போன வாரம் என் ஆசிரியர் கவிஞர் கி.பாரதிதாசன்
அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு எப்பொழுதும் போல “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?“ என்று
கேட்டார்.
அந்த நேரத்தில் என் வீட்டில் இண்டர்நெட் பிரட்சனையால்
தொலைக்காட்சி பெட்டி நடக்கவில்லை. அதனால் நான் புத்தகம் ஒன்றைப் படித்துக்
கொண்டிருந்தேன்.
நான் உடனே ” என் வீட்டில் டீ.வி
நடக்கவில்லை கவிஞரே. அதனால் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்“ என்று உண்மையைச்
சொன்னேன்.
அவர் உடனே “ டீ.வி எப்படி
நடக்கும்...? அதற்கு தான் கால்கள் இல்லையே“ என்றார்.
நானும் சட்டென்று அவர் சொன்னதைப்
புரிந்து கொண்டாலும் “என் வீட்டில் இண்டர்நெட் பிரட்சனையால் டீ.வி ஓடவில்லைங்க“
என்றேன்.
அவரும் விடாமல் “டீ.வி எப்படி
ஓடும்...? அதற்கு கால்கள் இல்லை என்று தான் சொன்னேனே...“ என்றார்.
எனக்கு கொஞ்சம் கடுப்பு...! உண்மையில்
டீ.விக்கு கால்கள் இல்லை. டீ.வி என்ற வார்த்தையிலும் கால்கள் இல்லை... நாம்
எப்பொழுதும் டீ.வி நடகவில்லை. வாட்ச் ஓடவில்லை, மிக்ஸி ஓடவில்லை, என்று தான்
சொல்வோம்... இவர் கேட்பதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “உங்கள்
வீட்டிலெல்லாம் டீவி நடக்கவில்லை என்றால் நீங்கள் எப்படி சொல்வீர்கள்...?“ என்று
கேட்டேன்.
அவர் “ஹா ஹா ஹா “ என்று வீரப்பா
சிரிப்பு சிரித்துவிட்டு “நன்றாக யோசித்துப்பார்” என்று சொல்லிவிட்டு போனை
வைத்துவிட்டார்.
நானும் சற்று யோசித்தேன். எந்த
வார்த்தையும் வரவில்லை.
நண்பர்களே.... நீங்களும்
யோசித்துப் பாருங்கள். இங்கே டீ.வி நடக்காததை எப்படி சொல்வது? என்று. நான் இங்கே
பிரான்சுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நான் இருக்கும் இடத்தில் தமிழ்
பேசுபவர்கள் அதிகம் கிடையாது என்றாலும் பேசும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. (அதனால்
தான் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் இணையத்திலாவது பேசலாம் என்று வலைக்குள்ளே
இருப்பேன்.) அதனால் தான் எனக்குத் தெரியவில்லையோ... என்று சற்று நேரம்
யோசித்துவிட்டு அதை அப்பொழுதே மறந்தும் விட்டேன்.
என்ன....? நீங்கள் கண்டுபிடித்து
விட்டீர்களா....? கண்டு பிடித்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கண்டு
பிடிக்காதவர்கள் தொடருங்கள்.
--
--
--
--
--
--
திரும்பவும் அவர் என்னை நேற்று
தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரிப்புகளும் மற்ற விசயங்களும் பேசிவிட்ட பிறகு “என்ன
செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்பொழுது டீ.வியைச்
சரிசெய்து விட்டிருந்ததால் நான் டீவி பார்த்துக்கொண்டு இருந்தேன். அதனால்
தப்பித்தோம் சாமீமீமீ... என்று நினைத்துக்கொண்டே “டீ.வி பார்த்துக்கொண்டு
இருக்கிறேன்” என்றேன்.
உடனே அவர் “ஓ.. இப்பொழுது உங்கள்
வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இயங்குகிறதா...?” என்றார்.
அப்பொழுது தான் எனக்கு “இயக்கம்“
என்ற வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. என் மரமண்டையைத் தட்டிவிட்டு “இயங்குகிறதுங்க” என்றேன்.
அவர் “தமிழைத் தமிழாகவே பெசிக்கொண்டிருங்கள்.
மூளையும் நன்றாக இயங்கும்“ என்று சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.
(இது மிகச்சாதாரண பதிவு தான். (மொக்கை பதிவு என்று அர்த்தம் புரியாமல் முதலில் எழுதி விட்டேன். மன்னிக்கவும்) இருந்தாலும் நான் கற்றதை நம்முடன் இருப்பவர்களுக்கும்
தெரிவிக்கலாம் என்று தான்....)
நன்றி
அருணாசெல்வம்.