புதன், 14 மார்ச், 2012

பொங்குகிறேன்!! (கவிதை)பொங்கிப் பொங்கி எதையெழுத?
      பொங்கும் எழுத்தால் எதுவிளையும்?
பொங்கும் துயரம் கண்ணெதிரில்
      பொறுக்கும் உணர்வோ எழுத்தினிலா?
எங்கள் இனத்தின் இழிவுகளை
      எதிர்த்துப் பாட்டில் பொங்கிடலாம்!
தங்கத் தமிழன் என்பவனோ
      தமிழைப் படித்துப் பொங்குவானா?

பொங்கி வந்த பூங்கவிகள்
      பொலிந்த கருத்தை அறிந்தாலும்
எங்கும் இருக்கும் பொய்புரட்டை
      எதிர்க்கும் சக்தி எவர்க்குண்டு?
சிங்கம் போன்று சீரிடாமல்
      சிறைக்குள் ஒலியும் நம்மவர்கள்
வங்கக் கடல்போல் வளர்த்துவிட்ட
      வழக்கம் கவிதை மாற்றிடுமா?

‘எழுதும்” எதையும் எனச்சொல்ல
      எழுத்தில் கருத்தைக் கோர்த்திடலாம்!
பழுதாய்ப் போனப் பண்பாட்டைப்
      படைக்கும் பாட்டில் உயர்த்திடலாம்!
உழுது படைக்கும் உழவனுக்கோர்
      உயர்வாய்ப்; பாடல் அமைத்திடலாம்!
விழுந்து விட்ட உணர்ச்சிகளை
      எழுத்தில் தூண்டி(ட) எழுவாரா?

பாட்டும் எழுதி பயனென்ன?
      பாரில் உயர்ந்த தமிழினத்தை
ஓட்டி விட்ட பிறவினத்தால்
      ஒதுங்கி நிற்கும் மனிதனுக்கு
நாட்டில் இன்றும் இடமில்லை!
      நன்றாய் விதியை நொந்துகொண்டே
ஏட்டில் எழுதிப் பொங்குகிறேன்!
      எளிய தமிழால் பொங்குகிறேன்!
  
குட்டக் குனியும் குடியாகக்
      குறுக லான மனத்துடனே
எட்ட இருந்தே பார்த்துநின்று
      எதுவும் செய்ய முடியாமல்
வட்டம் போட்டு வாழ்ந்துகொண்டும்
      வலைக்குள் இருக்கும் தமிழ்கொண்டும்
தட்டிக் கேட்டுப் பொங்குகிறேன்!
      தாளில் நன்றாய்ப் பொங்குகிறேன்!

(அறுசீர் விருத்தம்)

2 கருத்துகள்:

 1. “மனம் கசக்கும் பதிவு!!“

  கசப்பான எண்ணங்கள் கவிதையில் வரும்பொழுது
  மனம் கசக்கத்தான் செய்யும்.
  சேகர்..
  உங்கள் வருகைக்கு என் நன்றி!

  பதிலளிநீக்கு