சனி, 21 ஜூலை, 2012

காதல்...!!! (கவிதை -1)
ஆதி மனிதன் வந்தமுதல்
   ஆசை அனைத்தும் பிறந்தாலும்
பாதி மனித வாழ்வினிலே
   பணம்தான் ஒன்றே மகிழ்வென்று
மோதி மோதி வாழ்ந்துவரும்
   முயற்சி யுடைய மனிதர்களே!
சேதி ஒன்றை நான்சொல்வேன்!
   செய்வீர் காதல் அதனூடே!!

என்ன அதிலே இருக்கிறது?
   எடுத்துச் சொல்ல யார்வருவார்?
சொன்னால் அதிலே சுவைவருமா?
   சொல்லிப் பார்த்தேன் “காதலென்று“!!
சொன்ன உடனே உடம்பெல்லாம்
   சூடு தணிந்த நிலைகண்டேன்!
என்றன் நாவின் உமிழ்நீரும்
   என்ன சுவையாய் இனிக்கிறது!!

சொல்லச் சொல்ல இவ்வார்த்தைச்
   சுகத்தை மேலும் அளிக்கிறதே!
மெல்ல மெல்ல உள்நுழைந்து
   மேனி முழுதும் சிலிர்க்கிறதே!
வல்ல வல்ல கவிகளிடம்
   வளைந்து வளைந்து விளையாடி
நல்ல நல்ல கற்பனையால்
   நாளும் மேலும் பொலிகிறது!!(காதல் தொடரும்)

18 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல சிந்தனை !

மகேந்திரன் சொன்னது…

ஆதலின்
இன்றே
காதல் செய்வீர்....

Yaathoramani.blogspot.com சொன்னது…

காதலே அருமையானது
அதைச் சொல்லிப்போனவிதம்
அதைவிட அருமையாய் இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஆத்மா சொன்னது…

அழகான கவி...காதல் அது காதல் தான்.....

கீதமஞ்சரி சொன்னது…

சொல்லும்போதே இனிக்கும் காதல், அனுபவிக்க எத்தனை இனிமை, அனுபவித்து எழுதப்பட்ட இக்கவிதை போலே! அருமை.தொடரட்டும் காதல்!

பெயரில்லா சொன்னது…

காதல் ஆலாபனை நன்று.
கோதல் வார்த்தைகள் இனிப்பு.
தீதல்ல தெளிவுடன் என்றும்
காதல் செய்வீர் வாழ்க! கவி!
வேதா. இலங்காதிலகம்.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க தனபாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நண்பரே... உங்களுக்கு நான் என்ன எழுதுவது
என்றே தெரியவில்லை.

நன்றிங்க நண்பரே!

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் ரமணி ஐயா...

என்னிடம் “காதல்“ என்ற தலைப்பு கொடுத்து ஐந்து பாடல்கள் எழுத சொன்னார்கள். எழுத.. எழுத... சுருந்து கொண்டே வந்துவிட்டது... எழுதிய பிறகு தான் பார்த்தேன். ஒன்பது பாடல்கள்!!!

முழுவதும் போட்டால் படிக்க அலுப்பு வந்துவிடும் என்று மூன்று மூன்றாக போடலாம் என்று...
தொடர்ந்து வந்து படியுங்கள். நன்றிங்க ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

சிட்டுக்குருவி...

கவி என்றால் குரங்கு என்ற அர்த்தமும் உண்டு....

நன்றிங்க விட்டுக்குருவி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வாழ்த்து என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது.

நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

அருணா செல்வம் சொன்னது…

அழகான வாழ்த்தை வணங்கி ஏற்கிறேன்.

நன்றிங்க வேதா.இலங்காதிலகம் அவர்களே.

சசிகலா சொன்னது…

காதலது வந்தபின்னே காந்தமென ஒட்டிக்கொள்ளும் கவி வரிகள் மயக்காமல் என்ன செய்யும் அழகு சகே◌ா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க சசிகலா.

Seeni சொன்னது…

ada !

pannunga pannunga -
kaathal!

kavithaiye kaathalaakiyathu!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கு
மிக்க நன்றிங்க சீனி ஐயா.

சாய்ரோஸ் சொன்னது…

ஆதி மனிதன் வந்தமுதல்
ஆசை அனைத்தும் பிறந்தாலும்
பாதி மனித வாழ்வினிலே
பணம்தான் ஒன்றே மகிழ்வென்று
மோதி மோதி வாழ்ந்துவரும்
முயற்சி யுடைய மனிதர்களே! -

என்னவொரு வார்த்தை கோர்ப்பு... காதலின் மகத்துவத்தை புரியவைக்க இப்படியொரு சமூக சாட்டையடி ஆரம்பம் மிக வித்தியாசமான சிந்தனை... வெறுமனே வாழ்த்துக்கள் மட்டும் கூற விரும்பாமல் உங்கள் தமிழுக்கு தலைவணங்கும் கடமை தமிழார்வலர் என்ற வகையில் நிச்சயம் எனக்குண்டு!... (உங்களுடைய எல்லா படைப்புகளையும் பயில நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் கட்டுண்டுள்ளேன்)

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் சாய்ரோஸ் அவர்களே...
தங்களின் முதல் வருகைக்கும்
ஆழ்ந்து படித்து அழகாக இட்ட பின்னோட்டத்திற்கும்
மிக்க நன்றிங்க சாய்ரோஸ்.

தொடர்ந்து வந்து படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.