செவ்வாய், 6 அக்டோபர், 2020

பஞ்ச பங்கி! (ஒன்றில் ஐந்து)

 


தமிழே!
 
ஆசிரியப்பா!
பெருங்கலை என்றே பிணைந்த தமிழின்
அருங்க லையாள்! வருங்கலை வாழ்த்தும்
தருங்கலை என்னும் வளமு டையாள்!
பெரும்பகை போக்கும் பெருவுளம் கொண்ட
குலமு டையாள்! திருவென இன்ப
நலமி சைபாள் செம்மைத் தமிழ்மகளே!
இனிய சொற்கள் இனிமை பயக்கும்!
கனியின் சுவையாய்க் கருத்தை இழுக்கும்!
தனியாய் நின்று தழைக்கும் அழகாய்
வனிதம் கொண்ட வளமுடை தமிழே!
அணியாம் இலக்கணம் ஆண்ட தமிழாள்
துணிவைத் தருவாள்! தொடர்ந்து படிக்கும்
மனத்தில் பணிவை வளர்த்து, வெடிக்கும்
சினத்தை வெறுத்து, முடிக்கும் செயலில்
நினைவைச் செலுத்த நாளும் உயர்வோம்!
பனைபோல் உயர்ந்து! பண்ணின் அழகில்
மனத்தைப் பதிக்க மண்ணும் அழகாம்
தினமும் மதியில் திங்கள் ஒளியாம்!
சிறந்த தெளிவு தங்கிச் சிறக்கும்!
பறக்கும் தமிழாய்ப் பாடித் திரியும்!
புலவர் பாட்டில் கூடிப் பொலியும்!
புலமை கொஞ்சும் தமிழே உன்னைப்
படிக்க உள்ளம் படரும்! மின்னும்
படியாய் எண்ணம் மிளிரும்! நன்மை
இன்மை காட்டும் இனியவளே
என்றும் என்னுள் இருப்பாய் இசைந்தே!
 
கட்டளைக் கலித்துறை!
 
பெருங்கலை என்றே பிணைந்த தமிழின் அருங்கலையாள்!
வருங்கலை வாழ்த்தும் தருங்கலை என்னும் வளமுடையாள்!
பெரும்பகை போக்கும் பெருவுளம் கொண்ட குலமுடையாள்!
திருவென இன்ப நலமிசைப்பாள் செம்மைத் தமிழ்மகளே!
 
கலிவிருத்தம்!
இனிய சொற்கள் இனிமை பயக்கும்!
கனியின் சுவையாய்க் கருத்தை இழுக்கும்!
தனியாய் நின்று தழைக்கும் அழகாய்
வனிதம் கொண்ட வளமுடை தமிழே!
 
குறள் வெண்பா!
அணியாம் இலக்கணம் ஆண்ட தமிழாள்
துணிவைத் தருவாள் தொடர்ந்து!
 
நேரிசை வெண்பா!
படிக்கும் மனத்தில் பணிவை வளர்த்து
வெடிக்கும் சினத்தை வெறுத்துமுடிக்கும்
செயலில் நினைவைச் செலுத்த நாளும்
உயர்வோம் பனைபோல் உயர்ந்து!
 
வஞ்சிப்பா!
பண்ணினழகில் மனத்தைப்பதிக்க
மண்ணுமழகாம்! தினமும்மதியில்
திங்களொளியாம்! சிறந்ததெளிவு
தங்கிச்சிறக்கும்! பறக்கும்தமிழாய்ப்
பாடித்திரியும்! புலவர்பாட்டில்
கூடிப்பொலியும்! புலமைகொஞ்சும்
தமிழே
உன்னைப் படிக்க உள்ளம் படரும்
மின்னும் படியாய் மிளிரும் எண்ணம்!
நன்மை இன்மை காட்டும் இனியவளே
என்றும் என்னுள் இருப்பாய் இசைந்தே!
-
பாவலர் அருணா செல்வம்.
.
(பஞ்சபங்கி என்பது ஒரு பொருள் குறித்த ஒரு பாடலை ஐந்து வேறு வகையான பாடலாக பொருள் மாறாமல் பகுத்துப் பாடப் படுவதாகும். பஞ்ச என்பது ஐந்து என்றும் பங்கி என்பது பகுத்தல் என்றும் பொருளாகும்.)

வெள்ளி, 2 அக்டோபர், 2020

கண்ணே கண்ணுறங்கு!! (தாலாட்டு)

 

 

கண்ணே! மணியே! கற்கண்டே!
     கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
      பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
      முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
      பேசும் கிளியே கண்ணுறங்கு!
 
