புதன், 30 அக்டோபர், 2019

புல்வெளியில் பூஞ்சிலை!



.
கயலெடுத்து வைத்தானோ
  காரிகையின் கண்ணென்றே!
அயலிருக்கும் மூக்கென்ன
  ஆழ்ந்தெடுத்த சிப்பிதானோ!

கார்கூந்தல் வண்ணத்தைக்
   கண்ணனவன் தந்தானோ!
நேர்வகிட்டுக் கோலமதை
   நெடுநேரம் அளந்தானோ!

தேன்மொழியும் வாயழகைத்
  தெளிதமிழால் செய்தானோ!
கூன்பிறையைக் காதாக்கிக்
  கழுத்தருகில் வைத்தானோ!

வெண்ணிலவைப் பொடியாக்கிப்
  பெண்வாயில் புதைத்தானோ!
பண்ணொலியைக் குரலாக்கிப்
  பைந்தமிழைக் கலந்தானோ!

கல்லெடுத்துச் செய்தானோ
  கட்டழகின் மேனியினை!
வில்லெடுத்து வரைந்தானோ
  வேல்விழியாள் புருவமதை!

என்னவென்று பாடிடுவேன்
  எடுத்தெழுத வார்த்தையில்லை!
பொன்னழகே! என்னவளே!
  புல்வெளியில் பூஞ்சிலையே!
.
பாவலர் அருணா செல்வம்
30.10.2019

செவ்வாய், 29 அக்டோபர், 2019

முட்டுக்கட்டை!




ஊரே கூடிச் சேர்ந்திழுக்க
   ஓடும் அழகாய் ஊர்வலமாய்!
ஈரேழ் உலகத் தலைவியவள்
   இன்பம் பொங்க அமர்ந்திருப்பாள்!
பாரே பக்திப் பரவசமாய்ப்
   பார்த்தும் பணிந்தும் வணங்கிடவே
தேரே நகரும் அழகுடனே
   தேனாய் நன்மை செய்திடவே!

இழுத்த இழுப்புக்(கு) அதுவோடும்!
   என்றே இருந்தால் என்னாகும்?
தொழுத உயிர்க்கும் தொடர்பவர்க்கும்
   தொல்லைக் கண்டே துவண்டிடுமே!
நழுவி யோடா திருந்திடவும்
   நடக்கும் செயலை நிறுத்திடவும்  
பொழுதில் வைப்பார் காலின்கீழ்
   பொதிக்கும் முட்டுக் கட்டையாகும்!

முட்டுக் கட்டை எடுத்தாலே
   முறையாய்ச் செல்ல முடிந்தாலும் ,
தட்டுத் தவறும் நேரத்தில்
   கட்டிப் போட்டு விடுவதற்கே
முட்டுக் கட்டைப் போட்டிடுவார்!
   முந்திச் செல்ல் மட்டுமின்றிக்
கட்டுக் கொப்பாய்ச் செல்வதற்கும்
   முட்டுக் கட்டைத் தேவையன்றோ! 

ஒருவர் செய்யும் செயலுக்கோ
   உந்தும் திறனே உயர்த்திவிடும்!
கருத்தில் தொண்டாய்ச் சேர்ந்தோர்க்கோ
   கருத்தும் பலவும் நின்றாடும்!
ஒருசொல் முட்டுக் கட்டையாக
   ஒடுக்க வந்து நின்றாலும்
பொருத்தே அதனின் இடம்நகர்த்த
   பொதுமை தேரோ நகர்ந்திடுமே!
.
பாவலர் அருணா செல்வம்
28.10.2019

வியாழன், 17 அக்டோபர், 2019

தரணி யாளும் தமிழ்!



(கும்மி)

பண்டைய மாந்தர்கள் பேசிய தேஉயர்
    பண்பினில் மின்னிடும் செந்தமி ழே!
விண்ணவர் எழுதி விட்டுச்சென் றனரோ
    வியக்க வைத்திடும் செம்மொழி யே!

இன்பத்தின் சாற்றினில் ஊறிய தால்பேச
    இனிப்பை உண்கின்ற சுவையன் றோ! 
பின்னிடும் பாக்களின் பொருளைக் கேட்டிட
    பெருமை பெற்றிடும் செவியன் றோ!

செம்மையாய் மொழியின் இலக்க ணத்தைமுன்
    செய்துவைத் தவர்தொல் காப்பிய ரே!
மும்மொழி வாழ்வதன் விளக்க மதைத்தன்
    முப்பாலில் செய்தவர் வள்ளுவ ரே!

பற்பல வளமை பெற்றதி னால்நலம்
    பயக்கின் றநூல்கள் பலபெற் றோம்!
கற்சிலை அழகாய்ச் செதுக்கி யதால்முற்
    காலமும் வாழும்நல் வரம்பெற் றோம்!

எண்ணத்தில் தோன்றிடும் கருத்தை எல்லாம்நல்
    இசையின் வண்ணத்தில் பாடிடு வோம்!
பெண்னெனும் சக்திகள் வட்டமிட் டேஅதைப்
    பெற்றதோர் பேறென்றே ஆடிடு வோம்!

ஆதியில் தோன்றிய அந்தமிழ் மொழியை
    அனைவ ரும்கற்றால் பலனுண் டே!
ஓதிடும் ஆசானின் புகழிவ் உலகில்
    உயர்ந்தி டும்வண்ணம் நலனுண் டே!

தேனுக்கு மட்டும்இ னிப்பில்லை நமது
   தெள்ளுத மிழ்ச்சுவை இனிப்பா கும்!
வானுக்கு மட்டும்ம ழையினைப் போல்சுய
   வளமே தமிழில் தனியா கும்!

நாட்டினில் செல்வங்கள் பலவுண் டேஅதில்
    நற்றமிழ்ப் போலொரு செல்வமுண் டோ!
ஊட்டிடும் தாய்போல்உ றவென்றே மொழியை
    உலகில் எங்கேனும் சொல்வதுண் டோ!
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2019

திங்கள், 8 ஜூலை, 2019

நுட்பவணி!



குறிப்பு நுட்பம்!

ஒரு செயலின் நுட்பமானத் தன்மையைக் குறிப்பால் வெளிப்படுத்துவதுகுறிப்பு நுட்பம்எனப்படும்.

. ம்
பகலவனால் நீரைப் பருகியோர் ஓய்வாய்
அகலாமல் அங்கிருக்க, மேலே - முகம்காட்டும்
தாமரையின் தண்டெனத் தண்ணீருள் நின்றிருந்தாள்
கோமகள் நெஞ்சுள் குறித்து!

பொருள் வெயிலின் தாக்கத்தால் குளத்து நீரைப் பருகியவர்கள் ஓய்வுக்காக அவ்விடத்தை விட்டு அகலாமல் நின்றிருந்ததால், நீரின் மேல் பகுதியில் முகத்தைக் காட்டும் தாமரையின் தண்டுபோல் நீருக்குள்ளேயே உடலை மறைத்து அழகான அந்தப் பெண் நின்றிருந்தாள்.
    பாடலில், குளத்தில் தாமரை மலரானது தண்ணீருக்கு மேலே முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும். அதன் தண்டானது நீருக்குள் மறைந்து இருக்கும். குளத்து நீரைப்பருகிய அயலோர் அங்கிருந்து செல்லும் வரையில் அந்தப் பெண் தண்ணீருக்குள் நின்றிருந்தாள் என்பதால் அவள் தன்னுடலை மற்றவர்களுக்குக் காட்டவிரும்ப வில்லை என்ற எண்ணக்கருத்து நுட்பமாக உள்ளதாலும், தன்னவனுக்கு மட்டுமே தன் அழகு சொந்தமானது என்ற குறிப்பும் உணர்த்தப் படுவதால் இதுகுறிப்பு நுட்பவணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.07.2019

சனி, 6 ஜூலை, 2019

உடுக்கைப் பந்தம்!


என் “சித்திர கவி தீட்டுவோம்“ என்ற புத்தகத்தில் இருந்து.....
.
பாவலர் அருணா செல்வம்
06.07.2019

வெள்ளி, 28 ஜூன், 2019

ஏது அணி!



கரும காரகவேது !

கருமம் என்பதுகடமை, காரியம், கிரியை, செய்கை, முன்வினை, விதி,….

பாடலில் ஒரு கருமமே காரகமாகவும், அதுவே ஏதுவாகவும் வருவதுகரும காரகவேதுஎனப்படும்.  (ஒரு செயலின் செயல்பாட்டினைக் காட்டுவது)

. ம்
எத்தனை வேலை எடுத்ததைச் செய்தாலும்
அத்தனைக்கும் கை,கண்ணும் ஆழ்ந்திருக்கும் - பத்தியமாய்ப்
பெற்ற மனதெல்லாம் பிள்ளையை எண்ணுவதே
குற்றமற்ற அன்னை குணம்!

பொருள்ஒரு பெண்ணின் கைகளும் கண்களும் ஆழ்ந்து எத்தனை வேலைகளை எடுத்துச் செய்தாலும் அவளின் மனமானது தான் பெற்ற பிள்ளையையே எண்ணிக்கொண்டு இருக்கும். அதுவே தாய்மையின் குணம்.

பாடலில் கூறப்பட்ட கருமம் பெண்ணானவள் செய்யும் தொழில். அவளின் கையும் கண்ணும் தன் வேலையைச் செய்தாலும், மனமானது பத்தியம் இருந்து தான் பெற்ற பிள்ளையை எண்ணிடும் என்பது காரணமாவதால் இதுகரும காரகவேதுஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.06.2019

புதன், 26 ஜூன், 2019

ஒட்டணி! -





அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்!

   பாடலில் தான் கருதிய பொருளுக்கும், அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறப்படும் பொருளுக்கும் சில அடைமொழிகளை ஒத்ததாகக் கூறியும், சில அடைமொழிகளை ஒன்றிற்கு மட்டும் சிறப்பாகக் கூறியும், தான் கருதிய பொருளைச் சொல்லாமல் அதற்கு ஒப்பான வேறு பொருளைக் கூறுவதுஅடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்ஆகும்.

. ம் 
உடல்முழுதும் தந்தும், ஒதுங்கி அசைந்தும்,
மடத்தில் மடங்காதும் வாழும்! – வடம்சேரத்
தோட்டத்தில் கன்றுடன் துள்ளிடும்! நல்லுணவை 
ஈட்டிடும் வாழை இனிது!

பொருள்உடல் முழுவதையும் நமக்குத் தந்து உதவும். ஓரிடத்தில் நின்று அசைந்தாடும். கோவில் மற்றம் சுபநிகழ்வுகளில் முன் நிற்கும். மடங்காதது. இதைக் கயிறு சேர்த்துக் கட்டுவார்கள். தோட்டத்தில் கன்றுடன் இருந்து நமக்கு நல்ல உணவைத் தரும் வாழை மரம்.
    பாடலில் சொல்லக்கருதிய பொருள் பசு மாடு. பசுவானது பால் மற்றுமல்லாது இறைச்சி, தோல், சாணம் என்று உடல் முழுவதையும் நமக்குத் தந்து உதவும். உணவை வாயில் ஒதுக்கிப் பின்பு அசைபோடும். கோவில் மற்றும் சுபநிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லப்படும். அங்கே அது மடங்கி அமராது. கயிற்றால் கட்டப்படும். தோட்டத்தில் அதன் கன்றுடன் இருந்து நமக்கு நல்ல உணவான பாலைக் கொடுத்திடும்.
    பாடலில் சொல்லக்கருதிய பொருள் பசுவும் கன்றும் ஆகும். அதனைப் புலப்படுத்த அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் வாழை மரம். தன் உடல் முழுவதும் தந்தும், ஒதுங்கி அசைவதும், மடத்தில் மடங்காமல் நிற்பதும் கயிற்றுடன் இணைக்கப் படுவதும் பசுவுக்கும் வாழைக்கும் பொதுவான அடைமொழிகள் ஆகும். தோட்டத்தில் துள்ளிடும் கன்றுடன் நல்லுணவைத் தரும் என்னும் அடைமொழியானது பசுவுக்கு மட்டும் உரிய சிறப்பு அடைமொழியாகும். இப்படி இரண்டிற்கும் அடைமொழிகள் விரவி வந்தும், பசுவிற்கு மட்டும் சிறப்பான ஒரு அடைமொழியைக் கூறி இருப்பதாலும் இதுஅடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.06.2019

திங்கள், 24 ஜூன், 2019

ஐயவதிசயம்!



அதிசயவணி!

பாடலில் ஒரு பொருளை உலக நடையைக் கடந்து ஐயத்துடன் அதிசயத்துப் பாடுவதுஐய அதிசயம்ஆகும்.

உ ம்
செந்தமிழைத் தேவியவள் செப்பிடும் போதெல்லாம்
செந்தேன் குடித்த செயலானேன்! – முந்தும்
கவிதான் இனிப்போ! கருத்தைச் சுவைக்கும்
செவிகளுக்கும் வாயுண்டோ செப்பு!

பொருள்செம்மையான தமிழ் மொழியில் பெண்ணானவள் பேசிடும் பொழுதெல்லாம் நான் தேனைக்குடித்ததைப் போல் மயங்கினேன். இப்படி ஆவதற்கு காரணம் முந்திவந்து காதுக்குள் நுழையும் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியென்றால் அந்தக் கவிதையில் உள்ள கருத்தின் சுவையை உண்பதற்கு செவிகளுக்கு வாய்தான் உண்டோ…. சொல்வாயாக.
   இப்பாடலில் கூறப்பட்ட பொருள் தமிழின் சுவை ஆகும். தமிழைக் காதால் கேட்டதும் மனமானது தேன் குடித்த நிலையை உணர்கிறது. அதற்கு காரணம் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியானால் காதுகளுக்கு இனிப்பைச் சுவைக்க வாய் இருக்கிறதா ? என்று உலகநடையைக் கடந்து  ஐயமுடன் அதிசயத்துக் கூறியுள்ளதால் இதுஐயவதிசயம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
25.06.2019