வெள்ளி, 21 மார்ச், 2014

“ஆம்பளை நாய் எல்லாம் அவபின்னாடி தான் சுற்றும்!!“

    தலைப்பைப் படித்துவிட்டு கோபமாக வந்திருக்கும் உங்கள் அனைவரிடமும் நான் முதலில் சொல்லிக்கொள்வது என்னவென்றால்.... “இந்த வார்த்தையை நான் சொல்லவில்லை“ என்பது தான்.
    வேறு யார் சொன்னார்...? என்று கேட்கிறீர்களா...? சொல்கிறேன். அதைச்சொல்ல தானே இந்தப் பதிவு.
   இதை என் கணவரின் பாட்டி சொன்னார். கொஞ்ச நாட்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார்.  அவரை நினைக்கும் பொழுதெல்லாம் இந்தச் சுவையான நிகழ்ச்சி நினைவுக்கு வரும். ஆனால் இது வரையில் யாரிடமும் சொன்னதில்லை. பின்னே இதை யாரிடம் சொல்ல முடியும்...? நீங்களே படித்துப் பாருங்கள்.

  
   ஒரு முறை இந்தியா சென்றிருந்த போது என் கணவருடன் உடல்நிலை சரியில்லாத அவரின் பாட்டியைப் பார்க்க சென்றிருந்தேன். அது கடலோரத்தில் உள்ள ஊர். இரவு நேரம். நாங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் சென்றதால் வீட்டில் அந்தப் பாட்டியும் அவரைக் கவனித்துக்கொள்ளும் ஒரு பெண்ணும் மட்டும் தான் இருந்தார்கள்.
   சற்று நேரம் பேசியிருந்த என் கணவர் என்னை அங்கேயே விட்டுவிட்டு அவர் தன் நண்பர்களைப் பார்க்க சென்றுவிட்டார். நான் பாட்டியிடம் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.
   ஒரு ஏழு மணியளவில் பாட்டியைப் பார்த்துக்கொள்ளும் பெண் அவருக்குச் சாப்பாடும் மருந்தும் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் என்னைச் சாப்பிடச்சொல்ல நான் “வேண்டாம்“ என்றதும் அவர் சாப்பிட ஆரம்பித்தார். நான் அங்கிருந்த தொலைக்காட்சியில் பார்வையைத் திருப்பினேன். சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண் அறையை விட்டு போய்விட்டாள்.
   பாட்டி பாதி மட்டும் சாப்பிட்டுவிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் கையலம்பினார். நான் “ஏன் ஆயா சாப்பாட்டை வைச்சிட்டிங்க? எல்லாத்தையும் பொறுமைய சாப்பிடுங்க.“ என்றேன்.
   “இல்லம்மா. இது ராணிக்கு. அவ எப்பவும் எட்டு மணிக்கி தான் வருவா. அவ வந்தா சாப்டுவா. பாவம் புள்ள பெத்த உடம்புகாரி.“ என்றார். எனக்கு உடனே மனது சந்தோஷமானது. “அப்படியா ஆயா... எப்போ கொழந்தை பொறந்துச்சி?“ என்று ஆவலாய்க் கேட்டேன்.
   “ம்... ஒரு மாசம் இருக்கும். எப்பப்பாரு அவளுக்கு ரெட்ட ரெட்ட புள்ளையா தான் பொறக்கும். இப்ப மூனாவதும் ரெட்டையாத்தான் பொறந்திருக்கு“ என்றார்.
   எனக்கு ஆச்சர்யம்! “அப்படின்னா அவங்களுக்கு இப்போ ஆறு கொழந்தையா...?“ என்று ஆச்சர்யம் மாறாமல் கேட்டேன்.
   “ஆறு எங்க. மொதோ பொறந்த ரெட்ட புள்ளைய சுனாமி அடிச்சிக்கினு போயிடுச்சி. ரெண்டாவது ரெட்ட புள்ள பெத்தா. ஒன்னை லாரிக்காரன் அடிச்சிட்டான். இன்னோரு பொட்ட புள்ள தான் அவகூட இருக்குது.“ என்றார் சர்வசாதாரணமாக. எனக்கோ  பகீரென்று இருந்தது.
   எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், “ஐயோ... பாவம் தான். ஏதோ இந்த ஒரு புள்ளையாவது மிஞ்சிச்சே“ என்றேன் கவலையை ஜீரணித்துக்கொண்டு.
   “இந்தப் புள்ளைகூட கொஞ்சம் கால் தாங்கி தாங்கி தான் நடக்கும். பாக்கவும் அப்படி ஒன்னும் அழகில்ல. ஆனா ராணி அப்படியில்ல. பாக்க ரொம்ப அழகா இருப்பா. சந்தன கலரு.  இப்பவும் ஊருல இருக்கிற ஆம்பள நாய்யெல்லாம் அவ பின்னாடிதான் சுத்துதுங்க“ என்றார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்ன பொம்பள அவ... என்று எரிச்சல் வந்ததால்... நான் அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்திவிட்டு தொலைகாட்சியில் பார்வையைப் பதித்தேன்.
