புதன், 30 அக்டோபர், 2019

புல்வெளியில் பூஞ்சிலை!



.
கயலெடுத்து வைத்தானோ
  காரிகையின் கண்ணென்றே!
அயலிருக்கும் மூக்கென்ன
  ஆழ்ந்தெடுத்த சிப்பிதானோ!

கார்கூந்தல் வண்ணத்தைக்
   கண்ணனவன் தந்தானோ!
நேர்வகிட்டுக் கோலமதை
   நெடுநேரம் அளந்தானோ!

தேன்மொழியும் வாயழகைத்
  தெளிதமிழால் செய்தானோ!
கூன்பிறையைக் காதாக்கிக்
  கழுத்தருகில் வைத்தானோ!

வெண்ணிலவைப் பொடியாக்கிப்
  பெண்வாயில் புதைத்தானோ!
பண்ணொலியைக் குரலாக்கிப்
  பைந்தமிழைக் கலந்தானோ!

கல்லெடுத்துச் செய்தானோ
  கட்டழகின் மேனியினை!
வில்லெடுத்து வரைந்தானோ
  வேல்விழியாள் புருவமதை!

என்னவென்று பாடிடுவேன்
  எடுத்தெழுத வார்த்தையில்லை!
பொன்னழகே! என்னவளே!
  புல்வெளியில் பூஞ்சிலையே!
.
பாவலர் அருணா செல்வம்
30.10.2019

1 கருத்து: