புதன், 19 செப்டம்பர், 2012

மலரினும் மெல்லியது !! (கவிதை)




 மலரை விடவும் மெல்லியது
   மங்கை கொண்ட காமமென்று
புலவர் சொன்ன கருத்தினைநான்
   புதுமை யாகச் சொல்லவந்தேன்!
களவும் கற்பும் என்றுரைத்தார்
   கவிதை மொழியில் காப்பியரே!
உலவும் நிலவு பெண்களிடம்
   உள்ள உள்ளம் வெண்ணிறமே!

கள்ளும் குடிக்கச் சலிப்படையும்
   காதல் ததும்பும் பெண்ணிடத்தில்!
சொல்லும் கள்ளாய் மயக்கிவிடும்!
   சொர்க்கம் அங்கே தெரிந்துவிடும்!
உள்ளம் துவண்ட தலைவனுக்கே
   உண்மை உதவி என்னவென்றால்
கள்ளம் இல்லா அவள்மனத்தைக்
   காட்ட காமம் தோற்றிடுமே!

மலரே! மணிவே! மதுக்குடமே!
   மஞ்சள் நிலவே என்றெல்லாம்
புலவர் பலரும் போற்றினாலும்
   பொன்னை நிகர்த்த பெண்மனமோ
தளரும் சிறுசொல் சொன்னாலும்!
   தாயைத் தழுவும் குழந்தையெனக்
கலங்கி அழுமே! அவளுள்ளம்
   கள்ளை வடிக்கும் மலரில்லை!

ஊடல் புரிய எண்ணினாலும்
   உரிய தலைவன் வந்தவுடன்
வேடம் கொண்ட மனம்மாற்றி
   வெறுத்து ஒதுக்கி நகராமல்
கூடல் பொங்கும் முகமுடனே
   குலவும் மனத்தால் வரவேற்பாள்!
தேடல் அங்கே என்னவென்று
   தேடக் காமம் ஓடிவிடும்!


மலரினும் மெல்லியது காமம் சிலர்அதன்
செல்வி தலைப்படு வார்.   (குறள் – 1289)

(சுவிஸ் கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை! - தொடரும்)

23 கருத்துகள்:

  1. ம்ம்ம் ...
    உண்மைதான்
    மலரினும் மெல்லிய கவிதை
    அதிவிட இனிமைத் தமிழில் சொன்னவிதம்
    அந்த மலரை விட மெல்லியதாய் இருக்குங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரே..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. //ஊடல் புரிய எண்ணினாலும்
    உரிய தலைவன் வந்தவுடன்
    வேடம் கொண்ட மனம்மாற்றி
    வெறுத்து ஒதுக்கி நகராமல்
    கூடல் பொங்கும் முகமுடனே
    குலவும் மனத்தால் வரவேற்பாள்!
    தேடல் அங்கே என்னவென்று
    தேடக் காமம் ஓடிவிடும்!//
    அழகான வரிகள் அருணா செல்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முரளிதாரன் ஐயா.

      நீக்கு
  3. பதிவு வெளியிட்ட அரை மணித்துளிகளில் ரெண்டு பேர் வந்து கருத்து சொல்லியாச்சு....நீங்க பிரபலம் ஆகிகிட்டே வர்றீங்க..வாழ்த்துக்கள்! :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா... வசு?

      வாழ்த்துக்கு நன்றி வசு.
      (பின்னாளில் மாலை மறியாதை எல்லாம் கிடைக்குமா...?)

      நீக்கு
  4. >>>கள்ளம் இல்லா அவள் மனத்தைக் காட்ட காமம் தோற்றிடுமே<<<

    அருமை அருமை....

    இந்த வரியில் உள்ள 'மனத்தைக்'-ல் 'த்' தேவையில்லை என்று கருதுகிறேன்! :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசு... “மனத்தில்“ என்பது மனதில் என்றே பேசி எழுதி பழகிவிட்டு இருக்கிறார்கள்.

      மனம் + ஐ = மனத்தை என்று தான் வரும். மனதை என்று வராது
      உதாரணமாக...
      குணம் + ஐ = குணத்தை என்று தான் வருமே தவிர குணதை என்று வராது. அதுபோல

      பணம் + ஐ = பணத்தை
      பிணம் + ஐ = பிணத்தை

      தினத்தை, சினத்தை,... இப்படி தான் வரும்.
      தொல்காப்பியத்திலும் நன்னுலிலும் இதற்கான நுர்ற்பா இருக்கிறது.

      வாழ்த்திற்கு நன்றி வசு.

      நீக்கு
    2. அயல் மண்ணில் வசித்தாலும் தமிழின் மீது இவ்வளவு பற்றும்..நல்ல புலமையும் பெற்றிருக்கும் தங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது!

      வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

      நீக்கு
  5. தாயைத் தழுவும் குழந்தையெனக்
    கலங்கி அழுமே! அவளுள்ளம்//

    உண்மை தான் அன்பரே சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு


  6. //ஊடல் புரிய எண்ணினாலும்
    உரிய தலைவன் வந்தவுடன்
    வேடம் கொண்ட மனம்மாற்றி
    வெறுத்து ஒதுக்கி நகராமல்
    கூடல் பொங்கும் முகமுடனே
    குலவும் மனத்தால் வரவேற்பாள்!
    தேடல் அங்கே என்னவென்று
    தேடக் காமம் ஓடிவிடும்!//

    எழுதுங்கால் கோலகாணக் கண்ணேபோல்.....என்ற குறள் வரிகளை அப்படியே வடித்துள்ளீர்! மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. “அழகான கவிதை“ நன்றி சிட்டுக்குருவி.

      (“அழகு மிக மிக....“ இது அந்தப் பொண்ணு படத்திற்குத் தானே...?

      நீக்கு
  8. எப்பிடித்தான் எதுகை மோனையோடு வார்த்தைகளை இணைக்கிறீர்களோ அருணா.அழகான மென்மையான காதல் கவிதை !

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  10. சொல்லும் கள்ளாய் மயக்கிவிடும்!
    சொர்க்கம் அங்கே தெரிந்துவிடும்!

    மயக்கும் வரிகள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மயக்கும் வரிகளை
      இரசித்தமைக்கும் மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு