செவ்வாய், 6 அக்டோபர், 2020

பஞ்ச பங்கி! (ஒன்றில் ஐந்து)

 


தமிழே!
 
ஆசிரியப்பா!
பெருங்கலை என்றே பிணைந்த தமிழின்
அருங்க லையாள்! வருங்கலை வாழ்த்தும்
தருங்கலை என்னும் வளமு டையாள்!
பெரும்பகை போக்கும் பெருவுளம் கொண்ட
குலமு டையாள்! திருவென இன்ப
நலமி சைபாள் செம்மைத் தமிழ்மகளே!
இனிய சொற்கள் இனிமை பயக்கும்!
கனியின் சுவையாய்க் கருத்தை இழுக்கும்!
தனியாய் நின்று தழைக்கும் அழகாய்
வனிதம் கொண்ட வளமுடை தமிழே!
அணியாம் இலக்கணம் ஆண்ட தமிழாள்
துணிவைத் தருவாள்! தொடர்ந்து படிக்கும்
மனத்தில் பணிவை வளர்த்து, வெடிக்கும்
சினத்தை வெறுத்து, முடிக்கும் செயலில்
நினைவைச் செலுத்த நாளும் உயர்வோம்!
பனைபோல் உயர்ந்து! பண்ணின் அழகில்
மனத்தைப் பதிக்க மண்ணும் அழகாம்
தினமும் மதியில் திங்கள் ஒளியாம்!
சிறந்த தெளிவு தங்கிச் சிறக்கும்!
பறக்கும் தமிழாய்ப் பாடித் திரியும்!
புலவர் பாட்டில் கூடிப் பொலியும்!
புலமை கொஞ்சும் தமிழே உன்னைப்
படிக்க உள்ளம் படரும்! மின்னும்
படியாய் எண்ணம் மிளிரும்! நன்மை
இன்மை காட்டும் இனியவளே
என்றும் என்னுள் இருப்பாய் இசைந்தே!
 
கட்டளைக் கலித்துறை!
 
பெருங்கலை என்றே பிணைந்த தமிழின் அருங்கலையாள்!
வருங்கலை வாழ்த்தும் தருங்கலை என்னும் வளமுடையாள்!
பெரும்பகை போக்கும் பெருவுளம் கொண்ட குலமுடையாள்!
திருவென இன்ப நலமிசைப்பாள் செம்மைத் தமிழ்மகளே!
 
கலிவிருத்தம்!
இனிய சொற்கள் இனிமை பயக்கும்!
கனியின் சுவையாய்க் கருத்தை இழுக்கும்!
தனியாய் நின்று தழைக்கும் அழகாய்
வனிதம் கொண்ட வளமுடை தமிழே!
 
குறள் வெண்பா!
அணியாம் இலக்கணம் ஆண்ட தமிழாள்
துணிவைத் தருவாள் தொடர்ந்து!
 
நேரிசை வெண்பா!
படிக்கும் மனத்தில் பணிவை வளர்த்து
வெடிக்கும் சினத்தை வெறுத்துமுடிக்கும்
செயலில் நினைவைச் செலுத்த நாளும்
உயர்வோம் பனைபோல் உயர்ந்து!
 
வஞ்சிப்பா!
பண்ணினழகில் மனத்தைப்பதிக்க
மண்ணுமழகாம்! தினமும்மதியில்
திங்களொளியாம்! சிறந்ததெளிவு
தங்கிச்சிறக்கும்! பறக்கும்தமிழாய்ப்
பாடித்திரியும்! புலவர்பாட்டில்
கூடிப்பொலியும்! புலமைகொஞ்சும்
தமிழே
உன்னைப் படிக்க உள்ளம் படரும்
மின்னும் படியாய் மிளிரும் எண்ணம்!
நன்மை இன்மை காட்டும் இனியவளே
என்றும் என்னுள் இருப்பாய் இசைந்தே!
-
பாவலர் அருணா செல்வம்.
.
(பஞ்சபங்கி என்பது ஒரு பொருள் குறித்த ஒரு பாடலை ஐந்து வேறு வகையான பாடலாக பொருள் மாறாமல் பகுத்துப் பாடப் படுவதாகும். பஞ்ச என்பது ஐந்து என்றும் பங்கி என்பது பகுத்தல் என்றும் பொருளாகும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக