வியாழன், 28 நவம்பர், 2019

இதயச் சிறகு !.
ஆசைகொண்டு காத்திருந்தேன்
அத்தைமகன் வரும்நாளை!
நேசநெஞ்சை அறிவானோ
நினைவவனைச் சுழல்கிறதே!

வண்ணமயில் போல்நானே
வானத்தைப் பார்த்திருக்க
வளம்கொழிக்கும் மழையாக
வந்தாலே ஆடிடுவேன்!

வழிமேலே விழிவைத்தே
வந்தவழி காக்காமல்
வானத்து மேகமதை
வகையென்றே தூதுவிட்டேன்!

என்நினைவில் உள்ளதெல்லாம்
புன்னகைக்கும் உன்முகமே!
பொன்னிறத்துத் தாவணியும்
உன்நினைவைச் சொல்கிறதே!

எழுத்தாணி இங்கில்லை
எழுதிவிட ஓலையில்லை!
இதயத்தைச் சிறகாக்கி
உன்திசையில் பறக்கவிட்டேன்!
.
பாவலர் அருணா செல்வம்
28.11.2019