    பாட்டி மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்து விட்டார். கொஞ்ச நேரத்தில் தூங்கியும் விட்டார். எனக்குத் தொலைக்காட்சியில் மனம் பதியவில்லை. மாறாக பாட்டி சொன்ன அந்த ராணியின் நினைவு தான் வந்தது. பாவம் மூன்று குழந்தைகளை இழந்திருக்கிறாள். இப்பொழுது இரண்டு குழந்தை பிறந்திருக்காம். நல்ல அழகியாம். அவளுக்காக இந்தப் பாட்டி தினந்தோறும் சாப்பாடு கொடுப்பாளாம்.... எனக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
   நேரம் ஆக ஆக எனக்கு போர் (இதற்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும்?) அடிக்க துவங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தெருவில் ஒரு நாய் ஒன்று குரைத்துக்கொண்டு இருந்தது. அந்தச் சத்தத்தில் டி.வி பார்க்கும் ஆசையும் வரவில்லை. வெளியில் போனவரையும் காணவில்லை.
   நல்ல வேலையாக பாட்டியைக் கவனித்துக்கொள்ளும் பெண் வந்தாள். நான் அவளிடம் “மாமா எங்கிருந்தாலும் உடனே அழைத்து வாம்மா“ என்றேன். அவளும் “தோ போகிறேன் அக்கா“ என்று சொல்லிவிட்டு பாட்டியின் அறைக்குச் சென்று அவர் மீதி வைத்த சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வந்து வெளியில் குறைத்துக் கொண்டிருந்த நாயிக்குத் தரையில் கொட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
   சத்தம் கேட்டு திரும்பிப் படுத்த பாட்டி அந்த பெண்ணிடம், “ராணி வந்தாளா...? சோறு போட்டியா...?“ என்று கேட்டார். நம்ம காமக்கிழத்தன் நம்பள்கியிடம் “அல்லாம் போட்டாச்சி... போட்டாச்சி..“ என்பது போல அவளும் “அல்லாம் போட்டாச்சி. போட்டாச்சி...“ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். எனக்கோ ஒரே கோபம். நடக்க முடியாத அந்த பாட்டியை இந்தப் பெண் இப்படி ஏமாற்றுகிறாளே என்று.
   அதே நேரத்தில் என் கணவரும் வீட்டிற்கு உடையவர்களும் ஒன்றாகவே வந்துவிட அவர்களுடன் பரஸ்பரம் பேச ஆரம்பித்து விட்டேன்.
   நேரம் கழிந்தது. வீட்டிற்குக் கிளம்பினோம். எல்லோரிடமும் சொல்லிக்கொண்ட போது அந்தப் பெண்ணைக் கண்டதும் எனக்குச் சற்று கோபம் வந்தது. காட்டிக்கொள்ளாமல் கிளம்பினேன். அப்போது யாரும் வெளியில் போக முடியாத படி வாசலில் ஒரு நாய் படுத்திருந்தது. நான் நாய் இருந்ததால் சற்றுத் தயங்கி நின்றேன். உடனே என் கணவரின் மாமா அந்த நாயை காலால் தள்ளி “இந்தா எழுந்து அங்க போயி படு“ என்றார்.
   அது எழுந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சற்றே கொஞ்சமாக நகர்ந்து படுத்தது. நானும் அவரும் மீதி இருந்த இடத்தின் வழியாக அந்த நாயை மிதிக்காமல் சற்று கவனமாக வெளியில் வந்தோம்.  அவர் பைக்கை ஸ்டார் பண்ணினார். நானும் பின்னால் ஏறி அமர்ந்துவிட்டேன்.
   “ஏய் ராணி.... அதான் சாட்டுட்ட இல்ல. அப்புறம் இங்க என்ன வேலை ஒனக்கு? போ. போய் அந்தாண்ட படு.“ அந்தப்பெண் அந்த நாயைத் திட்டித் துரத்தினாள். நான் அதிர்ச்சியுடன் அந்த நாயைப் பார்த்தேன்.
   வண்டி கிளம்பி வெகு தூரம் வந்து விட்டப்பிறகும் என் கண்முன் அந்த சந்தனக்கலர் நாய் தெரிந்துக்கொண்டே இருந்தது.

