திங்கள், 11 ஜூன், 2012

சொர்க்கம் கண்முன் மின்னுதடி!! (கவிதை)எண்ணி எண்ணி மனம்வாட,
     எங்கே கவிதை நான்பாட,
மின்னி மின்னி வான்தூர,
     பின்னிப் பார்க்க நினைவூற,
கன்னி உன்றன் கண்ணழகு
     கசங்கி உயிரைப் பிழியுதடி!
பொன்னி நதியே!  பூந்தமிழே!
     பொலியும் இன்பப் பொற்சிலையே!

முள்ளில் பூத்த ரோசாவே!
     மூச்சுக் காற்று தொடும்போதே
எல்லை இல்லா இன்பத்தை
     என்றன் இதயம் ஏற்றதுவே!
முல்லைக் காடே! முழுமதியே!
     முத்துச் சரமே! முத்தமிழே!
பிள்ளை மொழிபோல் உன்குரலோ
     பித்தாய் நெஞ்சைக் கவ்வுதடி!

காற்றில் கமழும் நறுமணமோ
     காதல் உணர்வை ஊட்டுதடி!
ஆற்றின் ஓரம் குருவியெல்லாம்
     அழகாய்க் கூடி மகிழுதடி!
ஊற்றின் குதிப்பாய் உன்நினைவும்
     உள்ளம் முழுதும் பொங்குதடி!
நாற்றின் பக்கம் இருநண்டு
     நன்றே காதல் நடத்துதடி!

வாடி என்றன் அருகினிலே
     கூடி இன்பம் படைத்திடுவோம்!
கோடி கோடிப் பிறவிகளில்
     கொள்ளும் இனிமை அடைந்திடவோம்!
ஆடிப் பாடிக் களித்திடுவோம்!
     அமுதக் கடலில் குளித்திடுவோம்!
சோடிக் கிளிகள் கொஞ்சுதடி
     சொர்க்கம் கண்முன் மின்னுதடி!


25 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

உங்கள்
தமிழும் கவிதையும்
ரெம்ப இனிமையாக இருக்குதுங்க

Seeni சொன்னது…

அழகான தமிழில்-
அருமையான கவிதை !

மகேந்திரன் சொன்னது…

ஆஹா
எதுகைச் சுவையில்
எம்மை இன்பமுறச் செய்தீர்கள் நண்பரே..
இனிய கவி...

Unknown சொன்னது…

அருமை அருமை அருமையே-கவிதை
அழகு தமிழுக்குப் பெருமையே
திறமை நன்கே தெரிகிறது-மரபில்
தெறித்த பாடல் புரிகிறது
எதுகை மோனை விளையாட-நல்
ஏற்ற சொற்கள் அதைநாட
மதுவை உண்ட வண்டாவார்-படித்து
மயங்கிய நிலையே கொண்டாவார்

சா இராமாநுசம்

ஆத்மா சொன்னது…

முல்லைக் காடே! முழுமதியே!
முத்துச் சரமே! முத்தமிழே!//

பழைய பாடல் வரிகளைப் போல் நன்றாக இருக்கிறது..

ஆத்மா சொன்னது…

அருமை தொடருங்கள்

சசிகலா சொன்னது…

வரிக்கு வரி ரசிக்க வைக்கிறது . அழகு அருமை .

நிரஞ்சனா சொன்னது…

எதுகைச சுவை... எளிமையான நடை... ரசிக்க வைத்த கருத்துக்கள். அருமை ஃப்ரெண்ட்.

கோவி சொன்னது…

supero super..

சத்ரியன் சொன்னது…

கன்னல் உந்தன் கவிதை.

//ஊற்றின் குதிப்பாய் உன்நினைவும்
உள்ளம் முழுதும் பொங்குதடி!
நாற்றின் பக்கம் இருநண்டு (நண்டிரண்டு)
நன்றே காதல் நடத்துதடி!//

துணையை அழைக்க இயற்கை எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்கள் கவிஞரே.

சத்ரியன் சொன்னது…

கன்னல் உந்தன் கவிதை.

//ஊற்றின் குதிப்பாய் உன்நினைவும்
உள்ளம் முழுதும் பொங்குதடி!
நாற்றின் பக்கம் இருநண்டு (நண்டிரண்டு)
நன்றே காதல் நடத்துதடி!//

துணையை அழைக்க இயற்கை எப்படியெல்லாம் துணைபுரிகிறது பாருங்கள் கவிஞரே!

சிவகுமாரன் சொன்னது…

அடடா
அடடடா
அடடடடா

பால கணேஷ் சொன்னது…

பொன்னி நதியே, பூந்தமிழே. பொலியும் இன்பப் பொற்சிலையே... அருமையான சொல்லாடல்கள். கவிதை மனதை ஈர்த்தது.

அருணா செல்வம் சொன்னது…

அது தமிழின் பெருமைங்க தோழரே!
நன்றிங்க.

(ஆமாம்... ஏங்க நண்பரே ம்ம்ம் போடவில்லை)

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க நண்பரே!

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க நண்பரே!

அருணா செல்வம் சொன்னது…

புலவர் ஐயா...

பாடலிலே வாழ்த்துச் சொன்னீர்கள்.
மிக்க நன்றிங்க.

(நான் உங்கள் பாடல்களின்
மயங்கிய வண்டாய் இருக்கிறேன்)

அருணா செல்வம் சொன்னது…

அப்படிங்களா சிட்டுக்குருவி....

மிக்க நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

திரும்பவும் நன்றிங்க சிட்டுக்குருவி!

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம்ப்பா... புரியாத வார்த்தைகளைப் போட்டு
அதைப் புரிந்து கொள்ள அகராதியைத் தேடி....
இது ரொம்ப ஈஸி ஃபிரெண்ட்.

நன்றி நிரஞ்சனா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க கோவி சார்.

அருணா செல்வம் சொன்னது…

நண்பரே... இருநண்டு என்பதைவிட நண்டிரண்டு என்பது அழகான வார்த்தைத் தாங்க.

இயற்கை காட்சிகள் இல்லாவிட்டால் கவிதை எப்படிங்க பிறக்கும்.

நன்றிங்க மனவிழி சத்ரியன்.

அருணா செல்வம் சொன்னது…

கவிஞரே... உங்களுக்கு என்ன பதில் எழுதுவது...? தெரியவில்லைங்க.

நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

வாங்க பா.கணேஷ் அவர்களே..

என் கவிதை உங்கள் மனத்தை ஈர்த்தது என கேட்டதும் எனக்கு சந்தோசம்ங்க.

நன்றிங்க.