற்று பெற்று விட்டதா?
   காதலித்துப் பிரிந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அந்தக் காதலை நினைத்து வாழுவதால் அந்த காதல் முற்று பெறாமல் தொடர்கிறதா?
   உண்மையில் காதல் இந்த இரண்டில் எதில் வாழ்கிறது...?

  
யோசனையுடன்
அருணா செல்வம்.
13.04.2014

13 கருத்துகள்:

  1. அதிகம் சிந்திக்கச் செய்துபோகும் பதிவு
    நம்முடைய நிலையில் நின்று யோசிக்காது
    அவர்கள் வழியில் யோசிக்க அதுவும்
    சரியாகத்தான் படுகிறது (அவர்களுக்கு )
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. காதல் என்பதே இல்லை... இதில் என்னத்த இந்த இரண்டில் வாழுது...?

    பதிலளிநீக்கு
  3. நான் சொல்றது தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க.. ஆனா உண்மை இதுதான் காதல், அன்பு, பாசம் எல்லாமே அந்த நேரத்தில் தோன்றும் டெஸ்டெஸ்ட்ரான் என்னும் ஹார்மோன் செய்யும் வேலை அது..அதைத் தவிர்த்து நாம் வளர்ந்த சூழல் நம் மனதில் இப்படித்தான் வாழ வேண்டும் என கட்டுப்பாட்டுகளை விதைத்திருக்கிறது.

    நம்மில் மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்த அந்தப் பெண் செய்ததில் தவறொன்றும் இருப்பதாய் தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  4. ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியாவில் தான், மற்ற நாடுகளில் முக்கியமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்படித்தான். அவரை நினைத்து கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணமான ஒன்று தான்.

    பதிலளிநீக்கு
  5. சகோதரி! நமக்குதான் வெள்ளைக்காரர்களின் காதல் தெரிந்த விஷயம்தானே! அவர்களுக்கு நமது கல்யாண பந்தம் எல்லாமே கிகவும் ஆச்சரியம் கொடுக்கக் கூடியதே! கல்யாண பந்தத்தை விடுங்கள்....நமது காதலைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்க ஒரு சில தமிழ் படங்களைக் காட்டினாலே போதும்! காதலின் அருமை தெரியாத மனிதர்கள்! அதனைச் சுதந்திரம் சொல்லிக் கொள்வார்கள்!!

    என்ன சொல்லுகின்றீர்கள் சகோதரி?!!

    பதிலளிநீக்கு
  6. அதிகம் சிந்திக்கச் செய்யும் பகிர்வு...
    இது வெளிநாட்டுக் காதல்... இப்படித்தான்...
    இவர்களுக்கு எல்லாம் காதலின் அருமை தெரிவதில்லை....
    சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    உள்ளழகு காதல்! உடலுணா்வு ஆசை!என்
    சொல்லழகு ஊட்டும் சுவை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  8. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அவர்களுக்கு உள்ள சுதந்திரம் நமக்கு வரவில்லை என்றுதான் படுகிறது !
    த ம 1௦

    பதிலளிநீக்கு
  10. அவர்களின் காதலில் இது சகஜம்....

    அதனால் நம் நாட்டின் காதலோடு குழப்பிக் கொள்வதில் அர்த்தம் இல்லை!

    பதிலளிநீக்கு