   (நான் வாங்கி இந்தப் பிரகாசமான “பல்பை“ இதுவரையில் யாரிடமும் சொல்லவில்லை.)

அருணா செல்வம்.
21.03.2014

16 கருத்துகள்:

 1. பாட்டி குழந்தை பெற்ற விவரங்கள் சொல்லி வரும்போதே யூகித்து விட்டேனே.... :)))

  பதிலளிநீக்கு
 2. “அல்லாம் போட்டாச்சி...போட்டாச்சி” சொல்றது நான் அல்லங்க; அவர் ‘முட்டா நைனா’.

  அனுபவத்தைத் தடங்கலின்றி எழுதியிருக்கிறீர்கள் மிகவும் ரசித்தேன்.

  அல்லாம் போட்டாச்சி...போட்டாச்சி!

  பதிலளிநீக்கு
 3. நாய்க்கு சாப்பாடு போட்டால் என்று சொன்னதும் யூகிக்க முடிந்தது

  பதிலளிநீக்கு
 4. லாரியில் அடிபட்டு என்றதும் எனக்கு க்ளிக் ஆகிவிட்டது !
  த ம +1

  பதிலளிநீக்கு
 5. முதலில் எனது எழாவது வோட்டு!
  மகுடம் ஏற்றணும் காரணம் இருக்கு! ஏத்தியாச்சு!
  என் பின்னூட்டம் (6-வது). கீழே படியுங்கள்..
  ___________________________
  [[“ஆம்பளை நாய் எல்லாம் அவபின்னாடி தான் சுற்றும்!!“ ]

  அருணா..
  இதில் சொற் குற்றம் உள்ளது...
  "நாய்" வராது!
  ஆம்பளை "நாய்கள்" எல்லாம் அவபின்னாடி தான் சுற்றும்!!“

  நாய்கள் என்ற பன்மை இருக்கவேண்டும்--எல்லாம் என்ற சொல்லை உபயோகப் படுத்தியதால்!

  நாய் என்ற ஒருமையில் சொற்றொடர் அமைத்தது தவறு--தமிழ் அறிஞர்கள் பிஸ்தாக்கள் நான் தவறாக சொன்னால் என்னை ஏறி மேயலாம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வணக்கம்!

