சனி, 31 மே, 2014

ஆசை அலையை அடக்கிவிட்டால்....




துளைகள் கொண்ட வலைகொண்டு
    தூங்காக் கடல்மேல் சென்றிடுவார்!
களைப்புக் காணா மனத்துடனே
    காத்தி ருந்து வலைவிரிப்பார்!
வளைக்கை அணிந்த பெண்ணவளின்
    வளைக்கும் கண்போல் மீன்கிடைக்கத்
திளைக்கும் நெஞ்சில் தீமையின்றித்
    திரும்பி வருவார் மீனவர்தாம்!

நிலையே இல்லா உலகத்தில்
    நிலையாய் என்றும் நிற்பதற்கே
மலைபோல் உயர்ந்த கருவமைய
    மனத்தை வலையாய் விரித்திடுவார்!
இலையே ஏதும் இவ்வுலகில்
    எல்லாம் நம்மின் எண்ணமென்றும்
அலைபோல் கவிதை சுரந்துவர
    அமிர்தாய்த் தருவார் கவிஞர்தாம்!

சிலைபோல் இருக்கும் பெண்களைத்தம்
    செழிக்கும் வாழ்வில் சிறைவைக்கக்
கலைகள் கலந்த மொழிபேசிக்
    காதல் வலையை விரித்திடுவார்!
விலையே அற்ற பெண்ணன்பு
    விரும்பும் வகையில் கிடைத்துவிட்டால்
தலையில் சற்றுக் கனமேறத்
    தாவிக் குதிப்பார் காளையர்தாம்!

கொலையே செய்து இருந்தாலும்
    குலைந்து போகாச் சட்டத்தை
வலைத்து வெற்றி பெறுவதற்கே
    வார்த்தை வலையை விரித்திடுவார்!
குலைக்கும் நாய்போல் குரலுயர்த்திக்
    கொஞ்சம் கூட இரக்கமின்றி
விலையாய்ப் பணத்தை வாங்கித்தம்
    வயிற்றை வளர்ப்பார் வழக்கறிஞர்!

வலையாய் எதையும் விரித்தாலும்
    வகையாய் அதிலே மாட்டாமல்
நிலையாய் நிற்கும் நெஞ்சமெது?
    நினைக்க நெருடும் ஒவ்வொன்றும்!
அலைபோல் தொடரும் அடுக்கடுக்காய்
    ஆசை அலையை அடக்கிவிட்டால்
வலையை விரித்தும் சிக்காமல்
    வாழும் வழியோ கிடைக்குமன்றோ!!



அருணா செல்வம்.

22 கருத்துகள்:

  1. விளக்கங்கள் அருமை. வழக்கறிஞர் விளக்கத்தில் மட்டும் சற்றே கடுமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க செய்வது?
      உண்மையை மட்டும் எழுதினால் அது சற்று கடுமையாகத் தான் தெரிகிறது.

      (உங்களின் வலையில் தமிழ் எழுத்தில் எழுத முடியவில்லை. என் கணிணியில் தான் பிரட்சனை என்று நினைக்கிறேன்....)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  2. சிறப்பான சிந்தனை ! வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. விரிகிற வலையும் விரிக்கப்படுகிற வலையும் இங்கு வேறுபடுவதாகவே/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “வலை“ என்று தான் தலைப்பு கொடுத்தார்கள். நான் எங்கெங்கு எல்லாம் வலை விரிக்கப் படுகிறதோ அதையெல்லாம் வைத்து எழுதிவிட்டேன்.
      இன்னும் எலி வலை சிலந்திவலை..... எல்லாம் எழுதவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  4. அருமை சகோதரி...! அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!“

      உண்மைதான் அண்ணா. ஆனால் ஆசை என்று வந்தாலே தேவை என்பது தேவை இல்லாததாகி விடுகிறதே....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. அருமையாக கவி வடிவில் சொன்னீர்கள் ஆசையே எல்லாவற்றிற்க்கும் காரணம் என்பதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரைநடையில் சொன்னாலும் “அதே“ தாங்க காரணம்....)))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராஜ் ஐயா.

      நீக்கு
  6. நல்ல கவிதை!
    தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  7. மிகச்சிறப்பான கருத்து! கவிதையாய் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. ஆசை அலையை அடக்கிவிட்டால்
    நாளும் நலமே!
    சிறந்த பயன்தரும் பகிர்வு

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜனா ஐயா.

      நீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! அழகான கவிதை!

    சகோதரி முதலில் உங்கள் தமிழுக்கு எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்! எப்படி இப்படி?!!!!!!

    பதிலளிநீக்கு
  12. அருமையான சிந்தனை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு