சனி, 21 ஜூலை, 2012

காதல்...!!! (கவிதை -1)




ஆதி மனிதன் வந்தமுதல்
   ஆசை அனைத்தும் பிறந்தாலும்
பாதி மனித வாழ்வினிலே
   பணம்தான் ஒன்றே மகிழ்வென்று
மோதி மோதி வாழ்ந்துவரும்
   முயற்சி யுடைய மனிதர்களே!
சேதி ஒன்றை நான்சொல்வேன்!
   செய்வீர் காதல் அதனூடே!!

என்ன அதிலே இருக்கிறது?
   எடுத்துச் சொல்ல யார்வருவார்?
சொன்னால் அதிலே சுவைவருமா?
   சொல்லிப் பார்த்தேன் “காதலென்று“!!
சொன்ன உடனே உடம்பெல்லாம்
   சூடு தணிந்த நிலைகண்டேன்!
என்றன் நாவின் உமிழ்நீரும்
   என்ன சுவையாய் இனிக்கிறது!!

சொல்லச் சொல்ல இவ்வார்த்தைச்
   சுகத்தை மேலும் அளிக்கிறதே!
மெல்ல மெல்ல உள்நுழைந்து
   மேனி முழுதும் சிலிர்க்கிறதே!
வல்ல வல்ல கவிகளிடம்
   வளைந்து வளைந்து விளையாடி
நல்ல நல்ல கற்பனையால்
   நாளும் மேலும் பொலிகிறது!!



(காதல் தொடரும்)

வெள்ளி, 20 ஜூலை, 2012

“வணங்குதல்“ – சிறு விளக்கம்!!



வணக்கம் நண்பர்களே!!

நான் போன வாரம் “வணங்க வேண்டும்“ என்ற தலைப்பில் நான்கு பதிவுகள் இட்டிருந்தேன்.

அதில் ஒரு பதிவில் ஒரு நண்பர் “மனிதனை வணங்காமல் படைத்தவனை வணங்கினால் நன்று“ என்றும் “வணங்க வேண்டும் என்பதைப் போற்ற வேண்டும் எனலாமே...என்றும் பின்னோட்டமிட்டிருந்தார்.
   நானும் அதைப் பெரிதாக கொள்ளாமல் “உங்கள் கருத்திற்கு நன்றி“ என்று மட்டும் பதிலெழுதினேன். ஆனால்.... இதைப்படித்த வேறு ஒரு நண்பர் “ இந்தக் கருத்திற்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.“ என்று மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.
நானும் “சரி ஐயா... விளக்கம் தருகிறேன்“ என்று பதிலெழுதிவிட்டு அதற்கான பதிலை அனைவருக்கும் பகிர்கிறேன்.

பொதுவாக “வணங்குதல்“ வேண்டுதல்“ போற்றுதல்“ “தொழுவுதல்“ போன்ற சொற்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே பொருளைத் தான் கொடுக்கும். ஆனால் அதிலும் சின்ன சின்ன வேறுபாடுகள் உள்ளன.

“வணங்குதல்“

நாம் மனத்தால் உயர்வாக மதிக்கும் அனைத்தையும் வணங்குவதை “வணங்குதல் எனலாம். உதாரணமாக தாய், தந்தை. தமிழ், குரு, தெய்வம், தலைவர்கள்..... இப்படி..
இப்படி வணங்குவதற்கு வயது வரம்பு கிடையாது.

“வேண்டுதல்“

வேண்டுதல் என்பது நமக்குத் தேவையானதை அது இருக்கும் ஒருவரிடம் வேண்டிப் பெறுவது.
உதாரணடாக ஆண்டவனிடம் அருளை வேண்டி பெறுதல், ஆசிரியரிடம் கல்வியை வேண்டி பெறுதல்... இப்படி சொல்லிக்கோண்டே போகலாம்.
ஆனால் பெற்றோர்கள் அன்புருவானவர்கள். அவர்களிடம் அன்பை வேண்டி பெறுதல் என்றோ வேறு எதையோ வேண்டி பெறுதல் என்றோ சொல்லக்கூடாது.