இன்றோ உனக்கு வேலையில்லை!
      இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
      திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
      அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
      இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!
 
காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
      காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
      விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
      மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
      நலமாய் இன்றே கண்ணுறங்கு!

.
பாவலர் அருணா செல்வம்

திங்கள், 28 செப்டம்பர், 2020

இராவணின் உண்மைக்காதல்!



கவிகள் சொல்லும் காதலெல்லாம்
   கருத்தில் மிதக்கும் கற்பனைதான்!
தவிக்கும் இதயத் துடிப்புகளைத்
   தணிவாய்ச் சொல்ல முடியாமல்
செவிக்குள் விழுந்த செய்திகளைச்
   சிறந்த தமிழில் எழுதுவதால்
புவியில் பெறுவார் நற்பெயரே
   புதுமை  கவிகள்  படைப்பாரே!
 
அன்பின் பேரில் ஆசைகொண்ட
   அயோத்தி பெண்கள் காதலையும்
மன்னன் இடத்தில் பாசமுடை
   மக்கள் கொண்ட காதலையும்
கன்னி மாடப் பார்வையினால்
   கனிந்த சீதை காதலையும்
நன்றே அறிந்தோம் உண்மையென
   நவின்ற கதையின் மேன்மையென!
 
இம்மண் போற்ற நின்றிருக்கும்
   என்றும் அழியா தொன்மையையும்
வம்பாய் வந்த ஆசையினால்
   வளர்ந்த காதல் வன்மையையும்
நம்பி மீது நங்கையவள்
   நயந்த காதல் மென்மையையும்
கம்பன் சொன்ன காதலெல்லாம்
    கருத்தை மயக்கும் இன்பம்தான்!
 
உண்மைக் காதல் எதுவென்றால்
    உணர்வு குள்ளே விதையாக்கிக்
கண்ணுக் குள்ளே அதைவிதைத்துக்
    கருத்துக் குள்ளே நீர்தெளித்து
விண்ணின் அளவில் வளரவிட்டு
    விரும்பும் வகையில் வளம்அமைத்து
மண்ணில் இருக்கும் நாள்வரையில்
    மறவா திருக்கும் உணர்வன்றோ!
  
உள்ளம் இரண்டும் ஒன்றாகி
    உருவில் அழகு மெருகேறிக்
கள்ளம் கண்ணுள் உருவாகிக்
    கவிதை நடையில் உறவாடித்
துள்ளும் இன்பம் கனவாகித்
    துயிலை மறந்த நிலையேந்திக்
கள்போல் மயக்கும் காதலினைச்
    கதையாய்ச் சொல்லல் இன்பம்தான்!
 
கண்ணும் கண்ணும் கவ்வியப்பின்
   கரத்தைப் பிடித்த பின்னாலே
எண்ணச் சிறகை விரிக்கின்ற
   இன்ப காதல் கடமைதானே!
மண்ணில் கண்ட மங்கையினை
   மனத்துள் ஆழச் சுமந்துகொண்டு
வண்ண வாழ்வின் சுகமிழந்தும்
   மாண்ட காதல் நெகிழ்வன்றோ!
 
கடமை சேர்ந்த காதலுடன்
   கணவன் சேர்ந்தான் சீதையுடன்!
மடமை யான காதலினால்
   மதியை இழந்தாள் சூர்ப்பணகை!
உடமை என்றே தனையிழந்தும்
   ஊரும் உயிரும் போனாலும்
திடமாய் இருந்த இராவணனின்
   திளைத்த காதல் உண்மையன்றோ!
 
தவறு என்றே தெரிந்திருந்தும்
   தன்னுள் நிலைத்த காதலினால்
கவர்ந்து வந்த சீதையவள்
   காலில் விழுந்தான் ஏக்கத்தில்!
அவளின் ஏச்சு பேச்சுகளில்
   அசையா திருந்தான் ஆணவமாய்!
கவனம் முழுதும் சிதறாத
   கயமைக் காதல் உண்மையன்றோ!
 
கன்னித் தமிழில் சொல்லெடுத்துக்
   கருத்துச் செறிவில் அதைத்தொடுத்துப்
பொன்னின் அழகைப் பிணையவிட்டுப்
   பூவின் அழகில் நனையவிட்டு
அன்பும் பண்பும் உயர்ந்தோங்கும்
   அகிலம் போற்றும் காதலினைக்
கம்பன் காட்டிச் சென்றவிதம்
   கனிந்த உண்மைக் காதலடி!
 
உண்மை பொய்மை என்பதெல்லாம்
   உழலும் காதல் தனிலில்லை!
நன்மை தீமை பார்க்காமல்
   நன்றே இதயம் தொட்டபின்பே
மென்மை யாக அரும்புவிட்டு
   வன்மை யாக வளரவிட்டுத்
தொன்மை யாக்கி நலஞ்சேர்க்கும்
   துணிந்த காதல் உண்மையடி!

.
பாவலர் அருணா செல்வம்
.
(பிரான்சு கம்பன் கழகத்தில் 19.09.2017 அன்று நடந்த, “கம்பனில் எத்தனை காதலடி“ என்ற கவியரங்கத்தில் “இராவணன்“ என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை)

காதல் பாடல் - 4, ஆசை கொண்டு காத்திருந்தேன். அருணா செல்வம் கவிதை , பாடியவ...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

என்னென்று பாடுவேன் ?

 


ஏழிசை நாதத்தை
இதயத்துள் உருக்கியதை
வாயிசை உணர்வாக
வற்றாமல் அளித்தஉன்னை   
என்னென்று பாடுவேன் ?
ஏதென்று எழுதுவேன் ?
.
துள்ளித் திரியும் பருவத்தில்
தூக்க மில்லா இரவுகளில்
அள்ளி யணைக்கும் நேரத்தில்
அமைதி கொஞ்சும் உள்ளத்தில்
 
சொல்லில் சொக்கும் உயிரிருக்கும்
சொட்டும் தேனின் சுவையிருக்கும்
நல்ல மொழியின் நயமிருக்கும்
நடன மாட விருப்பமிடும்
ஏழிசை நாதத்தை….
.
காற்றில் நம்மைப் பறக்கவிடும்
காந்தம் போலே இழுத்துவிடும் !
ஊற்றின் குளிரில் நனையவிடும்
ஊஞ்சல் கட்டி ஆடவிடும்
 
ஏற்றும் துன்ப நினைவினையும்
இசையின் அழகால் மறக்கவிடும்
ஆற்றின் நடையின் அழகான
ஆற்றல் உடலில் ஊறிவிடும்
ஏழிசை நாதத்தை….
.
ஏக்கம் கொண்ட இறைவனவன்
ஏங்கி உன்னை அழைத்தானோ
ஆக்கம் போதும் என்றேநீ
அங்கே செல்ல விழைந்தாயோ
 
நோக்கம் எதுவோ இருந்தாலும்
நொந்த எங்கள் மனத்திற்கு
ஊக்கம் கொடுக்க உன்குரலே
உந்தி மறைய வைத்தாலும்
ஏழிசை நாதத்தை…..
.

பாவலர் அருணா செல்வம்
28.09.2020

புதன், 23 செப்டம்பர், 2020

கருப்புத் துணியைக் கழற்றி எறி!

 


வாய்மை வெல்லும் எனச்சொல்லி
………வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
………தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
………துணிவாய் உன்னை நிற்கவைத்தார்!
வாயைத் திறக்க வழியில்லை
………வாய்..மெய் பேசும் நிலையில்லை!
.
பெண்மை என்றும் மென்மையெனப்
……...பெருமை பேசி சிலைவடித்தே
வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே
………வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!
உண்மை, நன்மை, தீமைகளை
………உணர்ந்து பயந்தி டுவாயென்று
கண்ணைக் கறுப்புத் துணியிட்டுக்
………கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!
.
குருடன் கண்ட யானைபோலோ
………குறுக்குப் பேச்சைக் கேட்டுநின்றாய்!
உருவில் உணர்த்தும் உண்மைகளை
………ஒளித்து வைக்க முடியாது!
திருட்டுப் பார்வை காட்டிவிடும்!
………தீர்ப்பைச் சரியாய்ச் சொல்வதற்குக்
கருட பார்வை வேண்டுமென்றால்
……...கண்ணைத் திறந்து நாலும்பார்!
.
பெண்ணே! உன்கண் கட்டியதால்
………பேச்சை மட்டும் கேட்டுநின்றாய்!
மண்ணை இழந்து கலங்குபவர்,
……...மானம் இழந்த பேதையர்கள்,
உண்மை மறைத்து நடிப்பவர்கள்
……...உன்றன் கண்ணால் அறிந்திடவே
கண்ணைக் கட்டி வைத்திருக்கும்
……...கருப்புத் துணியைக் கழற்றியெறி!
.
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

அழுகை !

 



 

அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தை
    தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
    இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
    முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர்ப் பொங்கி
   வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!
.
பாவலர் அருணா செல்வம்