புதன், 23 செப்டம்பர், 2020

கருப்புத் துணியைக் கழற்றி எறி!

 


வாய்மை வெல்லும் எனச்சொல்லி
………வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
………தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
………துணிவாய் உன்னை நிற்கவைத்தார்!
வாயைத் திறக்க வழியில்லை
………வாய்..மெய் பேசும் நிலையில்லை!
.
பெண்மை என்றும் மென்மையெனப்
……...பெருமை பேசி சிலைவடித்தே
வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே
………வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!
உண்மை, நன்மை, தீமைகளை
………உணர்ந்து பயந்தி டுவாயென்று
கண்ணைக் கறுப்புத் துணியிட்டுக்
………கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!
.
குருடன் கண்ட யானைபோலோ
………குறுக்குப் பேச்சைக் கேட்டுநின்றாய்!
உருவில் உணர்த்தும் உண்மைகளை
………ஒளித்து வைக்க முடியாது!
திருட்டுப் பார்வை காட்டிவிடும்!
………தீர்ப்பைச் சரியாய்ச் சொல்வதற்குக்
கருட பார்வை வேண்டுமென்றால்
……...கண்ணைத் திறந்து நாலும்பார்!
.
பெண்ணே! உன்கண் கட்டியதால்
………பேச்சை மட்டும் கேட்டுநின்றாய்!
மண்ணை இழந்து கலங்குபவர்,
……...மானம் இழந்த பேதையர்கள்,
உண்மை மறைத்து நடிப்பவர்கள்
……...உன்றன் கண்ணால் அறிந்திடவே
கண்ணைக் கட்டி வைத்திருக்கும்
……...கருப்புத் துணியைக் கழற்றியெறி!
.
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

அழுகை !

 



 

அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தை
    தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
    இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
    முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர்ப் பொங்கி
   வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!
.
பாவலர் அருணா செல்வம்

காதல் கவிதை!

 


எழுதி வாசித்தது
பாவலர் அருணா செல்வம்
15.09.2020

திங்கள், 14 செப்டம்பர், 2020

செந்தமிழே வருக!

 


செந்தமிழே வருக!
-
(எடுப்பு)
செந்தமிழே வருக! – நாளும்
சிந்தையிலே அமர்ந்து
சொந்தமெனச் சொல்க!
-

(தொடுப்பு)
எந்தமிழே வருக! – எழுதும்
சந்தமதில் அமர்ந்து
விந்தையெலாம் தருக!
-
(முடிப்பு)
தோன்றிய காலமுன்தன் தொடக்கமும் தெரியவில்லை
தொடர்ந்திடும் உன்பெயரை மறக்கவும் முடியவில்லை
மூன்று காலமதில் மூத்தவளாய் இருந்து (2)
முன்னைத் தெய்வமென மூச்சினிலே கலந்த….. 
                           (செந்தமிழே வருக!)
-
கன்னித் தமிழென்று கவிஞர்கள் கவிபடைத்தார்!
கனிந்தநற் சுவையென்று கனித்தமிழ் எனவுரைத்தார்
பொன்னின் மேலேனப் புகழெலாம் கொண்டு (2)
பொலிந்திடும் அழகாய்ப் புதுமைகள் புணைந்த….
                       (எந்தமிழே வருக!)
-
துள்ளும் ஓசையுடன் சுவையெனக் கலந்திருந்தாய்
துாங்க லிசையாகத் தொடையுடன் நடந்திருந்தாய்!
அள்ளும் செப்பலிலும் அழகுடனே நிறைந்து (2)
ஆனந்தம் பொங்கிட அணியெலாம் அணிந்த-----
            (செந்தமிழே வருக!)                        
-
எந்தம் இதயத்தில் இன்னொளி ஏற்றிவைத்தாய்
இயற்றும் பாடலிலே இறையென நிறைந்திருந்தாய்!
சிந்து வண்ணமெனச் சீர்க்கவிகள் தந்து (2)
சிந்தையில் அமர்ந்த செழித்தயெம் உயிரே……
                  (எந்தமிழே வருக!)
- 
பாவலர் அருணா செல்வம்                          

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

வண்ண நிலவு!


எழுசீர் விருத்தம்..

.

வண்ணம் எதுவென வஞ்சி வியந்திட
         வட்ட வடிவினில் பூத்ததைக்
கண்கள் விரிந்திடக் கன்னம் சிவந்திடக்
         கட்டுக் களிப்புடன் நோக்கினாள்!
எண்ணம் விரும்பிய இன்பம் புரிந்ததை
        எட்டிப் பிடித்திடப் பார்த்திட
விண்ணில் வலம்வரும் விந்தை நிலவது
        விட்டு முகிலினுள் பாய்ந்ததே!
.
பாவலர் அருணா செல்வம்
09.09.2020


முல்லை மலர்

 


பாவலர் அருணா செல்வம்

08.09.2020

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தங்குமனம் நீயெனக்குத் தா!


எத்தனைப் பாடினும் ஏங்கிடும் நெஞ்சத்தால்
பித்தனைப்போல் உன்னைப் பிடித்திட்டேன்! - முத்தமிழே!
மங்காப் புகழ்படைத்த மாத்தமிழை எந்நாளும்
தங்குமனம் நீயெனக்குத் தா!

.
பாவலர் அருணா செல்வம் 

29.08.2020

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

தேவியின் மனவழகு!

 


(சிந்துப்பா).

அன்புடன் பார்த்து நின்றாள்அதில்
ஆசையைக் கோர்த்தி ருந்தாள்!
பொன்னுடல் வேர்த்தி ருந்தாள்அதில்
போதையைச் சேர்த்தி ருந்தாள்!
 
சிலைபோல் சிரித்து நின்றாள்தமிழால்
சிந்தையை உறைய வைத்தாள்!
கலைபோல் செழித்து நின்றாள்அமிழ்தாய்
கற்பனை சுரக்க வைத்தாள்!
 
மலரோ அவளி தழ்தான்மிஞ்சும்
மதுவோ ததும்பி டுந்தேன்!
நிலவோ அவள் முகந்தான்நெஞ்சின்
நிலையோ அவளி டந்தான்!
 
சேலையில் பூத்தி ருந்தாள்எந்தன்
சிந்தையை ஈர்த்து விட்டாள்!
காளைநான் காத்தி ருந்தேன்வந்து
கவலையைப் போக்கி டுவாள்!
 
தேவியின் மன வழகுவீரத்
தீந்தமிழ் மொழி யழகு!
கூவிடும் மன முழவுசேரக்
கொட்டிடும் கவிப் பொழிவு!
.
பாவலர் அருணா செல்வம்
28.08.2020

புதன், 26 ஆகஸ்ட், 2020

குறளின் குரல்!

 


உறவொன்றும் கேட்கவில்லை! அன்னைக் குள்ளே
     உருவொன்று கருவாகி உயிரைப் பெற்றோம்!
அறமொன்றும் அறியவில்லை! வயிற்றுக் குள்ளே
    அறிவொன்றும் வளரவில்லை! பத்தாம் திங்கள்
பிறப்பென்று பூமிதனில் பிறந்து விட்டோம்!
    பிற்கால வாழ்வில்நற் பயனைக் கொள்ளக்
குறளென்ற திருமறையைக் கொடுத்துச் சென்ற
    கோவிலில்லா வள்ளுவரின் வழியில் செல்வோம்!
 
அன்புடைய வாழ்க்கைவாழ அறத்துப் பாலில்
    அழுக்காறாமை, வெகுளாமை, மெய்யு ணர்தல்,
இன்பமதைப் பெறுவதற்கே புறங்கூ றாமை,
    இனியதையே கூறல்,மெய் உணர்தல், ஈகை,
துன்பத்தைப் போக்கிடவே மக்கட் பேறு,
    துறவு,அவா அறுத்தலுடன் ஊழும், வாய்மை,
பொன்பொதிந்த தலைப்புகளில் புலமை கொஞ்சப்
    புகழ்பெற்று வாழ்ந்திடவே வழியைத் தந்தார்!
 
பண்புடனே வாழ்ந்துயர்ந்து வீரம் கொள்ளப்
    படைமாட்சி, படைச்செருக்கு, பொச்சா வாமை,
கண்ணோட்டம், வினைசெயலின் வகைகள், தூது,
    காலமறிந்(து) அவையறிவைப் பொருளில் சேர்த்தார்!
பெண்வழிசேர்ந்(து) உட்பகையும், பழைமை, சூதும்,
    பேதைமையும், தீநட்பும், இகலும் போக
மண்ணுலகில் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
    மானமுடன் குடிமைதந்து பெருமை சேர்த்தார்!
 
வஞ்சியுடன் கற்புநிலை வாழ்வில் வாழ
    வகைபிரித்துக் காதற்சீர் உரைத்தல், பெண்ணின்
நெஞ்சிற்குள் நின்றாடும் அலர்அறிவு றுத்தல்
    நிறைஅழிதல், நலம்புனைந்(து) உரைத்தல், தன்னுள்
விஞ்சிவரும் படர்மெலிந்(து) இரங்கல், கண்கள்
    விதுப்பழித்தல், உறுப்புநலன் அழிதல், கற்பாய்க்
கொஞ்சிவர அவர்வயின்வி தும்பல் போன்ற
    குறிப்புகளை இன்பத்தில் இனிதாய்ச் சேர்த்தார் !
 
நூற்றுமுப்பத் துமூன்(று) திகாரம் எல்லாம்
    நுட்பமாய்நன்(கு) ஆராய அருளே வேண்டும்!
நாற்றுப்போல் நானிருக்கேன்! நவின்ற சொற்கள்
    நற்றமிழின் மழையினிலே பொதிந்த வேர்கள்!
காற்றைப்போல் தொடமுடியா உயர்வைக் கொண்ட
    கருத்துள்ள குறள்நெறியில் உலகில் வாழ்ந்தால்
கூற்றுவனே கொண்டுசென்ற பின்பும் கூடக்
    குறள்கொடுத்த உறவாலே உயர்ந்தே நிற்போம்!

பாவலர் அருணா செல்வம்

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

தமிழெனும் அமுதே வாழி!


தமிழெனும் அமுதே வாழி!

உலகினில் உயர்ந்தே ஓங்கி
      உயிரென நெஞ்சுள் ஊறி
நலந்தர அறிவில் நின்று
      நயந்தர பிறப்பாய் நாவில்!
பலபல மொழிகள் வந்தும்
      பழந்தமிழ் உன்னில் வேறு
நிலமிதில் காணேன்! தாயே
      நிறைவுடன் அமரென் பாட்டில்! 

இயலிசை ஆட லென்றே
   இயம்பிடும் அழகில் நின்றாய்!
வயலிடை உழவர் பண்ணில்
   வளமுடன் எளிமை தந்தாய்!
அயல்மொழி நாட்டார்க் கூட
   ஆசையாய்க் கற்க வைத்தாய்!
நயந்தரும் உன்னைக் கற்றால்
   நாவெலாம் இனிக்கும் என்றும்!
 
இலக்கணக் கட்டுக் கோப்பில்
    இருக்குமுன் உயர்வைக் கண்டும்
இலக்கிய உருவந் தன்னில்
    இருக்குமுன் அழகைக் கண்டும்
கலந்தநல் மொழிகள் இன்றிக்
    கற்புடைப் பெண்ணாய்க் கண்டும்
உலகெலாம் உன்னை வணங்கும்
    ஓர்குறை இல்லை என்றே!
 
அறமுடன் பொருளும் இன்பம்
    அடக்கிய நெறியாய் நூல்கள்!
திறம்பட வகுத்த பண்பின்
    தெளிவினைக் காட்டும் சீர்கள்!
புறத்துடன் அகமும் வாழப்
    பொதுமையை ஊட்டும் பாக்கள்!
சிறப்பெலாம் கண்டோர் உன்னைச்
    சிரசினில் புதைப்பார் என்றும்!  

அருமையாம் வெண்பா வஞ்சி
   அகவலும் கலிப்பா வென்று
பெருமையாய் சொல்லும் யாப்பைப்
   பெற்றவள் உன்னை யன்றிப்
பருத்தநல் உலகில் ஒன்றைப்
   பார்த்தவர் இல்லை என்றே
இருசுடர் போலே உண்மை
   இயம்பினார் முன்னோர் நன்றே!
 
தொல்தமிழ் அறிஞர் எல்லாம்
   சுவைமிகு பாக்கள் செய்தார்!
கல்தொழில் தேர்ந்தோர் எல்லாம்
   கல்தனில் செதுக்கி வைத்தார்!
பல்லவன் சேர சோழப்
   பண்டியர் வளமாய்க் காத்தார்!
செல்வமாய் வளர்ந்த உன்றன்
   சிறப்பெலாம் நாளும் வாழும்!
 
பூவினுள் தேனைப் போலப்
   புதையலின் வளத்தைப் போலச்
சீவிடும் இளநீர் போலச்
   செழித்தநல் வயலைப் போலக்
காவிய உவமை கொண்டு
   கவிதைநான் எழுத வந்தால்
ஓவியப் பெண்ணே உன்னை
   உயர்த்திடச் சொல்லே இல்லை!
 
வெல்லமாய் இனிக்கும் வார்த்தை
    வேண்டியோர் பேசும் போது
சொல்லெலாம் தமிழாய் வந்தால்
    சுவைத்திட உணவும் வேண்டாம்!
நல்லவர் நட்பைப் போல
    நல்லிசை இனிமை போல
வல்லவுன் பாக்கள் கண்டால்
   வாழ்வினில் எதுவும் வேண்டாம்!
 
எனக்கென உறவு வேண்டி
    ஏங்கியே தேடி நின்றேன்!
தனக்கென வாழ்வோர் நெஞ்சில்
    தாவிடும் குரங்கைக் கண்டேன்!
சினத்துடன் தனித்து நிற்க
    சீர்மிகு மொழியாய் வந்தாய்!
மனத்தினில் உன்னை வைக்க
   மாண்புடன் உயரக் கண்டேன்!
 
அன்னையாய் அன்பைச் சொல்லும்
   அருந்தமிழ் மொழியே வாழி!
இன்பமாய் படிக்க நல்கும்
   இனியவள் என்றும் வாழி!
பொன்னிலும் உயர்வாய் மின்னும்
   பொருள்தரும் அழகே வாழி!
முன்னிலும் மூத்த தெய்வம்
   மொழியெனும் அமுதே வாழி!

.
பாவலர் அருணா செல்வம்
07.08.2020