“போற்றுதல்“

போற்றுதல் என்பது உயர்ந்தவர்களின் புகழை, அவர்களின் செயற்கரியச் செயலை உயர்த்தி பேசுவது, உயர்த்தி பாடுவது எனலாம்.

“தொழுவது

தொழுவது என்பது நம் முன்னோர்கள் ஆண்டவனை முறைப்படி எப்படி வணங்குவது என்று சொல்லி வைத்தார்களோ அந்த முறைப்படி ஆண்டவனை வணங்குவது தொழுதல்“ என்பதாகும்.
உதாரணமாக கிருஸ்த்தவர்கள் முட்டிப்போட்டுக்கொண்டு தேவனைத் தொழுவது, இஸ்லாமியர் ஒரு திசையைப் பார்த்து நமஸ் ஓதி அவர்களின் இறைவனை வணங்குவது, இந்துக்கள் ஆண்டவனை இத்தனை வளம்வந்து வணங்குவது... இப்படி முன்னோர் சொன்னதைக் கடைபிடித்து ஆண்டவனை வணங்குவதாகும்.

   நாம் நம்மைவிட உயர்ந்தவர்களை வணங்குவது அவர்களுக்கு நாம் காட்டும் பணிவின் அடையாளமே...

(என்ன... இதுக்கெல்லாம் ஒரு பதிவா என்று என்னை யாரும் திட்டாதீங்க நண்பர்களே...)

நன்றி.


செவ்வாய், 17 ஜூலை, 2012

மறக்க முடியும்...!! (கவிதை)





மண்வேண்டிப் புரட்சிசெய்த பாரதியின் வீர
    மணிக்கவியை நான்மறந்து விடமுடியும் என்றால்
பண்ணிற்கே பாபடைத்த பாவேந்தர் வண்ணப்
    பாக்களையும் நான்மறந்து விடமுடியும் என்றால்
கண்போன்ற கருத்தொளிரும் கண்ணதாசன் காதல்
    கவிகளையும் நான்மறந்து விடமுடியும் என்றால்
பெண்விழியால் கவிபடைக்க வழிநடத்தும் பேதைப்
    பெண்ணுன்னை நான்மறந்து விடமுடியும் என்பேன்!!


    

வெள்ளி, 6 ஜூலை, 2012

துளி....!!



 
உள்ளுரும் உணர்வுகளால்
உச்சத்தில் வலிதோன்ற
மனச்சிறை கூடம்
சிட்டென்று வானேற
சட்டென்று துளிர்க்கிறதே
வரமாக... சாபமாக...!!


அழுக்கு எழுத்து...!!


வள்ளுவன் காலந்தொட்டு
வாழுங்கால் இன்றுவரை
பிறன்மனை நோக்காமை
பேராண்மை என்றார்கள்!

தீராண்மை கொண்டவர்க்கே
திருத்தமென பாடல்கள்!
பாரான்..மை பாவையர்க்கோ
பாசாங்கின் பல்பொருட்கள்!

சீராக நடந்தவரை
சிரந்தாங்கும் வேறில்லை!
நேராக நிமிர்ந்தமர
வேரானதோ நேரில்லை!

பூக்கள்சில தேனூற்ற
பூச்சயினைத் தானழைக்க
ஈக்களின்மேல் பழிபோட்டே
எழுதுவதே பண்பென்றால்...

நோக்கலிலே புரிவதையும்
நோயாக்கி மறைத்துவிட்டு
பாக்களிலே பண்புயர்த்திப்
பாடுவதில் பயனென்ன?

பார்க்கும் காட்சிகள்
பார்வைக்குப் பாரமாய்...
கேட்டிடும் ஒலிகள்
காதுக்குள் குளவியாய்..
மனமறிந்த உண்மைகள்
மதிக்குள்ளே மருட்டலாய்...

ஏடெடுத்து எழுதிட
ஏங்கிடும் சொற்களை
எழுதாமல் மறைத்திட
ஏக்கமாய்ப் பார்த்தது.

மனமறிந்த துன்பத்தை
மாற்றாமல் காகிதத்தில்
துப்பிவிட துடிக்கின்றேன்
துடைத்திடுங்கள் எச்சிலென!!