அன்னை தெரசா
வெண்ணிற உடையினில்
வெண்புறா சாயலில்
வேதவர் உடலுருவம்!
பொன்னிற முகத்தினில்
பொறுமைக்குப் பரிசாய்ப்
பொதிந்திட்ட துகச்சுருக்கம்!
தன்னிரு கைகளும்
தந்திட ஏந்திடும்
தவத்திரு காட்சியெல்லாம்
என்னிரு கைகளும்
இரங்கு வார்க்குதவ
ஏங்குதே என்பதன்றோ!
கருணை மழையினைக்
கண்களால் பொழிந்திடும்
கர்த்தரின் தூதுஇவர்!
பொறுமை என்பதின்
பொருளின் பொருளினைப்
புரிந்திட வைத்தவரே!
அருமைக் குறள்தந்த
அன்பின் பொருள்படி
அமைந்த நற்குணத்தால்
பெருமை என்றுநாம்
பேசிடும் புகழெனும்
பேற்றினும் உயர்ந்தவரே!
பெற்றோர் உற்றோரின்
பற்றினை விட்டவர்
பார்வைக்குப் புனிதமவர்!
கற்றோர் தேடிடும்
கல்வியின் பெருமையின்
கருவாய் இருப்பவரே!
நற்பேர் கொள்வதும்
நாடினோர்க் உதவிடும்
நல்மனம் கொண்டதால்
நிற்பார் நெஞ்சினில்
நலைத்திடும் தியாகத்தின்
திளைத்திடும் தீஞ்சுடராய்!
மண்மேல் வாழ்ந்திடும்
மக்களின் மனத்தினில்
மங்கையர் திலகமவர்!
விண்மேல்
வாழ்ந்திடும்
விண்ணவ தேவர்க்கும்
விளக்காய் இருந்தவரே!
பெண்போல் இருப்பினும்
பெற்ற நற்குணத்தால்
பேசிடும் தெய்வமிவர்!
கண்முன் தெரிந்திடும்
கருத்தினில் புகுந்தநல்
கடவுளின் கடவுளிவர்!!
அருணா செல்வம்.