   ஒருமை பன்மை மயக்கத்தை உரைத்த நம்பள்கி அவா்களுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்

   அறிஞர்கள் பிஸ்தாக்கள் நான் தவறாகச் சொன்னால் என்னை ஏறி மேயலாம்...!

   பிஸ்தாக்கள் - ஏறி மேயலாம். போன்ற சொற்களைத் தவிர்த்திருக்கலாம்.

   எல்லா - எல்லாம் என்ற சொற்கள்
   ஒருமையிலும் பன்மையிலும் வரும்
   அதற்கான இலக்கணம் உண்டு

   அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
   பகவன் முதற்றே உலகு - குறள் 1

   இங்கு ஒருமையில் வந்தது

   கெடுப்பதுாஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
   எடுப்பதுாஉம் எல்லாம் மழை

   இங்கு பன்மையை ஏந்தி வந்தது

   மேலும் 29 - 260 - 296 - 299- 361- 375 - 457 - 746 - 851 - 972
   குறட்பாக்களைக் காண்க!

   நீக்கு
 6. ப்பா... கொஞ்சம் சொல்லும் போதே நான் புரிஞ்சிக்கிட்டேன்... நீங்க அவ்வளவு நல்லவங்களா? இதுக்காவது நான் உங்களுக்கு த.ம ஓட்டு போட்டுடறேங்க..... ha...ha...!

  பதிலளிநீக்கு
 7. அல்லாம் போட்டாச்சி அல்லாம் போட்டாச்சி என்று சொல்லுபவர் முட்டா நைனாங்க!

  மிகவும் அருமையான பகிர்வு! நாய்க்க்கு சாப்பாடு அந்தப் பெண் போட்டதுமே ராணி அந்த நாய்தன் என்பது தெரிந்து விட்டது! ஏனென்றால் எங்கள் வீட்டில் உள்ல கண்ணழகி எங்கள் பெண்தான் (நாய்தான் ஆனாலும் நாய் என்று சொல்வது கிடையாது அவள், வந்தாள் என்றுதான் பேசுவோம்).....பாட்டி மிகவும் நல்ல பாட்டி! நாயையும் மனிதர் போன்று மதிக்கத் தெரிந்தவராக இருந்திருக்கிறாரே!....

  ரசித்தோம்!

  த.ம.

  பதிலளிநீக்கு
 8. ஆரம்பத்திலேயே யூகித்து விட்டேன் ! பல்பு நான் வாங்கவில்லை!
  தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டது! வலைவழி காண்க!

  பதிலளிநீக்கு
 9. சூப்பர் பல்பு என்றாலும் வர்ணனையிலேயே என்னால் ஊகிக்க முடிந்தது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

 10. நாயின் கதைபடித்தேன்! நல்ல மனமுடைய
  தாயின் கதைபடித்தேன்! சாற்றுகிறேன்! - காயெனச்
  சொல்லெதற்கு? சொக்கிச் சுருட்டும் தலைப்பெதற்கு?
  -------------------------- ---------------------------- ----

  பதிலளிநீக்கு
 11. :))))) நானும் என்னமோ ஏதோ என்று தான் ஓடி வந்தேன் தோழி .
  பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 12. ரெம்ப சோக்கா சொல்லிக்கினம்மே...!
  நம்ப துலுக்காணம் சொல்லிக்கினான்... இந்தா மாறி நைனா... நீ காண்டி அல்லாத்துக்கும் ஓட்டு போட்டுகின்னு கீற... நம்ப அருணா அக்கா கடையாண்ட போயி கண்டுக்க மாட்டிகீறியாம்... பேட்டையாண்ட அல்லாம் பேசிக்கினாங்க... இன்னான்னு பாருபான்னு சொல்லிக்கினாம்மே... அத்தான் வுயுந்தடிச்சிக்கினு வந்தேம்மே... இனிமே காண்டி ஒயுங்கா வந்து கண்டுக்கிறேம்மே...

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  பதிலளிநீக்கு