ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஒளிருங் கணபதி பெருமானே! (குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் - 61)


 

 

.
தனனந் தனனன தனனந் தனனன
தனனந் தனனன தனதானா  (ஒரு கலைக்கு)
 
.
உலகின் முதலென உணரும் வகையினி
    னொளிருங் கணபதி பெருமானே!
  உதவும் வகையொடு கதறும் மனதினி
    லொளிரும் நலமதை யருள்வாயே!
 
பலரின் கருமொழி நிறையும் மனமது
    பதியும் பொதியொடு சுமையாமே !
  படியுங் கழிவினை மறையும் வழியது
    பரமன் தொடர்கிற இடந்தானே!
 
நிலவும் பழவினை நினைவும் விலகிட
    நெடிதுன் விழிதனி லறிந்தாலே
  நியமந் தருகிற வழியுந் தொடரிட
    நிறையும் வரமது வரும்தாமே !
 
மலருங் கனிகளு மிணையுஞ் சுவையொடு
    மணமும் நிறைகிற நெகிழ்வோடே
  வளருங் கவியொடு பணியுந் தலையொடு
    மனதும் வழிபட மகிழ்வாயே!
.

தோழ தோழியர் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி
வாழ்த்துகள்.

.
என்றும் அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
18.09.2023கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக